தொடர்கள்
பொது
பறவைகளின் சொர்க்கபுரி வேடந்தாங்கல் - மாலா ஸ்ரீ

நடப்பு சீசனில்

20260106200434622.jpeg

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் ஊராட்சியில் அரசு வனத்துறையின் பறவைகள் சரணாலயம் உள்ளது. இது, சென்னையில் இருந்து சுமார் 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை கனடா, சைபீரியா உள்பட பல்வேறு உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இங்கு தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறித்து, பின்னர் தனது குடும்பத்துடன் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்கின்றன.

20260106200514216.jpeg

குறிப்பாக, வேடந்தாங்கலுக்கு வரும் வலசை பறவைகளைப் பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அனைத்து வகையான பறவைகளைப் பார்ப்பதற்கு தமிழ்நாடு அரசின் வனத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சீசனில் இங்கு சுமார் 25க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவையினங்கள் வந்து, கூடு கட்டி, குஞ்சு பொரிக்கத் துவங்கியுள்ளது.

இப்போது வந்துள்ள பறவைகளில் ஓப்பன் பில்ட் எனும் நாரைகளும் அடங்கும். இவை ஏற்கெனவே கூடுகளைக் கட்டி இனப்பெருக்கத்தை முடித்துவிட்டன.

20260106200829230.jpeg

அதன் குஞ்சுகளை மரங்களின் உச்சியில் காணலாம். மேலும் வெள்ளை ஐபிஸ்,சாம்பல் நாரை, சின்ன கொக்கு, தார்ட்டர், எக்ரெட்ஸ், பெலிகன், குளநாரை, இரவு நாரை போன்ற பல்வேறு வகையான இனங்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.

ஸ்பூன்பில், சிவப்பு வால் கொண்ட ஆமைக்காலி, சிறு விசில் வாத்து, புள்ளி வாத்து, சின்ன நீர்வாத்து, மூர்ஹென் போன்ற பறவைகள் வருகையை உறுதி செய்துள்ளன.

இதில் பெரும்பாலான பறவைகள் பாரிங்டோனியா மரங்களில் கூடு கட்ட விரும்புகின்றன.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள குளம் கோடைக் காலத்தில் வறண்டு விடும்போது, அடுத்த சீசனில் பறவைகள் கூடு கட்டுவதற்கு வசதியாக, குளத்தைத் தூர்வாரும் பணிகளும் பாரிங்டோரியா மரங்களை நடும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பு சீசனில் இக்குள்த்தைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் நல்ல நிலைமையில் உள்ளன. ஏனெனில், சமீபத்திய மழையால் 20 அடி உயரமுள்ள இக்குளத்தில் தற்போது சுமார் 16 அடி உயரம் வரை நீர் நிரம்பியுள்ளது.

வரும் பருவ மழைக்காலத்தில் இது முழுமையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20260106200706898.jpeg

இக்குளத்தின் அருகிலுள்ள வலையப்புத்தூர் ஏரியின் உபரிநீரையும் பெற்று பயனடைகிறது. ஏற்கெனவே வரத்து கால்வாய்களில் அடைப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டன.

20260106200749188.jpeg

இதனால் பறவைகளின் இனப்பெருக்கம் செய்யும் காலத்துக்கு போதுமான நீர்மட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் எண்ணிக்கை அதிகரித்துள்ளன!” என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.