தொடர்கள்
சினிமா
சினிமாவும் இலக்கியமும் 4. - தி.குலசேகர்

2025914080152627.jpeg

சினிமாவை பார்க்க ஆரம்பித்த சில நொடிகளில் அதில் உள்ள கதாபாத்திரங்களாக எப்படி மாறிப்போகிறோம்? பல நாள் அந்த ஆச்சர்யம் தொடர்ந்ததுண்டு. அப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தை வெளியில் இருந்து ஒரு பார்வையாளனாக மட்டும் பார்க்க வேண்டும் என்றொரு எண்ணம் தோன்றும். அதை சாத்தியப்படுத்திப் பார்க்க ஒவ்வொரு முறை திரைப்படத்தை பார்க்கிறபோதெல்லாம் முயற்சித்துப் பார்ப்பேன்.

ஒரு ரசிகனாக அதை எதிர்கொள்கிறபோதெல்லாம், அதன் வசீகர இழுப்பில் சில நொடிக்குள் இந்த உலகத்தை விட்டுவிட்டு,அந்த உலகத்திற்குள் பறந்துபோய் குதித்துவிடுவதை எத்தனை முயன்றும் தவிர்க்க முடியவில்லை. அப்படி முயற்சித்த போதெல்லாம் படுதோல்விதான். அதன் நீட்சியாக ஏதோ ஒரு தருணத்தில் ஒரு படைப்பாளன் ரசிகமனோபாவத்தின் தொடர்ச்சியாய் மின்னலின் பிரகாசத்தோடு எனக்குள் தோன்ற ஆரம்பித்த பிறகு தான், சினிமாவிலிருந்து, அதன் கதாபாத்திரங்களிலிருந்து, அதன் சூழல்களிலிருந்து விலகி நின்று சினிமாவை அவதானிக்கிற உத்தி வசப்பட்டது. அதற்கு கிட்டத்தட்ட ஒரு கால்நூற்றாண்டு காலம் தொடர்ந்து பயணித்திருக்க வேண்டியிருந்தது. மனது இப்படித்தான். சொல்ல நினைத்ததை விட்டுவிட்டு, அங்கும் இங்குமென முண்டியடித்துக்கொண்டு வேகவேகமாக தன் விருப்பத்திற்கேற்றபடி கிளைபரப்பிச் சென்று விடுகிறது. விட்ட இடத்திற்கு மறுபடி வரலாம்.

அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் படங்கள் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டு வரும் கிருஷ்ணாவின் கவ்பாய் படங்களும் அதில் சேர்த்தி. அப்போது ஏன் அவர்களை அப்படி பிடித்தது?

அவர்கள் யார் வந்தாலும், எத்தனை பேர் வந்தாலும் பயப்படமாட்டார்கள். எல்லோரையும் சண்டையில் ஜெயித்து விடுவார்கள். அவர்கள் எப்போதும் தோற்கவே மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும் தோல்வியை கண்டு அஞ்ச மாட்டார்கள். அவர்களின் கண்கள் எப்போதும் அழுவதில்லை. அவர்கள் விசயங்களில், வாழ்க்கையை விட எல்லாமே பெரியதாக இருக்கும். அவை நம்முடைய கற்பனைகளை நிஜம் போலவே காட்டும். அதன் உயரம் நமது கற்பனைகளுக்கேற்ப மாறுபடும். இப்படியான மிகைநாடகவியல்தன்மை கொண்ட ஜனரஞ்சக சினிமாக்களை பார்த்துப்பார்த்து, அப்போதெல்லாம் இது தான் நிஜவாழ்க்கை என்றே மனது நம்ப ஆரம்பித்து விட்டிருந்த பருவம் அது.

எம்.ஜி.ஆர் படங்களில் நாயகி என்று ஒருவர் தான் இருப்பார். கூடுதலாக சில அழகான இளம்பெண்களும் அதில் தவறாமல் இடம்பெறுவார்கள். யதார்த்த உலகத்தில் சமூக நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏகபத்தினி விரதனாக நாயகன் இருப்பார். கனவுலகில் இயற்கையின் யதார்த்தமாகிற பாலிகெமி மனநிலைக்கு மாறி அந்த பெண்களின் கனவில் சுதந்திரமாக உலா வருவார். அந்த மாதிரி நேரங்களில், இடம்பெறும் பாடல்களில் அந்த இளம்பெண்களில் ஒருவர் பின் ஒருவராக கனவுப்பாடல்களில் அடுத்தடுத்து வந்து டூயட் பாடுவார்கள். அந்த கனவுக்காட்சியை தவறாமல் எப்போதும் அந்தப் பெண் தான் காண்பார். நாயகன் அவள் கனவில் வந்து சரசமாடுவார். அதில் காமத்தை தூண்டும் காட்சிகள் தூக்கலாக இருக்கும். கனவுப்பாடல் முடிந்ததும் அந்தப் பாடலில் வந்த பெண் காதலை தெரிவிப்பார். உடனே நாயகன் அவரைப் பார்த்து தங்கச்சி என்பார். அதன் பிறகு, தான் வந்த வேலை முடிந்து விட்டதென அமைதியாக அந்த இளம்பெண் விலகிச் சென்று விடுவார். இந்த உத்தியை வணிக ரீதியாக பெரிய வெற்றி பெற அவர் பயன்படுத்தியிருப்பார். காரணம் இந்த சமூகத்தில் செயற்கையான பாலியல் வறட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படியான கனவுப்பாடல்கள் அதற்கு தற்காலிக வடிகாலாக இருக்கின்றன. அந்தப் படங்கள் அதற்கான தீர்வு நோக்கி ஒருபோதும் யோசிப்பதில்லை.

வெறும் வணிகத்திற்காக எடுக்கப்படுகிற படங்கள் மக்களின் பிரச்சனைகளுக்கு தற்காலிக நிவாரணத்தை குறுக்கு வழிகளின் ஊடாக, தனிமனித அசகாய சூரத்தனங்கள் வழியாக வழங்குகின்றன. மக்களின் பலகீனங்களை பலமாக்க முயற்சிக்காமல், கொள்ளைப்புற வழியாக பலகீனங்களுக்கு தீனி போட்டு காசு பார்க்கின்றன. இந்த சமூகத்தில் உள்ள பழமையோடிப்போன பல சித்தாந்தங்களில் உள்ள முரண்களை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து தற்காலிகமாக எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை அவை நம்முன் காட்சிக்கு வைக்கின்றன. கற்பனையான கனவுலகில் நிஜமாகவே பயணிப்பது போன்ற பிரமையை மனதில் பதிய வைக்கின்றன. நிஜகதாநாயகநாயகியர்களுக்கும், சினிமா கதாநாயகநாயகியர்களுக்கும் வித்தியாசம் உணர முடியாதபடிக்கு, வெள்ளந்தியான பார்வையாளர்களை தன்வசப்படுத்தி, பழக்கப்படுத்தி, அதையே நிஜமென நம்பவும் வைத்துவிடுகின்றன.

இப்படி, மிகைநாடகவியலோடு துவங்கிய வெகுசன சினிமா ரசனையை அடியோடு மாற்றியது அல்லது புரட்டிப் போட்டது பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே என்கிற சிறுமுதலீட்டில் எடுக்கப்பட்ட, யதார்த்தத்திற்கு நெருக்கமாகயிருந்த ஒரு சினிமா.