விழிப்புணர்வு கட்டுரை
சமயலறை ஜன்னலுக்கருகில் தவறாது காக்கை, குருவி மைனா, கிளி போன்றோருடன் மல்லுக்கு வரும் நபர் இவர்.
சமைத்த சாதம் இறைவனுக்கு முதல் படையல். அடுத்தே வருவது சமைத்த சாதத்தின் முதல் பங்கு ஜன்னல் வழியாக அந்த கிரில்லுக்கும் ஜன்னலுக்கும் இடையே தொங்கும் கடப்பா கல் பாலத்தில் என் அம்மாவும் சரி எனது மனைவியும் சரி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, வெந்த பருப்பு இட்டு அதன் மீது இடுவதுதான் தாமதம்.
சொல்லப்போனால், நேரம் தவறது அந்த கிரில்லில் வந்து அமரும் காகங்கள் கூவி அழைக்கும்.
முதலில் வருவது காகங்கள், குருவிகள் குழும ஆரம்பிக்க பின்னர் புறா ஒன்றிரண்டு வந்த சேரும்.
புறா இவ்வைவரில் பயம் கொள்ளாதது. இருக்கலாம். அதற்காக மற்றவரை தனது அடர்த்தியான தேக பலத்துடனும், அந்த ஒரு வகையான அடி வயிற்றைக் கிளரும் க்ம், க்ம்….சத்தம் போட்டு விரட்டியே அடித்துவிடும்.
கிட்டத்தட்ட புறா விட்ட மிச்சம் தாம் மற்றவர்க்கு. எங்கள் வீட்டு மகளிர் இந்த அராஜகத்தை சமரசப்படுத்த, அதாவது அனைவரும் சாப்பிடட்டும் என்ற திட்டப்படியே மற்றவர் ஒரு கவளம் எடுத்துக் கொண்டாலே திருப்தி பட்டுக்கொண்டு பறந்து விட்ட பின் கரும் மைதானதிலிருப்பது யாவும் புறாக்கே என்று கவனித்து விட்டு விடுவார்கள்.
இவர்களில் பாவம் குருவிக்கும் புறாவுக்கும் இடையே ஒரு போராட்டமே நடக்கும். குருவிகளுக்கு துகள்களே மிஞ்சும்.
இந்த பறவைகளுக்கு உணவிடுவது தர்ம சாஸ்த்திரப்படி நித்திய ஐவகை யாகங்களில் ஒன்று என்று இந்துக்களிடையே இன்றும் அனிச்சை செயலாய் அனுபவிக்கப்பட்டு வரும் கடமைகளில் ஒன்று.
இப்படி யதார்த்தர்களாகிய எம்போன்றோர்க்கு கீழ் வரும் செய்தி ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் தான்.
“மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்”. புறாவால் பரவும் தொற்றுநோயால் மகளை இழந்த முன்னாள் புனே மாநகராட்சி உறுப்பினர் இந்த விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
புறாக்களுக்கு உணவளிக்கும் நடைமுறை அவற்றின் உணவு தேடும் திறனில் தலையிடுகிறது என்று முன்னாள் புனே மாநகராட்சி உறுப்பினர் ஷாம் மான்கர் ஏன்று கூற ஆரம்பிக்கின்றார்.
புறா எச்சத்தால் ஏற்பட்ட நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் தனது மகள் ஷீத்தல் விஜய் ஷிண்டே இறந்தார் என்கிறார் தொடர்ந்து.
குணமடைந்து வீடு திரும்பிவிடுவோம் என்ற ஆவலுடன் இருந்த ஷீத்தல் விஜய் ஷிண்டேயின் உயிர் ஜனவரி 19 அன்று மருத்துவமனையிலேயே பிரிந்தது.
“அவளுக்கு 2017 இல் உடல்நிலை சரியில்லாமல் போனது. இது ஒரு இடைவிடாத இருமல், அதற்காக நாங்கள் ஒரு உள்ளூர் மருத்துவர் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களை அணுகினோம்.
அது பலனளிக்காததால், நாங்கள் ராணுவ முகாமில் உள்ள ஒரு மருத்துவரைச் சந்தித்தோம், அவர் எங்களிடம், ‘நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் புறாக்கள் உள்ளதா?’ என்று கேட்டார். ஆமாம் அது தான் உண்மை.
ஷீத்தல் வாழ்ந்த இடத்திற்கு மேலே உள்ள மாடிகளில், மக்கள் புறாக்களுக்கு தானியங்களை வைப்பார்கள். இதன் விளைவாக, புறாக்கள் அங்கு கூடு கட்டத் தொடங்கின. புறாக்கள் இந்த இருமலை ஏற்படுத்துகின்றன என்று மருத்துவர் கூறினார்,”என்கிறார் மான்கர்.
அவர்கள் புனேவில் உள்ள முக்கிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கும், மும்பையின் லிலாவதி மருத்துவமனைக்கும் சென்றிருக்கின்றனர்.
இரண்டு முதல் மூன்று மாதங்களாக எடுக்கப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு, எல்லா இடங்களிலும், நோயறிதல் ஒரே மாதிரியாகவே இருந்தது. ஓரிரு ஆண்டுகளில், ஷீத்தலின் உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. விரைவில், அவளுக்கு நடக்க சிரமங்கள் ஏற்படத் தொடங்கின, சுவாசிக்க சிரமப்பட்டாள். இரவில், அவளால் தூங்க முடியவில்லை. இறுதியில், அவளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது, குடும்ப நிகழ்வுகளுக்கு வெளியே செல்லும்போது ஒரு சிறிய ஆக்ஸிஜன் பெட்டியை எடுத்துச் சென்றாள். ஒரு வருடம் கழித்து, அவளுக்கு 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. இரவில், அவள் தூங்க வீணாகப் போராடுவாள், ஆனால் இருமல் வரும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் மருத்துவர்களின் கூற்றையும் கேளுங்களேன்.
“புனேவில் உள்ள DY பாட்டீல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஷீத்தலுக்காக நுரையீரல் தானம் கேட்டு இரு முறை நுரையீரல் கிடைத்தும், முதல் முறை, பொருத்தமின்மை காரணமாகவும் இரண்டாவது முறை, நுரையீரல் சேதமடைந்துள்ளதால், ஷீத்தலுக்கு பயன்படுத்த முடியாது என்றும் மருத்துவர் கூறினார், ”என்கிறார் மான்கர்.
ஜனவரி 19 ஆம் தேதி ஷீத்தல் முதுகுவலியுடன் மருத்துவமனைக்குச் சென்றவர் மீண்டும் வீடு உயிருடன் திரும்பவில்லை.
அவள் இறந்த பிறகு, புறாக்களின் உடல்நல அபாயங்கள் குறித்து தன்னைத்தானே அறிந்து கொண்ட மான்கர், பொதுமக்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதில் உறுதியாக உள்ளார். “புறா எச்சங்கள், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, காய்ந்து, காற்றால் சுமக்கப்படும் தூளாக மாறும். காற்று வீட்டிற்குள் வந்து நம்மைத் தொற்றுகிறது. ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்தவுடன், அறிகுறிகள் தோன்றும், இது பல ஆண்டுகளுக்குப் பிறகு நிகழலாம்," என்று அவர் கூறுகிறார்.
இத்தனைக்கும், ஷீத்தலும் அவரது குடும்பத்தினரும் இரண்டு முறை வீடு மாறியிருந்தனர், ஆனால் அதற்குள் தொற்று ஏற்பட்டுவிட்டது.
“மனிதர்கள் குடியேற்றங்களுக்கு முன்னமே புறாக்கள் இயற்கையின் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கின்றன. அவை உணவைத் தேடும் திறன் கொண்டவை. புறாக்களுக்கு மனிதர்களால் உணவளிக்கும் நடைமுறை, உணவைத் தேடும் திறனில் தலையிடுகிறது. நெரிசலான நகர்ப்புறங்களில் புறாக்களின் நெரிசலும் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது,” என்கிறார் மான்கர்.
அப்படியே காமிராவை மும்பைக்கு நகர்த்துவோம்.
இந்த காரணங்களுக்காகத்தான் மும்பையில் இருக்கும் தாதர் மற்றும் மட்டுங்கா போன்ற இடங்களில் ஜன ரஞ்சகமான மய்ய பகுதியில் கபூதர் கானா (புறாக்கள் உணவகம்) க்களை மும்பை நகராட்சி மூடிவிட்டன.
கேட் வே ஆஃப் இண்டியாவிற்கருகில் நகருக்கு சுற்றுலா வரும் பயணிகள் மானாவாரியாக புறாக்களுக்கு உணவளிப்பதை பார்த்திருக்கலாம்.
இந்த தடையை எதிர்த்து ஜைன் சமூகத்தச் சார்ந்தவர்களலிம் அவர்களது குருமார்களும் போராட்டம் செய்தனர். உணவு கொடுக்கும் பகுதியை மூடிய டார்பாலினை அவர்கள் அகற்ற முயன்றனர்.
இந்த எதிர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டி ஏக்கி காரண சமிதியினர் போரட்டத்தில் குதிக்க போலீசார் தடுத்துள்ளனர்.
மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது வரை எந்த தீர்ப்பும் வரவில்லை. எனினும் மாநகராட்ச்சியின் செயலுக்கு தடையும் விதிக்கவில்லை.
மனித சுகாதாரம் முக்கியம். இந்த புறாக்களினால் விளையும் நோயினால் மிகவும் ஈசியாக மூத்த குடிமக்களும் குழந்தைகளும் தக்கப்படுகிறார்கள். இதை மனதில் கொண்டு தான் தீர்ப்பு இருக்கும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
முதல் தவணையாக மாநகராட்சியின் ஆணையை மீறி புறக்களுக்கு உணவளிப்பவர்களை கைது செய்ய உயர் நீதி மன்றம் கூறியுள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதில்லை என்றும் கூறிவிட்டது.
இன்றைய தின லேட்டஸ்ட் நிலை :
இந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கும், ஒழுங்குபடுத்தப்பட்ட உணவு முறையை செயல்படுத்த முடியுமா என்பதைப் பரிசீலிப்பதற்கும் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சமூகம் மற்றும் அரசியல் எதிர்வினை
போராட்டங்கள்: குறிப்பாக ஜெயின் சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன, அவர்கள் வரலாற்று ரீதியாக புறாக்களுக்கு உணவளித்து அதை இரக்கச் செயலாகக் கருதுகின்றனர்.
அரசியல் தாக்கங்கள்:
2025 அக்டோபரில், தடையைத் தொடர்ந்து இறந்ததாகக் கூறப்படும் புறாக்களுக்கான பிரார்த்தனைக் கூட்டத்தின் போது கபுதர்கானாக்களைப் பாதுகாக்க ஜெயின் தலைவர்களால் புறா சின்னம் கொண்ட சாந்தி தூத் ஜன்கல்யாண் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை ஒரு அரசியல் சர்ச்சைக்குரிய புள்ளியாக மாறியுள்ளது. வரவிருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட கட்சி திட்டமிட்டுள்ளது.
மும்பையில் புறாக்களுக்கு உணவளிக்கும் தடையை எதிர்த்து உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி. இது ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களால் நிறுவப்பட்டது, ஜெயின் முனி நிலேஷ்சந்திர விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பட்டினிப் போராட்டம் அச்சுறுத்தல்: தீபாவளிக்குள் தடை நீக்கப்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக சில சமூகத் தலைவர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்த புகார் சென்னையிலும் உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.
வேளச்சேரியிலுள்ள பெரிய அடுக்கு மாடி கட்டிடங்களான அலாக்ரிடி பில்டர்ஸின் “சங்கத்”தில் விழிப்புணர்வு விவரங்கள் குடியிருப்போரிடையே கார சாரமாக உலவி வருகின்றன.
பக் பக் பக்………..
Leave a comment
Upload