தொடர்கள்
கதை
ராம நாம மகிமை…...பொ.வெ. ராஜ்குமார்

2025916184354508.jpeg

இலங்கை மேல் படையெடுத்து, இராவணனை அழித்து, சீதாதேவியை மீட்டெடுக்க வானரப்படை, கடலின்மேல் கற்பாலம் அமைத்திட, வாயுமைந்தன் அனுமனின் மேற்பார்வையில், மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அனுமனின் உத்தரவின் பேரில், பெரிய, பெரிய பாறாங்கல்லின் மேலும், ராம் என்ற மந்திரச்சொல்லை எழுதி, கடலில் விட, அது கடலில் மிதந்து கொண்டே இலங்கைக் கரையைஅடைவதைப் பார்த்த ஒவ்வொரு வானரமும், மகிழ்ச்சியாலும், பெரு வியப்பாலும், துள்ளிக் குதித்துக் கொண்டாடின. ஆயிரமாயிரமான வானரப் படைகளின் ஒவ்வொரு வீரக்குரங்கும் இதில் ஈடுபட, மெல்ல மெல்ல அந்தக் கடலின் நடுவே, அதிசயமாய் மிதக்கும் கற்களினாலே ஒரு பாலம் எழும்பிக் கொண்டிருந்தது.

வானரங்களின் சந்தோஷக் கூச்சலும், அவைகளின் வியப்பு மிகுந்த ராம மந்திர உபாசனையும், கடலலைகளின் பேரிரைச்சலையும் விஞ்சின. அதைக் கேட்டு, இராவண வதையை, வெற்றிகரமாக முடிக்க, மனித வடிவு எடுத்த அவதாரப்புருஷன், ஶ்ரீராமன், அங்கே வந்தார். வானரங்களின் அதீத உற்சாகத்தையும், மகிழ்ச்சிக் கூச்சலின் காரணத்தையும், அனுமனிடம் கேட்டார்.

“ஜானகி வல்லபரே! தங்களின் திருநாமத்தை பாறாங்கல்லில் எழுதி, ஆர்ப்பரிக்கும் கடலில் விட்டாலும், அது தோணி போல் மிதக்கிறது. அதன்மேல், வானரப்படை நடந்து சென்று இலங்கையை அடையலாம். கொடுங்கோல் அசுரன் இராவணனைப் போரில் வெல்ல, இதுவே தருணம். தங்களின் ஆசியால், வெற்றிகளை அடைவோம்!”, என்றான் வாயுபுத்திரன் அனுமன்.

“என்ன! என் பெயரை கல்லின் மேல் எழுதிக் கடலில் விட்டால், மிதக்கிறதா? ஆச்சரியமாய் உள்ளதே! எங்கே! நானும், ஒரு கல்லை கடலில் விடுகிறேன். மிதக்கிறதா என்று பார்ப்போம்” என்றார். “ஜனார்த்தனரே! கங்கையே தன்னுடைய புனிதத்தை சோதித்து கொள்வது போல் உள்ளது, தங்களின் கோரிக்கை! அப்படியே ஆகட்டும்!” என ஒரு பெரிய கல்லை சுமந்து வந்து இராமனின் அருகில் வைத்தார். இராமனும், அந்தக் கல்லை கடலில் விட்டார். அது மூழ்கிக் காணாமல் போனது.

இராமரும் சற்றே திகைத்து, அதற்கான விளக்கத்தை, அனுமனிடம் கேட்டார். அப்போது, அனுமன், “சர்வேஸ்வரா! அண்ட சராசரங்களையும் காத்து நிற்கும் வைகுந்த பெருமாளே! என்மூலமாக இந்த உலகத்திற்கு இராம நாமத்தின் மகிமையை உணர்த்த உளம் கொண்டீர் போலும்! அவ்வாறே, உரைக்கின்றேன்! ஜெய் ஶ்ரீராம்!

பூலோகத்தின் உயிர்கள் யாவையும், தங்களின் திருநாமத்தை ஜபிப்பதன் மூலம், தங்களின் அருளை நாடி, விண்ணப்பிக்கிறார்கள். தாங்கள் அருள் கூர்ந்து, அவர்களைச் சம்சார சாகரத்திலிருந்து மீட்டெடுத்து வைகுந்தத்தில் சேர்க்கிறீர்கள். எந்த யுகமானாலும், தங்களின் திருநாமம், பக்தர்களை உய்விக்கும் தோணியாக, இணைப்புப் பாலமாக, தங்களின் திருவருளை அடைவிக்கும் மூலமந்திரமாக செயல்படுகிறது.

எனவே, கல்லிலே தங்களின் திருநாமத்தை எழுதினாலும், அந்தக் கல், தங்களுக்கான திருச்சேவையை, தங்களின் திருவருளால், நிறைவேற்றுகிறது. அதனால், அது மிதக்கிறது; வானரச்சேனை, தம்முடைய தெய்வப்பணியை மேற்கொள்ள அது உதவுகிறது. ஆனால், திருவருட்செல்வமான தாங்களே அக்கல்லை கடலில் விடும் போது, அது நிர்க்கதியாய்க் கடலில் அமிழ்ந்து காணாமல் போகிறது. இது தான் இராமதாசனான என்னுடைய தாழ்மையான வியாக்கியானம்”, என்றான் அனுமன், வினயத்துடன்.பரம்பக்தனான அனுமனின் விளக்கத்தைக் கேட்டு அகமகிழ்ந்து, அவரை ஆசிர்வதித்தார், ஶ்ரீராமன்.