தொடர்கள்
தொடர்கள்
மஹாபாரத மாந்தர்கள் - குறள்வழி - அபிமன்யு - தமிழ் நந்தி

2025914080401177.jpeg

அபிமன்யு


அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்த அபிமன்யு முதல் 12 நாட்கள் குருஷேத்திர யுத்தத்தில் பங்கேற்று கௌரவ சேனைக்கு பெரும் சேதங்களை விளைவித்தான். 13 ஆம் நாள் துரோணர் பத்மவியூகம் அமைத்தார். அபிமன்யு ஒருவனால் தான் அந்த வியூகத்தை உடைக்க முடியும் என்பதால் தருமர் ஆணையிட்டார். "என்னால் பிரவேசிக்க முடியும்; ஆனால் வெளி வருவதற்கு சக்தியற்றவன்" என்றான். தாங்கள் துணையாக இருப்போம் என உத்தேசித்து, தருமர் திட்டமிட அபிமன்யுவும் வியூகத்தை உடைத்து துவம்சம் செய்தான்(பெரும் சேதம்).

அவ்வாறு பத்மவியூகத்தில் நுழைய காரணம் - செவி வழி கேட்ட செய்தி அர்ஜுனன் கர்ப்பவதியான சுபத்திராவிடம் கூறியது; வெளி வர இயலாமைக்கு காரணம் உறக்கத்தில் ஆழ்ந்த சுபத்திராவிடம் அர்ஜுனன் வியூகத்தை முழுமையாக கூறவில்லை.

ஆராய்ந்து முறைப்படி திட்டமிடாததால், ஜெயத்ரதனால் பத்ம வியூகம் திட்டமிட்டபடி மூடப்பட்டது;பாண்டவர்களால் நுழைய முடியவில்லை. பலர் நின்று பாதுகாக்க நினைத்தாலும், ஜெயத்ரதன் பெற்ற பலத்தின் காரணமாக இயலவில்லை. மேலும் பாண்டவர் சேனையில் அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் மட்டுமே பத்ம வியூகத்தை உடைக்க தெரியும்; கௌரவ சேனையில் பீஷ்மர் துரோணர் மற்றும் கர்ணன் ஆகியோருக்கும் தெரியும்.

துரோணர்,கிருபர், சல்லியன், சகுனி, கர்ணன், துரியோதனன், துச்சாதனன் மற்றும் அஸ்வத்தாமன் ஆகிய எட்டு மகாரதர்கள் அபிமன்யுவை தாக்கிக் கொன்றனர்; அபிமன்யு தனியாக வீரப் போர் செய்து, வீர மரணம் அடைந்தான்.

குறளும் பொருளும்


காதால் கேட்டு அறிவது தான் சிறந்த தலையாய செல்வம்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை 411

எதையும் செய்வதன் முன், அதனால் அழிவது எது? ஆவது எது? அதன் பின்வரும் ஊதியம் என்ன? இவைகளை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

அழிவதும் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல் 461

எந்த காரியத்தையும் விதிமுறைகளை அறியாமல் துவங்குவது, பகைவர்களுக்கு விளை நிலத்தில் வழி கொடுப்பது போன்றது.

வகையறச் சூழாது எழுதல் பகைவரை

பாத்திப் படுப்பது ஓர் ஆறு 465

முறைப்படி செய்யாத காரியம் பலர் உதவினாலும் குற்றப்பட்டுவிடும்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று

போற்றினும் பொத்துப்படும் 468

இது நம்மால் ஆகாது என்று விட்டு விடாத முயற்சி பெருமை தரும்.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும் 611

வித்தகர்களுக்கு மட்டும்

உயிர் பிரிய,
உடல் அழிய,
புகழ் அழியாது இருக்கும்

நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கல்லால் அரிது 235