
ஒரு கட்டத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டு திரைப்படத்துறைக்கு வந்து சேர்ந்தேன். மூன்று வயதில் உண்டான அதன் மீதான நேசம் அப்போதும் கொஞ்சங்கூட குறையவில்லை. வாழ்வின் முதல் பாதியில் தங்கைகள் திருமணம், வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கான பாதுகாப்பு, குடும்பம் எதிர்பார்க்கிற பொருளாதார தேவைகள் என்று பலப்பல காரணங்களால் இந்தப்பக்கம் வர முயன்றும் முடியவில்லை. மேலும் குடும்பத்தாரின் ஒட்டுமொத்த எதிர்ப்பு. என் நேர்மையும், அறமும், சினிமா இலக்கியத்தின் மீதான நேசமும் அவர்களுக்கு புரிபடவே இல்லை. அவர்கள் அத்தனையையும் பொருளாதாரம் சார்ந்தே எடைபோட்டுப் பழகியவர்கள். அதனால் எல்லா வழிகளிலும் எனது திரைப்பட முயற்சிக்கு அவர்களால் ஆன மட்டும் தடைச்சுவர் எழுப்பிக்கொண்டேயிருந்தார்கள். அவர்களின் சராசரி நியாயங்களையும், அக்கறைகளையும் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கான குறைந்தபட்ச நியாயங்களை செய்ய வேண்டிய தேவையும் இருந்தது. அதனால் ஒரு முடிவெடுப்பதற்குள் நீண்ட இழுபறி நிலைமை. அதனால், வாழ்க்கையில் இடைவேளைக்கு பிறகு தான் அது சாத்தியப்பட்டது. வாழ்வின் இரண்டாம் பாதியை பிடித்த துறைக்குள் பயணிக்கலாம் என மனது தீர்மானித்துவிட்டது.
எப்போதுமே பணம் நமது தேவைக்காக மட்டுமே. பணத்திற்காக நாம் அல்ல. பணம் ஒரு அந்தஸ்தின் அடையாளம் அல்ல என்பதில் தெளிவாக இருந்தேன். அப்போது பெரிய தொகையை சம்பளமாக பெற்றுக்கொண்டிருந்தேன். மேலும் ஸ்பிக் நிறுவனத்தின் ஜோர்டான் புராஜெக்டிற்கும் விருப்பமுள்ளவர்களை அனுப்பி வைக்கிற திட்டம் இருந்தது. அதில் அப்போதே மாதச்சம்பளம் ஒரு இலட்சம். அதெல்லாம் எதுவுமே பெரிதாக படவில்லை. தேவைக்கு இருக்கிறது போவோம் என்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு களத்தில் குதித்துவிட்டேன்.
முதலில் கே.பாக்யராஜ் சாரிடம் சேர்ந்தேன். என் சிறுகதைகளை அன்னம் பதிப்பகம் மூலம் புத்தகங்களாக போட்டுக்கொண்டிருந்த என்னைப் பெறாத தந்தை கவிஞர் மீரா தான் சேர்த்து விட காரணம். அவருடைய நண்பர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அப்போது பாக்யா வார இதழில் ஒரு தொடர் எழுதிக்கொண்டு இருந்தார். அதை அறிந்து மீரா சாரிடம் சொல்ல, அவர் அவரிடம் என்னைப்பற்றிச் சொல்ல, அவர் எனக்கு பத்து நாள் பரிசோதனை வைத்தார். அவருக்கு திரைப்படத்துறை மீது பெரிய அபிப்பிராயம் இல்லை. ஏன் ஆர்வம் ஆழமானதா என பரிசோதித்து பார்க்க நினைத்தார். பத்துநாட்கள் அவர் வீட்டிற்கு போனால் காலையிலிருந்து இரவு வரை அங்கே தான் வாசம். முழுக்க முழுக்க சினிமாவும் இலக்கியமும் தான் பேச்சு. அப்போது தான் அவர் ரசனையான சினிமாவிலும் ஈடுபாடு உள்ளவர் என்பதை புரிந்து கொண்டேன். கஸல் கவிதைகள் பற்றி தெரிந்து கொண்டு சிலிர்ப்பானதெல்லாம் அப்போது தான். பிற்பாடு அவருக்கு என் மீது நம்பிக்கை வர, பாக்யராஜ் சாரிடம் என்னை உதவி இயக்குநராக சேர்த்து விட்டார்.
மறுநாள் ஞானப்பழம் படத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் உள்ள சங்கிஸ் ஃபாம் என்கிற வாடகை பங்களாவில் நடைபெற இருந்தது. அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. மாலையில் ஏற்கனவே சில படங்களில் பணியாற்றிய அனுபவம் இருந்த ஒரு உதவி இயக்குநரை சாயா குடிக்கலாம் என்று கடைக்கு அழைத்துப்போய் படப்பிடிப்பு தளத்தில் என்னென்னவெல்லாம் நடக்கும் என ஒரு முழுப்படத்திற்குமான அத்தனை தரவுகளையும் அந்த ஒரு டீ குடித்து முடிப்பதற்குள் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆவலோடு கேள்விமேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே போனேன். ஒரு ஷாட் எந்த அளவிற்கு எடுப்பார்கள். வரிசையாக எடுப்பார்களா? மாறிமாறி எடுப்பார்களா? எப்படி அதை சரியாக ஞாபகத்தில் குறித்துவைத்துக்கொள்வார்கள் என்று ஏராளமான கேள்விக்கணைகள் என்னுள்ளிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தன. குழந்தை முதன்முதலாக கடலை பார்க்கிறபோது விடாமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகுமே அந்த மாதிரி. கேள்விமேல் கேள்விகளை மூச்சுவிடாமல் கேட்டுக்கொண்டேயிருந்தேன். அவன் புன்னகையோடு ஒரு வரியில் சொன்னான். நாளை ஒரு நாள் ஷுட்டிங்கில் பணியாற்றியதும் இந்த கேள்விகள் அத்தனையும் தெளிந்து விடும் என்றான். அப்படித்தான் நடந்தது. ஒரு நாள் படப்பிடிப்பை முழுமையாக கண்ணுற்று, அதேனோடு ஐக்கியமானபோது, அதற்கு முன் மனதிற்குள் எழுந்த ஆயிரக்கணக்கான கேள்விகள் உடனே அதன் அவசியத்தை இழந்து உதிர்ந்து விட்டன. பாக்யராஜ் சாரிடம் வேட்டிய மடிச்சு கட்டு பணியாற்றிவிட்டு ஒரு இடைவெளி. அப்போது நண்பர் பூர்ணம் விசுவநாதன் மூலம் இயக்குநர் வஸந்த்திடம் சேர்ந்தேன். பூர்ணம் விசுவநாதனோடு நட்பானது பெரிய கதை. அவர் ஸ்பிக்நகருக்கு நாடகம் போடவந்தபோது அவருக்கு ஒரு நாடகம் எழுதி அனுப்பினேன். அத்தனை திட்டுகள். பிற்பாடு நானே படிப்படியாக ஒரு எழுத்தாளராக உருவெடுத்த பிற்பாடு என்னுடைய கலை, இலக்கிய ஈடுபாட்டை புரிந்து கொண்டவராய் அப்படி கொண்டாட ஆரம்பித்துவிட்டார். எனக்குப்பிடித்த புத்தகம் என்று தினமணிக்கதிரில் என்னுடைய வானம்பாடி சிறுகதைதொகுப்பு நூல் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். அவரைப்பற்றிய விரிவான கட்டுரையை, புலம் பதிப்பகம் வெளியிட்ட, திரையாளுமைகளும் நானும் என்கிற எனது புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். என் திறமையின் மேல் உயிராக இருந்தார். வஸந்த்திடம் வேலை இல்லாத நேரத்தில் இயக்குநர் ரேவதிக்கு ஒரு எழுத்தாளர் தேவைப்பட என்னை அங்கே அனுப்பி வைத்தார். இப்படி சினிமா பயணம் சங்கிலித்தொடராய் அடுத்தடுத்தென பயணிக்க தொடங்கியது.
அடுத்த பதினான்கு ஆண்டுகள் இலக்கியத்தில் ஒரு இடைவெளி. அந்தக் காலக்கட்டத்தில் தான் திரைப்படத்துறையில் கே.பாக்யராஜ், இராஜன் சர்மா, வஸந்த், ரேவதி, பார்த்திபன் என்று பலரிடமும் இயக்கத்தில் உதவியாக பணியாற்றினேன். பத்துக்கும் மேற்பட்ட திரைக்கதைகள் எழுதினேன்.
அந்த சமயத்தில் தான், ஸ்பிக்கில் என்னோடு பணியாற்றிய சீனியர் நண்பர் சுப. புன்னைவனராசன் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் தற்செயலாக என்னைப்பற்றிச் சொல்ல, ஞானாலயா தனது நண்பர்களில் ஒருவரான சந்தியா நடராஜனிடம் சொல்லி, அதுவரை அன்னம் பதிப்பகம் வெளியிட்டிருந்த என்னுடைய மூன்று சிறுகதை தொகுப்புகளில் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்து ‘குலசேகர் கதைகள்’ என வெளியிடச் செய்தார்.
அங்கிருந்து என்னுடைய இலக்கியத்தின் இரண்டாவது பிரவேசம் துவங்கி, இப்போது 100 புத்தகங்கள் வரை எழுதியாகிவிட்டது. வம்சி, புஸ்தகா, சந்தியா, ஆழி, உயிர்மை, புலம் வேரல், நாற்கரம் போன்ற பதிப்பகங்களால் அவை புத்தகங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
இந்த தருணத்தில் இத்தனைக்கும் மறைமுக காரணமாக இருந்த புன்னைவனராசனை நன்றியோடு நினைவு கூர்கிறேன். அவர் இப்போது இல்லை. ஆனாலும் இதயம் நன்றியை தெரிவித்துக்கொண்டேதான் இருக்கிறது. மனிதருக்கு நன்றியுணர்ச்சியும், அறவுணர்ச்சியும் இரண்டு கண்களுக்கு ஒப்பானது என்பது எனது நம்பிக்கை.
நினைத்துப்பார்த்தால் எத்தனையோ நபர்களை நன்றியோடு நினைவு கூர வேண்டியிருக்கிறது. விக்கிரமாதித்தன் கதைகளை சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடி படித்துக்காட்டி எனக்கு அறிமுகப்படுத்திய அய்யப்பா. சினிமாவிற்கு போக யாரும் காசு தராதபோது தன்னுடைய அரைஞான் கயிற்றில் ஒரு சிறு துணியில் பொடி வாங்குவதற்காக அய்யம்மாவிடம் வாங்கி முடிந்து வைத்திருக்கிற காசை எடுத்து தந்த அய்யப்பாவிற்கு நன்றி சொல்ல நினைக்கிறேன். அவர் இப்போது இல்லை. ஒரு நல்ல உடையோ, உணவோ கூட வாங்கித்தர முடியவில்லையே என்று மனது அடித்துக் கொள்கிறது. அவரின் சின்னச்சின்ன ஆசைகள் என்னஎன்ன என்று கேட்டு நிறைவேற்றித்தர மனது துடிக்கிறது. இது எதுவும் அந்த பதின்பருவ வயதில் உரைக்கவேயில்லை. எல்லாமே நழுவிய தருணங்களாய் காலம் கடந்தே உரைக்கிறது. ஆனாலும் அப்படி எதையும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பெரிய மாமா சீனிவாசன் மதுரை பொருட்காட்சி நாடகங்களில் மதுரை மன்னன் என்கிற பட்டப்பெயரோடு நடிப்பார். அழைத்துப்போய் காட்டியிருக்கிறார். முனியாண்டி மாமா ஞானஸ்தர். கண்களில் ஒரு வசியம் இருக்கும். தன் நண்பர் கனிப்பாண்டி அண்ணாச்சியோடு சேர்ந்து திருநெல்வேலி போன்ற நகரங்களில் நடக்கும் பொருட்காட்சிகளில் ஸ்டால் எடுத்து நடத்துவார். அதனால் அவரை திருநெல்வேலி மாமா என்கிற அடைமொழியோடும் அழைப்போம். தன்னுடைய நிதானத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தின் விழுதுகள் அத்தனையையும் ஆதரித்து, ஆலமரமாக நின்று தூக்கி நிறுத்தியவர். தன் உடன்பிறந்தவர்களின் குழந்தைகள் அத்தனை பேரின் பெயரிலும் வைப்புத்தொகையாக ஒரு தொகையை போட்டு வைக்கிற மனம் கொண்டிருந்தவர். சதுரங்கம் விளையாடும்போது கூட தனியொருவராக இரண்டு பக்கமும் விளையாடுவார். ரம்மி சீட்டு சமயங்களில் என்னோடும் விளையாடியிருக்கிறார். ஒரு முறை கூட அவரை ஜெயிக்க முடிந்ததில்லை. அம்மா என்றால் உயிர். அம்மா அவர்கள் வீட்டில் ஒற்றைப்பெண். அம்மாவிற்கு அனைத்துமாக இருந்தவர். தன் குடும்பம் தாண்டி அனைவருக்குமாக யோசிக்க கற்றுத்தந்தவர்.
அப்போது எனக்கு ஏழு வயதிருக்கலாம். பள்ளி விடுமுறைக்கு மதுரை சென்றிருந்த நேரம். கணேச மாமா, அம்மாவின் மூத்த தம்பி. அங்கே ஒரு நாள் மதியவேளை உண்ட களைப்பில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர் என்னை மட்டும் எழுப்பி என்டர் தி டிரேகன் படத்திற்கு அழைத்துச்சென்றார்.
அம்மாவின் இளைய தம்பி சுப்பிரமணியன். எஸ்.பியாக ஓய்வு பெற்றவர். இவர் என்னை ஒரு நாள் மதிய காட்சிக்கு தங்கம் திரையரங்கிற்கு அழைத்துச்சென்றதும், பால்கனியில் அவரோடு அமர்ந்து உயிரா மானமா படம் பார்த்ததும், இடைவேளையின் போது அவர் கோகோ-கோலா வாங்கித் தந்ததும், அதை குடிக்க முடியாமல் மூச்சுவாங்கி மூச்சுவாங்கி குடித்து முடித்த தருணங்கள் எல்லாம் அப்படியே நினைவில் இருக்கிறது. வாழ்க்கையில் குடித்த முதல் கோகோ- கோலா அது. இது முன்பு வந்தது. ருசி பிரமாதமாக இருக்கும். இப்போதிருப்பது தடைக்கு பிறகு வந்தது. இவர் இயற்கை எய்தியபோது அவர் குறித்து முகநூலில் ஒரு கட்டுரை எழுதினேன். அதைப் படித்துவிட்டு, முன்னாளில் அவரோடு சேர்ந்து பணியாற்றிய வனிதா ஐ.பி.எஸ் எனக்கு தோழியானார்.
கடன் வாங்குகிற பழக்கமே இல்லாதவனாக இருந்தாலும், கல்லூரிப் பருவத்தில் குருசாமி என்கிற பக்கத்து அறை நண்பன் தந்த பத்து ரூபாயை தவறுதலாக திருப்பித் தராமல் போனது இப்போது வரை துரத்திக்கொண்டே வருகிறது. துரத்துவதும், துரத்தப்படுவதும் நானே. தேடிப்பிடித்து நன்றி தெரிவிக்கலாம் என்றால் அவனும் இப்போது உயிரோடு இல்லை. கொரோனா அவசரஅவசரமாய் அழைத்துக்கொண்டு போய் விட்டது. அவனைப்பற்றி, அந்த சம்பவம் பற்றி நேர்மையோடு ஒரு சிறுகதை எழுதினேன். அது அது இராம.செ.சுப்பையா நினைவு சிறுகதை விருது பெற்றது. அது அவனுக்கான காணிக்கை.
என்னவோ கொடுத்து வைத்தவன் போல கேட்கிறபோதெல்லாம் சினிமாவிற்கு செல்ல, வாங்கித் தின்ன, காசு தந்த அய்யம்மாவிற்கு ஒன்றுமே செய்யவில்லை. எதை செய்வதற்கும் முடியாமல் குறுக்கே காலம் வந்து நின்றுகொண்டு அனுமதிப்பதில்லை. பள்ளிக்கூடம் என்றால் எட்டிக்காயாக இருந்த எனக்குள் படிப்பின் ருசியை லாவகமாய் புகட்டி, பள்ளி, கல்லூரி இல்லாத நாட்களை எட்டிக்காயாக உணர வைத்த அதிசயத்தை எனக்குள் நிகழ்த்திய ஆசிரியர்களுக்கும் எதையுமே செய்துவிடவில்லை தான்.
அதில் சிலரைப் பற்றியாவது சொல்வதென்றால், பள்ளியில் கிராஃப்ட் வாத்தியார் மறக்க முடியாதவர். சாந்தசொரூபி. ஒரு முறை கூட அவர் முகத்தில் கோபம் பார்த்ததில்லை. குழந்தைக்கு சொல்லித்தருவது போல தச்சுவேலைகளை எளிமையாக செய்முறை மூலம் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
சித்திர வகுப்பு எடுத்த குருசாமி வாத்தியார் தான் அய்யப்பாவிற்கு அடுத்து கதை கேட்கிற ருசியை புகுத்தியவர். அவர் ஒரு மணிநேர வகுப்பில் அரைமணிநேரம் ஓவியம் கற்றுத் தருவார். அடுத்த அரை மணிநேரத்தில் ஜிம்கார்பட், ஆலிவர் டிவிஸ்ட், டூ சிட்டீஸ் என்று ஏதாவது ஒரு ஆங்கில நாவலை எடுத்துக்கொண்டு பகுதிபகுதியாக, ஒரு கதையை ஒரு வருடத்திற்கு தொடர்கதையை போல சொல்லுவார். அவர் ஒவ்வொரு வாரமும் கதையை முக்கியமான திருப்பத்தில் நிறுத்தி அடுத்து என்ன என்று அடுத்த ஒரு வாரமும் ஏங்க வைத்துவிடுவார். உதாரணத்திற்கு சொல்வதென்றால், ஜிம்கார்பெட் ஒரு ஆங்கிலேயர். தென்னிந்திய வனங்களில் புலிகளை வேட்டையாடியவர். பின்னாளில் அவரே புலிகளின் காவலராக, இயற்கையின் பாதுகாவலராக மாறியவர். உத்தரகாண்டம் மாநிலத்தில் மேற்கு இமயமலை அடிவாரப்பகுதியில் மிகப்பெரிய வனவிலங்கு காப்பகம் ஜிம்கார்பெட் தேசிய பூங்கா என்கிற பெயரில் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு மலைக்கிராமத்தில் புலி ஒன்று உணவு கிடைக்காமல் ஆள்கொள்ளியாக மாறிவிட, அதை வேட்டையாட வேண்டிய பொறுப்பு அவரிடம் வருகிறது. அந்த புலியை தேடிப் போகிறார். கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது களைப்பு மேலிடா தாழ்வாரத்தில் சென்றுகொண்டிருந்த நதியில் கையால் தண்ணீர் எடுத்து குடிக்க யத்தனிக்கையில், அவருக்கு பத்து அடி நேர்மேலாக உள்ள மேட்டில் அந்த புலி வந்து நிற்பது தண்ணீரில் நிழற்படமாக தெரிகிறது என்று சொல்லி தொடரும் போட்டுவிடுவார். அடுத்த வாரம் வரை முதுகுத்தண்டு சிலீரிட்டுப் போன ஜிம்கார்பெட்டாகவே சுற்றிக்கொண்டிருந்திருக்கிறேன்.
கல்லூரியில் விலங்கியல் சொல்லித்தந்த தங்கமணி வாத்தியார், ஒருமுறை சாதம் என்று சொன்னபோது அதைச் சோறு என்று சொல்லச்சொல்லித் தந்தார். ஆங்கிலம் இருநூறு ஆண்டுகளாக இங்கே ஆட்சி செய்தது. அதனால் ஏற்பட்டிருக்கிற ஆங்கில கலப்பை தவிர்த்து தமிழை எழுதுவது என்பது கொஞ்சம் முயன்றால் சாத்தியமே. அதே சமயம் இரண்டாயிரம் வருடங்களாக தமிழை ஆரிய மொழியான சமஸ்கிருதம் இங்கே ஆட்சி செய்து வந்திருக்கிறது. அப்போது அது கொஞ்சங்கொஞ்சமாக தமிழோடு கட்டாய கலப்பும் நிகழ்த்தி, தனித்தன்மை கொண்ட தாய் தமிழை கபளிகரம் செய்ய அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தன்னாலான பிரயத்தனங்களைச் செய்து பார்த்திருக்கிறது. அதனிலிருந்து தமிழை மீட்டெடுப்பது பெரிய முயற்சி. அதை சோற்றிலிருந்தே ஆரம்பிக்கலாம் என்பார். அப்படி வரலாற்று பின்புலத்தோடு சொல்லி, அது தான் தமிழ் சொல் என்பதை ஆழமாக புரிய வைத்தவர் அவர்.
தமிழாசிரியர் சிவமுருகன் பகல் பனிரெண்டு மணிக்கு தொடுத்தலை ‘விழுத்தண்டூன்றினார்’ என்கிற சங்கப் புலவனின் சாகசங்கள் பற்றி வகுப்பெடுக்கிறபோது, அது காட்சியாக மனதிற்குள் விரியும். அந்தப் பசி நேரத்தில் அவர் அதைச் சொல்லித்தருகிறபோது நாவில் உமிழ்நீர் சுரப்பதை யாராலும் தவிர்க்க முடியாது. அவன் அருவியின் உச்சியில் இருந்து நீருக்குள் குதித்து ஆடுகிறான். நீந்தி நீந்தி களைத்தவன் மேலே பார்க்கிறான். அங்கிருந்த குரங்கு பிய்த்து உண்ட கனிந்த பலாப்பழத்திலிருந்து தேன் சொட்டும். அதை அவன் நாவை நீட்டி சுவைக்கிறான். மலைவாழை மரத்திலேயே பழுத்த பழத்தாரின் எடை தாங்காமல் சரிய, பாறையில் விழுந்து அதிலிருந்து பழங்கள் சிதறி வர, அதிலொன்றை லாவகமாய் தாவிப்பிடித்து தின்கிறான். மீண்டும் மலையுச்சிக்கு சென்று மேலிருந்து அருவிக்குள் பல்டியடித்தபடி குதிக்கிறான் என்று பல்டி அடித்தே காட்டிவிடுவார். அப்படியாக சாகசம் செய்தவன் இன்று எப்படி இருக்கிறான்? நடக்கும்போது, கைத்தாங்கலாக ஊன்றுகோல் இல்லாமல் நடக்கக்கூட முடியாதவனாக அதே நபரை காலம் இப்படி மாற்றி வைத்து விட்டது. அந்த மாற்றத்தின் தாபத்தை அவன் நினைவலைகளில் தன் பால்யகால சாகசங்களை மறுபடி ஒருமுறை திரையிட்டு பார்த்துவிட்டு, அந்த நினைவில் அழுத்தம் தாங்காமல் ஏங்குவதாக அந்த பாடல் செல்லும். எங்களுக்கு அந்த வனத்தின் அழகும், வாழை, மா, பலாவின் தீஞ்சுவையும் இலவசமாய் நாவில் வந்து தொற்றிக்கொண்டு, பசி ஏற்றும்.
ஆங்கில ஆசிரியரும் இந்நாள் பட்டிமன்ற பேச்சாளருமான ராமச்சந்திரன் வில்லியம் வேர்ட்ஸ்வர்த் எழுதிய லூசி கிரே என்கிற நெடுங்கவிதையை அத்தனை சிலிர்ப்போடு சொல்லித்தருவார். லூசி கிரே ஒரு சிறுமி. பனிக்காட்டிற்குள் புயலில் சிக்கிக்கொண்டு அவள் அல்லாடும் காட்சியில், நமது நெஞ்சமும் அதில் சிக்கிக்கொண்டு மூச்சுமுட்டிப்போகும். எடுத்து முடிக்கையில் எங்களைப்போலவே அவருடைய கண்களிலும் கண்ணீர் துளிர்த்திருக்கும். அவரும் அரை மணிநேரம் மாணவர்களுக்கு பிடித்த வகையிலான அத்தனை ஊர்க்கதைகளையும் மாணவர்களாகவே மாறிப்போய் பேசுவார். அது மாணவர்களை தயார்படுத்துகிற உத்தி. தான் என்ன சொன்னாலும் கவனமாக கவனிக்க வைக்க வைக்கிற அற்புதமான உத்தி. அதற்குள், நம்மை அந்த பாடத்தை ஈடுபாட்டோடு கவனிக்கிற மனநிலைக்கு கொண்டு வந்துவிடுவார். அடுத்த அரைமணிநேரத்தில் விழிப்போடு பாடத்தை கவனிக்க வைத்து விடுவார். அதில் ஒரு வசியம் இருக்கும். முதலில் நம்மை வசப்படுத்துவார். பிற்பாடு பாடங்களை கதை போல சொல்லித்தந்து மனதில் பதிய வைப்பார். இன்று ஆங்கில இலக்கணம் குறித்து ஒரு தெளிவு இருக்கிறதென்றால் அதற்கு அவர் தான் காரணம்.
பெரியாயி அத்தை என் பால்யபருவத்தில் கிட்டத்தட்ட பத்துவருடம் மதிய சாப்பாடு போட்டு வளர்த்தார்கள். அவருக்கு அவருடைய தம்பி என்றால் உயிர். ரெங்கு ரெங்கு என்று அழைப்பார். அப்பாவின் முழுப்பெயர் திருவரங்கமூர்த்தி. அங்கு தான் அத்தை மகளிடம் இலவசமாக டியூசன் படித்தேன். அங்கே தான் முதல் காதல் அறிமுகமானது. இந்துமதி வீடு திரும்பும்போது கைகொடுத்து குட் நைட் சொல்ல கற்றுக்கொடுத்ததெல்லாம் அப்போது தான்.
திரைப்படத்துறையில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் இயற்கை எப்போதும் போல தொடர்ந்து சோதனைகள் வைத்து அனுபவ செழுமையை மேன்மைப்படுத்திக்கொண்டேயிருந்ததை போல அப்போது ஒரு காரியம் செய்தது. திரைப்படத்துறையில் ஒரு இடத்திற்கு நகர்வது வரைக்கும் பக்கபலமாக இருக்கட்டும் என்று சென்னை மூலக்கடை பகுதியில் ஒன்னரை கிரவுண்டில் பிரமாண்டமாக கட்டியிருந்த லவ் காட்டேஜ் என்கிற வீடு ஒரு நாள் என்ன காரணம் என்பதை சொல்லிக்கொள்ளாமலேயே என் கை விட்டுப்போனது. அது குறித்து லவ் காட்டேஜ் என்றொரு கதை எழுதியிருக்கிறேன். உறவுகளை நம்பி சில விசயங்களை தீர்மானிக்கிற பொறுப்பை அவர்கள் வசம் விட்டதால் எதிர்பாராமல் உண்டான பிசகு அது. எந்த பிசகிற்கும் ஏதோ ஒரு வகையில் மூலகாரணம் நாம் தான் என்பதை ஜென் வழி உணர்ந்து கொண்ட தருணம் அது. திடுதிப்பென விழித்துப்பார்த்தால் எல்லாம் கைவிட்டுப்போய் சாலையோர நடைபாதை என் பாதுகாவலரானது. அந்த கணத்தில் ஊரின் மலையடிவாரம் தனியாக நடந்து சென்று அந்த கரட்டை பார்த்தேன். உதடோரம் தன்னிச்சையாக ஒரு புன்னகை. கேர் ஆஃப் நடைபாதைவாசி ஆனபோதும், எப்போதும் யாரிடமும் கடன் மட்டும் வாங்கிவிடக்கூடாது என்கிற விசயத்தில் வைராக்கியமாக இருந்தேன். பொய் பேசக்கூடாது. அறம் பிசகக்கூடாது. கடன் வாங்கக்கூடாது என்பது எனக்குள் ஏற்கனவே இருந்து வந்த திட்டம். அந்த திட்டமானது நான் நண்பர்களுக்கு கடன் கொடுத்து உதவுவதோடு பொருந்தாது. அது மகிழ்வித்து மகிழ்வதற்காக. கடன் எலும்பை முறிக்கும் என்று ஒரு கடையில் எழுதிப்போட்டிருந்ததை சின்னப்பிள்ளையாய் இருக்கிறபோது பார்த்திருக்கிறேன். என்மட்டில் கடன் உறவை முறித்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறபடியால் அந்தப்பக்கம் போவதில்லை.
சொல்லாமலே கூட சமயங்களில் தெரிந்து விடுகிறது. கேட்காமலே கூட கேட்டு விடுகிறது. அன்பு மகத்தானது. எனது கையறுநிலையை யார் மூலமாகவோ கேள்விப்பட்டோ, உள்ளுணர்வின் வழியாகவோ தெரிந்து கொண்டு, ஸ்பிக் நிறுவனத்தில் என்னோடு பணியாற்றிய மற்றொரு சீனியரான அன்பு ஆஃப் ஸ்பிக் என்று அழைக்கப்படுகிற அன்பழகன் தன் இணையரோடு காரில் ஒரு நாள் இரவு வேளையில் என்னைத் தேடி வந்தார். ‘என்னென்னலாமோ நடந்திருக்கு. எதுவுமே சொல்லமாட்டில.’ என்று உரிமையாய் கடிந்து கொண்டுவிட்டு, ‘இருந்தாலும், இதுதான்டா உன்கிட்ட எனக்கு பிடிச்சது?’ என்றார். இடைப்பட்ட காலப்பயணத்தில் அவர் ஒரு தனியார் எண்ணைய் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக உயர்ந்திருந்தார். அவர் வழிகாட்டுதலில், அடுத்த சில வாரங்களில் ஒரு எண்ணை நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டேன். ஏற்கனவே ஸ்பிக்கில் 14 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உடன் வந்தது. அங்கே ஒப்பந்த அடிப்படையில் சில வருடங்கள் பணியாற்றினேன். வாழ்க்கையில் ஒன்று தற்செயலாக நடக்கிறது. அதைத்தொடர்ந்து நிகழ்கிற மாற்றங்கள் எங்கெங்கோ கிளைபரப்பி நம்மை அழைத்துச் செல்கிறது. அப்படித்தான் கடலுக்குள் இருக்கிற அந்த எண்ணெய் எடுக்கிற கப்பலில் பணியாற்றியபோது, ஒரு நாள் ஆயிரக்கணக்கான பறக்கும் மீன்கள் கூட்டமாக கைக்கெட்டும் தூரத்தில் பறந்து சென்று நொடிக்கிற பொழுதில் ‘சொய்ங்’கென நூறு அடி தள்ளிப்போய் மறுபடி கடலுக்குள் பாய்ந்த காட்சியை நேரடியாக பார்க்க முடிந்தது. அங்கே தான் ஹெலிகாப்டர் பயணம், கப்பல் பயணம் எல்லாம் வாய்த்தது. மறக்கமுடியாத அந்த திமிங்கலத்தின் நட்பும் கிடைத்தது. வேலை முடிந்ததும் ஏழு நட்சத்திர விடுதியிலிருக்கிற வாழ்க்கை. எனக்கு ரோட்டுக்கடை சாப்பாடும், ஏழு நட்சத்திர விடுதி வாசமும் ஒன்றுதான் என்றாலும், இதைப் பற்றியும் விரிவாக எழுத அவ்வளவு நிகழ்வுகள் இருக்கின்றன. அப்படி எழுதுவதென்றால் தனிப்புத்தகமாக தான் கொண்டுவர வேண்டியிருக்கும். ஹெலிகாப்டரில் பறக்கும்போது நம்மை கடந்து போகும் பனிமேகங்கள், அலைகளற்று தோன்றும் விரிந்த கடல் பற்றியெல்லாம் அதில் நேரம் மறந்து சொல்லிக்கொண்டே போகலாம். குறைந்தபட்ச தேவைக்கானதை சம்பாதித்ததும் அந்த ஒப்பந்த பணியிலிருந்து மறுபடி திரைப்படத்துறைக்கு வந்து சேர்ந்தேன். அப்படித்தான் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தில் இயக்குநர் பார்த்திபனிடம் இணை இயக்குநராக வந்து சேர்ந்தேன்.
கவிஞர் இராஜசுந்தரராஜன் ஸ்பிக் நிறுவனத்தில் இன்னொரு சீனியர். இவர் தான் உலக சினிமாவின் சூட்சுமங்களை, இலக்கியத்தின் கூறுகளை முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியவர். நிறமற்ற நீராய் வெளிப்படையாக இருக்க யத்தனிப்பவர். தனவ்ரையில் தயங்காமல் எப்படிப்பட்ட உண்மைகளையும் பேசிவிடக்கூடியவர்.
நட்பதிகாரம் என்று வருகிறபோது, அதை எழுத ஒரு நூல் போதாது. அவ்வளவு தோழிகள், தோழர்கள். தோழிகள் எல்லாம் தீராஅன்புக்காரர் குலா. அவர் பிரபஞ்சத்திலுள்ள சகலத்தையும் நேசிக்கிறவர் என்று சொல்வார்கள்.எழுத ஒரு நூல் போதாது. இரண்டு மூன்று பாகங்களாக எழுதி விடலாம். அந்த நிகழ்வை நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் ஓராயிரம் பூ பூக்கிறது. அப்போது தான் ஓரளவேனும் அதற்குள் அடக்கிக்கொண்டு வர முடியும். ஆனாலும் இங்கே ஒரு சிலர் பற்றியாவது சொல்லத்தான் வேண்டும். குணசீலன். நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னோடு பயணிக்கிறவன். என் வீடு மத்தியதர வீடு. அப்பர் மிடில்கிளாஸாக இருந்து, லோயர் அப்பர்கிளாஸாக மாறிய குடும்பம். அவன் வீடு என் வீடுபோலவே பால்யத்தில் புழங்குவேன். அவன் அக்கா, தங்கைகள் எனக்கும் அப்படியே. மதுரையில் எங்கள் இருவரின் உறவினர்கள் இருந்தது சந்தைப்பேட்டை. சமயங்களில் இருவரும் விடுமுறைக்கு அவரவர் குடும்பத்தாரோடு பேருந்தில் பயணிக்க நேரிடும். அந்த அனுபவம் மறக்கவே முடியாதது. அப்படி இருக்கும். தீபாவளி நாட்களில் எங்கள் வீடு ஓலைவெடி வெடிக்கும். அங்கே ஆயிரம் வாலா அதிரும். நான் பெரும்பாலும் அங்கே தான் இருப்பேன். வெடிப்பதை விட பார்ப்பதிலேயே எனக்கு நிறைந்து விடும். பள்ளி, கல்லூரி என்று இன்றுவரை ஒரே சீராக தொடர்கிற உறவு. இப்போது கிராமத்தில் வசிக்கும் என் அம்மா, அப்பா இரண்டு பேருக்கும் எதுவும் தேவையெல்லால் அவன் தான் என்னுடைய ஸ்தானத்தில் இருந்து பார்த்துக்கொள்கிறான். தேவையான தொகையை மட்டும் நான் ஜிபே மூலம் அனுப்பிவிடுகிறேன். அவன் பார்த்துப்பார்த்து நான் பக்கத்தில் இல்லாத குறையை நிவர்த்திக்கிறான். ஸ்பிக் நிறுவனத்தில் சேர்ந்தபோது கிடைத்த பொக்கிசம் ரவி. அவன் எனக்கு ஒரு காதலியை போல. அவனும் நானும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒத்திசைவான ரசனை. இந்த நாற்பது ஆண்டுகால நட்பில் பேசாத விசயங்கள் இல்லை. சேர்ந்து போகாத இடங்கள் இல்லை. ஒரு நொடி கூட எந்தவிதமான உரசலும் வந்ததேயில்லை. அவனைப்பற்றி மட்டுமே நட்பதிகாரம் என்றொரு நூல் எழுதிக்கொண்டிருக்கிறேன். காரணம் எதிர்பாராதவொரு தருணத்தில் அவன் முடிவை அவனே தேடிக்கொண்டுவிட்டான். ஆனாலும் எனக்குள் எப்போதும் உயிர்த்திருக்கிறான். என் சொற்களில் என் எண்ணமாக இருக்கிறான். அவன் மடிப்பாக்கம். நான் அசோக்நகர். தினமும் பேசாமலிருந்ததில்லை. வாரம் ஒரு முறையாவது மல்டிபிளக்ஸ், ஓட்ட்ல் என்று அழைத்துக்கொண்டு போய்விடுவான். அவனிருந்த காலத்தில் தினமும் நடைப்பயிற்சி செல்கையில், தினமும் ஒரு மணிநேரமாவது பேசுவோம். அப்போது மடைதிறந்த வெள்ளமாக என்னுடைய சிந்தனைகள் திறந்து கொள்ளும். இயல்பிலேயே அவன் அடக்கமானவொரு அறிவுஜீவி. ஆனாலும் அப்படி பிரமித்துப்போய் கேட்பான். நடைப்பயிற்சி முடிந்ததும் அவனோடு உரையாடிய விசயம் சுடச்சுட ஒரு கட்டுரையாக உருவெடுத்துவிடும். தனிமை அவனை துரத்திக்கொண்டேயிருந்திருக்க வேண்டும். அவன் சொந்த ஊரான பாளையம்கோட்டைக்கு அம்மாவை பார்க்கச் சென்றிருந்தபோது மரித்துப்போன சேதி கேட்டு, ஸ்பிக் சகா தமிழ்ச்செல்வன் தான் தகவல் சொன்னான். உடனே எனக்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்து உடன் அழைத்துச் சென்றான். அவனுக்கும் அந்த புத்தகத்தில் நன்றி சொல்ல உயிர்ப்பான சில பக்கங்கள் காத்திருக்கின்றன. அது ஒரு புத்தாண்டு தினம். நான் இயக்குநர் பார்த்திபனோடு சேர்ந்து பெரம்பூரில் இருபாலினர் படிக்கிற ஒரு அரசுப் பள்ளியில் ஒன்றாக ஆட்டம்பாட்டமென ஆயிரக்கணக்கான கேஸ் பலூன்களை பறக்கவிட்டபடி, ரிக்கார்ட் துள்ளலாக பாடும் பாடலுக்கு அனைவரும் குதூகலமாக ஆடிக்கொண்டிருந்தோம். மறக்கவே முடியாத புத்தாண்டு அது. அப்போது தான் தமிழ்ச்செல்வன் அந்தச்செய்தியை கைபேசியில் தெரிவித்தான். உடனே மின்னல் வேகத்தில் புறப்பட்டு பாளையங்கோட்டை வந்தோம். அவன் மின்தகன கூடத்திற்கு புறப்படத் தயாராக இருந்த கடைசி ஐந்து நிமிட நேரத்தில், காலம் கச்சிதமாக கைகொடுக்க அவன் வீட்டை எட்டிவிட்டோம். அமைதியாக பேழையில் படுத்திருந்தான். நேராக போனதும் அவன் கன்னத்தை தொட்டேன். அப்போது அது நடந்தது. அடுத்த நொடி அவன் உடம்பில் ஒரு சிலிர்ப்பு. என் கரம் தெளிவாக உணர்கிறது. அவன் உதடுகளில் வார்த்தைகளில் சொல்லவொண்ணாதபடி மெலிதான துடிப்பு. உள்ளுணர்வில் இறுதியாக ஒரு நிறைவு. அவனின் முக்கியமான அத்தனை தருணங்களிலும் அவனுடன் இருந்திருக்கிறேன். நட்பதிகாரம் அவனைப்பற்றிச் சொல்லும். அது அவனது அன்பிற்கான சமர்ப்பணம்.
இப்படி எண்ணிலடங்காத நன்றிக்குரியவர்கள் பட்டியலை நீட்டித்துக்கொண்டே போகிறார்கள். அதை முழுவதுமாக நினைத்துப்பார்ப்பதென்றால் பெரிதாக ஒரு புத்தகமே போடலாம். எப்படியும் குறைந்தது ஆயிரம் பேரையாவது அதில் குறிப்பிட்டாக வேண்டும். அதில் ஒருவருக்கும் எதுவும் செய்துவிடவில்லை. ஆனாலும், நன்றிக்குரியவர்கள் நெஞ்சில் நிற்காமல் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதே மனநிலை வள்ளுவருக்கும் இருந்திருக்கும் தான். என்னைப்போலவே இப்படி நன்றிக்குரியவர்களை நினைத்துநினைத்து ஏங்கியிருந்திருக்க வேண்டும். அதனால் தான் ‘என்றும் ஒருவற்கு இன்பம் தருவது அன்று நன்றி ஒப்பா நனிசெய்தார் சால்பு.’ என்றிருக்கிறார். என்றோ பெறப்பட்ட உதவியையும் வாழ்நாள் முழுக்க நினைவு கூர்தல் போல மகிழ்ச்சியான விசயம் உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்கிற இதன் அர்த்ததை வள்ளுவர் தனது அனுபவத்தில் அணுஅணுவாக அனுபவித்திருந்திருக்க வேண்டும். ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ என்றும் கூறியிருக்கிறார்.
விதை போட்டவர்கள் அதன் பழங்களை சாப்பிடுவதில்லை தான். போட்டவர்கள் அதுகுறித்து கவலைகொள்வதுமில்லை. ஆனால், வித்தானது விருட்சமாகி, பெரும் வனமாக உருவெடுத்த பின்னும் அந்த நன்றியை மறக்காமல் நெஞ்சிலேந்தி கொண்டாட வேண்டும். நன்றி மறவாமையே அறத்திற்கு பிடித்த ஆகச்சிறந்த பண்பு.

Leave a comment
Upload