
ராம் கார்த்திக்
‘நிழற்காடு’
தியானத்தின் வழி அடைந்த மனக் குவிப்பால், தமிழின் முற்கால எழுத்தாளனின் மொழியாக கவிதையே அமைந்திருந்தது. குவிப்பில் விரிந்த அகத்தின் சொற்களே இன்று நமக்கு வேத சூக்தங்களாகக் காணக் கிடைக்கின்றன. நம்மாழ்வாரின் திருவாய்மொழி வரை இக்கருத்து பொருந்தும். கவிஞன் சந்த சேர்த்திக்காக எவ்வித சிரமமும் எதிர் கொள்ளவில்லை. இலக்கணம் யாவும் அவன் நவின்ற பின் தொகுத்தவை.
பாக்கள் காப்பியமாகி, காப்பியம் கதையாகி, இன்று ‘நாவல்’ என்னும் படிமத்தை அடைந்துள்ளோம். அச்சுத் துறையின் அசாத்திய வீச்சால் இது சாத்தியப்பட்டுள்ளது. இன்று நவீன எழுத்து, கவிதையில் உரைநடை, உரைநடையில் கவித்துவம் என பல்வேறு வடிவங்களாக நகர்வதைக் காண்கிறோம். இன்று நாவல்கள், சிறுகதைகள் எழுத்தாளனின் முக்கிய மொழியாக மாறியுள்ளன. தத்துவங்களைப் படிமங்களாக மாற்றும் கனவையே நாவல்கள் நிகழ்த்துகின்றன.
அவ்வகையில் ‘எழுத்துக்காரன் வீதி’ எழுத்தை ஏடெடுத்து புதுப்பிக்கும் ஓர் சிறு முயற்சி. காலத்தை அகக் கைகளின் வழி கடக்கும் பயணமாக இது இருக்கும் என நம்புகிறேன். அவ்வகையில் நாம் இங்கு காணப்போகும் முதல் படைப்பு எழுத்தாளர் சா.கந்தசாமியின் 'சாயாவனம்' நாவல்!

சா. கந்தசாமி
சாயாவனத்தை சா. கந்தசாமி தனது 1969ல் தன் 25ஆம் வயதில் வெளியிட்டார். அழிவை மிகத் துல்லியமாக சித்தரிக்கும் படைப்பு.
சிதம்பரம் என்கிற இளைஞன் சாயாவனத்தில் கரும்பு சாலை ஒன்றை நிறுவ விரும்புகிறான். நாவலில் வரும் சிவனாண்டித் தேவர் மொழியில் சொன்னால், “தம்பியை ஜெகத்துல எவனும் ஜெயிக்க முடியாது”. அத்தனை திறமைசாலி. அவன் கனவின் முன் நிற்பது ஓர் பெரும் நிழல் காடு, ஒளியின் சிறு கூறு கூட புக முடியாத சாயாவனம். காரையும், இலுப்பையும், புளியும், ஏனையத் தாவரங்களும் பட்சிகளும் விலங்கும் திரண்ட ஜீவ ஆரண்யம். கனவின், இளமையின், ஆற்றலின் படிமமாக சிதம்பரம் தோன்றுகிறான். திசையெல்லாம் விரிந்த சாயாவனம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல.
“ஆலையா!.. ? அந்தக் காட்டிலேயா? என்ன தம்பி வேடிக்கை பண்ணுறீங்களா? அட அப்பா! எம்மாம் பெரிய காடு! வனம் மாதிரி; மனுசன் அழிக்க முடியுமா? அழிக்க முடியுமுன்னு நினைப்புதான் தோணுமா?”
“நான் சீக்கிரத்தில் அழிச்சுடுவேங்க மாமா!”
அமைதியாக குண்டு வீசுவது போல், பதைபதைக்க வைக்கும் வரிகள் இவை.
சாமானியன் போலக் காட்டைத் தன்னை சார்ந்ததாக சிதம்பரம் எண்ணவில்லை. அதைத் தன் கனவிற்குத் தடையாக உணர்ந்தான். உண்மையில் வனத்தை, காற்றை, கடலை தன்னதாக எண்ணுவது ஓர் நுன் உணர்வு. யோகம்! அன்பை, நட்பை தியானத்தின் யுக்தியாகக் கொள்வதுப் போல, அனுபவம் அளிக்கும் ஞானக் கொடை இது. இயற்கை என்னும் பறந்த விரிப்பைத் தனதாக்கி, பின் தானே அதுவாகி, ஏக நிலையில் நிற்றல்! இது யோகம் அன்றி வேறென்ன?!.
ஓர் பக்கம் அழிவு என்றாலும், அதற்கான பிரமாண்ட உழைப்பும் கண் முன் விரிகிறது. நாவலின் எந்த கணத்திலும் சிதம்பரம் உழைக்கத் தயங்கவில்லை.
“அரிவாளக் கீழப் போட்டுட மாட்டெங்க மாமா!”
சாயாவனம் சிலந்தி வலை போல் பல மென் இழைகளால் கோர்க்கப் பட்டிருந்தது. ஓர் கணம் உமிழ்ந்த எச்சில் ஆகவும், மறு கணம் சிக்கலான வலையாகவும்.
“ஒவ்வொரு நாளும் வெட்ட வெட்டக் குவிந்த காரை, போர் போராய் உயர்ந்துக் கொண்டே வந்தது. பழனியாண்டி, கலிய பெருமாள், தேவர் - வேலைக்கென்று ஒரு நேரம் இருந்தது. ஆனால் சிதம்பரம் கால நேரமின்றித் தனியாக வனம் போன்ற தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். எப்பொழுதாவது ஒரு முயல் குறுக்காக ஓடும், நரி கூட்டமாக ஊளை இடும். அவன் வேலையை சற்றே நிறுத்தி வேடிக்கை பார்ப்பான்.”
“காரை அழிய இலந்தை மரங்கள் வந்தன. இலந்தையிலிருந்து பொன்வண்டு கூட்டம் கூட்டமாக வந்தது. மின்னி யொளிரும் வர்ணத்தை அவன் சொக்கினான்.”
சிதம்பரம் காட்டின் தாவரங்களோடும், விலங்கோடும், பட்சிகளோடும் தோழமைக் கொண்டான். அவற்றின் இருப்பை அழித்தாலும், முனைந்த செயலை விட்டு அவன் துளியும் அகலவில்லை. காரணம் அவன் உழைப்பில் வக்கிரம் இல்லை.

இம்முரண் சிறு பிராயக் கனவுப் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது, இளமையின் துடிப்போடு. நாளும் காற்றை நுகர்ந்தும், நீரைக் குடித்தும் வாழும் மனிதன், எதன் பொருட்டு இயற்கையினை விட்டு அகன்றான் என்னும் கேள்வியை இந்நாவல் நம்முள் விதைக்கிறது. வெற்று பழி சுமத்தலாக மாறாமல், அவன் மன ஓட்டத்தை, அந்தர்வாகினியாக அவனுள் புகுந்து ஆராய்கிறது.
நாவலின் இத்தகு போக்கால், சிதம்பரத்தின் மேல் ஒரு போதும் நமக்கு கோபமோ, உளைச்சலோ தோன்றவில்லை. மாறாக அவனது கடும் உழைப்பை அங்கீகரிக்கவே மனம் உந்துகிறது. சா. கந்தசாமி, நாவல் ஆசிரியன் என்ற முறையில் கண்ட வெற்றி இதுவே!
நாவல் முடியும் தருவாயில், வெள்ளம் பெருகி புளியந்தோப்புகள் மூழ்க, ஊர் ஆச்சி காட்டின் சுவையான 'புளி'க்கு ஏங்குகிறாள். சிதம்பரம், உணர்ச்சி அற்று தட்டையாக நிற்கிறான்.
பெருங்காட்டின் படிமம் புளியின் சுவையில் எஞ்சி நிற்கிறது.
(தொடரும்)

Leave a comment
Upload