உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழி திரைப்படங்களில், குழந்தைகளின் உலகம் மிக அழகாக காட்டப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட படங்களை தேடி கண்டறிந்து சிறார்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இனி வாரம் தோறும் வரும் தொடர் ' பசங்க டாக்கீஸ்..'
Movie :- அட்கன் சட்கன் ( Atkan Chatkan)
2020 ஆம் ஆண்டு வெளியான இசை தொடர்புடைய ஹிந்தி மொழித் திரைப்படம். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தயாரித்து, டிரம்ஸ் சிவமணியின் இசையில், இயக்குனர் ஷிவ் ஹரே எழுதி இயக்கியுள்ள, குழந்தைகள் திரைப்படம். எளிமையான கதையாக இருந்தாலும், இந்தப் படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்களின் நடிப்பும், டிரம்ஸ் சிவமணியின் அற்புதமான இசையும் இந்தப் படத்தைத் தனித்து காட்டுகிறது.
ஆர்வமும் கடின உழைப்பும் இருந்தால், இந்தப் பிரபஞ்சத்தில் அதற்கான வழிகள் திறக்கும்.
லிடியன் நாதஸ்வரம், யார் ரானே, சச்சின் சவுத்ரி, தமன்னா தீபக் மற்றும் ஆயிஷா விந்தாரா ஆகிய குழந்தைகள்தான் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். இசையின் மீது தீராத ஆர்வம் கொண்டவர்கள்; ஆனால் அந்த இசையை கற்றுக் கொள்ள போதிய வளங்கள் இல்லாதவர்கள். அனைவரும் குழந்தை தொழிலாளர்கள். அவர்கள் எவ்வாறு தங்கள் கனவை நோக்கிப் பயணித்து அதை அடைந்தார்கள் என்பதைத்தான் இந்தக் கதை பேசுகிறது.
தன்னுடைய அபாரமான இசை திறமையால், ஆஸ்கார் உட்பட நிறைய விருதுகளை வென்ற கௌதம் ஷிசரே வுக்கு , இந்தியாவிலிருந்து ஒரு முக்கியமான கொரியர் வருகிறது. அனுப்பியவரின் முகவரியில் மாதவ் என்ற பெயரைப் பார்த்ததும் கௌதம் நெகிழ்ந்து நிற்கிறார். உள்ளே திறந்து பார்த்ததும், அட்கன் சட்கன் என்ற தலைப்பை உடைய புத்தகம் வைக்கப்பட்டிருக்கிறது. அதை திறந்து பார்த்ததும், முதல் பக்கத்தில் 'என் ஆருயிர் நண்பன் குட்டுவுக்கு ஒரு அன்பு பரிசு' என்று எழுதப்பட்டு இருக்கிறது. அந்த நூலை எழுதியது கௌதமின் நண்பன் மாதவ்.
அந்த நூலை கௌதம் வாசிக்க ஆரம்பிக்கிறான். பின்னோக்கி கதை சொல்லும் யுக்தியில், கதை நகர்கிறது. குட்டு என்கிற கௌதம், அவரது நண்பர் மாதவ் ஆகியோரது இளமை கால வாழ்க்கையைச் சொல்லும் நூல் அது.
குட்டு ஒரு டீக்கடையில் வேலை செய்யும் சிறுவன். அருகில் இருக்கும் கடைகளுக்கு, அவன் டீ விநியோகிக்கிறான். அவன் வருமானம் தான் அவர்கள் வாழ்வின் ஆதாரம். அவன் வருமானத்தில் தான் அவன் செல்லத் தங்கையின் பசி மயக்கமும், தந்தையின் போதை மயக்கமும் தீர்ந்து கொண்டு இருந்தது. தன் மனைவி தன்னை விட்டு போய் விட்டாள் என்று முப்போதும் போதையில் இருப்பவர் அவன் தந்தை.
குட்டு அதிகம் பேசமாட்டான். தன்னைச் சுற்றி ஒலிக்கும் அத்தனை ஒலியிலும் இசையின் ரூபத்தைக் காண்கிறான். இசைதான் அவன் விருப்ப மொழியாக இருக்கிறது. அவன் நிற்கும்போது, நடக்கும் போது, ஓடும் போது, டீயை விநியோகிக்கும்போது இப்படி சதா எல்லா நேரமும் அவன் கைகளில் ஒன்று , தொடையில் தாளமிட்டபடியே இருக்கும். இசையில் தன் ஆன்மாவை உணர்பவன் அவன். அவன் வேலை செய்யும் பகுதியில் இருக்கும் இசை பள்ளியில் பயில வேண்டும் என்பதுதான் அவன் கனவு.
அவன் வேலை செய்யும் திவாரி தேநீர் கடைக்கு அருகே, நடைபாதை கடையில் புத்தகங்களை விற்கும் சிறுவன்தான் மாதவ். அவன் ஊன்றுகோல்களின் துணையோடு நடக்கும் ஒரு மாற்றுத் திறனாளி. புத்தகங்களை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், அத்தனைப் புத்தகங்களையும் வாசித்து விடுவான். அவனுக்குப் புத்தகங்கள் மீது தீராக் காதல். எளிய நிலையில் உள்ள குழந்தைகளாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்கள்.
Musician என்பதை எழுதக்கூட தெரியாத தான் எவ்வாறு இசையில் பெரிய ஆளாக வர முடியும் என்று குட்டு கவலைப்படும் பொழுது, மாதவ் ஒரு பலூனை மேலே பறக்க விட்டு, 'இந்த பலூனுக்கு அதற்கான ஸ்பெல்லிங் தெரியாது; ஆனால் அதற்குப் பறக்க தெரியும் ' என்று ஆறுதல் படுத்துகிறான். தன் நண்பன் என்றாவது ஒருநாள் மிகப்பெரிய இசைக் கலைஞனாக வருவான் என்பது மாதவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அவன் வேலை செய்யும் பகுதியான ஜான்சியிலிருந்து அவனது வீட்டிற்கு பேருந்தின் மூலமாக செல்வது அவன் வழக்கம். ஒரு முறை பேருந்தில் , சிறு தகரத்தாலான ஒரு பொருளில் தாளமிட்டபடியே பாடிக்கொண்டு பிச்சை எடுக்கும் இரு குழந்தைகளைச் சந்திக்கிறான். அவர்கள் சுட்டன், மித்தி. இருவரும் அண்ணன் தங்கை. எப்படி அந்த தகரத்தில் சரியாகத் தாளமிட வேண்டும் என்பதை குட்டு அவர்களுக்குச் சொல்லித் தருகிறான்.
இசைக் குழுவில் தனக்கு வேலை தருவதாக சொன்னதை நம்பி டீக்கடையில் தன் வேலையை விட்டு விடுகிறான். ஆனால் அந்த இசைக் குழுவும் குட்டுவுக்கு வேலை தரவில்லை. எப்போது சம்பளப் பணம் கிடைக்கும் என்று வீட்டிற்கு சென்றவுடன் அவனுடைய தந்தை கேட்டுக் கொண்டே இருக்கிறார். உடனடியாக வேறு ஒரு வேலை தேட வேண்டிய கட்டாயம். அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து கடைகளிலும் சென்று வேலை கேட்கிறான். ஆனால் இவனுக்கு வேலை தர யாரும் முன் வரவில்லை. குழந்தை தொழிலாளியை வேலைக்கு வைத்தால் பிரச்சனை வரும் என்ற பயம் அவர்களுக்கு.
அந்த நேரத்தில் அந்த இசை குழுவில் இருந்த ஒரு நபருக்கு இவன் மேல் பரிதாபம் ஏற்படுகிறது. பழைய பொருட்களை வாங்கி அவற்றை தனித்தனியாக பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் ஒரு காயலான் கடையில் குட்டுவுக்கு வேலை வாங்கித் தருகிறார். அந்தக் கடையின் முதலாளி கறாரானவர். சிறிது தவறு நடந்தாலும் வேலையை விட்டு அனுப்பிவிடக்கூடியவர். குட்டு நன்கு வேலை பார்த்து அவரிடம் நல்ல பெயர் வாங்குகிறான். இசையின்றி ஒரு நிமிடமும் அவனால் இருக்க முடியாது அல்லவா? வேலை செய்யும் போதே அங்கே கிடைக்கும் கண்ணாடி பாட்டில்கள், தகரங்கள், பிவிசி பைப்புகள், வெண்கல பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி விதவிதமான தாளங்களை உருவாக்குகிறான். அவற்றைப் பயன்படுத்தி, ஒரு புதுவிதமான இசைக் கருவியை உருவாக்குகிறான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதில் வாசித்து மகிழ்கிறான்.
மீண்டும் அவனுக்கு ஒரு சிக்கல் வருகிறது. அவன் கடையில் விலை உயர்ந்த வெண்கலப் பானையும், தட்டும் காணாமல் போகிறது. இவன்தான் அதை எடுத்துச் சென்றிருப்பான் என்று முதலாளி சந்தேகப்பட்டு அவனை வேலையில் இருந்து துரத்துகிறார்.
வேலை கிடைப்பதே கடினமாக இருந்த நேரத்தில் கிடைத்த வேலையும் கையை விட்டு நழுவிச் சென்றது. வருத்தத்தோடு நடந்து கொண்டிருந்த குட்டு, பாட்டுப் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் அந்த இரு குழந்தைகளிடம் காணாமல் போன பொருட்கள் இருப்பதைக் காண்கிறான். அவர்களிடம் சென்று அந்தப் பொருட்களை திருப்பி தந்து விடுமாறு கேட்கிறான்.. ஆனால் சிறுவன் சுட்டன் ஒரு முரடன். கோபத்தில் இவனிடம் சண்டையிடுகிறான். அந்த நேரத்தில் குட்டூவின் நண்பன் மாதவ் வருகிறான். அவர்களைச் சமாதானப்படுத்தி சண்டையை நிறுத்துகிறான்.
அந்த இரு குழந்தைகளும், தன் நண்பன் மாதவுடன் ஒரு கைவிடப்பட்ட ரயில் பெட்டியில் வசித்து வருவதை குட்டு அறிகிறான். மங்கு என்ற மனிதரின் கவனிப்பில் அந்த மூவரும் வளர்ந்து வரும் அனாதைக் குழந்தைகள் அவர்கள். இவர்கள் மூவரும் கொண்டுவரும் பணத்தில் ஒரு பகுதி மங்குவுக்குச் சொந்தம்.
அந்த நேரத்தில் தான் மாதவிற்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றுகிறது. நால்வரும் சேர்ந்து ஒரு இசைக் குழுவை ஆரம்பித்து, மக்கள் கூடும் இடங்களில் அவர்களை பாடி மகிழ்வித்து பொருள் ஈட்டலாம் என்ற யோசனையைச் சொல்கிறான்.
அந்த யோசனையின் அடிப்படையில், அட்கன் சட்கன் என்ற இசை குழு உருவாகிறது. அந்தக் குழுவை குட்டு வழி நடத்துகிறான்.
பழைய ட்ரம், பிவிசி பைப்புகள், பழைய சைலோபோன்கள், கண்ணாடி பாட்டில்கள் இவற்றைக் கொண்டு புது விதமான இசைக் கருவிகளை குட்டு உருவாக்குகிறான். பொது இடங்களில் அந்த கருவிகளை மீட்டி, பொருள் ஈட்டுகிறார்கள்.
இசைப்பள்ளியில் படித்து, மிகப்பெரிய இசை கலைஞனாக வரவேண்டும் என்பது குட்டுவின் கனவு; நிறைய நூல்களை வாசித்து , நல்ல எழுத்தாளனாக மாறி, தனக்கு பிடித்த , சக்கர நாற்காலியில் சர்ச்சுக்கு வரும் பெண்ணை தனது பெண் தோழியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கனவு மாதவிற்க்கு. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவு சுட்டனுக்கு; அழகழகான உடைகள், உணவுகள் , பொம்மைகள் என்று ஒரு மகிழ்வான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது மிதியின் கனவு. கைவிடப்பட்ட எளிய குழந்தைகளின் இந்த கனவு என்பது நிறைவேறுவது கடினம். அதற்கு மிகக் கடுமையாய் உழைக்க வேண்டும். காலமும் அவர்களை கண் திறந்து காண வேண்டும்.
விரைவில் ஒரு நல்ல காலம் அவர்களை கண் திறந்து பார்த்தது. ஒரு பொருட்காட்சியில், விதவிதமான இசைக்கருவிகளைக் கொண்டு வாசித்துக் கொண்டிருக்கும் இசைக் குழுவை காண்கிறார்கள். உற்சாக மிகுதியால், அதற்கு அருகே இருக்கும் பழைய ட்ரம்களில் குச்சிகளைக் கொண்டு இவர்கள் குழுவும் இசைக்கிறது. இவர்களின் புதுமையான இசையால் மக்கள் கூட்டம் கவரப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் தான்சென் இசை பள்ளியின் முதல்வரும் அவரது உதவியாளரும் இருக்கிறார்கள்.
அவர்கள் ஒரு நெருக்கடியில் இருக்கிறார்கள். வருடா வருடம் அனைத்து மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் ஒரு இசை போட்டி இந்த முறை அவர்கள் பள்ளியில் நடக்க இருக்கிறது. தொடர்ந்து நான்கு வருடங்களாக இசை போட்டியில் தோல்வியுற்று வரும் தங்கள் பள்ளி இந்த முறை வெற்றி பெற்றால் தான், தொடர்ந்து இசைப்பள்ளியை நடத்த முடியும் என்ற இக்கட்டான சூழல் அவர்களுக்கு. ஆனால் பள்ளியின் இசைக் குழுவுக்கு , அத்தனை வசதிகள் இருந்தும் இவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் திறமை இல்லை.
என்ன செய்யலாம் என்று முதல்வர் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், இவர்களின் புதுமையான இசை முதல்வரை கவர்கிறது.
அந்தக் குழந்தைகள் யார் என்பதை கண்டறிந்து, அவர்களை ஒரு நட்சத்திர விடுதிக்கு சாப்பிட அழைத்துச் செல்கிறார். இதுவரை தாங்கள் சாப்பிட ஆசைப்பட்ட, கண்களால் கூட பார்த்தறியாத பலவிதமான உணவு பதார்த்தங்கள் மேஜையில் பரிமாறப்பட்டிருப்பதை ஆசையோடு குழந்தைகள் நோக்குகிறார்கள்.
இவர்களுடைய இசை தன்னைக் கவர்ந்ததாகவும், இந்த வருடம் அனைத்து மாநிலங்களுக்கிடையே நடைபெறும் இசைப்போட்டியில், தங்களது பள்ளியின் சார்பாக இவர்களுக்கு பயிற்சி தரப்போவதாக சொல்கிறார். இசைப் போட்டியின் பரிசுத்தொகை அவர்கள் நினைத்துப் பார்த்திடாத வகையில் இருக்கிறது. அதோடு இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அந்தப் பள்ளியிலேயே இலவசமாக அவர்களுக்கு இசைப் பயிற்சியும் தருவதாக சொல்கிறார். கண்களில் கனவுகள் மின்ன இது கனவா அல்லது நிஜமா என்று திகைத்தபடி நால்வரும் அமர்ந்திருக்கிறார்கள்.
அடுத்த நாள் முதல்வரின் அழைப்பின் பேரில் பள்ளிக்குச் செல்கிறார்கள். இவர்களது இசைத்திறனை பள்ளியில் இருக்கும் மற்ற இசை குழுவிற்கு காட்டுவதற்காக இவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. முதலில் இந்த தெருவோர சிறுவர்களை ஏளனமாய் பார்க்கிறார்கள். மெல்ல அவர்கள் தங்கள் திறமையை காட்டத் தொடங்கியதும் , பள்ளியில் உள்ள அனைவரும் வியந்து போகிறார்கள். இவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டும் தான் இறுதிப் போட்டியில் நீங்கள் கலந்து கொள்ள முடியும் என்று ஏற்கனவே இருந்த இசைக் குழுவிற்கு நிபந்தனை விதிக்கிறார் முதல்வர்.
அட்கன் சட்கன் குழு குழந்தைகள் நால்வரையும், முதல்வர் இசைப் பள்ளியில் மாணவர்களாக சேர்த்து விடுகிறார். அவர்களுக்கு மோகினி என்ற ஒரு இசை ஆசிரியை மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் அந்த ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று பயிற்சி பெறுகிறார்கள்.
இவர்களால்தான் தங்கள் வாய்ப்பு பறிபோனதாக பள்ளியின் இசை குழு பொறாமை கொள்கிறது. அவர்களைப் பின்தொடர்ந்து அவர்கள் யார் என்பதை கண்டறிகிறார்கள். குழந்தைகளை கவனித்து வந்த மங்குவிடம் நிறைய பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டுகிறார்கள்.
மீண்டும் ஒரு திருப்பம். இவர்களுக்கு இசைப் பயிற்சி தரும் மோகினி குட்டூவின் தாயார். அவன் தந்தை விஷ்ணு , பகவாஜ் என்ற துருபத் இசையில் பயன்படுத்தப்படும் தாள இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர். மேலும் இது கதக், ஒடிசி மற்றும் மராத்தி போன்ற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் மிருதங்கத்தை போன்ற ஒரு கருவி. விஷ்ணுவின் குழுவில் பாடகியாக இருந்த மோகினிக்கும் விஷ்ணுவிற்கும் காதல் அரும்புகிறது. திருமணம் நடந்து அன்பான வாழ்க்கையில், குட்டுவும் அவன் தங்கை லதாவு பிறக்கிறார்கள்.
கணவன் மனைவி இருவரும் இணைந்து நிறைய இசை நிகழ்ச்சிகள் செய்கிறார்கள். மோகினியின் அற்புதமான குரலால் கணவனை விட அவளுக்கு அதிகப் புகழ் கிடைக்கிறது. மனதிற்குள் பொறாமையால் புழுங்கிய விஷ்ணு மெல்ல மெல்ல குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறான். அவனுடைய கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், குழந்தைகளுடன் அவள் வெளியேற முயல்கிறாள். ஆனால் குழந்தைகளைப் பிடுங்கிக் கொண்டு அவளை வீட்டை விட்டு கணவன் அடித்து துரத்தி விடுகிறான். பலமுறை முயன்றும் அவளால் தன் குழந்தைகளைச் சந்திக்க இயலவில்லை. அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்று என்றாவது குழந்தைகளை சந்திப்போம் என்று வாழ்ந்து வருகிறாள். மீண்டும் குழந்தைகளைச் சந்திப்பதற்காகத்தான் வசித்த பழைய பகுதிக்கு வருகிறாள். அங்குதான் இசை பள்ளியின் முதல்வர் மூலம் இந்த அட்கன் சட்கன் குழுவிற்கு இசைப் பயிற்சி அளிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
மோகினி தன் தாய் என்பதை அறிந்ததும், அறியாத வயதில் தங்களை விட்டுச் சென்ற தாயை வெறுக்கிறான் குட்டு. இனி அவனுடைய தாயைச் சந்திப்பதோ, அந்த இசைக் குழுவிற்கு சென்று வாசிப்பதோ கூடாது என்று அவன் தந்தை விஷ்ணு கடுமையாக எச்சரிக்கிறார்.
மற்ற மூன்று குழந்தைகளையும் மங்கு அந்த ரயில் பெட்டியில் வைத்து அடைத்து விடுகிறார். பள்ளியின் இசைக் குழுவில் உள்ள மாணவர்கள், இவர்களது இசைக்கருவிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்துகிறார்கள்.
உன்னுடைய தனிப்பட்ட வலிக்காக உன் நண்பர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது சரியா ? என்ற முதல்வரின் கேள்வி குட்டுவை சிந்திக்க வைக்கிறது. மேலும் பக்கத்து வீட்டுக்காரர்களின் மூலம் தன் தாயின் மீது எந்தத் தவறும் இல்லை என்பதையும் அறிகிறான்.
மோகினி குழந்தைகளைத் தேடிச்செல்லும் பொழுது ரயில் பெட்டியில், அடைத்து வைக்கப்பட்டு இருந்த கண்டு , குழந்தைகளை விடுவிக்கிறாள். குட்டுவும் தன் தந்தையிடமிருந்து தப்பித்து இசைப்போட்டி நடக்கும் இடத்திற்கு வருகிறான்.
போட்டியின் இறுதி குழுவாக இவர்கள் மேடைக்கு வருகிறார்கள். இறுதி நேரத்தில் வேறு இசைக்கருவிகளை உருவாக்க முடியாமல், ஒரே ஒரு இசைக்கருவி மட்டும் வைத்துக் கொண்டு நம்பிக்கையோடு மேடையில் இருக்கிறார்கள். அப்போது ஆனந்த அதிர்ச்சியாய், அவன் முதன் முதலில் பழைய பொருட்கள் கடையில் உருவாக்கிய இந்த இசைக்கருவி மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது. பழைய பொருட்கள் கடையின் முதலாளியும், இவன் மீது அன்பு கொண்ட இசைக் குழுவில் இருக்கும் நபரும் தான் நடந்த அனைத்து விஷயங்களையும் அறிந்துகொண்டு, அந்த இசைக்கருவியை அங்கு கொண்டு வந்திருந்தார்கள்.
" மனிதர்களே..
எந்த நேரத்திலும் உங்கள் இதயத்தின் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்" என்று தொடங்கும் அற்புதமான பாடலை, பின்னணி இசையோடு பாடுகிறார்கள். நடுவர்களும் அரங்கமும் வியந்து போய் இவர்கள் திறமையை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று பாடிக் கொண்டிருந்த மாதவ் உறைந்து போய் நிற்கிறான். அந்தக் கூட்டத்தில் அவன் விரும்பிய கனவு தோழியும் அமர்ந்திருக்கிறாள். எப்போதெல்லாம் அவளை பார்க்கிறானோ அப்போதெல்லாம் மாதவ் எதுவும் செய்ய முடியாமல் உறைந்து போய் நிற்பான். தற்போதும் அப்படியே நிகழ்கிறது. நண்பர்கள் அவனைப் பாடு என்று கெஞ்சுகிறார்கள். ஆனால் அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறான்.
மெல்ல சூழ்நிலையை கிரகித்துக் கொண்டு, அந்த வெற்றிடத்தை குட்டு பாடி நிரப்புகிறான். அற்புதமான பாடகியின் மகன் அல்லவா?
அவர்கள் பாடி முடித்ததும் அரங்கே எழுந்து நின்று கை தட்டுகிறது. அவனைத் துரத்திக் கொண்டு வந்த அவன் தந்தையும், திகைத்துப் போய் நிற்கிறார்.
மீண்டும் ஒரு சிக்கல் அவர்களுக்கு வருகிறது. ஏதாவது ஒரு பாரம்பரிய இசைக்கருவியை ஒவ்வொரு குழுவும் வாசித்துக் காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை நடுவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இவர்கள் எப்படி பாரம்பரிய இசைக்கருவியை வாசிக்க போகிறார்கள் என்று முதல்வர் உட்பட அனைவரும் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.
திடீரென்று மேடையில் இருந்த பஹவாஜ் இசைக்கருவியை குட்டு பார்க்கிறான். அதை வாசிக்க அனுமதி பெற்று, அனைவரும் மெய்சிலிர்த்துப் போகும் வகையில் அந்த இசைக்கருவியை வாசிக்கிறான்.
முடித்ததுமே தன் நண்பன் மாதவை தேடி ஓடுகிறான். தன்னால்தான் தன் நண்பர்களின் வாய்ப்பு பறிபோனது. தன்னை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று நினைத்து அழுது கொண்டே, ஒரு ரயிலில் ஏறி எங்கோ சென்று விடுகிறான் மாதவ்.
அந்த இசை போட்டியின் தனிநபர் சாதனையாளராக குட்டு வெற்றி பெறுகிறான். அதோடு அவர்களின் இசை குழு அந்தப் போட்டியில் முதல் பரிசை வெல்கிறது.
குட்டு அந்த இடத்தில் இல்லாததால் அவன் சார்பில் அவனது தந்தை விஷ்ணுவும், தாய் மோகினியும் , சுட்டன் , மித்தி பெற்றுக்கொள்கிறார்கள். இசையே மீண்டும் அவனது தாயையும் தந்தையையும் இணைக்கிறது.
அதற்குப் பிறகு அவர்களின் வாழ்வு மாறுகிறது. அந்த இசைப் பள்ளியில் பயின்று குட்டு உலகம் முழுவதும் போற்றும் இசைக் கலைஞனாக பல விருதுகளை வெல்கிறான்.
அங்கிருந்து குற்ற உணர்ச்சியால் சென்ற மாதவ் ஒரு சமூகநல அமைப்பின் உதவியோடு நன்கு படித்து, அவன் ஆசைப்படி எழுத்தாளனாக மாறுகிறான். தங்களது இசை வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதுகிறான். ஆனால் அதன் முடிவு தெரியாமல் அப்படியே நிறுத்தி வைக்கிறான்.
சில காலங்களுக்குப் பிறகு செய்தித்தாளில் தன் நண்பன் குட்டுவின் நேர்காணலைக் கண்டு , அந்த நாவலை நிறைவு செய்கிறான். தன் மற்ற நண்பர்களை கண்டு மகிழ்கிறான்.
தற்போது அவன் வாழ்வில் அவன் ஆசைப்பட்ட மற்றொன்றும் நிறைவேற போகிறது. ஆம் அவனுடைய கனவு தோழியை மணக்கப் போகிறான். இந்த விவரங்களை ஒரு தாளில் எழுதி , அதை நூலில் உள்ளே வைத்து, தன்னுடைய புத்தகத்தின் முதல் பிரதியை நண்பனுக்கு வைத்து, அவன் ஞாபகமாக எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் அந்த இசைக்கருவியை (அட்கன் சட்கன்) வைத்து நண்பன் குட்டுவுக்கு அனுப்பி வைக்கிறான்.
அவர்கள் கனவு கண்டபடியே குட்டு மாபெரும் இசைக் கலைஞனாகவும், மாதவ் எழுத்தாளனாகவும், சுட்டன் வங்கியில் மிகப்பெரிய பதவியும், மித்தி ஒரு கதக் நடன கலைஞராகவும் மாறுகிறார்கள்.
இந்தப் படத்தில் குட்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் லிடியன் நாதஸ்வரம். 2019ஆம் ஆண்டு, 13 வயதிலேயே 'தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர். அதில், கண்களைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்தல் போன்ற அசாதாரண திறமைகளால் நடுவர்களையும் பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
தற்போது அவரும் அவரது தங்கையும் இணைந்து, பல்வேறு இசை வழிமுறைகளைக் கொண்டு திருக்குறளின் 1330 குறள்களையும் உள்ளடக்கிய உலகின் மிக நீண்ட இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மிகவும் போற்றுதலுக்குரியது. இவர் ஒரு இசையின் குழந்தை என்பதால் இந்தப் படத்தில் மிக இயல்பாக நடித்திருப்பார். மற்ற குழந்தைகளும் தங்களது நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார்கள்.
இசையைக் கேட்கும் பொழுது எப்படி நம் மனது அமைதி பெறுகிறதோ, அதுபோல இந்தப் படத்தை பார்க்கும் பொழுதும் ஒரு அமைதியான மனநிலை நமக்குள் உருவாகும்.
' மனிதர்களே
எந்தச் சூழலிலும் உங்கள் இதயத்தின் நம்பிக்கையே இழந்து விடாதீர்கள்..
தொடர்ந்து வேலை செய்யுங்கள்.. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்..
உங்கள் வாழ்வில் பொருள் புரிந்து
உங்கள் பெயரை உலகத்தில் எழுதுங்கள்..'
Leave a comment
Upload