
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, ஐயா முதலி தெருவில் நீண்ட காலமாக வசித்து வரும் சுதர்சன்-வித்யா தம்பதியின் வீட்டு மொட்டை மாடியில் நாள்தோறும் காலை, மாலை என 2 வேளைகளில் தங்களின் குழந்தைகளுக்கு உணவளிப்பதைப் போல், ஆயிரக்கணக்கான பச்சைக்கிளிகளுக்கும் புறாக்களுக்கும் உணவளித்து வருகின்றனர்.

அவையும் ஆறஅமர வயிறார சாப்பிட்டு, தாகம் தீர தண்ணீரைப் பருகிவிட்டு செல்கின்றன. இப்பணியில் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் சுதர்சனை அனைவரும் ‘பேரட் சுதர்சன்’ (Parrot Sudharshan) என்றே அழைக்கின்றனர்.

‘இயற்கையை எவ்விதம் பாதுகாக்க வேண்டும், பறவைகளை எப்படி காப்பாற்ற வேண்டும்’ என்பதை பள்ளி குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சுதர்சன் விளக்கம் அளித்து வருகிறார்.

கோடை காலத்தில் நீர், உணவு இன்றி கஷ்டப்பட்டு வரும் பறவை மற்றும் விலங்குகளுக்கு உணவு, நீர் வைப்பது பற்றிய முக்கியத்துவத்தை சுதர்சன் தம்பதி அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பகிர்ந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து சுதர்சன் தம்பதி கூறுகையில், ‘நான் நீண்டகாலமாக கிளிகள் மட்டுமின்றி அனைத்து பறவைகளுக்கும் சேர்த்துதான் தானியம், அரிசி, பழங்களை வைத்து வருகிறேன். என்னிடம் முதலில் 100 கிளிகள் மட்டுமே வந்தது. பின்னர் அதன் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரத்துக்குமேல் கடந்துவிட்டது.
இக்கிளிகளுக்காக நாள்தோறும் ஊறவைத்த புழுங்கல் அரிசி, அந்தந்த காலத்துக்கேற்ப கிடைக்கும் பழங்கள், வேர்க்கடலை போன்றவற்றை வைக்கிறோம்’ என்கின்றனர். இதேபோல் தங்களை நாடிவரும் புறாக்களுக்கு ஊறவைத்த கோதுமை, சிட்டுக் குருவிக்கு கம்பு போன்றவற்றை இத்தம்பதி தருகின்றனர். கிளிகளுக்கு வேர்க்கடலை பிடிக்கும் என்பதால், நாள்தோறும் 8 கிலோ வேர்க்கடலை தருகிறார்.
கிளி உள்ளிட்ட பல்வேறு பறவைகளுக்கு நாள்தோறும் 30 முதல் 40 கிலோ வரையும், குளிர்காலத்தில் 60 கிலோ ஊறவைத்த அரிசியைத் தருகின்றனர்.
சென்னை பாரிமுனை பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை மூலம் கிடைக்கும் வருவாயில், தங்களின் குடும்ப செலவினங்களைக் குறைத்துக் கொண்டு, பறவை மற்றும் விலங்கினங்களுக்கு பெருமளவு தொகையை சுதர்சன் செலவிட்டு வருகிறார்
பறவைகளின் வசிப்பிடங்களுக்காக ஆயிரக்கணக்கான மரங்களையும் நட்டு பராமரித்து வருகிறார்.
‘இயற்கை வளத்தை மீட்டுக்கொடுப்பதே, பறவையினங்களுக்கு தான் செய்யும் கைம்மாறு. மரங்களை வளர்ப்பதன் மூலம் புவி வெப்பமடைதல் குறைந்து, அதிகளவில் ஆக்சிஜன் கிடைக்கும் என்று அறிவியல் ரீதியாகவும் விளக்கம் தருகிறார் சுதர்சன்.

Leave a comment
Upload