நீலகிரி மாவட்டம் ஒரு உலக சுற்றுலா தலம். இங்கு ஒரு சிறந்த மருத்துவமனை இல்லை என்பது நீண்டநாள் கோரிக்கை.

இத்தனைக்கும் இந்திய வரலாற்றில் நீலகிரி மருத்துவமனைகள் ஒரு வரலாற்றை பிடித்திருக்கிறது என்றால் ஆச்சிரியமாக இருக்கும்.. நோயிலிருந்து மீண்டு வரும் மருத்துவமனையில் இருந்து 200 வருடங்கள் கடந்த பின், மருத்துவ கல்லூரி உருவாகும் கனவிற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பது கொரோனா காலத்தில் நடந்த ஒரு மெய்சிலிர்க்கும் உண்மை!

நவீன நீலகிரியை உருவாக்கின ஜான் சல்லிவன் 1820 ஆம் ஆண்டு இந்த மலை மாவட்ட மக்களுக்கு என்று ஒரு சுகாதார நிலையம் அமைத்தார். அதற்கான மருத்துவர்கள் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்லிருந்து வரவழைக்கப்பட்டனர். 1826 ஆம் வருடம் ஊட்டியில் ராணுவ சிப்பாய்களுக்கு என்று ஒரு சுகாதார நிலையம் மற்றும் நோய் மீட்பு மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டு, 1831 ஆம் ஆண்டு முதல் மருத்துவக் குழு ஒன்று இங்கு பணியாற்ற வரவழைக்கப்பட்டனர். அந்த சுகாதார நிலையம் தான் தற்போதைய ஊட்டி தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுரிக்கான ஆரம்ப இடம்.

ஊட்டியில் ஒரு மெடிக்கல் ஆபிசர் என்றும் குன்னூரில் ஒரு மெடிக்கல் ஆபிசர். இவர் கோத்தகிரிக்கு விசிட்டிங் அதிகாரியாக பணிபுரிந்தாராம் .

இராணுவ முகமான வெலிங்டனில் ஒரு மருத்துவமனை உருவாக்கப்பட்டு, அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

1900 ஆம் ஆண்டு கோத்தகிரி, குன்னூர், கூடலூர் மருத்துவமனைகள் ஊட்டி தலைமை மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டன.. பைகாராவில் மின்சார ஊழியர்களுக்கு என்று 1908 ஆம் ஆண்டு ஒரு மருந்தகம் திறக்கப்பட்டது.

இந்தியாவின் இரண்டாவது சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் தேவாலாவில் 1876 ஆம் ஆண்டு ஒரு மருத்துவமனை கட்டப்பட்டது. காரணம் இங்கு தங்க சுரங்கம் வெட்டும் பணி படு மும்முரமாக இருந்த நேரம்.. பின்னர் தங்கம் வெட்டுவது குறைந்தவுடன் 1893 ஆம் வருடம் அந்த மருத்துவமனை மூடப்பட்டது.

கூடலூர் மருத்துவமனை 1904 ஆம் ஆண்டு காவல்துறையினருக்கு என்றே தனி மருத்துவமனையாக செயல் பட்டது..
குன்னூர் மருத்துவமனை 1855 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு, பின் 1899 ஆம் ஆண்டு நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.. இதன் பராமரிப்பு பிரிட்டிஷ் பெண்கள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது (இன்றைய சுய உதவி குழு போல).

ஊட்டி மருத்துவமனை ஆரம்பத்தில் நோய் மீட்பு நிலையமாக செயல்பட்டு வந்தது. ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நிலையம், பின்னர் 1853 ஆண்டு அனைத்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதற்கு ஒரு குழு செயல்பட்டது. அதன் முக்கியப் பிரமுகர்கள் கோவை கலெக்டர், ஊட்டி மாஜிஸ்திரேட், நீலகிரியின் முதல் ஆலயமான செயின்ட் ஸ்டீபன் சர்ச்சின் பாதிரி மற்றும் உள்ளூரின் நகர்மன்ற உறுப்பினர்கள் இந்த மருத்துவமனையை நடத்தினார்கள்.

1874 ஆம் வருடம், ஊட்டி தலைமை மருத்துவமனைக்கு செயின்ட். பார்த்தலோமேயோ என்ற பெயரை அன்றைய மருத்துவ அதிகாரி மேஜர் பெர்ன்ஹெல் பெயர் சூட்டினார்.. இவர் தான் மயக்கமருந்தை (Chloroform) கண்டுபிடித்த மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மெட்ராஸ் மருத்துவக் கல்லுரியின் முதல்வராக 1871 முதல் 1875 சிறப்பாக பணியாற்றியவர். இவரின் காலத்தில்தான் பெண் மருத்துவர்கள் அறிமுகம் செய்யப்பட்டு, ஊட்டிக்கும் சேவை புரிய வந்தனர். 1920 ஆம் ஆண்டு இந்த நீலகிரி மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. ஊட்டி மருத்துவமனை மெட்ராஸ் பட்டணத்திற்கு வெளியே ஒரு மிகச் சிறந்த மருத்துவமனையாக திகழ்ந்தது.

1900 ஆம் ஆண்டு மகப்பேறுக்கு என்று தனி மருத்துவமனை துவக்கப்பட்டது... இந்த மருத்துவமனை கான் பகதூர் ஏ.ஆர்.ஹாஜி பக்கிர் முகமது சேட் அவர்களால் அன்பளிப்பாக கட்டி கொடுக்கப்பட்டது.. தற்போது சேட் மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மருத்துவமனை, ஜான் சலிவனின் கனவான மருத்துவக் கல்லுரியாக மாறப்போகிறது என்பது ஊட்டி குளிரின் இதமான தகவல்.
இந்த மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள் காலப்போக்கில் தங்களின் கிளினிக்கை நகரில் துவங்கினார்கள்... அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தங்களின் கிளினிக்குக்கு வலுக்கட்டாயமாக இழுத்தனர்.

ஒரு கட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை குறைந்தது... கீழ் பிரதேசத்தில் இருந்து மருத்துவர்கள் குளிரை காரணம் காட்டி பணிக்கு வர மறுத்தனர். சில மருத்துவர்கள், நோயாளிகளிடம் மிக முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். எக்ஸ்ரே ஃபிலிம் கடத்தல்... மருத்துவர் கத்தியை காட்டி மிரட்டுவது.. அலட்சியத்தால் ஏற்பட்ட மரணங்கள் என்று அரேங்கேறிய காலங்கள் உண்டு.

இதையெல்லாம் காரணமாக வைத்து கொண்டு தனியார் மருத்துவமனைகள் துவக்கப்பட்டன. ஊட்டியை சேர்ந்த மருத்துவர்கள், தங்களின் சொந்த மருத்துவமனைகளை துவக்கி இன்று வரை நடத்தி வருகின்றனர்.
விஜயா மருத்துவமனை.. ஊட்டி மற்றும் கிராமத்து மக்கள் இங்கு வருவது சகஜம்..

எஸ் .எம். மருத்துவமனை சரியான பார்க்கிங் வசதி கூட இல்லாமல் உள்ள ஒரு மருத்துவமனை.. தற்போது இது ஒரு உயிர்காக்கும் மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது.

சிவசக்தி மருத்துவமனை.. சனித்தா மருத்துவமனை.. பார்வதி மருத்துவமனை போன்றவை ஊட்டிவாசிகள் தங்களின் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சிகிச்சை பெரும் இடங்கள்.

குன்னூரில் நான்காம் மருத்துவமனை படு ஃபேமஸ், பெரிய அளவில் எல்லா வசதிகளும் கொண்ட மருத்துவமனை என்று சொல்ல முடியாது.. வேறு வழியில்லாமல் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் உண்டு... ஊட்டி சீசன் சமயத்தில் இந்த மருத்துவமனைகள் சுற்றுலா விடுதியாக மாறுவதும் ஆச்சிரியமான ஒன்று..
இந்த மருத்துவமனைகளின் சொந்தக்காரர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இன்னும் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள்.
தற்போது அரசு மருத்துவக் கல்லூரி ஊட்டியில் கட்டப்பட இருக்கிறது என்றவுடன் இந்த மருத்துவ ஜாம்பவான்களின் வயிற்றில் புளி கரைந்து கொண்டிருக்கிறது.. இந்த மருத்துவக் கல்லுரி வரக்கூடாது என்று முயற்சி கூட செய்தார்கள் சில உயிர்காக்கும் மனிதர்கள்!
ஜான் சல்லிவன் உருவாக்கின மருத்துவமனைகள்.... மருத்துவக் கல்லூரி இந்த மலை மாவட்டத்தில் உருவாக வேண்டும் என்ற அவரது கனவு, 200 வருடங்களுக்கு பின் நனவாகிக்கொண்டிருப்பது ஆச்சர்யமான ஒன்று...

112 கலெக்டர்கள் ஆட்சி செய்த மாவட்டத்தில், இந்த முயற்சியை ஆணித்தரமாக எவரும் எடுக்காத நேரத்தில் 113 வது கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா இதற்கான முயற்சிகளை எடுத்ததை யாரும் மறுக்க முடியாது. இவர் பதவி ஏற்ற உடன், முதலில் விசிட் செய்த இடம் அரசு மருத்துவமனை. அன்றே இந்த மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லுரி விரைவில் வர நான் அனைத்து முயற்ச்சிகளையும் எடுப்பேன் என்று அவர் கூறியதை யாரும் மறக்கவில்லை.

அதே சமயம் அரசு மருத்துவமனை ஒரு சிறந்த சேவையை மக்களுக்கு கொடுத்தே ஆகவேண்டும் என்று பல புதிய சீர்திருத்தங்கள் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்தார் கலெக்டர்.. அதனால் மருத்துவர்கள் முதல் அனைத்து ஊழியர்களும் தங்களின் வேலையை கண்ணும் கருத்துமாக பார்க்கத் துவங்கி விட்டனர்...
தேர்தலில் போட்டியிடும் இந்த தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள், மருத்துவக் கல்லுரி விஷயத்தை மறக்காமல் தேர்தல் வாக்குறுதியாக வைப்பது சகஜமான ஒன்று.

நீலகிரி எம்.பி. ஆ.ராசா இந்த மருத்துவக் கல்லூரி வந்தே ஆக வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்த்தனை பல முறை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து, அதற்கான பதிலையும் பெற்று வந்துள்ளார்.. மேலும் மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை பலமுறை சந்தித்து, வனத்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.. மத்திய அரசாங்கத்திடம் பலமுறை பேசி இந்த மருத்துவ கல்லூரி ஊட்டிக்கு வர முயற்சி எடுத்தவர் ராசா என்று கூறுகிறார்கள். இதனை அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
ராஜ்யசபா உறுப்பினராக நீலகிரி எம்.பி. அர்ஜுனன் இந்த மருத்துவக் கல்லுரி கட்டாயம் வரவேண்டும் என்று மன்றத்தில் போராடியுள்ளார்..
விரைவில் இதற்கான உத்தரவு இன்று வந்து விடும் நாளை வந்து விடும் என்று வருடங்கள் ஓடிக்கொண்டிருக்க... நம் முதல்வரும் இதற்கான முயற்சிகளை எடுத்தார்.

எம் .ஜி.ஆர் .நூற்றாண்டு விழா ஊட்டியில் டிசம்பர் 31, 2017 ஆம் ஆண்டு கொண்டாடப்பட அன்று மருத்துவக் கல்லூரி இங்கு வர, மத்திய அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என்று கூறினார் முதல்வர்.
மத்திய அரசாங்கம் முதலில் அறிவித்த பட்டியலில் ஊட்டி மருத்துவக் கல்லுரி இடம்பெறவில்லை.. பின்னர் எம்.பி. ராசா எடுத்த முயற்சியில் தான் 11-வது கல்லூரியாக இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது என்பது நல்ல விஷயம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அடிக்கல்லை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதை திறந்து வைத்தார்.

பின்னர் மருத்துவக் கல்லூரி கட்டப்படும் இடமான கோல்ப் லிங்க் சாலையில் எச்.பி.எஃப். கெஸ்ட் ஹவுஸ் மற்றும் டூபாண்ட் தங்கும் விடுதிக்கு பின்புறம் இதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடந்த விழாவில் கொரோனவை மீறி அதிக அளவில் ஆளும்கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டது தான் பலரை முகம் சுளிக்க வைத்தது. மாவட்ட ஆட்சியர் சமூக இடைவெளி கடைபிடிக்கக் கூறியும்...

இருபது முதல் முப்பது பேர் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியும்... அதை கண்டுகொள்ளாமல் மாவட்ட செயலர் புத்திசந்திரனுடன் ஒரு நூறு பேர் மற்றும் முன்னாள் எம்.பி. அர்ஜுனன் ஆதரவாளர்கள் நூறு பேர் என்று இருநூறு பேர் கலந்து கொண்டது மிகவும் வேதனையான ஒன்று. ஆட்சியரின் வார்த்தையை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

ஒரு வழியாக மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது, 18 மாதங்களில் இந்த பணி முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
நாம் தற்போது உள்ள மருத்துவக் கல்லூரி டீன் ரவீந்தரனை தொடர்பு கொண்டு பேசினோம்.... “நேரில் தான் பேசவேண்டும். எனக்கு உடல் நலம் சரியில்லை, இருந்தாலும் இந்த மருத்துவக் கல்லூரி கட்டி முடித்து விட்டு தான் செல்வேன்” என்றார்... ஊட்டி தலைமை மருத்துவமனையில் சந்திக்கலாம் என்று இருந்தோம், அங்கு கொரோனா தொற்று நோயாளிகள் வருவதால் நாம் அங்கு செல்லவில்லை.

அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹிரியன் ரவிகுமாரிடம் பேசினோம்... “இந்த மருத்துவக் கல்லுரி நம்மூரில் வருவது ஒரு நீண்ட கனவு... அது நிஜமாகப் போகிறது என்பதை நினைக்கும் போது அளவுக்கு மீறி மகிழ்ச்சி.. இந்தப் பழைய மருத்துவமனை செயல்படும்.. பெரிய மருத்துவக் கல்லூரி வந்த பின், எல்லாம் அங்கு செயல்படும்போது இதன் பயன்பாடு இருக்காது... இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு முழுமையாக விரைவில் செயல்படும் என்பது நமது நம்பிக்கை” என்று முடித்தார்.

ஊட்டி எம் .எல் ஏ கணேஷனை தொடர்பு கொண்டு பேசினோம்.. “இந்த மருத்துவக் கல்லூரி ஊட்டியில் வரவேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசியுள்ளேன்.. ஆறு மாதத்திற்கு முன் நீதி அரசர் கிருபாகரன் ஊட்டி வந்தபோது, இது பற்றி அவரிடம் பேசினேன்.. ஒரு நோயாளி முதல் உதவி மட்டும் தான் இங்கு எடுக்க முடியும் மற்றபடி கோவை தான் செல்லவேண்டும். ஹெலி ஆம்புலன்ஸுடன் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்று, அதற்கான முயற்சியை எடுத்தார். 11-வது மருத்துவக் கல்லூரியாக விரைவில் இங்கு உதயமாக போகிறது.. எச்.பி .எஃப். குடியிருப்புகளைக் கூட எடுத்து ரெடி செய்யலாம் என்று கூறியுள்ளேன். பார்க்கலாம்..

அடிக்கல் நாட்டு விழாவில் ஆளும்கட்சி பிரமுகர்கள் கொரோனவை மறந்து கலந்து கொண்டது மிகவும் வேதனையான ஒன்று.. மருத்துவக் கல்லூரி திறப்பு நாளை எதிர்கொண்டு காத்து கொண்டிருக்கிறேன்” என்று முடித்தார்.

கூடலூர் எம்.எல்.ஏ. திராவிட மணி கூறும்போது, “ஒரு மருத்துவக் கல்லூரி ஊட்டிக்கு வேண்டும் என்று எங்க தலைவர் தளபதி ‘நமக்கு நாமே’ நடைபயணத்தின் போதே, ஊட்டி மருத்துவக் கல்லூரி குறித்து மத்திய, மாநில அரசிடம் பேசி கட்டாயம் வரவேண்டும் என்று முடிவு செய்தார்.. அவரைத் தொடர்ந்து, நம்ம எம் .பி. ராசா நேரடியாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் மற்றும் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களை சந்தித்து ஒப்புதல் பெற்று, அறுபது சதவிகிதம் மத்திய அரசும் நாற்பது சதவிகிதம் மாநில அரசும் நிதி தரவேண்டும்.. நம்ம தி.மு.க. மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் தான் இந்த மருத்துவக் கல்லுரிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவுக்கு கலெக்டர் அம்மா முறையாக என்னை அழைத்தார்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த காணொளி காட்சி நிகழ்வில் ஆளும் காட்சி பிரமுகர்கள் அதிகமான பேர் நுழைந்தனர். கொரோனா பீதி தொற்று இருக்கும் நேரத்தில் இவர்கள் அப்படியா வருவது.. இதை பார்த்து நான் கலெக்டரிடம் சென்று.. ‘இவங்க பண்ணறது ரொம்ப தப்பு... நான் கிளம்பறேன்’ என்று கூறி சென்று விட்டேன்.. பூமி பூஜை போடும் போது இருநூறு பேர் மாவட்ட செயலர் தலைமையிலும்... முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் அர்ஜுனன் தலைமையில் ஒரு கூட்டம் வந்து, சமூக இடைவெளி என்பதை பின்பற்றாமல் கலெக்டரை தர்மசங்கடத்தில் நிறுத்தி விட்டனர்.. அந்த அம்மா என்ன செய்யும், பாவம். எவரும் மாஸ்க் கூட போடவில்லை.. இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை கேலிக்கூத்தாக்கி... ஒரு மறக்க முடியாத இழிவை ஏற்படுத்தி விட்டார்கள்... விரைவில் மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் துவங்கி முடிக்க வேண்டும், எந்த தலையிடும் இல்லாமல்” என்று முடித்தார்.

நீலகிரிக்கு மருத்துவக் கல்லூரி ஒரு வரப்பிரசாதம்... நஞ்சநாடு என்ற கிராமம் ஒரு மருத்துவர் கிராமம். இங்கு வசித்த டாக்டர் குண்டனனின் ஐந்து மகள்களில் இருவர் மருத்துவர்கள். தமயந்தி, சாவித்திரி என்று மேலும் நான்கு பேர் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் தமயந்தி மற்றும் சாவித்திரி ஏழை கிராமத்து பெண்களுக்கு இலவசமாக சிகிச்சை பார்ப்பதில் சிறந்தவர்கள் இன்று வரை. டாக்டர் நந்தி, எருமை மாடுகளை மேய்த்து வந்து, பின்னர் மருத்துவராக உருவாகியவர். மற்றும் டாக்டர் ராஜன்... இவர்கள் அனைவரும் இந்தக் கிராமத்து அரசு பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல எழுபதுகளில் ஊட்டியில் உயிர்காக்கும் மருத்துவர் பசுவையா... இவர் கைவைத்தால் நோய் உடனே குணமாகும், கைராசி டாக்டர் என்று அழைக்கப்பட்டார். இப்படி பல தனியார் மருத்துவர்கள் தான் இந்த மலை மாவட்ட மக்களை நோய்களில் இருந்து காத்து வந்தனர்...

.
புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடம் கட்ட ரூபாய் 447 கோடியே 32 லட்சம் நிதியும், நிர்வாக செலவினங்களுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடும் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா கூறும் போது, “எங்கள் மாவட்டத்தின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி மற்றும் சிறந்த மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விரைவில் துவக்கப்படும். இதற்கு மாவட்ட மக்களின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன்.. மருத்துவ சேவை இறைவனுக்கு செய்யும் சேவை போல இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு திறக்கும் நாள் என் வாழ்வில் பொன்னான நாள்” என்று முடித்தார்...
ஜான் சலிவனின் கனவு இன்னசன்ட் திவ்வியாவின் கரத்தால் துவங்கியுள்ளது ஒரு சிறந்த குறிஞ்சிப்பூ பூத்தது போல....

Leave a comment
Upload