தொடர்கள்
தொடர்கள்
நாடும் நடப்பும் - 18 - சுதாங்கன்

20180425185817995.jpg


நாட்டில் பல நல்ல விஷயங்களை மறந்தே போகிறோம். பரப்புபரப்புகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துஅக் கொண்டிருக்கின்றன அச்சு, மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களும்!

நாமாவது கொஞ்சம் பரபரப்பை மறந்துவிட்டு, நம்மை கிட்டத்தட்ட ஒரு ஐம்பது ஆண்டுகளாக திரையில் மகிழ்வித்த `ஆச்சி’ என்கிற மனோரமாவை அவரது பிறந்த நாளான ( மே 26) அன்று கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்.

பள்ளத்தூர் பாப்பா பாடவும் செய்வாள் என்று அவர் நடிக்க ஆரம்பித்த ஆரம்ப நாட்களிலேயே அறியப்பட்டார். திரையில் மனோரமாவாகி சிரிப்பு நடிகையாகப் புகழ் பெற்ற பின் பள்ளத்தூர் கதை மீண்டும் தலைதூக்கியது. `ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்டை கொக்கு’ என அவர் பாடிய பாமர ராகத்திலும் பாட்டின் மணம் இருந்தது.

ஆச்சி ஒரு பெண் நடிகர் திலகம் என்றே சொல்லலாம். அவர் கிட்டத்தட்ட ஆயிரம் படங்களில் நடித்தவர். நகைச்சுவை, குணசித்திரம் என்று அவர் ஏற்காத வேடங்களே இல்லை என்றே சொல்லலாம். கவர்ச்சி நடிகையாகவும் கூட சில படங்களில் நடித்திருக்கிறார். பி. மாதவன் இயக்கி தயாரித்த கண்ணே பாப்பா படத்தில் `காலத்தில் இது நல்ல காலம்’ என்கிற ஒரு காபரே பாடலுக்கு ஆடியிருப்பார்.

20180425190414353.png

மனோரமா பிறந்தது தஞ்சை மாவட்டத்தின் ராஜமன்னார்குடி. பெற்றோர் அவருக்கு சூட்டிய பெயர் கோபிசாந்தா. அப்பா காசிக் கிளாக்குடையார் (சிவாஜியை மன்றாடியார் என்பது போல் இப்படி ஒரு டைட்டிலாம்) தாயார் பெயர் ராமாம்ருதம்.

மூத்தவளின் திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளி இட்டாள் இளையவள். அதனால் அவள் குடும்பம் தத்தளித்தது ரங்கோன் ராதா படத்தில் இப்படி ரங்கத்திற்கு ஏற்பட்டது ராமாம்ருதத்திற்கும் நடந்தது.

தன் ஒரே மகள் கோபிசாந்தாவுடன் பிழைத்துக் கொள்ள பள்ளத்தூர் சென்றார் ராமாம்ருதம். பள்ளத்தூர் சென்றதில் ஒரே லாபம், ராமாம்ருதத்தின் மகள் கோபிசாந்தாவிற்கு ஏராளமான சினிமாப் படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது தான்.
பள்ளத்தூர் உயர்நிலைப்பள்ளியில் கோபிசாந்தாவால் ஆறாவது வரைதான் படிக்க முடிந்தது. ஆனால் மூன்று நான்கு வயதிலிருந்தே அன்றைய சினிமாப் பாடல்களை ஜெராக்ஸ் எடுப்பதில் அவள் கெட்டிக்காரத்தனம் காட்ட ஆரம்பித்தாள்.
திருநீலகண்டராக வரும் தியாகராஜ பாகவதர், தாசி கலாவல்லியைப் பார்த்துப் பாடிய `உன் அழகைக் காண இரு கண்கள் போதாதே’ ( 1939) பாடலை சிறுமி கோபிசாந்தா பாடியதைக் கேட்டு பலரும் வியந்தார்கள்.

பள்ளத்தூரிலிருந்து மூணு மைல் ஏரிக்கரையோரமாக போனால் கோட்டையூர் வரும். அங்கே தான் சினிமா கொட்டகை. அங்கு பார்த்த அசோக்குமாரும் (1941) மீராவும் (1945) `மன்மத லீலையை வென்றார் உண்டோவா’கவும் ` காற்றினிலே வரும் கீதம்’ ஆகவும் பதிவு ஆயிற்று. கொட்டகையிலிருந்து பாட்டும் பாட்டுப் புத்தகமுமாய் வெளி வருவாள் கோபிசாந்தா. அவள் பாடுவதைக் கேட்டு ரசிக்கவே சிலர் அவளை சினிமாவிற்கு அழைத்துப் போவதைப் பழக்கமாகக்
கொண்டார்கள்!

அந்த நாள் சினிமாப் பாட்டில் இருந்த தேர்ச்சி, பள்ளிக் கூடத்தில் கூடப் பயன்பட்டது. ஒரு நாள் ` பாருக்குள்ளே நல்ல நாடு’ பாடச் சொன்னார்கள். காற்றினிலே வரும் கீதம் மெட்டில் அதை பாடிவிட்டாள் கோபிசாந்தா. பலத்த கைதட்டல், அந்தப் பாராட்டை அவளால் மறக்க முடியவில்லை. ஆனால் வறுமை காரணமாகத் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

பள்ளத்தூர் திருவிழாக்களில் தெருக்கூத்து நாடகங்கள் நடக்கும் போது, ` நம்ம ஊர் பாப்பாவும் பாடோணும்’ என்று அடம்பிடித்து ஊர்க்காரர்கள் அவளையும் பாட வைப்பார்கள். விரைவில் அவள் ` பள்ளத்தூர் பாப்பா’ என்று பெயர் பெற்றுவிட்டாள். ஒரு வைகுண்ட ஏகாதசியில் நகரத்தார்கள் சேர்ந்து 'அந்தமான் கைதி' நாடகம் போட்டார்கள்! நடித்தவர்கள் எல்லோரும் ஆண்கள். பெண் வேடம் போட்டவருக்காக பாப்பா பின்பாட்டுப் பாடினாள்.! இந்தப் பின்பாட்டு விஷயம்தான் `பாப்பா’விற்கு கலை வாழ்க்கையின் பிள்ளையார் சுழியாக அமைந்தது! ( கோபிசாந்தா என்ற பாப்பா மனோரமாவானதும் இந்த நாடகத்தில்தான்).

நாடகத்திற்கு மின்னூழியராக வந்த பால்ராஜ், மனோரமாவிற்கு சரியான இணைப்பு கொடுப்பதில் நாட்டம் காட்டினார். அவள் திறமையைப் பல பயில்முறை நாடகக் குழுக்களுக்குத் தெரிவித்தார். ` பள்ளத்தூரில் ஒரு பொண்ணு.. ரொம்ப நல்லாப்பாடுது’ என அவர் சிபாரிசு செய்து, புதுக்கோட்டையில் ‘விதியின் விசித்திரம்’ என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக மனோரமா முதன்முலாக நடித்தார்.

அப்புறம் பால்ராஜ் ` யார் மகள்’ என்ற நாடகம் எழுதினார். அதில் மனோரமாதான் கதாநாயகி.

புதுக்கோட்டையில் பி.ஏ. குமார் என்பவர் ஒரு படம் ஆரம்பித்தார். எஸ்.எஸ். ராஜேந்திரன் ஹீரோ. தேவிகா ஹீரோயின். மனோரமா இரண்டாவது ஹீரோயின். இப்படிச் சில நாட்கள் ஒத்திகை நடந்தது. படம் தொடரவில்லை.

ஆனால் ஒத்திகையின்போது மனோரமாவின் திறமையைப் பார்த்திருந்த எஸ்.எஸ்.ஆருக்குப் பல மாதங்களுக்குப் பிறகு அது நினைவுக்கு வந்தது. சென்னையில் ` மணிமகுடம்’ மேடை ஏறிய போது மனோரமாவைக் கூப்பிட்டனுப்பினார்.


மனோரமா சென்னை வந்தார். அதன் பிறகு பல நாடகங்கள்.

ஐம்பதுகளின் இரண்டாவது பாதி. கதை, வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் வளர்ந்து கொண்டிருந்த கண்ணதாசன். `கழகப் பாசறை’யில் இருந்தார். அவர் தயாரித்த முதல் படம் `மாலையிட்ட மங்கை’ (1958) அதுதான் மனோரமாவிற்கு முதல் படம். அதன் பிறகு சரமாரியாக படவாய்ப்புக்கள் வந்து கொண்டிருந்தன. 1960-ல் வெளிவந்த ஒரு சினிமா டைரி, மனோரமாவை இப்படி குறிக்கிறது. "‘மாலையிட்ட மங்கை’ படத்தில் ஹாஸ்ய பாகத்தில் பிரபலமான இவர், அன்பு எங்கே, பெரிய கோவில், மற்றும் சமீப வெளியீடான அபலை அஞ்சுகத்திலும் ஹாஸ்ய நடிகையாக நடித்தார். தற்போது விஜயபுரி வீரன், உத்தமி பெற்ற ரத்தினம், அழகர்மலைக் கள்ளன் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்’ என்று குறிப்பிட்டது.

மனோரமாவின் சாதனையை மறக்கவே முடியாது.