
“எங்கக்கா போயிட்டீங்க?... போனவாரம் உங்களையும் காணோம்... ஆன்ட்டியையும் காணோம்!” என்றபடியே ரம்யா வீட்டினுள் நுழைந்தாள் ராகினி.
“கர்நாடகா மடிகேரி வரைக்கும் குழந்தைங்களை கூட்டிட்டு போயிட்டு வந்தேன் ராகினி. நல்ல நிம்மதியான இயற்கை. கிளப் மஹிந்திரா ரிசாட்ஸ்லதான் ஸ்டே. ஒருவாரம் டயம் போனதே தெரியல! இன்னிக்கு காலைல தான் வந்தோம்.”

“உங்களுக்கெல்லாம் இது மாதிரி ஓய்வான பயணம் அவசியம் தேவைக்கா. வருஷம் பூரா உழைக்கறீங்க... குழந்தைங்களோட 24 மணி நேரமும் இருக்கறது இந்த மாதிரி பயணங்கள்லதான் சாத்தியப்படும். இதோ ஜூன் முதல் வாரத்துல ஸ்கூல் திறந்திடுவாங்க... பசங்களுக்கும் திரும்ப ரொட்டீன் படிப்பு ஸ்டார்ட் ஆயிடும். சில சமயம் இது மாதிரி சுழற்சியிலேர்ந்து தப்பிக்க ஏன் யாருமே முயற்சி பண்றதில்லைன்னு ஆயாசமா இருக்கு!”
“எப்பிடி முடியும் சொல்லு? குழந்தைங்கன்னா ஸ்கூலுக்கு போய் படிச்சுத்தானே ஆகணும்?!”
“போன வாரம் நான் ஒரு கிராஃபிக் டிசைனிங் ஸ்டூடியோ வெச்சிருக்கிறவரை சந்திச்சேன்க்கா. அவர் தன் குழந்தையை வீட்டிலயே வெச்சுதான் படிக்க வைக்கிறாரு. லண்டன்ல உள்ள ஸ்கூலோட மாணவி அவர் பொண்ணு. ஆனா சென்னைல இருந்துகிட்டே ஆன்லைன் பள்ளி மாணவியா இருக்கா. அவருக்குன்னு ஸ்பெஷலா ஒரு டீச்சர் திங்கள், புதன், வெள்ளின்னு மூணு நாட்கள்ல இரண்டரை மணிநேரம் ஆன்லைன்ல வகுப்பெடுக்கிறாங்க. மத்த ரெண்டு நாட்களும் அந்த பொண்ணு ஸ்விம்மிங், டான்ஸிங், ஓவியம்னு வெரைட்டியான வகுப்புகளுக்குப் போறா. ஆன்லைன் கோர்ஸ் இரண்டரை மணி நேரமா இருந்தாலும், அவளுக்கு குடுக்கற தினசரி அசைன்மெண்ட்ஸ் முடிக்க இன்னொரு இரண்டரை மணிநேரம் எடுக்குதாம். அதை அவளே சொந்த முயற்சியில செய்வாளாம். மத்த நேரத்தையெல்லாம் வேஸ்ட் பண்ணாம நிறைய புத்தகங்கள், சினிமாக்கள்னு பார்ப்பாளாம்! ஐடியா நல்லாயிருக்கில்ல?!”
“இதெல்லாம் பணம் அதிகமா இருந்து வீட்டிலயும் குழந்தைங்களை உக்கார்ந்து பார்த்துக்குற பொருளாதார வசதி இருந்தாத்தான் முடியும் ராகினி. நம்மை மாதிரி மாச சம்பளத்துக்கு ஓடற ஜீவன்களுக்கு கட்டுப்படி ஆகாது. நல்லதோ கெட்டதோ ஸ்கூல்தான் நம்ம பிள்ளைங்களுக்கு லாயக்கு!” என ஆயாசப் படுகிறாள் ரம்யா.
‘அதுவும் சரிதான்!’ என ராகினி சொல்ல... ‘என்ன சரி?... தமிழ்நாட்டுலதான் இப்ப எதுவுமே சரியா இல்லையே?’ என்றபடி அங்கு எண்ட்ரி ஆகிறார் ரேணு ஆன்ட்டீ. ராகினி லண்டன் பள்ளி விவரம் சொல்ல "அதெல்லாம் ரம்யா சொல்ற மாதிரி பணம் காசு அதிகம் உள்ளவங்களுக்குதான் சரி. இங்கே நம்மை மாதிரி மிடில் கிளாஸ்வாசிகளுக்கு பள்ளிக்கூடம்தான் ஒரே கதி. லோயர் மிடில் கிளாஸ்காரங்க கதி இன்னும் மோசம். இப்ப திடீர்னு தமிழகம் முழுக்க எண்ணூறு தொடக்கப் பள்ளிக்கூடங்களை அரசாங்கம் மூடியிருக்கு. இவங்களுக்கெல்லாம் இப்ப மத்த பள்ளிக்கூடங்கள்ல மாற்று இடம் குடுத்தாகணும். அதுக்கு வேற அந்த பேரண்ட்ஸ் எல்லாம் என்ன அலைச்சல் நடத்தணுமோ பாவம்!” என்கிறார் ஆண்ட்டீ.
“அலைச்சல் தமிழக மக்களோட அன்றாட அவஸ்தையாகிடுச்சி ஆன்ட்டீ. இப்ப பாருங்க... அங்கங்க திடீர் திடீர்னு போராட்டம், சாலை மறியல்னு உக்காந்திடறாங்க. ரயிலுக்கோ, பஸ்ஸூக்கோ, விமானத்துக்கோ போகணும்னா ரொம்ப முன்கூட்டியே கிளம்ப வேண்டியதாயிருக்கு. இல்லேன்னா நிச்சயம் பயணத்தை மிஸ் பண்ண வேண்டியதுதான்!” என அங்கலாய்த்தாள் ரம்யா.
“சரியா சொன்னே.. திடீர்னு ஒரு உறவுக்காரங்க சாவு. நானும் அங்கிளும் மூணுநாள் முந்தி கார்லயே மதுரை வரைக்கும் போயிருந்தோம். இன்னிக்கு காலையிலதான் அங்கேர்ந்து கிளம்பினோம். வழக்கமா எட்டு மணி நேரத்துல சென்னை வந்துரலாம். இப்ப அங்கங்க நடக்கற மறியலால நாங்க வந்து சேர 13 மணி நேரமாச்சு. வெயிலோட வெயிலா நம்ம உடம்பும் மனசும் கருகிப்போகுது!”

“எல்லாத்துக்கும் காரணம் அந்த ஸ்டெர்லைட் ஆலை மூடல் போராட்டம்தான் ஆன்ட்டீ. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில அநியாயமா 13 உயிர்கள் இதுவரைக்கும் பலியாயிடுச்சே! யார் மேல குற்றம்? போலீஸா, மக்களா, தீவிரவாதிகள் மக்கள் போராட்டத்துக்கு நடுவில பூந்திட்டதான்னு ஆயிரம் விவாதங்கள் எல்லா டி.வி.லயும் நடக்குது. ஆனால் போன உயிர்களோட மதிப்பு?... எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு படு முக்கியமான உயிரா இருந்திருக்காங்களே?! அதை யாரால் ஈடுகட்ட முடியும்? அதை நினைச்சாத்தான் வேதனையா இருக்கு!” பெருமூச்செறிகிறாள் ரம்யா.

“அதிருக்கட்டும்... ராயல் வெட்டிங் பாத்தியா ரம்யா?!” என சூழலின் இறுக்கத்தை குறைக்கும் வகையில் பேச்சை மாற்றுகிறார் ஆன்ட்டீ.
“பார்த்தேனே... ரிசார்ட்ல உக்காந்து ஜாலியா பார்த்தேன் ஆன்ட்டீ. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸை கல்யாணம் பண்ணிகிட்ட அந்த நடிகை மேகன் மார்கல் அழகா இருக்கா. மாமியார் டயானா மாதிரியே இந்தியா மேல ரொம்ப பாசக்கார பொண்ணாம். ஏற்கெனவே ஒருமுறை கல்கத்தா வந்திருக்காளாம்! இனி நிறைய டிராவல் பண்ணுவேன்னு சொல்லியிருக்கா. பிரும்மாண்டமா கொண்டாடப்பட்ட இந்தக் கல்யாணத்துக்கு ஸ்பெஷலா 200 பேர் உலகம் முழுக்க தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டாங்களாம். அதுல நம்ம நடிகை பிரியங்கா சோப்ரா ஒருத்தர்!”

“அக்கா.. மார்கனுக்கு மும்பை டப்பாவாலோஸோட ஸ்பெஷல் கிஃப்ட் என்ன தெரியுமா? ஸ்பெஷல் வேலைப்பாட்டோட ஒரு புடவையும், வில்லியம்ஸுக்கு ஒரு அழகான தலைப்பாயும், கூடவே மங்கள்சூத்ராவும் அதான்... வடக்கத்திய தாலி..!அதையும் சேர்த்து அவங்களுக்கு அனுப்பியிருந்ததுதான் ஹைலைட்!”என சிரித்தாள் ராகினி.

“போன வாரம் நெஞ்சைப் பிழிய வைச்ச சம்பவம்னா அது எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுதான். மனுஷன் அம்பாரமா எழுதிக் குவிச்சிருக்காரு. மகாபாரதம் பாதியில எழுதியிருந்தாராம். இதுக்கப்புறம் ராமாயணம் எழுதவும் முடிவு செய்திருந்தாராம். அதெல்லாம் அவர் எழுத்துல இனி தமிழர்கள் படிக்க முடியாதேன்னு நினைக்கறப்ப நெஞ்சை அடைக்குது துக்கம்!” என்ற ஆன்ட்டீயின் கண்களில் நீர்துளிர்க்க.. சட்டென அவர் முதுகை ஆறுதலாகத் தடவி கொடுக்கிறாள் ராகினி.
"பாலகுமாரன் தன் வாழ்நாள் காலத்துக்குள்ள ஒரு சாகித்ய அகாடமியோ ஞானபீடமோ வாங்காமலே மறைஞ்சிட்டாரே?! அதுதான் பெரிய வருத்தம். அவருக்கு நல்லபடியா பெரிய அளவில் இறுதி மரியாதை செய்து இந்த அரசாங்கம் விடை குடுத்திருக்கலாம். கேரளா மாதிரி மாநிலங்கள்ல படைப்பாளிகளுக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையோட இறுதி மரியாதை செய்யறாங்க. ஜெயலலிதா இருந்திருந்தா ஒருவேளை செய்திருப்பாரோ என்னவோ? ஆனால் நம்ம அரசாங்கம் இப்படி எதுவும் செய்யலேன்னாலும் பாலாவோட ரசிகர்கள் கூட்டம் அலைமோதி அவரை கண்ணீரோட வழியனுப்பி வெச்சத்தைப் பார்த்தப்போ மனசு ரொம்ப கனத்துப் போச்சு!” என்றார் ஆன்ட்டீ.
அங்கே ஒரு அழுத்தமான சோகத்துடன் மௌனம் கவிழ... RRR சபையில் மேற்கொண்டு பேச்சில்லாத நிலை!
(தொடரும்)

Leave a comment
Upload