நொறுக்ஸ்
ஆடு செய்த அட்டூழியம்! - ஸ்ரீ.வி.

20181120190146599.jpg


மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் நகரின் அருகே ரனிலோவிக் கிராமத்தை சேர்ந்தவர் அஜ்பென்கோவிக் (54). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 6 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது குடிசை வீட்டில் 25-க்கும் மேற்பட்ட ஆடு, 10-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வந்திருக்கிறார்.


சொந்தமாக கொஞ்ச நிலம் வாங்க அஜ்பென்கோவிக் முடிவு செய்து, கடந்த 10 ஆண்டுகளாக ₹16 லட்சம் ரொக்கப் பணத்தை சேமித்து, அதை ஒரு துணிக்குள் சுற்றி டேபிளின்மீது வைத்திருக்கிறார். இதன்மூலம் 10 ஹெக்டேர் நிலம் வாங்குவதற்கும் அஜ்பென்கோவிக் திட்டமிட்டார்.


இந்நிலையில், தனது குடிசை வீட்டுக் கதவை லேசாக மூடிவிட்டு, கடந்த 18-ம் தேதி அஜ்பென்கோவிக் குடும்பத்தினர் வயல் வேலைகளுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் இவரது வீட்டின் பட்டியில் இருந்த ஒரு ஆடு மெள்ள வெளியே வந்து, லேசாக திறந்திருந்த வீட்டுக்குள் நுழைந்தது.


அங்கு சாப்பிடுவதற்கு ஏதேனும் உள்ளதா என சமையல் பாத்திரங்களை உருட்டியும் அந்த ஆட்டுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. மேஜையின் மேல் இருந்த துணிகளை கீழே இழுத்து போட்டது. அதில் இருந்த ₹16 லட்ச ரூபாயும் வீடு முழுவதும் சிதறி பறந்தன.


‘ஆஹா… நமக்கு இன்று நல்ல தீனி வேட்டைதான்’ என்ற குஷியில் ₹16 லட்ச ரூபாயையும் காகிதம் என நினைத்து அந்த ஆடு எல்லாவற்றையும் மென்று தின்றுவிட்டு வெளியேறியது. அன்று மாலை வீடு திரும்பிய அஜ்பென்கோவிக் குடும்பத்தினர், தரை முழுவதும் ருபாய் துண்டுகள் சிதறியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவை அனைத்தும் தான் சேமித்து வைத்திருந்த ₹16 லட்ச ரூபாய் எனத் தெரிந்ததும், அஜ்பென்கோவிக் குடும்பத்தினர் கதறி அழுதனர். மறுநாளே ₹16 லட்சத்தை தின்ற ஆட்டை பழிவாங்கும் வகையில், அந்த ஆட்டை வெட்டி பிரியாணி செய்து சாப்பிட்டு, தங்களது கொலைவெறியை தீர்த்துக் கொண்டனர்.