
புத்தாண்டே வருக!
இளவேனிற் தங்கத் தேரேறி சித்திரைதேவி வந்தனளே!
உளமேவும் இன்பத் தமிழாய் புத்துணர்ச்சி பொங்கிடவே!
வளமாகும் வாழ்வும் இங்கென நம்பிக்கை மூண்டிடுதே!
தளர்வும் தவிப்பும் புகையாய் நீங்குமெனத் தோன்றிடுதே!
தளிரும் பூவும் உதிக்கும் வசந்தம் மருங்கினிலே
ஒளிரும் பசுமை சிரிக்கும் பூரிப்பில் எங்கணுமே
களியும் கனவும் காற்றனில் உலவும் காலமுமிதே
கிளியும் குயிலும் காதலிற் முயங்கும் நேரமுமிதே
பிரும்மனின் படைப்புத் துவக்கம் சித்திரை முதல்நாளாம்
திருத்தமாய் இல்லம் துலக்கி பூக்கோல வரவேற்பாம்
கருக்கலில் சிரத்தில் ஆலிலையொடு நீராடல் நன்மரபாம்
வருடமிதை கவனம் கோரும் 'பராபவ' என்பராம் ;
'எதிர்ப்பை வெல்லல்’ என்பதே இவ்வாண்டின் தீந்தமிழ்ப் பெயராம்!
நோம்பிற் தெளிந்து பூஜையொடு படனம் பஞ்சாங்கமே!
வேம்பொடு பச்சடி, நீர்மோர், பானகம் படையலிலே ;
காம்பொடு மாவினம், அறுசுவை உணவும் கலத்தினிலே;
மேம்படும் உறவும் நட்பும் கூட்டிய விருந்தோம்பலிலே!
நெற்றியில் கவலையின் ரேகைகள் இனியும் படராதே
வெற்றியின் பாதையில் பாரதமேக இனிதே முன்செல்வோம்
‘எதிலும் வெற்றி‘எனும் பராபவம் முழுமையே ஏந்திவர
நங்கைநம் தமிழாள் பாதம்பற்றி நாமும் வளர்ந்திடுவோம்
மோகன் ஜி
(சித்திரம்: அன்பு நண்பன் தேவா)

Leave a comment
Upload