தொடர்கள்
கதை
யாதும் ஊரே..... கேபியெஸ்

2025916180634778.jpeg

மெட்ராஸ் அதாவது சென்னை எனக்கு மிகவும் பிடித்தமான நகரமாக இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது அப்படி இல்லை. எழுபது வயதில் வெளியே சென்று விட்டு திரும்ப வீட்டுக்குள் வருவதற்குள் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது. எங்கே போனாலும் போக்குவரத்து நெரிசல், மாற்றுப்பாதையில் செல்லவும் அறிவிப்பு பல வகைகள், நோ பார்க்கிங் எச்சரிக்கை அறிவிப்புகள், மூன்று மடங்கு அதிக கட்டணம் கேட்கும் ஆட்டோ ரிக்சாக்கள், சிறிய சந்துகளில் பேரிரைச்சலுடன் புழுதிபறக்கச் செல்லும் பேருந்துகள், சாலையையே விலை கொடுத்து வாங்கியது போல் சீறிப்பாயும் இருசக்கர வண்டிகள், நடைபாதையில் நடக்க முடியாதபடி ஆக்கிரமிப்புகள், கேட்பாரற்று மல்லாந்து கிடக்கும் கழிவு நீர் வடிகால் மூடிகள்.சாலை குண்டுகள் குழிகள் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.


வீட்டுக்குள் நுழைந்த போது மாலை 6:00 மணி ஆகிவிட்டது. மின்சார தடை !என் மனைவி என்னை மெழுகுவர்த்தி ஏற்றி வரவேற்றாள். அலுப்பும் சலிப்பும், அலைச்சலும்,ஓய்ச்சலும் என்னை முழுமையாக ஆட்கொண்ட போது தான் கைப்பேசி மூலமாக அந்த இனிய செய்தி 'இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே போல' வந்தது. என் ஒரே மகன் கார்த்தி தான் போனில் அழைத்து என்னையும் என் மனைவியையும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு வரும்படி அழைத்தான். கார்த்திக் அமெரிக்கா போய் மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. வழக்கம்போல் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் ஒரு நல்ல பொறுப்பில் இருக்கிறான். இன்னும் பத்து நாட்களுக்குள் விமான பயணச்சீட்டு அனுப்புவதாகவும் சொன்னான். நல்ல வேலையாக ஏற்கனவே எனக்கும் என் மனைவிக்கும் விசா எடுத்து வைத்திருந்ததால் பயண ஏற்பாடுகளை உடனடியாக தொடங்கினோம்.


எனக்கு எல்லாமே ஒரு கனவு போல இருந்தது.. மூன்று மாதங்கள் நியூயார்க்கில் தங்குவதாக முடிவு செய்தோம் தனிமனித சுதந்திரம் அதிகம் உள்ள நாடு அமெரிக்கா. பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களை பட்டியல் போட்டுக் கொண்டோம். உண்மையான தமிழ்த்தாய் போல என் மனைவியும் பருப்பு பொடி, இட்லி மிளகாய் பொடி, சாம்பார் மிளகாய் பொடி, வத்தல் வகையறாக்கள் என சைவ சாப்பாட்டின் கச்சா பொருள்கள் அனைத்தையும் தயார் செய்து அவைகளை காற்று புகாத பைகளில் அடைத்து அதன் மேல் சாம்பார்பொடி, ரசப்பொடி என்று கையால் எழுதிய லேபிளை ஒட்டி அமெரிக்கா புறப்பட தயாரானாள்.
அமெரிக்கா புறப்படும் நாளும் வந்தது. சொர்க்கவாசல் திறக்கப் போகிறது. மூன்று மாதமாவது அவனுடன் தங்க வேண்டும் என்று கார்த்தி கெஞ்சி கேட்டுக் கொண்டான். சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் விமானத்தில் பயணம் செய்து நியூயார்க்கில் நாங்கள் நுழைந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். கார்த்தி எங்களை கட்டி அணைத்துக் கொண்டான். அப்போது இரவு நேரமாக இருந்ததால் எங்கு பார்த்தாலும் மின்விளக்குகள், ஆங்காங்கே விண்ணை முட்டும் பிரம்மாண்ட கட்டிடங்கள், நூற்றுக்கணக்கான கார்கள் இரு திசைகளிலும் வேகமாக பறந்து கொண்டு இருந்தாலும் சென்னையில் கேட்கும் பேரிரைச்சல் அங்கு இல்லை. கம்பளம் விரித்தார் போல் அகலமான சாலைகள். போக்குவரத்து சிக்னலுக்கு மரியாதை கொடுக்கும் ஓட்டுநர்கள், பாதசாரிகளுக்காக மரியாதையுடன் நின்று வழிவிடும் ஓட்டுநர்கள், சுமார் ஒரு மணி நேரம் காரில் பயணித்தபின் கார்த்தியின் அப்பார்ட்மெண்ட்டை அடைந்தோம். பத்து மாடி குடியிருப்பில் கார்த்தியின் பிளாட் ஆறாவது மாடியில் இருந்தது. இரண்டு படுக்கை அறை கொண்ட இடம். ஹால் படுக்கையறைகளில் மெத்து மெத்து என்று கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. "நீங்க ரெண்டு பேரும் தூங்கப் போங்க, ரொம்ப அலுப்பா இருப்பீங்க" என்று சொல்லி எங்கள் படுக்கையறையை காண்பித்தான். வெகு நேரம் தூக்கம் வரவில்லை நாளையிலிருந்து என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கொண்டு தூங்கி போனோம்.


அமெரிக்காவில் பொழுது நிசப்தமாகவே விடிகிறது. அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் கார்த்தி வீட்டில் தான் இருந்தான். அறையை விட்டு வெளியே வந்து காலைக்கடன்களை முடித்து விடலாம் என்று பாத்ரூம் கதவை திறந்த போது கார்த்தியின் குரல் பின்னால் கேட்டது,


"அப்பா ,ஒரு நிமிஷம் நீங்க ரெண்டு பேரும் அமெரிக்காவில் இருக்கும் வரை உங்க பழக்க வழக்கங்களை இந்த நாட்டிற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ள வேண்டும். டாய்லெட் உபயோகப்படுத்தினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியே சிந்தாம இருக்கணும். பாத்ரூம் எப்பவுமே இங்கே உலர்ந்த நிலையிலேயே இருக்கணும், இல்லாட்டி பூச்சி வண்டு எல்லாம் உள்ளே வந்துடும், மத்த பிளாட்டில் இருக்கிறவங்க புகார் கொடுத்துடுவாங்க"


நான் தயங்கி படி "அது சரிப்பா குளிக்கும் போது தண்ணீர் கீழே தானே போய் ஆகணும்" என்றேன் அப்பாவியாக. கார்த்தி சிரித்துக்கொண்டே "அதுக்கு தான் பீங்கான்ல குளிக்கிற தொட்டி வச்சிருக்காங்களே அதுக்குள்ள ஏறி உட்கார்ந்து அல்லது நின்னுகிட்டே குளிக்க வேண்டியதுதான்", " சரிப்பா" என்று சொல்லிவிட்டு சென்னையில் என் வீட்டு பாத்ரூமில் எனக்கு இருந்த சுதந்திர குளியலை நினைத்துப் பார்த்தேன்.


ஒருவழியாக வழுக்கி விழாமல் பாத் டப்புக்குள்ளேயே நின்று ஒரு நடனக் குளியலை போட்டுவிட்டு வெளியே வந்து, "கார்த்தி இங்கே சாமி ரூம் எங்கே இருக்கிறது?" என்று கேட்க "அப்பா இங்கே சாமிக்கு எல்லாம் தனியா ரூம் கிடையாது எல்லாம் மனசால கும்பிட்டுக்கனும்" என்றான் கார்த்தி. "இல்லப்பா அம்மா காஞ்சி காமாட்சி படம் கொண்டு வந்திருக்கா? அதை இங்கே எங்கேயாவது மாட்டி பூஜையை....." ," அப்பா பில்டிங் ரூல்ஸ் படி இங்க அதெல்லாம் சரிப்பட்டு வராது ,உங்க ரூம்லயே படத்தை வைத்து கும்பிட்டுக்கோங்க,தப்பி தவறி கற்பூரம் ஏத்திடாதீங்க எல்லா இடத்திலும் ஃப யர் அலாரம் பொருத்தி இருக்காங்க, கற்பூரம் கொளுத்தினா பத்து நிமிஷத்துல தீயணைப்பு வண்டி இந்த கட்டிட வாசல் நின்னுடும், ஆனா நீங்க கவலைப்படாதீங்க ஒரு 50 கிலோ மீட்டர்ல ஒரு முருகன் கோயில் கட்டி இருக்காங்க உங்கள ரெண்டு பேரையும் ஒரு நாள் அங்க கூட்டிட்டு போறேன்" என்றான் கார்த்தி வாஞ்சையுடன் என் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு..


என் மனைவி நர்தனக் குளியலை முடித்துவிட்டு காமாட்சி அம்மன் படத்துடன் வந்தாள். நான் கார்த்தி சொன்னதை விளக்கிய உடன் சற்று ஏமாற்றத்துடன் எங்கள் அறைக்குள்ளே சென்று விட்டு ‌ காமாட்சியை ஒரு குட்டி டேபிள் மேல் வைத்து விட்டுதிரும்பினாள்.


கார்த்தி அருகில் அமர்ந்து அவன் கன்னத்தை தடவியவாறே என் மனைவி கேட்டாள் "கார்த்தி உனக்கு பசிக்குமே, நான் ஏதாவது டிபன் பண்ணட்டுமா இங்கு இட்லி மாவு கிடைக்குமா? அப்படியே கொஞ்சம் ரவா, மைதா, துவரம் பருப்பு, மிளகாய் வத்தல், காய்கறி இதெல்லாம் வரவழைச்சா மூணு வேளை சாப்பாட்டுக்கு நானே சமைத்து விடுவேன்"...


"அம்மா இட்லி மாவு எல்லாம் இங்க கிடைக்காது, மீதியெல்லாம் ஓரளவுக்கு கிடைக்கும். ஆனா நாம போய் தான் வாங்கணும், ஃப்ரீ டெலிவரி எல்லாம் கிடையாது. காலைல பிரட் டோஸ்ட், கான்ஃப்ளெக்ஸும் ரெடி பண்ணிடலாம் நைட்டுக்கு பீசா ஆர்டர் பண்ணிக்கலாம் மத்தியானம் இந்தியன் ரெஸ்டாரண்ட் ஒன்று பத்து மைல் தூரத்துல இருக்கு அதுக்கு போயிடலாம்" என்று கார்த்தி முடிக்க, அவன் அம்மாவின் முகத்தில் கவலை ரேகை படிந்தது. இப்படியே சில நாட்கள் நகர்ந்தன .வேலைக்கு ஆள் கிடையாது நானும் என் மனைவியும் சேர்ந்து தான் பாத்திரங்களை கழுவுதல், துணியை உள்ளேயே உலர வைத்து பின் அயன் செய்தல் ஆகிய எல்லா வேலைகளையும் மகிழ்ச்சியுடன் செய்தோம். அந்த நேரமாவது பொழுது போகிறதே என்ற மகிழ்ச்சி. கார்த்தி அலுவலகம் சென்று விட்டு இரவு திரும்பும் வரை என்னதான் செய்வது.

பொதுவாகவே நாங்கள் டிவியும் அதிகம் பார்க்காத மைனாரிட்டி குரூப்பில் வருவதால் பொழுது போவது கொஞ்சம் சிரமம் தான். மகனைச் சொல்லி குற்றமில்லை எங்களை திருப்தி படுத்துவதற்காக அவன் எடுக்காத முயற்சிகளே இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேடித்தேடி இந்திய உணவகங்களுக்கு எங்களை அழைத்துப் போவதும், சுற்றுலா இடங்களுக்கு அனுப்பி வைப்பதும், இந்திய நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து எங்களுடன் பேச வைப்பதும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததும் எங்களுடன் அமர்ந்து பழைய கதைகளை பேசிக் கொண்டிருப்பதும்... இதற்கு மேல் ஒரு மகன் பெற்றோருக்கு என்ன செய்து விட முடியும்?


ஏன் எங்களால் ஒரு அயல் நாட்டில் அவர்களது கலாச்சாரம் மற்றும் வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ மனம் ஒப்பவில்லை? காரணம் மாறி வரும் நம் கலாச்சாரமும் எண்ணங்களும். தாயகம் திரும்புவதற்கு முன்னால் கார்த்தியிடம் பேசினேன்" கார்த்தி நாளைக்கு சென்னைக்கு புறப்படுகிறோம், பாவம் உனக்கு தான் ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன்" என்றேன் அவனை அணைத்துக் கொண்டு "அதெல்லாம் இல்லப்பா ஆனா நீங்க அவ்வளவு சந்தோஷமா இல்லையோன்னு எனக்கு தோணுது" கார்த்தியின் கண்கள் கலங்கியது. "கார்த்தி தவறு எங்களோடது தான் இங்கே நீங்க எல்லாமே உழைச்சா தான் எதுவும் கிடைக்கும், சென்னையில் அப்படி இல்லை வீட்டில் உட்கார்ந்துபடியே எல்லாவற்றையும் சாதிக்கலாம் வீட்ல பெருக்கத் துடைக்க ஆள் இருக்கு, சமைக்க வேண்டாம் போன்ல ஆர்டர் பண்ணி வீட்டுக்கு பத்து நிமிஷத்துல வர வைக்கலாம் ,வெளியில போக வண்டி வேணுமா? ஒரே ஒரு போன் கால் போதும், உடம்பு சரியில்லையா? டாக்டர் வீட்டுக்கு வருவார், வீட்டை சுத்தம் பண்ணனுமா? குழாய் ரிப்பேரா? மின்சார பிரச்சனையா? என்று எல்லா தேவைகளுக்கும் ஒரு போன் பண்ணினா போதும். இந்த புது கலாச்சாரத்திற்கு அடிமையாகி விட்டதால் எங்களுக்கு நடக்கக்கூட வாய்ப்பில்லாமல் போய்க்கிட்டு இருக்கு. உடல் உழைப்பே இல்லாம போயிடுச்சு" கார்த்தி மௌனமாக இருந்தான். "அப்பா நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி வர ஆரம்பிச்சீங்கன்னா அமெரிக்கா உங்களுக்கு ரொம்ப பிடிச்சிடும்" என்றான் மௌனத்தை கலைத்து.

"இருக்கலாம் கார்த்தி இப்பவே இந்த ஊர் கலாச்சாரம் பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு, அடுத்த முறை வரும்போது இன்னும் பிடிக்கும் காலையில ஊருக்கு கிளம்பணும் நீ போய் தூங்கு" என்று சொல்லிவிட்டு என் அறையை நோக்கி நடந்தேன்....

2025916140501531.jpg