தொடர்கள்
கதை
நேர்த்திக் கடன் - ஆர்.நடராஜன்

2025916163025626.jpeg

பிரபலமான அந்த ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிந்தது. அது தீபாவளி சீசன், அடுத்தடுத்துப் பல முகூர்த்த நாட்கள், ஒரு தெருவிலிருந்து மறு தெருவரை விரிந்திருந்த அந்தக் கடை பெரிய கல்யாண மண்டபம் போல் இருந்தது. வாங்க வந்தது பட்டுப் புடவையோ, பருத்திப் புடவையோ, பெரும்பாலான தாய்க்குலம் அணிந்து வந்திருந்தது பட்டே. விற்பனையாளர்கள் பல நிறங்களில் வேறுபட்ட விலைகளில் சரக்குகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.
நீண்ட நதியின் நிழலான கரைகள் போல் இரு மருங்கிலும்
ஷோகேஸ்கள் அணிவகுக்க, நடைபாதைக்கு இடம் விட்டு தாய்க்குலம் துணி எடுத்துத் திரும்பும்வரை காலாற தந்தைக்குலம் அமர்ந்து கொள்வதற்காக நடுவே வரிசையாக நாற்காலிகள்
போட்டிருந்தார் முதலாளி. அன்று ஒரு நாற்காலி கூட காலியாக இல்லை. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த ரகுராமன் நடுவில் ஒரு நாற்காலி காலியானது ம்யூசிக்கல் சேர் விளையாட்டு வேகத்தில் அதைப் பிடித்துக் கொண்டான்.
அருகே அறிமுகமில்லாத இரு பெரியவர்கள். பேச்சிலிருந்து இவன் ஊகித்த விஷயம் இருவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள். மத்திய அரசிலிருந்து மற்றவர் மாநில அரசிலிருந்து என்பது இருவரும் பென்ஷன் பற்றியே பேசிக் கொண்டிருந்ததிலிருந்து தெரியவந்தது. இன்னும் சில வருடங்கள் பணியில் இருந்திருந்தால் அவர்கள் என்ன செய்திருந்திருக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்திருப்பார்கள்.
கையில் ஏதாவது புத்தகம் எடுத்து வந்திருந்தால் தேவலை என்று தோன்றியது. எழுந்து அங்கே இங்கே நடக்கலாம் என்று பார்த்தால் கடை நெடுகக் கூட்டமாக இருந்தது. எழுந்தால் நாற்காலி மீண்டும் கிடைக்குமென்று சொல்வதற்கில்லை.


எனவே இருந்த இடத்திலிருந்தபடியே வேடிக்கை பார்ப்பது தான் உசிதம் என்று தோன்றியது. புதிதாகக் கூட்டம் சேர்ந்துக் கொண்டிருந்ததே ஒழிய வந்த கூட்டம் வேகமாக வியாபாரத்தை முடித்துக் கொண்டு போனதாகத் தெரியவில்லை. இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவனால் ஒரு விஷயத்தை மட்டும் தீர்மானிக்க முடியவில்லை. அதாவது வாங்க வந்தவர்கள்
கட்டியிருந்த புடவைகள் அழகா அல்லது கடையில் இருந்த புடவைகள் அழகா என்று. புடவை வாங்க வந்த ஒரு பெண்மணிக்கும் அப்படிப்பட்ட சந்தேகம் வந்திருக்கும் போலிருக்கிறது. கடையில் மலை மலையாகக் குவிந்த புடவைகளைக் கோதிக் கோதிப் பார்த்த பின்னர், இரண்டு கவுன்ட்டர்கள் தாண்டி இருந்த ஒரு முன்பின் தெரியாத பெண்மணியைப் பார்த்துப் பேசி அவர் அணிந்திருந்த பட்டுப்புடவை எங்கே வாங்கியது, எப்போது என்ன விலை என்று நுணுக்கமாக விசாரிக்க ஆரம்பித்தார்.
இதற்கிடையே கையில் இரண்டு புடவைகளுடன் அங்கே வந்தாள் ரகுராமனின் மனைவி ஆனந்தி. இவனுக்கு ‘பகீர்’ என்றது ஒரு புடவைதானே வாங்குவதாகச் சொல்லியிருந்தாள் என்று. இரண்டையும் கணவனிடம் காண்பித்து எது பிடிக்கிறது என்று கேட்டாள். கணவர் எது பிடிக்கிறது என்று சொன்னாரோ அதை ஒதுக்கிவிட்டு மற்றதை வாங்க முடிவு செய்தாள். அப்படியும் அரை மணி நேரம் அவளைக் காணவில்லை. முதல் தளத்திற்கும் இரண்டாம் தளத்திற்கும் சென்று வந்தான் ரகுராமன். அதில் அரை மணி நேரம் கழிந்தது. பிறகு கீழ்த்தளத்திற்கு வந்தான்.
அங்கே சிப்பந்திகளோடு சிப்பந்தியாக முதலாளி உட்கார்ந்து கொண்டிருந்தார். பொது வாழ்க்கையிலும் இருப்பவர் என்பதனால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஆயினும் பெயரை மட்டும் கேள்விப்பட்டு அவரைப் பார்த்திராதவர்கள் அவர்தான் முதலாளி என்று அனுமானித்திருக்க மாட்டார்கள். அவ்வளவு எளிமை. சில வாடிக்கையாளர்கள் தம்முடன் வந்திருந்த நண்பர்களுக்கு இவர்தான் முதலாளி என்று காதோடு காதாகச் சொல்லியபடியே உள்ளே நுழைந்தார்கள். அவர் மேஜை மீது விலைப் பட்டியல்கள். செக் புத்தகங்கள். நடுவில் தொலைபேசி அழைப்புகள். அறிமுகம் செய்து கொள்ளும் சிலர் என்று முதலாளி மும்முரமாக இருந்தார். அவரது இருக்கையை அடுத்த கவுன்ட்டரில் ரகுராமனின் மனைவி ஆனந்தி சற்று முன்பு தான் பணம் கொடுத்து பில் போட்டிருந்த புடவையைத் திருப்பி எடுத்துக் கொண்டு பணத்தைத் தரும்படி காசாளரிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள். காசாளரோ அப்படிச் செய்வதற்கில்லை. வேறு புடவை அல்லது வேறு ஜவுளி எடுத்துக் கொள்ளலாம். பணம் வாபஸ் இல்லை என்று கறாராகச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அந்தப் பக்கம் வந்து இந்தப் பேச்சு வார்த்தையைக் காதில் வாங்கிக் கொண்டான் ரகுராமன். அவனுக்கு எதுவும் புரியவில்லை.
வருவோர் போவோரிடம் எழுந்து நின்று பேசிக்கொண்டு, தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்லியபடி, அத்தோடு பட்டியல்களைச் சரிபார்த்துக் காசோலைகளில் கையெழுத்து போட்டுக் கொண்டே அஷ்டாவதானியாக இருந்து வந்த முதலாளி ஆனந்தியின் பக்கம் திரும்பினார். “ஏனம்மா, பணம் போதவில்லையா? வேறு ஏதாவது பிரச்சினையா? சொல்லுங்கள், அம்மா” என்று கனிவாகக் கேட்டார். ஆனந்தி சில நிமிடங்கள் மௌனமாக இருந்தாள். முதலாளி மறுபடியும் சொன்னார்: “பிரச்சனை என்னன்னு சொல்லுங்கம்மா கவலைப்படாதீங்க.” நடந்தது என்ன என்று புரியாமல் ரகுராமனும் அதே கேள்வியைக் கண்களால் கேட்டான்.
திக்கித்திக்கி ஆனந்தி சொன்னாள்: “எல்லாம் உங்கள் கடை நோட்டீஸ் போர்டுல பார்த்த சங்கதிதானுங்க.”
முதலாளி ஒரு நொடி திகைத்துப் போனார். வாடிக்கையாளர் வருந்தும்படியான தகவல் எதுவும் அறிக்கைப் பலகையில் இல்லையே என்று யோசித்தார். அவ்வப்போது சில ஆன்மிக விழா இலக்கிய விழா அழைப்பிதழ்கள் மட்டும் சம்பந்தப்பட்டவர்களின் வேண்டுகோளை ஏற்று அந்தப் பலகையில் தகவலுக்காக ஒட்டப்பட்டிருக்கும். அப்படி என்ன, இந்தப் பெண்மணி புடவையைத் திருப்பிக் கொடுக்கும்படியான தகவல் என்று யோசித்தார் ஒன்றும் புலப்படவில்லை. எதிரே ரகுராமனுக்கும் ஆனந்திக்கும் நாற்காலிகள் போடச் சொல்லி அமரச் செய்தார். ‘வருத்தப்படுத்தியது எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்’ என்று வேண்டினார்.
நாற்காலியில் அமர்ந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஆனந்தி சொன்னார்: “ஐயா, வாடிக்கையாளர் வருத்தப்படும் அளவுக்கு உங்க கடையில் ஏதும் நடக்குமா? அதெல்லாம் ஒன்றும் இல்லீங்க. நாளை எங்களுக்கு தலை தீபாவளி. பட்டுப் புடவை எடுக்கலாம்னு வந்தேன். ஆசைப்பட்டதை வாங்கிட்டேன். அதன் பிறகு உங்கள் நோட்டீஸ் போர்டுல எழுத்தாளர் கோண்டு என்கிற கோதண்டராமன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நிதி உதவி கேட்டு ஒரு வேண்டுகோள் கண்ணுல பட்டுது. அவர் என் அபிமான எழுத்தாளர். நாங்க நடுத்தர வர்க்கம். புதுசா கல்யாணம் ஆனவங்க. சேமிப்பு பெரிசா ஏதும் இல்லை. இந்த நேரத்தில் கையிலிருந்த நாலாயிரம் ரூபாயும் போட்டு ஒரு பட்டுப் புடவை வாங்கறதுக்கு பதிலா அந்தப் பணத்தை அபிமான எழுத்தாளரின் மருத்துவ நிதிக்குக் கொடுத்திருக்கலாமே என்று தோணிச்சு. நோட்டீஸ் போர்டை முன்னாலேயே பார்த்திருந்தா பட்டுப் புடவை வாங்கியிருக்க மாட்டேன். வாங்கிய பிறகு மனசு கெடந்து அடிச்சுக்குது. இப்பத்தானே வாங்கினேன். அதனால் நீங்க திருப்பி எடுத்துகிட்டா பணத்தை அந்த எழுத்தாளரின் மருத்துவச் செலவுக்குக் கொடுத்திடலாமேன்னு யோசிச்சேன். நான் இன்னும் சரக்கைக் கடையை விட்டு எடுத்துக்கிட்டுப் போகலியே அதனால அதைத் திருப்பிக் கொடுத்துட்டுப் பணத்தை வாங்கிக்கலாமேன்னு பார்த்தேன்.”
முதலாளி பில்லை வாங்கிப் பார்த்தார். ரவிக்கைத் துணியும் புடவையுமாக ரூ. 4014. அதில் வாடிக்கையாளர் கேட்டுக்கொண்ட படி ரூ. 14 கழித்து நாலாயிரம் ரூபாய் ரொக்கம். பில் போடப்பட்டு 15 நிமிடங்கள்தான் ஆகியிருந்தது என்பது கம்ப்யூட்டர் பதிவில் தெரியவந்தது. அரை நிமிடம் பில்லைக் கையில் வைத்திருந்த முதலாளி சொன்னார். “பில் போட்டது போட்டதுதானம்மா. ஊழியர் சொல்றது சரி; நீங்க வேறு என்ன ஜவுளி வேணுமின்னாலும் இந்தத் தொகைக்கு வாங்கிக்கலாம்” என்று பேச்சை ஆரம்பிக்க, கையில் இருந்த புடவை அட்டைப் பெட்டியை முதலாளி மேஜை மீது வைத்து விட்டு ஆனந்தி ஏதோ சொல்ல அவரைக் கையமர்த்திய முதலாளி தன் பர்சிலிருந்து புதிய ஐநூறு நோட்டுகளாக எட்டை எடுத்தார். ஆனந்தியின் கணவர் ரகுராமனிடம் கொடுத்தார்.
“உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ், ஸார்” என்று ஆனந்தி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, புடவை அட்டைப் பெட்டியை ஆனந்தியிடம் கொடுத்தார். “நீங்கள் தலை தீபாவளிக்கு ஆசையாக வாங்கிய புடவை இது; உங்களிடமே இருக்கட்டும். பில் போட்ட சரக்கைத் திரும்பப் பெற்றுப் பணம் தரக் கூடாது என்ற கடையின் விதியை முதலாளியான நானும் மீறக் கூடாது. இப்போ நான் உங்க கணவர் கிட்ட கொடுத்த பணம், பில்லுக்கான வாபஸ் தொகை இல்லையம்மா. இது கடைப் பணம் அல்ல. என் சொந்தப்பணம் கோதண்டராமன் எனக்கும் பிடித்தமான எழுத்தாளர்தான். நீங்க உதவி செய்ய நினைக்கிறீங்க. நீங்க செஞ்சா என்ன, நான் செஞ்சா என்ன? நினைத்தபடியே இந்தத் தொகையை நன்கொடையாக மருத்துவ நிதியிலே சேர்த்திடுங்க. வாங்கின புடவையைத் தலை தீபாவளிக்குக் கட்டிக்குங்க; உங்களுக்குத் தீபாவளி வாழ்த்துக்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்தபொழுதே கடைக்குள் நுழைந்தார் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி.
முதலாளி அவரை வரவேற்கச் சென்றதால், மேற்கொண்டு நின்று எதுவும் பேசமுடியாத நிலைமையில் ரகுராமனும் ஆனந்தியும் அந்த இடத்தை விட்டு நகர வேண்டியதாயிற்று.
கடையை விட்டு வெளியேறும் முன்பு கணவனிடமிருந்து அந்த நாலாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்ட ஆனந்தி தனியாக வைத்திருந்த அவனது பர்சைக் கேட்டாள்.
உணர்ச்சிமயமாக இருந்த அவளிடம் அப்போது கேள்விகள் கேட்க வேண்டாம் என்ற நினைப்பில் பர்சைக் கொடுத்தான். அதை நன்றாகத் துழாவிப் பார்த்துவிட்டு சில்லறைகள் தவிர நோட்டுகளாக இருந்த தொகை சுமார் நானூறு ரூபாயை கடை முகப்பில் இருந்த தொண்டு நிறுவன உண்டியலில் போட்டாள். “வாருங்கள் முதலில் வடபழனி மருத்துவமனைக்கு நடந்து போவோம். முதலாளி கொடுத்த பணத்தை மருத்துவ நிதியில் சேர்ப்போம் அங்கிருந்து கோயிலுக்கும் நடந்தே போவோம். காசு இருந்தால் ஆட்டோவில் போகத் தோன்றும். அது வேண்டாம். இன்று நமக்கு நடைபயணம்தான்.” என்றாள்.
அதுவும் சரிதான் என்று பின் தொடர்ந்த ரகுராமன் நடு வழியில் கேட்டான், “சரி நாளைக்கல்லவா கோயிலுக்கு நடை பயண வேண்டுதல் என்றாய்’’.
“நாளை நமக்காக நேர்த்திக்கடன், இன்று எழுத்தாளர் கோதண்டராமனுக்காக திடீர் நடைப்பயண வேண்டுதல்” என்று ஆனந்தி சொன்னாள்.

2025916163109578.jpeg