தொடர்கள்
அழகு
மழையால் பிசுபிசுக்குமா தீபாவளி - ப.ஒப்பிலி

202591717303830.jpeg

நன்றி : தினமலர்

வடகிழக்கு பருவமழை தென்கிழக்கில் துவங்கியுள்ள நிலையில், அக்டோபர் 22 வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் தீபாவளி கொண்டாட்டங்களை பெரிய அளவில் செய்ய முனைந்திருக்கும் அனைவருக்கும் சிறிது ஏமாற்றத்தை கொடுக்கத்தான் செய்துள்ளது இந்த எச்சரிக்கை.

மேலும் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த அழுத்தம் உருவாகி வலுப்பெற்று மேலும் மழையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது, என கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.

இந்த பருவமழை மாநிலத்தின் வருடாந்திர மழைப்பொழிவின் 48% மற்றும் சென்னை நகரத்தின் 63% அளவுக்கு மழையை வழங்குகிறது. தமிழகத்தில் சராசரியாக 45 செ.மீ. மழை, சென்னையில் 87 செ.மீ. மழை பெய்கிறது.

அக்டோபர் 17 அன்று தமிழகத்தின் தென் மேற்குப் பகுதிகளில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு கடும் முதல் மிகக் கடும் மழைக்கு (12 முதல் 20 செ.மீ.) ஆரஞ்சு எச்சரிக்கை, அருகிலுள்ள 14 கடலோர, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கு (6 முதல் 12 செ.மீ.) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18 முதல் 20 வரை மேற்கு மாவட்டங்களில் மழை தீவிரம் அதிகரிக்கலாம். அக்டோபர் 21 மற்றும் 22 அன்று சில கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு அல்லது இரண்டு இடங்களில் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மின்னல் காணப்படும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32°C மற்றும் குறைந்தபட்சம் 25–26°C ஆக இருக்கும்.

அதேபோல் அக்டோபர் 18 அன்று தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த அழுத்தம் உருவாகும், ஆனால் அது இந்திய கடற்கரையில் இருந்து விலகிச் செல்லும். அக்டோபர் 24 அன்று வங்கக் கடலில் உருவாகும் குறைந்த அழுத்தம் வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை பிராந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் தரும் நீர்த் தேக்கங்களில் (பூண்டி, சோழவரம், ரெட் ஹில்ஸ், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, மற்றும் கடலூரில் உள்ள வீராணம் ஏரி ஆகியவற்றில் உள்ள நீரின் மொத்த கொள்ளளவு 9,724 மில்லியன் கன அடியாகும். சென்னையின் ஒரு மாதத்திற்கான குடிநீர் தேவை 1,000 மில்லியன் கன அடி தற்போதுள்ள நீர் இருப்பு இன்னும் ஒன்பது மாதங்களுக்கு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளது என சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர் தேக்கங்களில் தேவையான அளவு நீர் இருப்பதால் சென்னை குடிநீர் வாரியம் நாளொன்றுக்கு 1,243 மில்லியன் லிட்டர் அளவுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளை ஒப்பிடுகையில் 109 மில்லியன் லிட்டர் இந்த ஆண்டு கூடுதலாக வழங்கி வருகிறது என தெரிவித்தார் ஒரு அதிகாரி.