தொடர்கள்
அனுபவம்
கைலாய பயணம் மினி தொடர் 7 -  கடைசி வாரம். ராம்

2025916122944429.jpeg

சென்ற வாரம் ஒரு முக்கிய விஷயம் சொல்ல விடுபட்டுப் போய் விட்டது.

நாகராஜ் முதல் முறையாக கைலாய பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது ஒரு புறம். ஆனால் அவர் ஒரு சிவ பக்தர் என்பது இந்த தொடரை படித்தவர்களுக்கு தெரியும்.

யமத்துவார் துவங்கி சில அடிகளில் அவரது குடையிலிருந்த குட்டி பிளாஸ்டிக் கவரை கழட்டி ஓரமாக எறிந்தார். நான் உடனே யோவ் கைலாஷுக்கு வந்து குப்பை போடறியே ஏதாவது யோசிச்சியா என்றதும் தான் தாமதம். ஏண்டா சொன்னோம் என்றாகி விட்டது.

ஒரு பெரிய கவர் எடுத்துக் கொண்டு கைலாயத்தில் உளவாரப் பணி செய்யப் போகிறேன் என்று அடுத்த சில கி.மீகள் வரும் வழி முழுவதும் உள்ள குப்பைகளை பொறுக்கி கவரில் போட்டு ஆங்காங்கே உள்ள குப்பைத் தொட்டியில் போட்ட படி வந்தார் நாக்ஸ்.

இது ஒரு சாதாரண நிகழ்வாக அல்லது ஒரு பணியாக தெரியும். ஆனால் பிராணவாயு குறைவாக இருக்கும் அந்த உயரத்தில் குனிந்து குனிந்து குப்பைகளை பொறுக்கி அதை சிரமமேற்கொண்டு குப்பைத் தொட்டியில் போட்டு இதிலேயே மனிதர் ஆயாசமாகி விட்டார்.

இங்கு மட்டுமல்ல சார் ஊரிலும் எந்த கோவிலுக்கு போனாலும் இது தான் என்னுடைய வேலை. நல்ல வேளையாக மறந்து விட்டேன் அதையும் உங்க மூலமாக சிவன் கொடுத்த உத்தரவு என்றாரே பார்க்கலாம்.

2025916123110950.jpeg

இதைத் தொடர்ந்து தான் மனிதர் மிகவும் டயர்டாகி போய் கடைசியில் சோர்ந்து போய் வந்தவரை என் தோளில் தாங்கி அதை புகைப்படம் எடுக்க சொல்லி விஜய் டிவி டி.ஆர்.பிக்கு அலயறார் பாரு என்று கோமதி கலாய்க்க, என்ன செய்ய பத்திரிகை புத்தி..இப்படித்தான் வேலை செய்யும்.

சென்ற வாரம் பார்த்தசாரதி பற்றி சொல்லியிருந்தேன்.

2023ம் வருடம் அவரும் எங்களுடன் கைலாயம் வந்து விட்டு லாசா நகரில் அவருக்கு கைலாயம் செல்ல பர்மிட் இல்லை என்று கைவிரித்து விட்டார்கள். அது ஓரளவு தெரிந்து தான் வந்திருந்தார். ஏனெனில் அப்போது இந்திய கடவுச் சீட்டுக்கு பெர்மிஷன் இல்லை.

இந்த வருடம் அனுமதித்ததால் தான் அவரும் எங்களுடன் வருவதாக இருந்து கடைசியில் பாஷு எங்கள் ஆள் அவருக்கு வயது காரணமாக பெர்மிட் கிடைக்காது என்று கைவிரித்து விட்டார்.

மீண்டும் அதிருப்தி. பார்த்தசாரதியின் கோபம் கைலாஷ் வரை சிவனுக்கும் எதிரொலித்திருக்க வேண்டும்.

இனி சிவனாவது எவனாவது எனக்கும் கடவுளுக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று மனிதர் பொரிந்து தள்ளி விட்டார்.

நாங்கள் யாத்திரை முடித்து விட்டு திரும்பும் வழியில் இந்த கதையை மனோகர் டிராவல்ஸ் குழுவோடு சாப்பிடும் போது சொல்ல, அங்கு ஒருவர் இதைக் கேட்டு ஏன் எனக்குத் தெரிந்து ஒருவர் இருக்கிறார். அவரால் வயது பொருட்டு இல்லாமல் கூட்டிச் செல்ல முடியும் என்று சொல்ல அதை கேட்டுக் கொண்டிருந்த பிரவீன், கோமதி நாம் ஏன் பார்த்தசாரதியிடம் சொல்லக் கூடாது என்று கேட்டனர். நிச்சயம் சொல்லலாம். என் ராசி இரண்டு முறை அவரால் முடியவில்லை மூன்றாவது முறை அவரை டிஸ்ஸப்பாயிண்ட் பண்ண விரும்பவில்லை நீங்களே பகிருங்கள் என்றதும் பிரவீன்தான் முனைந்து பார்த்தசாரதியிடம் பகிர்ந்தார். ஃபாலோ அப் செய்தார் விடாது.

இனி பார்த்தசாரதி தொடர்கிறார்.

ராம் எனக்கு சீனா விசா இருந்தாலும் நேபாள் வந்து தான் ஆக வேண்டும் என்றார்கள். புறப்படும் கடைசி நாட்களில் திரும்பவும் நேபாளில் பிரச்சினை.

முதல்ல டெல்லி போயிட்டோம். அப்புறம் அங்கேர்ந்து காட்மாண்டு.

பசுபதிநாத் கோவிலில் யாகம் வளர்த்தோம்.

பிரவீன் கொடுத்த நம்பர்ல மாரவேல் நாகப்பன் என்றவரை தொடர்பு கொண்டு பேசியதால் கைலாயம் செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு. இந்த முறையும் சிவன் ஏமாத்த மாட்டார் என்ற நம்பிக்கை.

நீங்க போன மாதிரி தான். காட்மாண்டு, அப்புறம் ஞாலம், அப்புறம் சாகா, மானசரோவர், அதே வழி தான்.

என்னென்ன கிடைச்சதுன்னா பசுபதிநாத் கோவில்ல ஒரு யாகம் வளர்க்க வாய்ப்பு கிடைச்சது.

அது ஒரு அற்புதமான விஷயம். இதெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்ல.

அடுத்ததா மானசரோவர்ல தங்கினோம். அங்கயும் ஒரு பிரம்மாதமான பூஜை பண்ண ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது.

சக்தி சிவன் என்று ஏற்பாடு செய்து இரண்டு பேரை வைத்து ஒரு பெரிய பூஜை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

முக்கியமான விஷயம். மானசரோவர் ஏரியில் வந்த சப்த ரிஷிகல். பிரம்ம முஹூர்த்தத்தில் தான் வருவார்கள் என்று சொன்னார்கள். நிறைய பேர் மூணு மணிக்குக் போயிட்டு ஒன்னும் பாக்காம திரும்ப வந்து விட்டார்கள். எனக்கு அந்த பிரம்ம முஹூர்த்தம் ஒருவேளை இந்திய நேரமா இருக்குமோனு ஒரு சந்தேகம். அதனால ஐந்து மணி சுமாருக்கு போனேன்.

காண கண் கொள்ளா காட்சி. ஏரி முழுவதும் அந்த மந்திரஜாலம் பார்த்தேன். அது ஒரு சர்ரியல் காட்சி. அதை படமெடுக்கவெல்லாம் முடியவில்லை. ஆனால் கண்ணுக்குள் இருக்கிறது. இன்னமும்.

(மூன்று முறை சென்ற போதும் கிடைக்கவில்லை எங்களுக்கு).

அது மறக்கவே முடியாத நிமிடங்கள். என் குழுவில் பலருக்கு கிடைத்தது பலருக்கு கிடைக்கவில்லை. அதிர்ஷ்டம் தான்.

2025916125220490.jpeg

அது முடிந்து அஷ்டபத் போனோம். அங்கும் அற்புத தரிசனம். முதல் நாள் வரை மேக மூட்டமாம். எங்களுக்கு அந்த தரிசனம் நந்தி தேவருடன் கிடைத்தது பெரும் பேறு.

அதையடுத்து கைலாய பரிக்கிரமா. சிரமமேயில்லாமல் நடந்து சென்று விட்டோம்.

அங்கும் தரிசனம் நிச்சலனமாக கிடைத்தது. பொன்னார் மேனியும் கூட ஓரு பாதியில் காட்சி கொடுத்தார்.

202591612541474.jpeg

அங்கு ஒரு அரைமணி நேரம் அமர்ந்து சிவனை தியானித்து நிஷ்டையில் அமர்ந்திருந்தேன்.

யோக முத்திரையில் எனக்கு முதுகுத் தண்டு வழியாக கிடைத்த அற்புத உணர்வு அதெல்லாம் சொல்லவே முடியாது.

கண்களில் தாரைதாரையாக கண்ணீர். அந்த ஆன்மீக அனுபவம் கிடைக்க நான் காத்திருந்த தவிப்பு எனக்கும் சிவனுக்கும் மட்டுமே தெரியும்.

2025916125444416.jpeg

அத்தனை பரமானந்தம். அத்தனை தெய்வீகம். அத்தனை ஜென்மங்களுக்கும் விடை கொடுத்த அந்த நேரம். இனி ஜென்மமே இல்லை போடா என்று சிவனே சொன்னது போல ஜென்ம சாபல்யம் அந்த தரிசனம்.

2025916125514640.jpeg

கிளம்பவே மனமில்லாமல் பரிக்கிரமாவை தொடர்ந்தேன். டோல் மா லா பாஸ் வழியாக செல்லும் போது கெளரி குண்ட் குளத்தில் இறங்கி -15 டிகிரி இருக்கும். அந்த குளத்திலுள்ள புனித நீரை பிரோக்‌ஷனம் செய்து கொண்டு திரும்பவும் பரிக்கிரமா வந்து ஜூதுல் புக் வரை நடந்து வந்து தங்கினோம்.

2025916125548343.jpeg

(இது தான் முழு பரிக்கிரமா)

அவர் சொல்லி முடிக்கையில் ஒரு மந்திர ஜால உலகத்திற்கு சென்று வந்த உற்சாகம். ஒரு அற்புத அனுபவத்தை விவரிக்கும் அசாத்திய மகிழ்ச்சி.

உண்மையில் எங்களுடன் அவருக்கு வந்திருந்தால் கூட இத்தனை அனுபவம் கிடைத்திருக்காது என்பது தான் உண்மை. பிரவீன் கோமதிக்கு தான் அத்தனை நன்றிகளும் என்று உள்ளன்போடு சொன்னார் பார்த்தசாரதி.

மாரவேல் நாகப்பனை தொடர்பு கொண்டு பேசினேன்.

2025916125745308.jpeg

(மாரவேல் நாகப்பனுடன்)

மகாதேவ் டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் அவர்.

கேள்வி: ஐயா எப்படி 70 வயதுக்கு மேல் முடியாது என்பவரை அழைத்துச் சென்று ஒரு அற்புத அனுபவத்தை அவருக்கு கொடுத்தீர்கள் ?? எப்படி சாத்தியமானது இது.

மா.நாகப்பன் : ஐயா ஒவ்வொரு முறையும் திபத் நிர்வாகம் சில பேரை கண்டு கொள்வதில்லை. இந்த முறை நம்ப மாட்டீர்கள் 78 வயதுள்ள சிலரையும் கூட்டிக் கொண்டு சென்றோம். நான் ஒரு வியாபாரி. இந்த கைலாய பயண ஏற்பாட்டை லாபத்துக்காக செய்வதில்லை. இதை ஒரு சேவையாகத் தான் செய்கிறேன்.

யாத்திரீகர்களுக்கு நானே இறங்கி சமையல் செய்து போடுவேன். இந்த வருடம் மட்டும் 7 குழுக்களை அழைத்துச் சென்றிருக்கிறோம். அதில் முதல் குழுவில் 195 பேர்.

என்னுடைய பார்ட்னர் நேபாளில் கெளதம். அவரும் நானும் தான் இந்த நிறுவனம் மூலமாக வருடந்தோறும் கைலாய யாத்திரைக்கு அழைத்துச் செல்வோம்.

இந்த வருடம் ஐந்து வருடத்திற்கு பின் என்பதால் பலருக்கு அதிர்ஷ்டம். பார்த்தசாரதியை பொறுத்தவரை அவருக்கு கிடைத்தது அற்புத அருள்.

என்னால் முடியும் என்று சொல்ல மாட்டேன். அவனருள் இருந்தால், சிவனின் ஆஞ்யை இருந்தால் எல்லோருக்கும் பெர்மிட் கிடைக்கும். அவன் வரவழைப்பான்.

எனக்கு ஒளிவுமறைவு இல்லாமல் யாத்திரீகர்களுக்கு பெர்மிட் குறித்தோ, தங்குமிடம் குறித்தோ அனைத்தையும் சொல்வது தான் பிடிக்கும். இது என் வியாபாரமில்லை.

இது என் ஆன்மீக சேவை அவ்வளவு தான்.

இந்த வாரத்துடன் இந்த கைலாய ஆன்மீக மினி தொடர் நிறைவு பெறுகிறது.

இதை படித்தவர்கள் படிப்பவர்கள் கைலாயம் செல்ல ஒரு சிறு துளி எண்ணமிருந்தாலும் அதற்காக முனைந்தால் நிச்சயம் நிறைவேறும்.

மகாதேவ் டிராவல்ஸோ மனோகர் டிராவல்ஸோ சிவனருள் இருந்தால் யார் மூலமாகவாவது அந்த புண்ணிய பூமியில் சிவனின் காலடியில் உங்களை கொண்டு வந்து சேர்த்து கொள்வார் ஈசன்.

இறுதியில் பார்த்தசாரதியிடம் கேட்டேன்.

ஆக, இதுவரை சிவன் மீதுள்ள கோபம் தணிந்து விட்டது. அப்படித் தானே ???

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், இல்லை. கேட்டதை விட அதிகமாக கூரையை பிய்த்துக் கொண்டு அருள் புரிந்த அவனுக்குத் தான் என் மீது கோபம் தணிந்து விட்டது என்று புரிந்து கொண்டேன்.

2025916150423404.jpeg

ஓம் நம சிவாய.

தென்னாடுடைய சிவனே போற்றி.

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.