
நியாயத்துக்காக போராடாமல் இருக்க மாட்டேன்.
ஆசிரியர் பாலசுப்ரமணியத்தின் பேட்டியில் அந்த முக்கியமான கட்டம் வந்தே விட்டது. ஆம். அவரை சிறைக்கு அனுப்பிய அந்த ஆனந்த விகடன் ஜோக் பற்றி நான் அவரிடம் கேட்டேன்.
"அந்த ஜோக்கை தேர்வு செய்யும்போது அது இவ்வளவு பூதாகரமான பிரச்னையைக் கிளப்பும் என்று எதிர்பார்த்தீர்களா?"
"நிச்சயமாக இல்லை. அந்த குறிப்பிட்ட ஜோக்கை எழுதி அனுப்பிய படுதலம் சுகுமாரன் ஒரு வாரம் அல்லது பத்து நாளைக்கொருமுறை நிறைய ஜோக்குகளை அனுப்புவார். அந்த ஜோக் அவர் அனுப்பிய பல ஜோக்குகளில் ஒன்று.. தேர்ந்தெடுக்கப்பட்டபோது இந்த அளவுக்கு பிரச்னையைக் கிளப்பும் என்பதையறியாத குற்றமற்ற சாதாரண அரசியல் ஜோக்.
நீங்களே பாருங்கள் இந்த ஜோக்கில் இருக்கும் எண்ணத்தையேதான் பல வருடங்களாக எம்.ஏ. தமிழ் புத்தகத்தில் அங்கதப் புகழ்ச்சிக்கு (satire) டாக்டர் சி. பாலசுப்ரமணியம் என்பவர் தொகுத்திருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகம் அதைப் பாடப் புத்தகமாகவே அங்கீகரித்ததை ஜு.வி-யில் கூட எடுத்துப் போட்டிருந்தோம். விகடனில் வந்ததாவது அட்டைப்பட ஜோக். இதை படித்தாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனால் இது அப்படியில்லை. மாணவர்கள் படித்தே ஆகவேண்டும். ` ‘அங்கதப் புகழ்ச்சிக்கு உதாரணம் கொடு’ என்று தேர்வில் கேள்வி கேட்கப்பட்டால் மாணவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்..
இது தவறு என்றிருந்தால் இதை மாணவர்கள் படிப்பதற்கு உதாரணமாக சிபாரிசு செய்திருப்பார்களா?! அதே போலத்தான் யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லாமல் தமாஷுக்காக போடப்பட்ட ஒரு அரசியல் ஜோக். ஆனால் ஏனோ இதை ஒரு பெரிய குறையாக, தவறாக எடுத்துக்கொண்டு சட்டமன்றம் தீர்ப்பளித்துள்ளது."
"மன்னிப்புக் கேள் என்று சட்டசபை சொன்னவுடன் மன்னிப்பு கேட்டு விடலாம் என்று நினைத்ததுண்டா?"
"ஒரு கணம் கூட அந்த எண்ணமே எனக்குத் தோன்றவில்லை. ஆனால், நான் வியந்து போனது முழுக்க முழுக்க உண்மை. சிரிப்புத்தான் வந்தது. 'உண்மையிலேயே அந்த `ஜோக்’ இந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மனதைப் புண்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?' என்று என்னிடம் விளக்கம் கேட்டிருந்தால், `இது யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கத்தில் போடப்பட்டதல்ல. யாரையும் புண்படுத்த வேண்டுமென்கிற ஆசை எனக்குக் கிடையாது. அது என் கொள்கையும் அல்ல. யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நாம் மிக வருந்துகிறேன்' என்றே சொல்லியிருப்பேன்.! ஆனால், என்னை அப்படி ஒரு விளக்கம் கூட கேட்காமல், `நீ செய்தது தவறு! உடனே மன்னிப்பு கேட்டாக வேண்டும். இல்லையென்றால் விசாரணையின்றி தண்டிக்கப்படுவாய்’ என்று எடுத்த எடுப்பிலேயே குற்றவாளி என்று தீர்ப்பளித்து மிரட்டினால், நான் அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. மன்னிப்புக் கேட்க முடியாது என்று சொன்னேன். அதன் பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரியும்."
"முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரியாமல்தான் இவையெல்லாம் நடந்தது என்பதை நம்புகீறீர்களா?"
"சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அவராகவேதான் இந்தத் தீர்ப்பை அளித்திருக்கிறார் என்பதை நான் ஒருக்காலும் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். முதல்வருக்குத் தெரியாமல், முதல்வர் அனுமதியில்லாமல் சபாநாயகர் இப்படி செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. உண்மையிலேயே அவருக்குத் தெரியாமல் செய்யப்பட்டிருந்தாலும், எப்படி யாரோ ஜோக் எழுத, யாரோ படம் போட அதற்கு நான் பொறுப்பேற்று சிறை சென்றேனோ, அதைப் போல முதலமைச்சருக்கும் இதில் முழு பொறுப்பு இருக்கிறது."
"எம்.ஜி.ஆருடன் நீங்கள் பழகியிருக்கிறீர்கள். அவருக்கு நகைச்சுவை உணர்வு உண்டா? ஷுட்டிங் சமயம் `ஜோக்குகள் அடிப்பாரா?’ மற்றவர் ஜோக்குக்கு சிரிப்பாரா?"
"நகைச்சுவை உணர்வு அவருக்கு அதிகமாகவே உண்டு. நல்ல நகைச்சுவையை அதிகமாக விரும்பி ரசிக்கத் தெரிந்தவர். நண்பர்களுடன் தனித்திருக்கும்போது அவர் சிரிக்கும் நேரம்தான் அதிகமாக இருக்கும். நகைச்சுவையை கேட்டு ரசிப்பார். அவர் நகைச்சுவை உணர்வில் எந்தக் குறையும் இல்லை."
"தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் அவரிடம் நகைச்சுவை உணர்வு இருக்கலாம். இருப்பினும், சிறந்த நகைச்சுவை உணர்வு என்பது நம்மை நாமே கேலி பண்ணிக்கொள்வதுதான். சார்லி சாப்ளின் மாதிரி, எம்.ஜி.ஆர் விஷயத்தில்
அவரைப் பற்றியே ஜோக் அடித்தால் கூட தமாஷாக எடுத்துக் கொள்வாரா?"
"அப்படிப் பார்த்தால், எத்தனை நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு அந்த உணர்வு இருக்கிறது? எனக்குத் தெரிந்த ஒரு` நகைச்சுவையாளர் – அவரைப் பற்றி சின்னதாக ஒரு தமாஷ் பண்ணினால் கூட தாங்க முடியாமல் தவித்துப் போய்
நண்பர்களிடமெல்லாம் சொல்லிப் புலம்பித் தீர்ப்பார். வரிந்து கட்டிக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை சண்டைக்கு வருவார். அவருக்கு நகைச்சுவை உணர்ச்சி இல்லை என்று அர்த்தமல்ல. நிறைய உண்டு. எனினும் தான் பாதிக்கப்படத வரையில்தான் அவர் நகைச்சுவைக்கு சிரிப்பார். ரசிப்பார்."
"இதற்கு என்ன காரணம்? சற்று ஆராய முடியுமா?"
"நம்மைப் பற்றி நமக்கு நம்பிக்கை இல்லாதபோதுதான் இன்னொருத்தர் சொல்வதற்கு கோபம் வரும். வாழ்க்கையில் நம்பிக்கையில்லாமல் ஒரு செக்யூரிட்டி இல்லாத போதுதான் யார் எதைச் சொன்னாலும் கோபம் வரும். இதுதான் பலரிடம் இருக்கும் ஒரு பெரிய குறை!"
"இந்த ஜோக்கை எம்.ஜி.ஆர் அப்படித்தான் சீரியஸாக எடுத்துக்கொண்டாரா?"
"இப்படிக் கேட்டால் எப்படி பதில் சொல்வது ? இந்த ஜோக்கைப் பொறுத்தவரையில் `அவரே படித்தார் – அவரே கோபப்பட்டார்’ என்று நான் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?! இப்படி ஒரு தண்டனை அவர்தான் கொடுக்கச் சொன்னார் என்றும் நான் நிச்சயமாகச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்ல நான் அவர் கூடவா இருந்தேன்? யூகித்துக் கூறுவது தவறு. அது உண்மையிலிருந்து மாறுபடலாம்."
"அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்று கூறுகிறீர்கள். இருந்தும் அவரை இனிய நண்பர் என்று சொல்கீறீர்கள். இது என்ன compromise?"
"அவரோடு நான் பழகிய நாட்களில் அவர் என் இனிய நண்பர்தான். இன்றைக்கும் அவர் என் இனிய நண்பர்தான். இன்று அவருக்கு நான் வேண்டாதவனாக இருக்கலாம். அதற்காக நான் அவரை நண்பராக கருதக் கூடாதா? ஒவ்வொரு செயலுக்கும் (action) ஒரு எதிர்செயல் (reaction) உண்டு. அது ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது. அவ்வளவுதான்! திடீரென ஒரு செயலுக்காக நண்பரை விரோதியாக நினைக்கும் மனப்பான்மை சிலருக்கு உண்டென்றால் `நண்பரே இப்படி செய்துவிட்டாரே’ என்பதற்காக வருத்தப்படுவதோடு தன்னைச் சமாதானபடுத்திக்கொள்ளும் மனப்பான்மையும் சிலருக்கு உண்டு. நான் இரண்டாவது ரகம். ஆகவே வருத்தப்பட்டது உண்மை. ஆனால் அவர் மீது பகைமை வளர்க்கவில்லை. நண்பர் என்றே அவரை என்றும் அழைப்பேன். அதே சமயம், நியாயத்துக்காக போராடாமல் இருக்க மாட்டேன். என போராட்டம் சட்ட ரீதியாகத்தான் இருக்கும். அதன் வெற்றி தோல்வியை காலமும் மக்களும் தீர்மானிக்கட்டும்." என அழுந்தச் சொன்னார் ஆசிரியர்.
(தொடரும்)

Leave a comment
Upload