தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 12: “லொள்ளப் பாரு! ஏகத்தாளத்தப் பாரு! ” – மோகன் ஜி


20260206174858854.jpg

புலவர்கள் சாமர்த்தியமாக புதிர் போடுவதும், அவர்களின் எள்ளலும் ஏகடியமும் தனிப்பாடல்களில் ஏராளமாய் உண்டு.

ஓசை நயமும், வடிவக் குறுக்கமும் அவற்றின் சிறப்பு.

அதில் ஒரு கேள்வியும் பதிலுமாக அமைந்த மிகப் பிரபலமான வரிகளைப் பார்ப்போம்.

இரண்டு புலவர்கள் சேர்ந்து பக்கத்து ஊருக்கு நடந்தே போனாங்களாம். ஏழை புலவர்கள் காலில் செருப்பேது? இலக்கிய சர்ச்சை செய்துகொண்டே போனார்கள்.

கைத்தடி இருந்தும் ஒரு காலை விந்தி நடப்பது ஏன்? என ஒரு புலவரை மற்றவர் வினவினார். அதற்கு முன்னவர் சொன்ன பதில் இது:

முக்காலைக் கையூன்றி

மூவிரண்டு போகையிலே

இக்காலை ஐந்துதலை

நாகமொன்றழுந்தக்

கடித்தது காண்.

அதற்கு மற்ற புலவர் சொன்ன மறுமொழி என்ன தெரியுமா?

"பத்துரதன் புத்திரனின்

மித்திரனின் சத்துருவின்

பத்தினியின் காலெடுத்துத் தேய்”

எமகாதகப் புலவர்கள் தான் இருவரும்! பாடல்களின் அர்த்தமென்னவென்று காண்போம்:

முதல் பாட்டு:

{முக்காலை- மூன்றாம் காலான கைத்தடி

மூவிரண்டு- மூன்றுXஇரண்டு= ஆறு

ஐந்து தலை நாகம்- நெருஞ்சி முள்ளுக்கு ஐந்து முள்முனைகள் இருப்பதால், அது ஐந்து தலை நாகம் }

முதல் புலவர் கைத்தடி எடுத்துக்கொண்டு, ஆறு நோக்கிப் போன போது, காலில் நெருஞ்சி முள் ஒன்று குத்தியது. அவ்வளவு தான் விஷயம்!

அடுத்தவர் சொன்ன சிலேடை வரிகளுக்கு விளக்கம் இதுதான்:

பத்துரதன் = தசரதன் (தச எனில் பத்து )

புத்திரனின் = தசரதனின் புத்திரனாகிய இராமனின்

மித்திரனின் = இராமனின் மித்திரனாகிய சுக்ரீவனின்

(மித்திரன் என்றால் நண்பன்)

சத்துருவின் = சுக்ரீவனின் சத்துருவாகிய வாலியின்

(சத்துரு என்றால் எதிரி)

பத்தினியின் = வாலியின் பத்தினியாகிய தாரையின்

காலெடுத்து= தாரை எனும் பதத்தின் காலாகிய (ா)வை

எடுத்தால் தரை ஆகும்

தேய் = தரையில்(காலைத்) தேய் .

அதாவது ‘முள் குத்தின காலை தரையில் தேய். சரியாகி விடும்’ என்பதே அவர் சொன்ன மறுமொழியின் பொருளாகும்.

லொள்ளப் பாரு! ஏகத்தாளத்தப் பாரு!