பொது
டாஸ்மாக்கை மூட வைத்த கரோனா தேவதை!! - ராம்.

20200401235412220.jpg

மிஷ்கினின் பிசாசு படம் நினைவுக்கு வருகிறது. பிசாசு என்று துவங்கி அது ஒரு தேவதை என்பது போல முடித்திருப்பார்.

கரோனா உலகம் முழுவதும் கொத்துக் கொத்தாக மனித உயிர்களை காவு வாங்க, கரோனாவை தேவதை என்று அழைப்பதாவது என்று கோபம் கொப்பளிப்பது இயல்பு தான்.

காரணம் இருக்கிறது...

தமிழகத்தை குடி நோயில் தள்ளிய டாஸ்மாக், ஊரடங்கு உத்தரவினால் மூடப்பட்டிருக்கிறது.

இதன் சாதக பாதகங்கள், என்னவெனில் பாதகங்களே கிடையாது. குடிகாரர்களை இந்த கேடு கெட்ட விஷயத்திலிருந்து வெளியே கொண்டு வர ஒரு பொன்னான வாய்ப்பு என்றே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

மது என்ன செய்கிறது...? ரொம்பவெல்லாம் நீட்டி முழக்காமல் சொல்ல வேண்டுமென்றால் குடிப்பதில் இருபது சதவிகிதம் நேரடியாக இரத்தத்தில் கலக்கிறது.

மீதம் எண்பது சதவிகிதம் சிறுகுடலிலிருந்து உள்ளிழுக்கப்படுகிறது. அதனால் தான் வெறும் வயிற்றில் குடிக்கும் போது ஜிவ்வ்வ்.....

மது குடித்தவுடன் என்ன நடக்கிறது உள்ளே.. மது மூளையை மெதுவாக வேலை செய்ய வைக்கிறது. அவ்வளவே. அதாவது ஆக்‌ஷன் பொடன்ஷியல்ஸ் என்று ஏதேதோ சொல்கிறார்கள். மது ஒரு போஸ்ட்மேன் போல ஒவ்வொரு நரம்புக்கும் தவறான செய்தி சொல்லி தூண்டுகிறது. குஷாலாக இரு என்று மூளையிலிருந்து தப்பான செய்தி பரப்பப்படுகிறது.

குடியும் ஒரு அரசும் சேர்ந்து ஒரு பொருளாதாரத்தை நிலை குலைய வைக்க முடியும் என்றால் அது தமிழகம் தான்.

தமிழ்நாட்டு அடிமட்ட மக்களுக்கு ஒரு பக்கம் மிக்ஸியும், கிரைண்டரையும், கேஸ் அடுப்பையும், அரிசியையும் இலவசமாக கொடுத்து விட்டு, பண்டமாற்றாக அவர்தம் கணவர்மார்களின் குடலையும், கல்லீரலையும் இன்னொரு பக்கம் பெற்றுக் கொள்கிறது அரசாங்கம்.

தமிழக இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி, வளர விடாமல், யோசிக்க விடாமல் முன்னேற விடாமல் அவர்கள் உடல் நலத்தை கெடுத்து, ஒரு போபால் விஷவாயுவை விட கொடிய, கேவலமான, அயோக்கியத்தனமான ஒரு வியாபாரத்தை அரசாங்கம் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் செய்வது அவமானம்.

இந்த சிறு குறிப்புக்களை சடுதியில் பார்த்து விடலாம்.

மது..

1. இரண்டே நிமிடங்களில் உங்கள் இரத்தத்தில் ஜீரணமாகாமல் நேரடியாக கலக்கக் கூடியது. உடல் அவயங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நிலைகுலையச் செய்யும்.

2. நேரடியாக மூளையை பாதிக்கக் கூடியது. சிந்திக்கும் திறனை வளர்க்கிறது என்பது மாயை.. மழுங்கடிப்பது என்பதே நிஜம்.

3. கல்லீரலை காலி செய்து விடும் விரைவில்.

4. வயிற்றை கடுமையாக தாக்கும்.

5. அப்படியே வந்து சிறுநீரகத்தையும் சத்தமில்லாமல் சேதாரம் செய்யும்.

6. சில மனிதர்களுக்கு ஆல்கஹால் சைகாஸிஸ் என்ற மன வியாதியை உண்டு செய்யும்.

7. குடும்பத்தை நடுத் தெருவிற்கு கொண்டு வந்து விடும்.

8. சமூகத்தில் மரியாதை கெடும்.

தற்போதைய ஊரடங்கு உத்தரவு பெருங்குடிகாரர்கள் வாழ்க்கையில் ஒரு சின்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்ப கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனால் பரவாயில்லையா என்றால் அதன் சதவிகிதம் குறைவு தான்.

இது குறித்து பல மன நோய் மருத்துவர்கள் பல ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள். அதெற்கெல்லாம் போவதற்கு முன் இந்த கரோனா பிசாசோ அல்லது தேவதையோ, அதன்புண்ணியத்தில் இந்த டாஸ்மாக் சனியனை மூடித் தொலைத்தால் பல பெண்களின் தாலி மிஞ்சும்.

இந்த வார காணொளி அலசுவது இதை தான்.

குடி குடியை... குடும்பத்தை.. உடல்நலத்தை... மொத்ததில் அத்தனையையும் கெடுக்கும்.