“என்னடா கூத்து இதெல்லாம்… இந்த வீட்டுல கெழவி நா ஒருத்தி இருக்கறதையே மறந்துட்டேளா…”
மொட்டைத் தலைமேல் புடவையை இழுத்துவிட்டுக் கொண்டே கேட்டாள் கல்யாணிப்பாட்டி.
“உன் காலம் வேற… இந்தக் காலம் வேற… நீ செத்த சும்மா இருக்கியா…” என்று தாயை அடக்கினார் சற்குணம்.
நேக்கு மட்டும் இந்த காலம் பத்தித் தெரியாதா என்ன?... ஆனாலும் இப்படி அவசரமா ஒரு முடிவு… சத்தமில்லாமல் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்துவிட்டாள் கல்யாணிப்பாட்டி.
விஷயம் இதுதான்.
சற்குணம் - பாலாம்பிகை தம்பதியின் மூத்த மகன் அருணுக்கு அவன் விருப்பப்படியே ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த நீரஜாவுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இரண்டு நாட்கள் கழித்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்து வைத்திருந்த நிலையில்… திடீரென விஷக்காய்ச்சல் கண்டு சிகிச்சை பலனின்றி இறந்தான் அருண்.
நீரஜாவைத் திருப்பி அனுப்ப மனம் ஒப்பாத நிலையில்… தங்கள் இளைய மகன் ஆகாஷைத் திருமணம் செய்து வைக்க எண்ணி முதலில் மகனையும், பின்னர் மருமகளையும் அழைத்து அவர்கள் விருப்பம் கேட்டனர்.
தயக்கமாக, “உங்க விருப்பப் படியே செய்யுங்க மாமா” என்று நகர்ந்த நீரஜாவுக்கு இதில் அவ்வளவாக விருப்பமில்லை என்பதை உணர்ந்தான் ஆகாஷ். அவனுக்கென்னவோ, பெரிய மறுப்பு ஒன்றுமில்லை.
‘அவ மனசும் தெளியட்டும்… கொஞ்ச நாட்கள் விட்டுப் பிடிப்போம்’… என்று எண்ணியவன் தந்தையிடம் பிடி கொடுக்காமல் நழுவினான்.
அப்பா… இந்தத் தீபாவளிக்கு உங்க எல்லாருக்கும் ஒரு ஸ்வீட் ஸர்ப்ரைஸ் வச்சிருக்கேன்…என்றான் ஆகாஷ்.
கல்யாணிப்பாட்டி, நீரஜா தவிர அனைவரது முகமும் மகிழ்ச்சி பூசியிருந்தது.
நீரஜாவுக்குத் தாலி, புது நகைகள், பட்டுப்புடவை என்று ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து வாங்கிய ஆகாஷ், அவளை எப்படியாவது சமாளிச்சுடலாம் என்ற எண்ணத்துடன், நண்பன் கோபிக்குப் போன் செய்து, ‘என் வாழ்க்கைல ஒரு நல்லது நடக்கறச்ச நீ என் கூடவே இருக்கணும்டா, உன் ரூம் மேட்டையும் அழைச்சிட்டு வந்திடு… நம்ம வீட்டுலதான் நீ தீபாவளி கொண்டாடுற…
தீபாவளி நாளும் வந்தது… கல்யாணிப் பாட்டியிடம் ஒரு வழியாக சமாதானம் செய்து, புதுப்புடவை உடுத்தி நீரஜாவைத் தயாராகச் செய்தான் ஆகாஷ். தாலி, மாப்பிள்ளைக்கான பட்டுவேட்டி மற்றும் செயின் எல்லாம் தட்டில் தயாராக இருக்க… சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்த கோபி பிரலோபை அறிமுகப்படுத்த… பட்டுவேட்டி, செயின் இருந்த தட்டை அவனிடம் கொடுத்து தயாராகி வரச் சொன்ன மகனைப் பெற்றோர் அதிர்ச்சியுடன் நோக்க… நீரஜாவின் விழிகள் உணர்த்திய நன்றியை ஏற்றுக் கொண்ட ஆகாஷ்.
“அப்பா, அம்மா திருமணம் முடிந்து ரெண்டே நாள்ல அருண் போயிட்டாலும் நீரஜா எனக்கு அண்ணிங்கற உறவு மாறாதுதானே. அண்ணிங்கற உறவு தாய்க்கு சமானம்… இந்த பிரலோப் அருமையான பையன், இந்த வீட்டுக்கு மூத்த மகனா நெனைச்சீங்கன்னா நா சந்தோஷப்படுவேன்… ஏன்னா… அவனுக்கும் வேற ஆதரவு இல்ல… எம்மேல தப்பு இருந்தா மன்னிச்சிடுங்க…”
தயாராகி வந்த பிரலோப் நீரஜாவின் கழுத்தில் தாலி கட்ட, அனைவருமே நெகிழ்ச்சியுடன் அட்சதை தூவி ஆசிர்வதித்தனர்.
“நீரஜாக் கண்ணு, என் பேரன் மூலமா உனக்கு உறவு சொல்ல ஒருவன் வந்தாச்சுடி… இந்தத் தீபாவளியே உனக்குத் தலை தீபாவளிதான்” என்று அவளை அணைத்து விடுவித்தவள்… தன் பேரனை பேரன்புடன் அணைத்து உச்சிமுகர்ந்தாள் காலத்தின் கோலத்தில் தன்னை நாணலாக்கிக் கொண்ட கல்யாணிப் பாட்டி.
Leave a comment
Upload