“வெல்வெட்டுனா என்னடி பாகி?”
கேட்டவள் மல்லி. இருவரும் முனிசிபாலிட்டி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் வகுப்புத் தோழிகள்.
“அதுவும் துணிதான் மல்லி! மழமழன்னு பூனைக்குட்டியைத் தடவிக் குடுக்கிற மாதிரி இருக்கும். அதுல விரலால கோடு போட்டா, அது லேசா கலர் மாறி அப்புறம் புசுபுசுன்னு திரும்ப பழையபடி ஆயிடும்டி!’’
“அதிலயா உன் மாமா உனக்குத் தலகாணி தச்சுக் கொடுத்தார்? அடேயப்பா!”
“ஆமாம் மல்லி! ஒண்ணு இல்ல.. ரெண்டு தலகாணி! தலைக்கு கெம்ப்பு கலர் தலைகாணி! காலுக்கு நீல கலர்... ரெண்டும் எனக்கே எனக்குன்னு.. தெரியுமா?”
“என்னது? காலுக்குமா தலைகாணி?”
“ஆமாம் மல்லி! நாம சாயங்காலம் பாண்டி ஆடினப்புறம் குதிகாலும் கெண்டைக்காலும் நோவுமில்லே? ராத்திரி தலைகாணில கால்போட்டு படுத்தா வலிக்கு இதமா இருக்கும்டி!”
இப்படி மல்லியிடம் தலகாணி சொகத்தை பாகி சொல்லியே ஆறு மாசம் ஓடிப் போச்சு! அன்னையிலிருந்து காலுக்கு தலகாணி என்பதே மல்லிக்கு எப்போதும் சிந்தையாகவும் ஆச்சு!
மல்லியோட தலைகாணி கொஞ்சம் சப்பையா இருக்கும். மாசத்துக்கு ஒருக்கா அதுக்கு மாத்தறதுக்கும் ரெண்டே உறை. அதுலயும் ஒண்ணு பக்கவாட்டில் தையல் விட்டு வாயைப் பிளந்துகிட்டு இருக்கும்.
பாகி மாதிரி வசதியான வீடோ, எதுவும் வாங்கித் தர நல்ல மாமாவோ மல்லிக்கு வாய்க்கவில்லை. புறாக்கூண்டு போல வீடு. அதன் இருட்டு சமையலறையில் அம்மா மட்டும் படுத்துக் கொள்வாள்.
ஹால் படுக்கையறை எல்லாம் அடுத்திருந்த ஒரே செவ்வகத்தில் தான்.
அதன் சுவரோரம் பாட்டி, பாட்டிக்கு பக்கத்தாப்புல மல்லி, மல்லியை ஒட்டி அவள் அண்ணன் சரவணன். அடுத்து அப்பா. .
ஐந்து பேருக்கும் ஆளுக்கு ஒரு தலைகாணி தான்.
ராத்திரி எப்போதாவது அப்பா சமையலறைக்கு தண்ணி குடிக்க எழுந்து போவதும், ஏதேனும் பாத்திரம் உருளுவதும், ‘சே! …இந்தப் பூனை தொல்லை…’ என்று அம்மா முனகுவதும், பாட்டி களுக்கென்று சிரிப்பதும் பாதி தூக்கத்தில் மல்லிக்குப் புரிவதுமில்லை.
ஒரு நாள் அம்மாவிடம் மல்லி கேட்டாள். ‘’அம்மா! இந்த தீபாவளிக்கு எனக்கு புது டிரஸ்ஸுக்கு பதிலா ஒரு வெல்வெட் தலகாணி வாங்கித் தரியா?’’
‘’அடி போடி அறிவு கெட்டவளே! தீபாவளிக்கு எண்ணெய் வாங்கவே யோசனையா இருக்கு. இதுல ராணிக்கு இன்னொரு தலகாணி... அதுவும் வெல்வெட்டுல கேட்குதோ?”
பாட்டி இடைமறித்தாள். ‘’பார்த்துக்கிட்டே இரு மருமவளே! என் மல்லி பெரிய பொண்ணா ஆனப்புறம் வெல்வெட்டு தலகாணி என்ன... வெல்வெட்டு மெத்தையென்ன.. நடக்க வெல்வெட்டு நடை பாவாடையென்ன, வெல்வெட்டு மிதியடியென்னன்னு மகராசியா இருக்க போறா பாரு…’’ என்று சொன்னபடியே மல்லியை அணைத்துக் கொண்டாள்.
மல்லிக்கு வெல்வெட் தலகாணி கிடைக்காது எனத் தெரியும் தான். குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு தலகாணி காலுக்கு கிடைக்காதா என்ற ஏக்கமே பெரிதாகிப் போனது.
அவ்வப்போது பாகியிடம் அவளுடைய கால் தலகாணி பற்றிக் கேட்பாள். ஒரு நடை நேரிலும் போய்ப் பார்த்து வந்தாள். நிஜம்தான்… எம்மாந் தண்டி பெரிய தலகாணி?! அதைத் தொட்டுதொட்டுப் பார்த்தாள். தலகாணியின் மேல் விரலால் கோடிழுத்துப் பார்த்தாள். அந்த க்ஷணம் தானே பாகியாக மாறிவிடக் கூடாதா என்று ஏங்கினாள்.
பாட்டியிடம் தன் காலுக்கு தலகாணி என்ற ஆசை பற்றிகூடச் சொன்னாள்.
“என் தலகாணியையே உனக்குக் கொடுத்துட்டு என் முழங்கையை அண்டை கொடுத்துக்கிட்டுக்கூட நான் தூங்கிடுவேன் மல்லி....
ஆனாபாரு.. .. ஒருத்தர் போட்டு கிட்ட உடுப்பு, மாட்டிக்கிட்ட செருப்பு, வச்சுக்கிட்ட தலைகாணி, கட்டிக்கிட்ட புருஷன் இதையெல்லாம் இன்னொருத்தர் உபயோகப்படுத்துறது தப்பு. வியாதியும் விசனமும் தாண்டி மல்லி மிஞ்சும்!”
எப்போதும் போல பொக்கை வாய் சிரிப்புடன் மல்லியின் கன்னத்தை ஆசையுடன் கிள்ளினாள் பாட்டி.
ஆச்சு... தீபாவளியும் சுரத்தில்லாமல் வந்து போச்சு… .. மல்லி ஆசைப்பட்ட தலகாணியை வாங்கித் தராமல், பள்ளிக்கூட யூனிஃபார்மையே தைத்துக் கொடுத்து விட்டாள் அம்மா.
ஒரு திங்கட்கிழமை தான் அந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
அப்பா தான் பள்ளிக்கூடம் வந்து, பாட்டி செத்துப் போய்விட்டாள் என்று சொல்லி சைக்கிளில் மல்லியை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தார்.
வழியெல்லாம் மல்லி அழுது கொண்டே வந்தாள்.
எவ்வளவு நல்ல பாட்டி?... எனக்காகவே பரிந்துவரும் பாட்டி.
கதைகள் சொல்லும் பாட்டி.. இனிமேல் இருக்க மாட்டாளா?
மல்லியின் தவிப்பு அதிகமாகிக் கொண்டே போனது.
அலம்பி விட்ட வீடு ராத்திரிக்கு அங்கும் இங்கும் தீட்டு திட்டான ஈரத்துடன் மெல்லக் காய்ந்து கொண்டிருந்தது.
கொஞ்ச நேரத்தில் படுத்துக்கொள்ள வேண்டும். மல்லி காலை தூக்கிப் போட்டுக்கொள்ள இனி பாட்டி பக்கத்தில் படுக்க மாட்டாள்.
அவளுடைய தொணதொணப்புக்கு பொறுமையாக பதில் சொல்ல பாட்டி இல்லை. என்ன பண்ணுவேன்? என்று நினைத்து நினைத்து மல்லி அழுகை பீறிட அம்மாவின் மடியில் கிடந்தாள்.
அவ்வளவு துக்கத்திலும், இனி பாட்டியின் தலையணையை, தன் காலுக்கு அண்டை கொடுத்துக் கொண்டு தூங்கலாம் என்று நினைப்பும் மல்லிக்கு வந்தது.
தன் அண்ணன் சரவணனிடம், “டேய் அண்ணா! இனிமே நான் தான் பாட்டியோட தலகாணியை வச்சுக்க போறேன்!” என்றாள்.
“அது முடியாது மல்லி! பாட்டி உடம்பை எடுத்த உடனேயே பாட்டி படுத்த பாய், பெட்ஷீட்டு, தலகாணியை எல்லாத்தையும் வெளியில் எறிந்து விடச் சொல்லி அம்மா சொன்னாள். நான்தான் தெருமுக்குல இருக்கும் முனிசிபாலிட்டி குப்பைத் தொட்டியில் அதையெல்லாம் கடாசிட்டு வந்தேன்”
மல்லிக்கு தலையில் இடி விழுந்தமாதிரி இருந்தது..
“ஐயோ! அதையெல்லாம் ஏன் அண்ணா எறிஞ்சே? அவை பாட்டியோடது இல்லையா?”
“செத்துப் போனவங்க உபயோகிச்ச வஸ்துவையெல்லாம் வைச்சிருக்கக் கூடாதாம் மல்லி. நீ உள்ளே போய் படுத்துக்கோ.
அடுத்த நாள் விடிந்தும் விடியாமல் மல்லி தெருக்கோடிக்கு ஓடினாள். வாயகன்ற பெரிய சிமெண்டு குப்பைத்தொட்டியில் பாட்டியின் பாயும் பெட் சீட்டும் தலகாணியும் கிடந்தன. பாதி உள்ளேயும் பாதி வெளியேயுமாக பாட்டியின் தலகாணி தொட்டியின் விளிம்பில் சாய்ந்திருந்தது.
சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டு, மல்லி அந்தத் தலையணையை வருடிக் கொடுத்தாள். பாட்டியைத் தொடுவது போல இருந்தது.
பாகியின் வெல்வெட் தலையணையில் கோடிழுத்துப் பார்த்தது போல், விரலால் பாட்டியின் தலையணையில் மல்லி கோடு இழுத்து பார்த்தாள். குப்பைத்தொட்டி சிரிப்பது போல் இருந்தது.
மல்லி வீடு திரும்பியபோது பாட்டியின் தங்கை மகன் உட்கார்ந்திருந்தார். அவர் பாட்டியைப் பார்க்க அகஸ்மாத்தாக வந்திருந்து, பாட்டி போன செய்தி கேட்ட அதிர்ச்சியில் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார்.
அவர் பக்கத்தில் செய்தித் தாள் சுற்றிய பொதி ஒன்று இருந்தது.
“மல்லி! பெரியம்மாவுக்கு எப்பவும் உன்னையப் பத்தின நினப்புதான். போன மாசம் நான் இங்கே வந்திருந்தப்போ உனக்கு திருச்சியிலிருந்து ஒரு வெல்வெட் தலகாணி வாங்கிக் கொண்டு வரச் சொன்னா. கொஞ்சம் முன்னமேயே நான் இதை வாங்கிக் கொண்டு வந்திருக்கணும். பெரியம்மா கையால உனக்குக் கொடுத்து சந்தோஷப் பட்டிருப்பா மல்லி. நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்!” என்றபடி அந்தத் தலையணையை மல்லியிடம் நீட்டினார்.
மல்லியின் கரங்களில் அந்தத் தலகாணி வழவழவெனப் பொதிந்தது.
‘இனிமே நீ தான் எனக்குப் பாட்டி!’ என்று எண்ணிக் கொண்டு முகத்தோடு தலகாணியை சேர்த்து அணைத்துக் கொண்டாள் மல்லி.
Leave a comment
Upload