இந்திய பண்டிகைகளின் அரசி தீபாவளி! " - எங்கோ படித்த நினைவு வந்தது. என்ன அரசியோ! வருஷம் ஒரு முறை வரும்போதே நம்ம டவுசர உருவி ஒரு வழி பண்ணிட்டு தான் விடுறா! இதுல இந்த சின்னதுக்கு "அப்பா வீக்லி ஒன் திவாலி இருந்தா சூப்பர்ல !"- வாம் ! மவளே நீ சம்பாதிச்சா தெரியும். திவாலி இல்ல, அது திவால்!
சரி, இவ தான் சின்னவ, விஷயம் தெரியாது, விட்டுவிடலாம். இவ அண்ணன்காரன்! +2 பரீட்சை வெச்சுண்டு ஒன்னொன்னும் ஊர்ல எவ்ளோ பொறுப்பா இருக்கு! இவன பார்த்தா பீமசேனன் பெத்த கடோத்கஜன் மாதிரி நின்னுண்டு 250 shots வாங்கு! நம்ம தெருவே வேடிக்கை பாக்கற மாதிரி வெடிக்கணும். நம்ம வீட்டு வாசல்ல தான் நிறைய வெடி குப்பை இருக்கணும். இப்படி விபரீத குறிக்கோளோட சுத்திண்டு இருக்கான்! இவன் கூட படிக்கும் பசங்க இன்னும் நாலஞ்சு வருஷத்தில் ISRO/NASA நு வேலைக்கு சேர்ந்து நிஜ ராக்கெட் விட போறாங்க. இவன் அப்பவும் அப்பா தீபாவளிக்கு ராக்கெட் வெடி வாங்கி தா - னு வந்து நிக்க போறான்!
நமக்குன்னு வந்து சேர்ந்து இருக்குகள்! சரி நாம என்ன அப்துல் கலாம் மாதிரியா? நமக்கும் +2 வரைக்கும் ஐஐடி கும் ஐடிஐ வித்தியாசம் தெரியாம தான இருந்தோம். எதோ பிழைச்சுப்பான்!
ஏதோ தர்ம பத்தினி கொஞ்சம் பரவா இல்லை! இத வாங்கு அத வாங்கு என்று படுத்தாமல் பர்சை பங்கம் பண்ணாமல் விட்டு விடுவாள்! But அவள் ஏரியாவே வேற! தீபாவளிக்கு ஒரு ரெண்டு வாரம் முன்னரே தன் மந்திரி சபையை கூட்டி (வேற யாரு - எங்க அம்மா, அவ அம்மா, அக்கா, அவ தம்பி மனைவி இப்படி ஒரு களேபர காம்போ) இந்த வருட பட்சண பிளானிங் பண்ணிடுவா! வீக் ஆஃப் தீபாவளி வீடு முழுக்க ஒரே இந்திரலோக எபெக்ட் தான்! அதென்னமோ எல்லா பட்சணமும் ஒரே டேஸ்ட் வர மாதிரி இருக்கும். ஆனால் சொல்ல கூடாது! முதல்முறை தெரியாமல் நேர்மையான விமர்சனம் தான் இல்வாழ்கையின் ரகசியம்னு (ரொம்ப தப்பா) புரிஞ்சுண்டு சொல்லி தொலைச்சுட்டேன்! இன் ஃபாக்ட், அது தான் தலை தீபாவளி! அந்த வருடம் தீபாவளியே என் தலையில தான்! அடுத்த வருடம் முதல் எந்த ஐட்டம் கொடுத்தாலும் ஒரு புன் முறுவல், அளவாக கடித்து ருசி பார்த்து, "ம்ம் அருமை! எப்படி இப்படி?! பாத்து, ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத" என்று அவள் அல்வா போல் அல்லாமல் வழுக்கிக்கொண்டு வந்து விடுவேன்!
இதெல்லாம் பரவா இல்லை! பண்டிகை அன்று காலை 330 மணிக்கு திருப்பதி சுப்ரபாத சேவா மாதிரி எழுப்பி வெச்சு நலங்கு, எண்ணெய், வெற்றிலை பாக்கு, தீபாவளி மருந்து என்று ஒரு எனிமா காம்பினேஷன் கொடுத்து ஐயப்ப சீசனில் மாலை போட்டவர் போல நாலு மணிக்கு குளிச்சாதான் ஆச்சு! இல்லை என்றால் டேங்க் தண்ணியில் கங்கைநீர் காலி ஆகிடும்னு ரகளை செய்து எல்லாரையும் ஒரு வழியாய் ரெடி பண்ணி விடுவாள்! இதற்குள் வாண்டுகள் ரெண்டும் முதல் வெடி நான்தான் வெடிப்பேன் என்று குதிக்கும். சரி நம்ம தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஏதாவது பார்க்கலாம் என்றால் பசங்களுக்கு வெடி வெடிக்க நம்மை காவல் தெய்வமாக பக்கெட் தண்ணீருடன் அனுப்பி விடுவார்கள்!
வெளியே வந்தால் அக்கம் பக்கத்தில் உள்ள அப்பாக்கள் எஎல்லாரும் ஃபயர் சர்வீஸ் வீரர்கள் போல, புது சொக்காயும், மொட மொட வேட்டியும், பிளாஸ்டிக் பக்கெட்டும் என ஒரு வித்தியாசமான அவதாரத்தில் ஒருவருக்கு ஒருவர் கங்கா ஸ்நானம் ஆச்சா? ஹாப்பி தீபாவளி என்று அசடு வழிந்து கொண்டு நிற்போம்.
பின்னர் டிபன் சாப்பிட்டு, உறவுகள் என்ற பெயரில் உள்ளூரில் உள்ள ஒரு ஐந்து ஆறு வீடுகளுக்கு சென்று பட்சண பண்ட மாற்றத்தை நிகழ்த்தி (எல்லா வீட்டிலும் அதே ஐட்டம்தான்! ஒரே மந்திரி சபை தானே!) சாயங்காலம் அக்கடா என்று உட்கார்ந்தால், கடோத்கஜன் பிரசன்னம் ஆகி, அப்பா வா, நீதான் அந்த 250 ஷாட் வைக்கணும்! அப்போதான் கெத்தா இருக்கும் என்று கூப்பிட்டு போவான்!
தெருவே நின்று வேடிக்கை பார்க்க ஏதோ நிலவில் கால் வைக்கும் ஆம்ஸ்ட்ராங் ரேஞ்சுக்கு காலை மெதுவாக தூக்கி ஜாக்கிரதையாக ஏதாவது பாதி எரிந்த பட்டாசில் கால் படாமல், அந்த 250 ஷாட் ஐ நெருங்கி, கண்ணாடியை சரி செய்து திரியை கொளுத்தி, திரும்பி திடீர் என்று ஓடாமல், அதே நேரம் ரொம்ப மெதுவாக இல்லாமல், ஒரு காந்தி தாத்தா யாத்திரை வீடியோ வேகத்தில் விலகி வந்து நின்று, எல்லோருடனும் சேர்ந்து மேலே பார்த்தால், வான் முழுவதும் வான வேடிக்கை! அதில் நமது 250 ஷாட்சும் அழகாக கலந்து கோலாகலம் கூட்ட, அட, ஆமாம்! பண்டிகைகளின் அரசி தீபாவளி தான்! இந்த ரண களத்திலும் குதூகலம் காண்பதில் தான் நம் தீபாவளியின் ஆன்மா இருக்கிறது! நம் பண்டிகைகளின் அமைப்பே அலாதிதான்! ஹாப்பி தீபாவளி நண்பர்களே!
Leave a comment
Upload