தொடர்கள்
மகேந்திர பல்லவர் - 59 - சுதாங்கன்

20200401160922336.jpg

மகேந்திரனுக்கு, தான் தன் படங்கள் என்பதை விட அவருக்கு ரசனை அதிகம் என்பதே முக்கியம். எந்த ஒரு படைப்பாளிக்கும், படிப்பும், உலக படங்கள் பற்றிய ஒரு ஞானமும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அவர் இந்தியாவின் நல்ல படங்கள் மற்றும் உலகப் படங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததால், அந்த தாக்கம் அவரை இன்னும் நல்ல படங்கள் எடுக்க உந்தி தள்ளிக் கொண்டிருந்தது.

ஆனால் அவருடைய சினிமா ஆரம்ப காலத்தில், மோசமான படங்கள் என பிற்பாடு அவரால் விமர்சிக்கப்பட்ட சில படங்களுக்கும் அவர் கதை எழுதியிருக்கிறார்.

1966-ம் வருடம் நாம் மூவர். இந்த படத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் மூவருமே கதாநாயகர்கள். இந்த படத்திற்காக எஸ்.எம் சுப்பையா நாயுடு இசையமைத்த ஒரு பாடல்தான் ‘பிறந்த நாள் இன்று பிறந்தநாள், நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்’. இந்த பாடல் இலங்கை வானொலியில் காலை நேர துவக்கப் பாடலாகவே அமைந்தது.

1967-ல் அவர் கதை எழுதி வெளிவந்த படம் சபாஷ் தம்பி. ஜெய்சங்கர், எல். விஜயலட்சுமி ஜோடியாக நடித்திருந்தார்கள். இதில் ஒரு பூட் பாலிஷ் போடும் சிறுவன் தான் பிரதான கதாபாத்திரம்.

1968-ல் அவர் கதை எழுதியப் படம் பணக்காரப் பிள்ளை. இதில் ரவிச்சந்திரன் – ஜெயலலிதா தான் ஜோடி. இந்தப் படத்தில் ‘மாணிக்க மகுடம் சூட்டிக்கொண்டாள் மகாராணி’ பாடல் அன்று இலங்கை வானொலியில் மிகப் பிரபலம்.

1969-ல் இவர் கதை எழுதிய படம் நிறைகுடம் . இதில் சிவாஜி வாணிஸ்ரீ ஜோடி. இந்தப் படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியவர் சோ. முக்தா ஃபிலிம்ஸ் தயாரித்த படம் இது. சிவாஜி, முத்துராமன் இருவரும் நண்பர்கள். முத்துராமனின் சகோதரி வாணிஸ்ரீ. தன் தங்கை சிவாஜியை காதலிக்க வேண்டுமென்பதற்காக சிவாஜியும் முத்துராமனும் ஒருவரையொருவர் கொல்லாமல் விடமாட்டேன் என விளையாட்டாக சண்டை போட்டுக்கொள்வார்கள். அப்போது அவர்கள் மூவரும் ஒரு காரில் போவார்கள். அந்தக் கார் விபத்துக்குள்ளாகும். அதில் முத்துராமன் இறந்து போவார். வாணிஸ்ரீக்கு கண் பார்வை போய்விடும். இது சிவாஜி செய்த கொலை என்று வாணிஸ்ரீ நினைத்து சிவாஜியை பழிவாங்கத் துடிப்பார். ஆனால் அவருக்கோ கண் பார்வை இல்லை. இப்போது சிவாஜி ஊரிலேயே ஒரு பெரிய கண் டாக்டர். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் வாணிஸ்ரீயிடம், தான் பழைய நண்பன் என்று சொல்லாமல் அவரை திருமணம் செய்து கொள்வார்.

அன்று வாணிஸ்ரீக்கு கண் ஆபரேஷன். மறுநாள் கண்பார்வை கிடைத்து விடும். அவரோ சிவாஜி என்கிற தன் அண்ணனின் நண்பனை பழிவாங்கத் துடித்துக்கொண்டிருப்பவர். ஆனால் அந்த நண்பன்தான் தன் கணவன் என்பது வாணிஸ்ரீக்குத் தெரியாது. கண் பார்வை தெரிந்ததும் வாணிஸ்ரீ என்ன செய்வார்? இதுதான் கதை. ‘விளக்கே நீ கொண்ட ஒளி நானே, விழியே நீயிட்ட திரை நானே’ என்று ஒரு பாடல், அடுத்த நாள் தன் மனைவிக்கு ஆபரேஷன் செய்யப் போகுமுன் சிவாஜி தன் மனைவியிடம் பாடுவார். அதில் ஒரு வரி... ‘நாளை நீ காணும் குங்குமம் எனக்கு காவல் தரவேண்டும்’ என்று பாடுவார்.

1972ல் கங்கா. இதுதான் தமிழ்நாட்டில் வந்த முதல் கெளபாய் படம். இதில் கவர்ச்சிக் காட்சிகள் அதிகம். ஜெய்சங்கர் தான் கதாநாயகன். படத்தை இயக்கி, தயாரித்து, ஒளிப்பதிவு செய்தவர் ஒளிப்பதிவாளர் எம். கர்ணன். படத்தின் கதாநாயகி ராஜ்கோகிலாவின் கவர்ச்சிக்காகவே படம் நன்றாக ஒடியது.

1974 - திருடி. இந்தப் படம் கே.ஆர். விஜயா தன்னை முன்னிலைப் படுத்தி படங்கள் வரவேண்டும் என்பதற்காக அவரே தயாரித்த படம்.

1974 தங்கப் பதக்கம் கேட்கவே வேண்டாம்... சிவாஜி படங்களிலேயே இது மைல்கல்லாக அமைந்த படம். அதுவரையில் படங்களுக்கு கதை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த மகேந்திரன் இந்த படத்தில்தான் வசனகர்த்தா ஆனார்.

1975-ம் வருடம் அவர் கதை வசனம் எழுதிய படம் வாழ்ந்து காட்டுகிறேன். இந்தப் படத்தில் முத்துராமன் – சுஜாதா ஜோடி. கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள். படம் பெரும் வெற்றியடைந்தது.

1976-ம் வருடம் வாழ்வு என் பக்கம். முத்துராமான் – லட்சிமி ஜோடியாக நடித்த படம். இந்தப் படமும் வெற்றியடைந்தது.

1976-ம் வருடம் மோகம் முப்பது வருஷம். இந்தக் கதை ஆனந்த விகடனில் மணியன் தொடராக எழுதியது. இந்தப் படத்திற்கு மகேந்திரன் திரைக்கதை வசனம் எழுதினார். இதில் கமலஹாசன், சுமித்ரா ஜோடி. எஸ். பி. முத்துராமன் இயக்கியிருந்தார்.


ஒரு பிராமண குடும்பத்து பின்னணியில் அமைந்த கதை அது. பிராமணரல்லாத மகேந்திரன் அந்த அந்தண குடும்பங்களின் அன்றாட நடைமுறைகள், பழக்க வழக்கங்களோடு, அவர்கள் பேசும் மொழியிலேயே வசனம் எழுதியது பலரின் பாராட்டைப் பெற்றது. படத்தின் கரு சர்ச்சைக்குரியது. மிகவும் ஆசாரமான பிராமண குடும்ப பெண்ணான சுமித்ராவுக்கும், அதே ஜாதியை சேர்ந்த கமலஹாசனுக்கும் திருமணம் நடக்கும். ஆனால் அந்த பெண் தன் கணவன் தன்னைத் தொடவே அனுமதிக்க மாட்டாள். முதலிரவு அறைக்குள் இருந்து அலறியடித்துக்கொண்டு ஓடி வருவாள்.


செக்ஸ் என்பது ஏதோ பாவம் என்கிற எண்ணம் அவள் மனதில் ஆழமாக பதிந்து போயிருக்கும். அந்தப் பெண்ணை எப்படி இயல்பு வாழ்க்கைக்கு கணவன் கொண்டு வருகின்றான் என்பதுதான் கதை. இந்தக் கருவிற்காகவே படம் ஓடியது.

1977-ம் வருடம் வந்த படம் ஆடு புலி ஆட்டம். இந்த படம் ஆரம்பித்த நாளிலேயிருந்து பரபரப்பு. கமலஹாசன் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டார். ரஜினி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்த படம் தான் ஆடு புலி ஆட்டம். இந்தப் படத்தை எஸ்.பி. முத்துராமன் இயக்கினார். இந்தப் படத்தில் வேலை செய்ததன் மூலமாகத்தான் மகேந்திரன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையே நேர்ந்தது.

(தொடரும்)