வாசல்ல கட்டியிருக்க வாழமரம், மாக்கோலம், ஆரத்தி எல்லாமா அந்த வீட்டோட சந்தோஷத்த கட்டியம் சொல்லிகிட்டிருந்துச்சு.
அப்பதான் ஹோமம், பூஜன்னு எல்லாத்தையும் முடிச்சிட்டு, மணய விட்டு மருதப்பனும் சாந்தியும் எழுந்துகிட்டாங்க.
மாலையும் கழுத்துமா மருதப்பன் எப்பவும் போல உணர்வுகள காட்டாத மொகபாவனைல இருக்க, சாந்தி மொகத்துல சின்ன சிரிப்பு வெக்கம் கலந்து.
புதுத் தாலி குடுத்த மெருகு.
கபிலன் உமா, குகன் ரேகான்னு பிள்ளைங்க மருமகள்கன்னு கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க, பேத்தி கவிதாவும் தன் புருசன் அஸ்வின், குழந்த தீப்திகான்னு விழுந்து கும்பிட்டா.
பேரன் கவினுக்கு வர முடியாம போச்சுது.
சாந்திக்கு இந்த பீமரத சாந்திய திருக்கடையூர்ல பண்ணிக்கனும்னு ஆச இருந்துச்சு தான். மருதப்பனுக்கு பரமத்தி வேலூர் தான் கைலாசம், வைகுண்டம் எல்லாம்.
வார்த்தைல எதயும் பெருசா சொல்லத் தெரியாது. சாமி நம்பிக்கையும் பெருசா கெடையாது. ஆனா நாமக்கல்ல வச்சுருக்க பட்டறைக்கு போற வழில பஞ்சமுக விநாயகர்கிட்ட தெனமும் ஒரு நொடி வண்டிய நிறுத்திட்டு கெளப்பறது வழக்கம்.
கபிலர்மலை முருகன நெனச்சு கபிலன்,குகன்னு பேர் வச்சது, வருசத்துக்கு ஒருக்கா மாரியம்மன் பங்குனித்தேருக்கு, மோகனூர் நாவலடியானுக்கு டொனேசன் இதெல்லாம் சரியா செஞ்சிடுவாரு.
சாந்தி நாமக்கல் ஆஞ்சநேயர பார்க்கணும்னு சொன்னா கூடப் போறதோட சரி. மத்தபடி பட்டற தான் கோவில். லாரி தான் சாமி. நடுராத்திரியானாலும் டிரிப்படிக்கிற ட்ரைவருங்க தான் பொண்டாட்டி.
பிள்ளைங்ககிட்டயும் உட்காந்து பேசத் தெரியாது.கோவம்னு வராது, ஆனா யாருமே பக்கத்துல போகத் தயங்குவாங்க. வீட்ல சாந்தி தான் எல்லாம்.
பிள்ளைங்களுக்கு எதுவொண்ணு வேணும்னாலும், அவுங்க படிப்பு, கல்யாணம் எல்லாம் எடுத்து போட்டு செஞ்சது.
அடிமட்டத்துலேர்ந்து ஒத்த ஆளா முன்னேறி வந்ததாலயோ என்னமோ, பிள்ளைங்க சிறுவயசா இருக்கைல மருதப்பனே லாரி ஓட்டி ட்ரிப் அடிச்சதுல, நெறைய நாள் பிள்ளைங்க அப்பாவ வீட்ல பார்த்ததேயில்ல. ஒட்டுதலும் இல்ல.
இன்னிக்கு லாரிங்களும், டேங்கர்களுமா, கவர்ன்மென்ட் டென்டர், ப்ரைவேட் பார்ட்டீன்னு சக்கபோடு போடுது பரமு லாரி சர்வீஸ்.
நெருங்கின ஒறவு மொற, பிள்ளைங்க, மருதப்பன் சாந்தின்னு எல்லாரும் சாப்டுபுட்டு, கெளம்பறவங்க கெளம்பி ஹால் வெறிச்சோட ஆரம்பிச்சுது.
அந்த வீட்டு மித்ததுக்கு வலப்பக்க அறைல தான் எப்பவும் அரட்ட கச்சேரி நடக்கும். மருதப்பன் எப்போதும் தனியா அவர் பாட்டுக்கு. ஹால்லயே ஒரு ஓரமா கொஞ்ச நேரம் கண்ணசந்த சாந்திக்கு, ஏதோ கோவமா பேசறாப்புல கேக்கவும் சட்டுன்னு முழிப்பு தட்டுச்சு. பிள்ளைங்க கொரல் தான்.மெள்ள அறை வாசலுக்கு போனா...
' என்னத்த பாகம் பிரிச்சாரு...எனக்குன்னு என்ன மருவாத இருக்கு....
படிச்சுட்டு இதையே பாத்துக்கலாம்னு ரெண்டு பேரும் இங்கன குள்ளயே ஒழலறோம்.ஏதாவது பலனிருக்கா..?'கபிலன் மனக்குமுறலை கொட்டினான்.
' அதே தான்...பிரிச்சுக் கொடுத்தா வேல செய்ய வுடணும்.தெனந்தெனம் இந்த லாரி எங்க போச்சு..இதுக்கு எவ்ளோ டீசலடிச்சே..ன்னு தொண தொணன்னு எதனா கேட்டுகிட்டேயிருக்க வேண்டியது'குகன் தன் பங்குக்கு..
' அட, சனிக்கெழம சம்பளம் போடணும்னு தெரியாதா? போட்டியா போட்டியான்னு, டிரைவருக்கும் இவருன்னாதான் மதிப்பு' கபிலன்.
மருமகள்கள் பின்னங்கட்டில் பாத்திரம் ஒழித்துக் கொண்டிருந்தார்கள்.
சத்தமின்றி கிச்சனுக்கு போய் தேநீர் தயாரித்து,தேன்கொழல், மாவுருண்டையோடு எடுத்து வந்தாள் சாந்தி.
அறைக்கதவு திறந்து பலகாரங்களுடன் அம்மா வந்ததும் பேச்சை நிறுத்திக் கொண்டனர் இருவரும். ஒண்ணும் தெரியாதது போல் தேநீர் பலகாரங்களை குடுத்துவிட்டு நகரத் தொடங்கினாள் சாந்தி.
கபிலன் போன் கிணுகிணுத்தது.
பேரன் கவின் வீடியோ காலில்.
பேரனை பார்த்ததும் சாந்தியும் எட்டிப் பார்த்தாள்.
' கவினு, எப்படியிருக்க?'
'நல்லாருக்கேன் அப்பத்தா'
'எங்கயிருக்க ' கபிலன் கேட்டதும்
'நாந்தா பனசங்கரில. ப்ரெண்ட் ரூமுக்கு ப்ராஜக்ட்டுக்காக போறேன்னு காலைல சொன்னனே'
' சரி சரி சீக்கிரம் ஒன் ரூமுக்குப் போ. பொம்மனஹள்ளி ரொம்ப தூரம்'
' சரிப்பா, ரூமுக்கு போய்ட்டு பேசறேன்'
கால் கட்டானது.
' சாப்டானான்னு கேக்க மறந்துட்டேன்’ கடித்துக் கொண்டான் கபிலன்.
' அவன் எம். டெக் பைனலியர், எல்லாம் தன்ன பார்த்துப்பான்' சாப்பிட்ட தட்டுகளை எடுக்க வந்த உமா சொல்ல, வாசல்படியிலிருந்த ரேகா சிரித்தாள்.
' ரேகா, அம்மாகிட்ட உளுத்தங் கஞ்சிக்கு பக்குவம் கேட்டு கவிதாக்கு சொல்லணும்னு சொன்னியே' நினைவுபடுத்தினான் குகன்.
' நீங்க அடுக்களைக்கு போங்கம்மா, இதோ வரேன்' சாந்தி சொன்னதும், இது
அம்மாநேரம் எனப் புரிந்ததால் வேலையை பார்க்க நகர்ந்தனர்.
சாந்தி மெல்லிய குரலில் தீர்க்கமாக,
"கபிலா, நான் கல்யாணம் கட்டி வரையில, அவருகிட்ட ஒரு லாரிதான்.
அதுவே அவரு வேற யாருக்கெல்லாமோ வேல பாத்து, கஷ்டப்பட்டு வாங்கினது.ரொம்ப கஷ்டப்பட்டு தான் முன்னுக்கு வந்தாரு.சிறுக சிறுக வண்டிகள சேர்த்தாரு. டிரைவருங்க கிட்ட பட்டறைய வுடாம கூடவே வேல பாத்தாரு. அவங்க கூடவேயிருக்கறதால, அவுங்க கஸ்ட நஸ்டம் புரிஞ்சு ஒதவுவாரு. அதனால தான் வேறெங்கியும் போகாம டிரைவருங்க விசுவாசமாயிருக்காங்க." "கபிலா, ஒன் வளர்ந்த புள்ளய ரெண்டு மணிக்கொருக்கா போன் போட்டு என்ன பண்ணுறான்னு கேக்கறியே..
இதோ, ஒரு புள்ளைக்கு தாயாவே ஆயிருச்சு நம்ம கவிதா. கவலப் படாம இருக்க முடியுதா? குகனை பார்த்தபடி தொடர்ந்தாள்.
' இது நமக்கு தான் பிஸினஸ். அவருக்கு புள்ள.
மனசுக்குள்ளயே பொத்தி வச்சு பொத்தி வச்சு, ராவு பகல்னு பாக்காம வளத்த புள்ள. நீங்க நல்லா பாத்துகிடுவீங்கன்னு தெரியும். வருச கணக்கா வளத்த பாசம், வேற யோசிக்கவே தெரியாதே அந்த மனுசருக்கு...
உங்க கிட்ட பேசணும்னு ஆச, என்ன பேசணும்னு தெரியல, வருசம் ஓடி போச்சு.. எல்லாமா சேந்து தான் ஏதோ போன் போட்டு கேள்வி கேக்குறாரு.
ஒங்க மேல நம்பிக்கயில்லாம இல்ல'
நிதானமாக அழுத்தி சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் நகர, இருவருக்கும் பொடறியில் அடித்தது போல் பளிச்சென்று புரிந்தது.
அவளுக்குத் தெரியும் அவர் எங்கேயிருப்பாரென்று.
கையில் டீத்தண்ணியோடு ஹாலின் மூலையிலிருக்கும் ஸ்டோர் ரூமை மெல்ல ஒருக்களித்துப் பார்த்தாள்.
' பரமு லாரி சர்வீஸ்' பழைய தகர போர்டை துடைத்து அதையே உத்து பார்த்துக் கொண்டிருந்தார் மருதப்பன்.
தன் மூத்த குழந்தையிடம் தான் வாழ்ந்த எழுபது வருடங்களை அசை போடுகிறாரென்று புரிந்த சாந்தி தேநீரைவிட இந்த தனிமை அவருக்கு தேவையென்பதால் இரவு சமைக்க அடுக்களைக்குள் புகுந்தாள். பேசாமலேயே புரிந்து கொண்ட தாம்பத்யம் அங்கே மௌனத்தில் தன் கொண்டாட்டத்தை தொடர்ந்தது.
Leave a comment
Upload