தொடர்கள்
கதை
சிரிக்கதை - குப்புசாமி மாமா துப்பறிகிறார்... -- வேங்கடகிருஷ்ணன்

20200617202130857.png

கண்ணாடி முன்னால் நின்று, “மை நேம் இஸ் சாமி..... குப்புசாமி” என்று விதம் விதமாய் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தார் குப்புசாமி மாமா. அவர் மனைவி மீனாட்சி மாமி ரெண்டு, மூணு முறை அந்தப் பக்கம் யதேச்சையாக கடந்து செல்வதுபோல் சென்று, இவர் செய்யும் டிடெக்டிவ் பாணி சேட்டைகளை கண்டும் காணாதது போல சென்று கொண்டிருந்தாள். தங்கள் வழக்கமான (ஓசி) மாலை காபிக்காக வரும் மாமியின் தம்பி அச்சு, அவன் பிள்ளை சுப்புணி, அவன் மனைவி கமலா எல்லாரும் நுழைந்தார்கள். சுப்புணி நேராக மாமாவிடம் வந்து “என்ன அத்திம்பேர் ஜேம்ஸ் பாண்ட் ஆகப்போறீங்களா?” என்றான்.

“சபாஷ்டா சுப்புணி. நீ தான் என் பிரதான சிஷ்ய பிள்ளை, என் பையன் ரெங்குடுவே கூட உனக்கு அப்புறம் தான்” என்று புளகாங்கிதப்பட்டார்.

இருவரும் தனித்து உட்கார்ந்தார்கள். ‘இன்னிக்கு காலனி அஸோஸியேஷன் மீட்டிங் இருக்கு, எல்லாரும் வருவாங்க, அங்க வெச்சு உனக்கு ஒரு விஷயத்தை காட்றேன், அது தான் நாம கண்டுபிடிக்கப்போற மொதல் கேஸ்’ என்றார் அவனிடம்!

சரியாக மாலை ஆறு மணிக்கு காலனி அஸோஸியேஷன் மீட்டிங் ஆரம்பித்தது. அசோசியேஷன் ப்ரெசிடெண்டான அவர் மனைவி மீனாட்சி மாமியின் தலைமையில் கூட்டம், பக்கத்து வீட்டு பரிமளா மாமி, எதிர் வீட்டு அல்சேஷன் (வைத்திருக்கும்) ஆதிசேஷன், இந்தப் பக்கத்து வீட்டு எம்டன் எதிராஜன், குஜராத்திக்காரி கீதா படேல், கோடிவீட்டு கோகிலா மாமி, பரிமளா மாமியின் தங்கை பாக்கி என்கிற பாக்கியலட்சுமி, இலவச இணைப்பாக மீனாட்சி மாமியின் தம்பி அச்சு, வேற வழியில்லாமல் மீனாட்சிமாமியின் (அடிமை, சாரி) கணவர் குப்புசாமி மாமா. கூடவே சுப்புணியும், ரெங்குடுவும்.


மாமா கண்காட்ட, சுப்புணியும் ரெங்குடுவும் அவர் சொன்ன திசையில் அமர்ந்திருந்த ஆதிசேஷனை கவனிக்கிறார்கள். ஆதி தனது மொபைலை எடுத்து மேசை மீது வைத்தார். அதையே பாத்துக் கொண்டிருந்தார். நடுவில் ஏதோ அவசரமாய் போன் செய்ய வேண்டி மீனாட்சி மாமி தன் போனில் சிக்னல் இல்லாததால் அவர் போனை ஒரு நிமிஷம் கேட்க, அவர் நாசுக்காக தர மறுத்து விட்டார், பின்பு பரிமளா மாமி தான் தன் போனை கொடுத்தாள். மாமா இதையும் நோட் பண்ணச் சொன்னார்.

மீட்டிங் முடியும் போது திடிரென்று அங்கு வந்த ஆதிசேஷனின் கணவர், சாரி மனைவி அகிலாண்டம்மாள் நேரே சென்று அவரது போனை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று விட்டாள். எல்லோரும் அவரையே பார்க்க அசடு வழிந்தார், ஆதிசேஷன்.

மீட்டிங் முடிந்தவுடன் தன் சிஷ்ய கேடிகளுடன், அச்சுவையும் சேர்த்து தான், ஒரு குட்டி மீட்டிங் போட்டார் குப்பு.

எல்லோரும் அவர் சொல்வதையே கவனமாக கேட்டார்கள். (கூட்ட முடிவில் டீயும், சமோசாவும் கண்டிப்பாக உண்டு என்று சொல்லியிருந்தார் மாமா). ‘இந்த ஆதி சேஷன் போன்ல ஏதோ ஒரு ரகசிய மேட்டர் இருக்கு, நாம பாக்கும்போது அவன் போனை ஆன் பண்றதே இல்ல, பேசவும் மாட்டேங்கறான்’

“ஒன்னு கவனிச்சீங்களா. அவருக்கு எந்த காலும் வர்றதில்ல” எடுத்துக் கொடுத்தான் சுப்புணி... மாமா அவனை பார்த்த பார்வை “என் அரசியல் வாரிசு நீதான்” என்பது போல இருந்தது.

அவர்கள் ஆதியின் போனை அபேஸ் செய்ய திட்டம் போட்டார்கள்... மறுநாள் காலை தங்களது திட்டத்தினை நிறைவேற்ற முடிவு செய்து கலைந்தார்கள், சமோசா சாப்பிட்ட பிறகு கண்களாலேயே பேசிக் கொண்டு பிரிந்தார்கள்.

மறுநாள், ஆதிசேஷன் காலை வாக்கிங் போகும்போது அவர் பின்னாலேயே சென்று, அவருக்கே தெரியாமல் போனை எடுத்துக் கொண்டு வருவது தான் பிளான். அச்சு தானே வலிய வந்து அந்த வேலையைச் செய்வதாகச் சொல்லி அவர் பின்னாடியே போனான். சிறிது நேரத்தில் அவனை கண்டு கொண்ட ஆதிசேஷன் அவனை அழைத்துப் போய் பக்கத்து டீ கடையில் டீ வாங்கி கொடுத்தார். அவருக்கு அக்கௌன்ட் உண்டு போல, காசு தரவில்லை. சரி ஒரு முயற்சி செய்து பாப்போம் என்று அச்சு அவரது போனைக் கேட்டான், அதை தான் யாருக்கும் தருவதில்லை என்று சொல்லிவிட்டார். எக்ஸ்ட்ராவாக மசால் வடையும் அவனுக்கு வாங்கி கொடுத்தார்....

சிறிது நேரம் கழித்து வாயில் வடையை (கவ்வி) கடித்துக்கொண்டே அச்சு வந்து சேர்ந்தான்... “ஆதிசேஷன் ரொம்ப நல்லவர் தெரியுமா என்று “நன்றியுடன்” சொன்னான். டக்கென்று சுப்புணி சொன்னான் “அவர் வாங்கிக் கொடுத்த வடையால சொல்றியாப்பா?..ம்ஹூம்... இனி இவரை நம்பி பிரயோஜனம் இல்ல அத்திம்பேர், நாமளே களத்துல குதிக்க வேண்டியது தான்".

அச்சுவை கழட்டி விட்டு மூவரும் நைசாக நகர்ந்து ஆதி வீட்டு வாசலுக்கு அருகில் உள்ள மரத்தடியில் மறைந்து நின்றனர்... அவர் திண்ணையில் உட்கார்ந்து போனை பக்கத்தில் வைத்து விட்டு பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். உள்ளிருந்து அவர் பையன் அழைக்க எழுந்து உள்ளே சென்றார். இது தான் சரியான சமயம் என்று முகம் முழுதையும் கண் தவிர சம்பல் கொள்ளைக்காரன் போல துணியால் மூடிக் கொண்டிருந்த குப்பு மாமா மரத்தடியில் பிரசன்னமானார். குப்பு மொபைலை நெருங்கும் சமயம் மார்க்கெட்டுக்கு போயிருந்த ஆதிஷேஷனின் மனைவி அகிலாண்டம்மாள் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது,

“யாரு அது... யாரு அது? என்று அவள் கத்த,.... பதில் இல்லாததால், “திருடன் திருடன்” என்று ஹை டெசிபலில் அலறத் துவங்கினாள் அகி. அதிர்ச்சியில் அப்படியே கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு பின் பக்கம் ஓடி, சுவர் ஏறி, கீழே விழுந்து, புரண்டு தப்பித்துச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே ரத்தத்தில் ஊறியிருந்த ஒருத்தன் ஓடுவது போல ஓடினார் குப்பு.

மீனாட்சி மாமியின் முகம் நினைவில் வந்தது, “என்னது இப்படி பண்ணிடீங்களே?”... இன்னும் வேகமெடுத்தார், “ஒங்களுக்கு ஏன் இந்த வேலை?”... பரிமளா மாமியின் பரிகாச சிரிப்பு நினைவுக்கு வந்தது.... இன்னும் வேகம்.... “நான்தான் சொன்னேனே, நீங்க இதுக்கெல்லாம் லாயக்கில்லை அத்திம்பேர்” அச்சு நினைவில் வந்தான்... கால் தடுக்கி கீழே விழுந்து மறுபடி எழுந்து ஓடினார்....

பின்னால் யாரும் துரத்தி வரவில்லை என்பதற்காக திரும்பிப் பார்த்தால், ரெங்குடுவும் சுப்புணியும் எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தார்கள், கையில் இருப்பது, மொபைல் ஷேப்பில் இல்லாதது போல தோன்ற, அதை அப்படியே தடவிப் பார்த்தார். அடச்சே! அது ஆதிசேஷனின் மூக்குக்கண்ணாடி பாக்ஸ். சே.... போயும் போயும்..... என்று சொல்லிக்கொண்டே..... வேறு வழியின்றி ஓடிக்கொண்டேயிருந்தார் குப்பு!

(பின் குறிப்பு : ஆதிசேஷன் போனில் சிம் கிடையாது, அது ஆன் ஆகவும் ஆகாது, அவருக்கு டச் போன் யூஸ் பண்ணவும் தெரியாது, அதை வெளியில் தெரியாமல் ஒரு பில்ட் அப் கொடுக்கத்தான் அந்த “டெட் போன்”. அதுவுமில்லாமல் போன் கேஸுக்கு உள்ளே தான் அவர் பணம் வைத்திருப்பார். எப்பொதும் நாலு ஐநூறு ரூபாய் நோட்டு இருக்கும், அதனால் தான் அதை ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டிருப்பார், கடைக்கு போவதற்காக வந்த அகிலாண்டம்மாள் மீட்டிங்கில் நுழைந்து, அவர் போனை எடுத்துக்கொண்டு போனது கூட அவசர பணத்தேவையால்தான். மீனாட்சி மாமி கேட்டபோது போன் கொடுக்காததும், அதனால்தான். இந்த விவரம் எதுவும் அவர்கள் ஆதி அண்ட் அகி தவிர வேறு யாருக்கும் தெரியாது, பாவம் மாமாவுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை )

(பின் பின் குறிப்பு: அங்க அடையாளங்களை வைத்து அது குப்பு மாமா தான் என்ற முடிவுக்கு வந்து, வீடியோ எடுப்பதில் கில்“லேடி”யான அகிலாண்டம்மாள் நொடிப்பொழுதில் தன்னுடைய மொபைலில் அவர் ஓடுவதை வீடியோ எடுத்து, அதைக் காலனி அஸோஸியேஷன் வாட்சப் குரூப்பில் போஸ்ட் செய்ய, யார் இந்த புது திருடன்? என்று, பரிமளா மாமி கமெண்ட் போட, மீனாட்சி மாமி வாசலில் உறுமிக்கொண்டு அவர் வருகைக்காக காத்திருக்கும் விவரம், முகத்தை மறைத்திருக்கும் துண்டை எடுத்துவிட்டால் யாருக்கும் , எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு வீட்டை நோக்கி, காபிக்கு ஏங்கியபடி திரும்ப வந்துகொண்டிருக்கும் மாமாவுக்கு, பாவம், தெரியவே தெரியாது.)