
பார்வையாளர் யாரும் ஐ.சி.யூ வார்டுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை.
இரவும் ,பகலும் ஷிப்ட்டில் வரும் மருத்துவர்களோடும்....
சோர்வில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் செவிலியர்களோடும், மணிக்கொரு முறை மாற்றும்/ஏற்றும் மருந்துகளோடும்...
கிளவுஸ் போட்டுக் கொண்டு குத்திக் குத்தி எடுக்கும் இரத்தத்தோடும், மானிட்டர்களின் எலக்ட்ரானிக்ஸ் சத்தத்தோடும், மருத்துவர்களும் செவிலியர்களும் எழுதித் தள்ளும் கேஸ் ஷீட்டுகளோடும் பரபரப்பாய் நேரம் கழிந்துக் கொண்டிருந்தது.
மார்பு சுற்றளவை அளந்து பார்த்தார்கள், படுக்கையிலேயே எக்ஸ்-ரே எடுத்தார்கள், முப்பது டிகிரி பக்கவாட்டில் சாய வைத்து எக்கோ ஸ்கேன் எடுத்தார்கள்,.
மணிக்கொரு தரம் இரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
திமிசு போன்றொரு இயந்திரத்தை முதுகில் வைத்து “படபடவென்று” ஓட்டினார்கள்.... அவ்வப்போது குடுவையைத் தூக்கிப் பார்த்து யூரின் அளவைக் குறித்துச் சென்றார்கள். வாட்டும் தாகத்திற்கு மட்டும் தண்ணீர் வந்த பாடில்லை.
பொறுமையிழந்து ஆங்கிலத்தில் அலறத் தொடங்கினேன்.
புன்னகை மாறாத செவிலியர் “முதலில் உங்களுக்கு இளநீர் வருகிறது. அடுத்து மாதுளம் ஜுஸ், அதன் பிறகு தண்ணீர் தருகிறோம்” என்று சொல்லி மீண்டும் சொட்டு சொட்டாய் எண்ணி விட்டனர்
வெளியில் காத்திருக்கும் உறவுகளை காலையிலும் மாலையிலும், வீடியோவில் காட்டும் சம்பிரதாயம் தினமும் நடந்தது.
நாள் முழுதும் வலியோடு போராடும் எனக்கு, வீடியோவில் உறவுகளைப் பார்த்ததும் பீறிட்டு எழும் அழுகையை அடக்க முடிவதில்லை.
“அப்பா, என்ன இது சின்ன பிள்ளையாட்டம்…” என்று கண்களை துடைத்து விடும் செவிலியர்கள், அந்த நேரத்தில் தேவதைகளாகவே என் கண்களுக்குத் தோன்றினார்கள்.
மூன்றாம் நாளில் இருந்து, அனுசரனையான டயட்டீஷின் ஏற்பாட்டில், கஞ்சியில் தொடங்கி சாம்பார் சாதம், கோதுமைக்கிச்சடி, இட்லி, முட்டை என்று உணவு ஐட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வரத் தொடங்கின.
இப்போது சுவர் கடிகாரத்தில் மணி பார்க்க முடிகிறது. வெளியில் கனமழை கொட்டும் சத்தம் கேட்கிறது. பணிக்கு வரும் மருத்துவர், செவிலியர் பெயர்களைப் படிக்க முடிகிறது. பக்கத்து படுக்கை நோயாளிகளின் குரல்களைக் துல்லியமாய் கேட்க முடிகிறது.
நிமிர்வதும் உட்கார்வதையும் தவிர, தாராளமாய் புரண்டு படுக்க மட்டும் முடியவில்லை. படுக்கையை விட்டு கீழே இறங்கி, தரையில் எப்போது கால் படும் என்றிருந்தது.
இரத்தத்தில் ஹீமோக்ளோபின் ஆட்டம் காட்டியது.
ஏற்கனவே செலுத்திய மூன்று யூனிட் இரத்தம் போதவில்லை. மேலும் ஒரு யூனிட் இரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர் சொல்ல, பி பாசிட்டிவ் இரத்தம் பிளட் பேங்கில் இருந்து பாக்கெட்டில் வந்து இறங்கியது. ஒரு முறைக்கு இருமுறை, ஒருவருக்கு இருவராய் நன்றாக சோதித்து பார்த்த பின்னர்தான் ஏற்ற ஆரம்பித்தார்கள்.
முகந்தெரியாத புண்ணியவான் தன் உடலிலிருந்து தானமாய்க் கொடுத்த இரத்தம், கழுத்து வழியே என் உடலுக்குள் இறங்கியது.
கையுறை அணிந்த நர்ஸ் பெண்மணி, கழுத்திலிருந்து கால் வரை என்னை ஈர டவலால் துடைத்துக் கொண்டே “நான்கு நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் உங்கள் முகத்தில் புன்னகையை பார்க்க முடிகிறது அப்பா” என்றார். "எனக்கு எப்பொழுது இங்கிருந்து விடுதலை?” என்றேன் சலிப்பாய்.
“முதல் நாள் உங்களுக்கு இரத்த அழுத்தம் தாறு மாறாய் இருந்தது. அது உங்களுக்குத் தெரியாது. அன்று இரவு முழுக்க, மருத்துவரும் நாங்களும் உங்களை சுற்றிதான் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தோம்.
மீண்டும் நேற்று டெம்பரேச்சர் ஏறி இறங்கி ஆட்டம் காட்டியது. இன்னும் ரெஸ்ப்பிரேஷன் முழுமையாய் சீராகவில்லை. எல்லாம் சரியான பிறகுதான் நார்மல் வார்டுக்கு அனுப்புவர்கள்” என்ற நீளமான பதில் வந்தது.
அந்த பதட்டமான சூழலில் நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.
தொடரும்

Leave a comment
Upload