தொடர்கள்
கதை
அலிபாபா குகை- கி. ரமணி

2025916194813330.jpeg

இங்கிருந்த நல்ல பொறியாளர் வேலையை விட்டுட்டு இருபத்தேழு வயதில், பத்து மடங்கு அதிகம் சம்பளம் வரும், என்பதால்,அது வரை அட்லாஸில் கூட பார்க்காத ஒமான் (மஸ்கட்) நாட்டுக்குபோகத் தயாரானேன்.

வருஷம் 1982.

ஏர் இந்தியாவில் மஸ்கட் சென்று அங்கிருந்து ஆயில் கம்பெனியின் ஒரு வினோதமான விமானத்தில் ஏறி இஷ்டக் கடவுள்களை வேண்டிக்கொண்டு ஒரு பாலைவனத்தில் இறங்கினேன். என்னுடைய எண்ணைக் கம்பெனியின் ஒரு பெரிய கேம்ப் அது.

அங்கு முன்னூறு அசையும் சிறு வீடுகள்

( porto camps) கான்டீன், கடைகள், உண்டு.

வேலை நேரம் பொதுவாக காலை ஏழரை முதல் மாலை ஐந்து வரை.

தங்கும் அறையில் பிரமாதமாக ஏசி உள்பட எல்லா வசதியும் இருக்கும்.

ஆனால் சாப்பாடு படு மட்டம்.

வெயில் நூற்று பதினெட்டு டிகிரியில் தகிக்கும். ரூமுக்கு வழியில் வந்து நின்றால் நம்மைச் சுற்றி மிகப் பெரிய பழுப்பு நிற பாலைவன மணல் வட்டத்தை பார்க்கும் போது உலகம் உருண்டை என்பதற்கு சாட்சி கிடைக்கும்.

மீடியா மயமாக இல்லாத அக்காலத்தில் எங்கள் ஓய்வு நேரம் ஆமையாகும்.

வந்து இருபது நாள் கழித்து, மதிய உணவு வேளையில் கேண்டினில்,முறம் போன்ற ஒரு சப்பாத்தியைக் கிழிக்கப் போராடிக் கொண்டிருக்கும் போது எதிரில் வந்து அமர்ந்தார்,ஒரு நாற்பது வயதிருக்கும் மனிதர். நல்ல உயரம். நீண்ட முடி.

" குட் ஆப்டர்நூன்! என் பெயர் உலகநாதன்." " என்றார்.

அவர் ரூமில் செய்த சாதம்,ஆவக்காய், பருப்பு பொடி, எல்லாம் அன்புடன் கொடுத்தபோது ஒரு மாதிரியாக அவரிடம் நன்றிக் கடனே பட்டு விட்டேன்.

அன்று சாயங்காலம் அவர் அறைக்குச் சென்று (ஹென்னிக்கன் பியருடன்) பேசும் போது அவர் பற்றிச் சொன்னார்.

அப்பா பணக்காரர். இப்போ பக்கவாதம். இவர் பிசினஸ் செய்தார், சொந்த பணத்தில் ஆரம்பித்து. கொஞ்சம் நொடிச்சு போயிட்டார். அப்பா கிட்ட பணம் வாங்கக்கூடாது என்கிற வைராக்கியத்தில் இங்கு வந்துவிட்டார். கல்யாணம் பண்ணி மனைவி, ரெண்டு குழந்தைகள் இந்தியாவில் உண்டு.

இந்தியாவில் வசதியாக வாழ்ந்தவர். இங்கு உற்பத்திப் பிரிவில் இரண்டு வருடமாக இருக்கார்.

" மொத்தமா அஞ்சு லட்சம் ரூபாய் இங்கு சம்பாதித்தால் போதும்பா. அப்பாக்கு மெட்ராஸ்ல வீடு இருக்கு. அங்கே போய் செட்டில் ஆயிடுவேன்."

எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இந்த மனுஷன் திரும்பி இந்தியா போறதப் பத்தி இப்பவே தைரியமா பேசுறானே..என்று.

" தம்பி, நீ இப்படித்தான் பிளான் பண்ணிக்கணும் எதுக்கு இங்க வந்தாய் நல்ல வேலையை விட்டுவிட்டு?"

" சார்! உங்கள மாதிரி எனக்கு சொத்து எல்லாம் கிடையாது. பணம் சம்பாதித்து ஒரு சொந்த வீடு வாங்கிட்டு அப்புறம் கொஞ்சம் பணம் கையில வச்சுக்கணும். அவ்வளவுதான் சார்."

"கல்யாணம் ஆகல இல்லையா? சீக்கிரம் கல்யாணத்தை முடி. மொத்தமா மூணு வருஷம் கணக்கு வச்சுக்கோ. அப்புறம் சேர்த்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஓடி விடு.இது ஒரு மோசமான ஊர். ஒன்வே பணக்கிடங்கு.

அலிபாபா குகை" மாதிரி. உள்ளே போனால் வெளியே வர மனசிருக்காது.

கொஞ்சமா சேர்த்து விட்டு ஓடிப் போயிடு. இந்தியால போய் நல்லா வாழு. வாழ்க்கையைத் தொலைச்சிடாத."

" நான் மினிமம் அஞ்சு வருஷம் இங்க இருக்க பிளான் பண்ணி இருக்கேன் சார். "

"அதிகம் பா. மூணு வருஷம் இரு. சம்பாதி. திரும்பிப் போ. சந்தோஷமா இரு. பண ஆசைக்கு முடிவே கிடையாது. இதெல்லாம் இங்கே இருக்கும் ஏராளமான பேருடைய எக்ஸ்பீரியன்ஸ வைத்து சொல்றேன்."

"நீங்க எப்ப சார் திரும்பிப் போறீங்க?"

" அஞ்சு லட்சம் சேர்ந்த அடுத்த நொடியில் இந்தியால இருப்பேன். இப்ப என்னால ஏற்பட்ட நஷ்டத்தை சரி பண்றதுக்காக தான் நான் இங்கே இருக்கேன். எங்க அப்பா கிட்டயே பணம் வாங்கி இருக்கலாம். செய்யல. ஈகோ தான்னு வச்சுக்கோ. "

உலகநாதனிடம் மரியாதையை ஏற்பட்டது. கேம்பில் இருக்கும் எல்லோரும் உலகநாதன் பற்றி உசத்தியாத்தான் பேசினார்கள்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அறைக்கு போய் பேசிக் கொண்டிருப்பேன்.

ஏராளமான உலக விஷயங்கள் பேசுவார். மிகுந்த மனமுதிர்ச்சியுடன் பிரச்சனைகளை அணுகுவார். அடுத்த மூன்று மாதத்துக்குள் எங்கள் உறவு நெருக்கமாகிவிட்டது. கிட்டத்தட்ட என் மென்டார் ஆகிவிட்டார்.

நூறு நாள்- நடுவில் எந்த விடுமுறையும் இல்லாமல்- உழைத்த பின் முப்பது நாள் லீவு கிடைக்கும். இங்கு வேலை செய்யும் வரை அப்படித்தான்.

முதல் லீவுக்கு சென்னை போவதற்கு முன் மஸ்கட் கடைகளுக்கு சென்று ஏராளமான சாமான்களுடன் திரும்பி வந்தேன்.புடவைகள்,எலக்ட்ரிக் ஷேவர், சோனி கேசட்டுகள், மிக்ஸி,சட்டைகள், பாதாம், பிஸ்தா விளையாட்டு பொம்மைகள், நேஷனல் டூ இன் ஒன்,

இத்தியாதி.

ரெண்டு சூட்கேஸ்களும் நிரம்பித் தளு ம்பின.

அன்று எத்தேச்சையாக ரூம் பக்கம் வந்த உலக நாதனை உள்ளே கூப்பிட்டேன்.

உள்ளே வந்தவர் என்னுடைய ரெண்டு சூட்கேஸையும் பார்த்து திடுக்கிட்டார்.

"என்னப்பா இதெல்லாம்?"

" நாளைக்கு முதல் லீவுல ஊருக்கு போறேன் சார். உறவினர் எல்லோருக்கும் கொடுக்கறதுக்கு வாங்கிட்டு போறேன்."

"இப்படி கண்டபடி செலவழிச்சுக்கிட்டு இருந்தேன்னா கடைசி வரைக்கும் இந்த ஊர்லயே இருக்க வேண்டியது தான். லீவுக்கு தானே போற?ஒரு சூட்கேஸ் போகிறதா?"

உலகு சொல்றது சரியா தான் தோன்றியது.

" அடுத்த லீவிலிருந்து இப்படி பண்ண மாட்டேன் சார். நீங்க சொல்றது சரிதான். " என்றேன்.

"இதுவரைக்கும் ஏதாவது சேத்தியா?" என்றார்.

"ஒன்னும் இல்லை" என்றேன்.

" வீடு கட்ட ரெண்டு லட்சம். கையில் ஒரு லட்சம். மூன்று லட்சம் தாராளமா போதும் உனக்கு. ஊருக்கு போயிடு. அப்புறம் என்ன பண்ணப் போற? "

" அது தெரியல சார். ஏதாவது ஊர்ல வேலை பார்த்துக் கொள்ளலாம்."

" பார்த்துக்கோ. பிசினஸ் வேண்டாம். "

"சரி சார். உங்க டார்கெட் எப்படி இருக்கு? "

" இன்னிலிருந்து இரண்டரை வருஷம் பா. அஞ்சு லட்சம் பணம் சேர்க்கும் டார்கெட் முடிந்துவிடும். அப்புறம் நேர ஊருக்குத்தான்."

ஆல் தி பெஸ்ட் சொல்லிக் கொண்டோம். பிரிந்தோம் அப்புறம் ஏனோ எங்களால் சந்திக்கவே முடியவில்லை இடையே ஒன்று இரண்டு முறை டெலிபோனில் பேசி இருப்போம். எங்களுக்கு வெவ்வேறு பாலைவனங்களில் வேலை அமைந்தது.

அடுத்த இரண்டரை வருஷத்தில் ஏதோ ஓரளவுக்கு பணம் சேர்க்க முடிந்து, சென்னை பக்கம் வீடு கட்டத் தொடங்கினேன். கல்யாணம் ஆனது. ஒரு கட்டத்தில் வாழ்க்கையைக் குடும்பத்தோடு வாழ வேண்டும்.. அது இந்த பாலைவனத்தில் முடியாது.. என்பதால் இந்தியாவுக்கு போக வேண்டும் என்று நானே நிச்சயித்தேன்.

உலகுவும் அதே தானே சொல்லிக் கொண்டிருந்தார்.!

இன்னும் ஆறு மாசம் என்று முடிவு செய்தேன்.

உலகு திடீர்னு வேலையை விட்டு விட்டார் என்ற நியூஸ் வந்ததும் ஆச்சரியம்.

ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

அவர் சொன்ன சமயத்துக்கு கிளம்பி விட்டார். அவருடைய பழைய கடனை அடைத்து விட்டு நிம்மதியாக வாழலாம். அவருக்கு வேண்டிய பணம் இருக்கு. அப்பா சொத்து வேற. போகும்போது நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி சொல்லிட்டு போயிருக்கலாமே என்று கொஞ்சம் வருத்தப்பட்டேன். அவரைப் போன்ற ஆசை அளவோடு உள்ளவரை பார்ப்பது அரிது என்று தோன்றியது.

உலகநாதன் வீட்டு போன் நம்பரை நண்பர்களிடம் வாங்கிக் கொண்டேன். போன் செய்து பார்த்தேன். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை விட்டுவிட்டேன். செல்போன் காலமில்லை அது.

ஆறு மாதத்தில் வேலையை விட்டு பாக்கி இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு இந்தியா வந்து விட்டேன். வீடு கட்டி குடி போயாச்சு. எளிதா வேலையும் கிடைச்சுது. . மனைவி குழந்தைகள் என்று பூரண வாழ்க்கை.

இன்னும் சில வருஷங்கள் ஒமானில் இருந்து நிறைய பணம் சம்பாதித்து இருக்கலாமோ என்று எனக்கு அடிக்கடி மனதில் தோன்றினாலும் உடனே உலகுவை மனதில் கூப்பிட்டு அந்த எண்ணத்தை அழிக்கச் செய்து விடுவேன்.

பதினேழு வருஷங்கள் ஓடி விட்டன. இந்தியாவுக்கு திரும்பி வந்து.

அலுவலகத்தில் ஏகப்பட்ட வேலை. மும்பைக்கு ஒரு மீட்டிங்காக சென்று சென்னை திரும்பும் போது மும்பை ஏர்போர்ட்டில் உலகுவைப் பார்த்தேன்.!

வயசாகி தொந்தியும் தொப்பையுமாக இருந்தார். தலைமுடி முழுக்க வெள்ளை ஆகி இருந்தது.

"என்ன உலகு சார்! எப்படி இருக்கீங்க.?"

" அடடே நீயப்பா! நல்லா இருக்கியா? "

"எவ்வளவு நாள் ஆச்சு சார் பார்த்து? ஏதாவது பிசினஸ் விஷயமா? எங்கேயாவது வெளிநாடு போறீங்களா?" என்றேன்.

" இல்லப்பா மஸ்கட்டில் இருந்து தான் வரேன். இப்ப சென்னை போறேன்."

ஆச்சரியமடைந்தேன்.

" சார் நீங்க தான் அப்பவே ஆயில் கம்பெனி வேலையில் இருந்து ரிசைன் பண்ணிட்டீங்களே!"

"ஆமாம்பா நம்ம ஆயில் கம்பெனியில் இருந்து ரிசைன் பண்ணிட்டு பக்கத்துல ஒமான் ரிபைனரிலயே உடனே ஜாயின் பண்ணிட்டேன். அதுல இப்ப பதினெட்டு வருஷமா இருக்கேன்."

" ஆனா அந்த காலத்துல நீங்க தானே சார் ரொம்ப நாள் அங்கு இருக்கக் கூடாது. ஓரளவுக்கு பணம் சேர்ந்தால் இந்தியாவுக்கு வந்துவிடணும்னு சொல்லுவீங்க?"

" அது ஒரு காலம் பா. எங்கப்பா இறந்ததுக்கு அப்புறம் அவர் ப்ராப்பரிட்டியை பிரிச்ச போது எனக்கு ஒன்னும் பெருசா கிடைக்கல. என் பசங்க எல்லாம் வளந்துட்டு வராங்க. அவங்கள படிக்க வைக்க பணம் வேணும். அதான் பேசாம இங்கேயே உக்காந்துட்டேன்."

" ஆனா நீங்க சொல்றத கேட்டு நான் எப்பவோ திரும்பி வந்துட்டேன் சார் . இப்ப சந்தோஷமா தான் இருக்கேன்."

"ஆஹா! அப்படி நான் உன்கிட்ட சொன்னேனா? ஞாபகம் இல்லை. ஆனா உன்னப் பத்தி கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. " என்றார்

" சரி! இப்பவானும் சரியா சொல்லுங்க. நீங்க எப்ப ஒமானை விட்டு இந்தியாக்கு திரும்பி வரப் போறீங்க? "என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

" இன்னைக்கு டேட்ல நான் இன்னும் ஒரு கோடி ரூபாய் சேர்த்து ஆகணும்பா.

இதே தேதிக்கு ரெண்டு வருஷம் கழிச்சு நிச்சயமா இந்தியா வந்துருவேன்." என்றார் உலகு.

" சரி பார்க்கலாம் அப்புறம். " என்று கூறிவிட்டு நிதானமாக,தான் மஸ்கட்டில் இருந்து கொண்டு வந்த இரண்டு பெரிய சூட்கேசுகளையும் இழுத்துக் கொண்டே சென்றார் உலகு.

உலகுவின் அலிபாபா குகை இன்னும் திறந்து தான் இருந்தது!!

2025916195720667.jpeg