ஏழு வருட நிருபர் வாழ்க்கையில் அவனுக்கு இலக்கிய கட்டுரைகளோ, கற்பனைக் கதைகளோ எழுத நேரம் இருந்ததில்லை. ஹிண்டுவில் இருந்து விலகி, புதிய வேலையில் சேர்வதற்கு முன்பு, பதினைந்து நாட்கள் இடைவெளி இருந்தது. அப்போது ‘விழா’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி ஆனந்தவிகடனுக்கு அனுப்பியிருந்தான், மனைவி சாவித்திரியின் பெயரில். அடுத்த பத்து நாட்களுக்குள் ஆனந்தவிகடனில் இருந்து பரணீதரன் என்கிற துணையாசிரியர் கையெழுத்திட்ட கடிதத்தில், ‘அவனது சிறுகதை பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விரைவில் வெளிவரும்’ என்றும் தகவல் இருந்தது. அவன் மகிழ்ந்தான். ஆனால் அடுத்த சில வாரங்களில் ஆனந்தவிகடனில் இருந்து ‘தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக, தங்கள் கதையை வெளியிடுவதை ஒத்தி வைத்திருக்கிறோம்’ என்ற கடிதம் வந்தது. பின்னர் அதே வருடம் ஜுன் மாதம் அந்தக் கதை ‘ஜனநாயகம் கெட்டுப்போச்சு’ என்ற தலைப்பில் ஓவியர் ராமுவின் சித்திரங்களுடன் வெளிவந்தது.
இடைப்பட்ட காலத்தில் கதை வெளிவராததன் அரசியல் காரணம் என்ன? தமிழக முதல்வர் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்தக் கதையில் கொஞ்சம் அரசியல் நெடி இருந்தது. எம்ஜிஆர் குணமாகி திரும்பி வந்த பிறகே அந்தக் கதை வெளிவந்தது. சரிதான் கதை வெளிவந்துவிட்டதே என்று அவன் மகிழ்ச்சி அடைய முடியவில்லை-. மறுவாரம் தாய் பத்திரிகையில் அதன் ஆசிரியர் வலம்புரிஜான் ‘பத்திரிகா தர்மம் கெட்டுப்போச்சு’ என்ற தலைப்பில் அந்தக் கதையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அந்தக் கதையில் அவன் பீட்டர் தங்கராஜ் என்ற பாத்திரத்தை படைத்திருந்தான். அவர் தனக்கு தெரியாத விஷயங்கள் பற்றியும் நன்றாக எழுதுவார்’ என்று குறிப்பிட்டிருந்தான். அது தாய் பத்திரிகையின் ஆசிரியர் வலம்புரிஜானை சீண்டிவிட்டதோ என்னவோ? ஆனால் மறைமுகமாகக்கூட அவன் வலம்புரிஜானை நினைத்து அந்தப் பாத்திரத்தை படைக்கவில்லை.
எனினும் ஜான் தனக்குத்தானே அக்ஷதை போட்டுக்கொண்டு கதையை கண்ணியமில்லாமல் விமர்சனம் செய்தார். ‘சாவித்திரி என்ற புனைபெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் நபும்சகனே’ என்றும் சாடியிருந்தார். அவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அப்போது துக்ளக்கில் வாராவாரம் தமிழ் பத்திரிகைகள் பற்றி தொடர் விமர்சனம் எழுதிக் கொண்டிருந்த மூத்த எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், இலக்கிய விமர்சகருமாகிய க.நா.சுப்பிரமணியம், தாய் பத்திரிகையில் பத்திரிகா தர்மம் கெட்டுப் போச்சு என்ற பக்கத்தைப் படித்திருக்கிறார். அவர் எழுதினார், ‘தாய் பத்திரிகையின் விமர்சனத்தைப் படித்த பிறகு ஆனந்தவிகடனில் வெளிவந்த ‘ஜனநாயகம் கெட்டுப்போச்சு’ என்ற கதையை தேடிப்பிடித்து படித்ததாகவும், கதை நன்றாக இருந்தது என்றும், வலம்புரிஜானுக்கு மட்டும் எங்கோ ஏதோ இடித்திருக்கிறது‘ என்று எழுதினார். அத்துடன் வலம்புரி ஜானின் கட்டுரையில் ‘கழுதைகள்’, ‘நபும்சகன்’ என்ற வார்த்தைகள் அநாகரிகம் என்றும் கருதினார்.
அதனால் வலம்புரி ஜானுக்கு கதைகளைவிட கழுதைகள் பற்றி அதிகம் தெரிந்திருப்பதாகவும், பெண்ணின் பெயரில் ஒளிந்துகொண்டிருக்கிறார் கதாசிரியர் என்று எழுதினாரே, அவர் அதே தாய் பத்திரிகையில் கட்டுரையின் எதிர்ப்பக்கத்தில் ஹேமா ஆனந்ததீர்த்தன் என்பவரின் கதை வெளிவந்திருக்கிறதே? அந்த ஹேமா ஆனந்ததீர்த்தன் ஆணா? பெண்ணா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். வலம்புரிஜான் அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை. அடங்கிப்போனார். ஆனால் கதையின் அதிர்வலை அத்துடன் நின்றுவிடவில்லை. கல்கி பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்வி, ‘பத்திரிகா தர்மம் என்றால் என்ன?’
கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் கொடுத்த பதில், ‘அண்ணா சாலைக்கு அமைந்தகரை, சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறதே அதுதான். மேலோட்டமாக பார்த்தால் இந்த சூசக வாசகத்தின் அர்த்தம் புரியாது. யோசித்துப் பார்த்தால் புரியும். அதாவது மேற்சொன்ன கதையை மையமாக வைத்து கல்கி ஆசிரியர், ஆனந்த விகடனை அண்ணா சாலை என்றும், தாய் பத்திரிகையை அமைந்தகரை என்றும் சங்கேதமாக எழுதியிருந்தார்.
தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இப்படிச் சொன்னார், ‘உங்கள் கதை மந்திரிகளை நிற்க வைத்துச் சுடுவது போல் இருந்தது. கதையின் எதிரொலியாக மாநில அரசின் ஏழு மக்கள் தொடர்பு அதிகாரிகள் மாற்றல் உத்தரவு பெற்றார்கள். அவர்களில் யாரோ அவன் கதையெழுத விஷயதானம் செய்திருப்பார் என்பது மந்திரியின் ஊகம்’.
பல வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் ‘தமிழ் அரசி’ பத்திரிகையின் ஆசிரியர் ம.நடராஜனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த ராவணன் என்கிற மக்கள் தொடர்பு அதிகாரியிடம் அவனைக்காட்டி, ‘இவர் தான் அவர்’ என்று சொல்ல அவர் விழித்தார். பிறகு நடராசன் அதுதாம்பா! அந்தக் கதை, என்றார். உடனே வந்தவருக்குப் புரிந்துவிட்டது. அவர்தான் மக்கள் தொடர்பு அதிகாரி ராவணன். அவர் கேட்டார் ‘சார்! நாம் முன்னே பின்னே சந்தித்திருக்கிறோமா?- என்னை உங்களுக்குத் தெரியுமா-? உங்களுக்கும் எனக்கும் ஏதாவது பழக்கம் உண்டா? உங்கள் கதைக்கு க்ளூ கொடுத்திருக்கிறேன் என்று சந்தேகப்பட்டு, என்னை மந்திரி தொலைதூர மாவட்டத்திற்கு தூக்கி அடித்து விட்டார்’ என்றார்.
முதல் சிறுகதைக்கு இவ்வளவு எதிர்வினைகள் வந்த போதும் அவன் அரசியல் சிறு கதைகள் எழுதுவதை நிறுத்தவில்லை. எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் அவன் மேலும் சில கதைகள் எழுதினான். மாதிரிக்கு ஒரு கதை: தங்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தீவிரவாதிகளின் கும்பல் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரை கடத்திவிடுகிறது. அவர் ஐஏஎஸ் எழுதுவதற்கு முன்னதாக பேராசிரியராக இருந்தவர். தீவிரவாதிகளின் தலைவன் அவரது முன்னாள் மாணவன். இருவரிடையே நடந்த உரையாடல் சுவாரஸ்யமாக எழுதப்பட்டது. அரசாங்கம் தங்கள் கோரிக்கையை ஏற்கும் என்று கேள்விப்பட்டவுடன், தீவிரவாதிகளின் தலைவன் தலைமைச் செயலாளரை விடுவிப்பான். அவர் மறுபடியும் மாநில அரசு பணிக்குப் போக விரும்பவில்லை.
அங்கே அடிமையாக இருப்பதைவிட காட்டில் அவருடன் சுதந்திரமாக இருந்துவிட விரும்புவதாகச் சொன்னார். ஆனாலும் வலுக்கட்டாயமாக அவரை கடத்தல் கும்பல் தலைவன் விடுவிக்கிறான். அப்போது கிடைத்த வானொலிச் செய்தி அரசாங்கம் கலைக்கப்பட்டது என்பது. உடனே தீவிரவாதிகளின் தலைவன் குறுக்கு வழியில் ஒரு ஜீப்பை அனுப்பி தலைமைச் செயலாளரை திருப்பி அழைத்து வரச் சொன்னான்.
ஏனென்றால் ஜனாதிபதி ஆட்சிகாலத்தில் தலைமைச் செயலாளருக்கு அதிகாரம் அதிகம் என்பதால், அவர் கடத்தப்பட்டிருப்பது நல்லது என்று நினைத்தான். இப்படி முடியும் அந்தக்கதை. அது குங்குமம் இதழில் வெளிவந்தது. ஆனால் கதைகளைப் புத்தகமாக தொகுத்தபோது குங்குமம் பத்திரிகையின் பிரதி கிடைக்கவில்லை.
அதனால் கதையை மீண்டும் எழுதினான். அப்போது யோசித்துப் பார்த்தான். தான் எழுதிய கதையை ஒரு எழுத்தாளர் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டு எழுதினால், நிகழ்வுகளின் பின்புலமும், மொழிநடையும் எவ்வளவு மாறியிருக்கிறது என்பது இலக்கிய கண்ணோட்டத்தில் ஆராய்ச்சிக்குரியது என்பது அவனுக்கு புலப்பட்டது. குங்குமம் பத்திரிகையில் அவன் மேலும் சில கதைகளை எழுதினான். எல்லா சிறுகதைகளும் நிஜங்களின் பிரதிபலிப்பே. கற்பனை என்பது ஒரு உத்தி அவ்வளவுதான்.
Leave a comment
Upload