தொடர்கள்
புத்தக விமரிசனம்
”ராஜீவ் கொலை...” - ஆர்.கே. ராகவன் சுயசரிதை... - ஆர். ரங்கராஜ்.

2020930171750583.jpeg

ராஜீவ் கொலை சம்பவத்திற்கு திராவிட கட்சிகளின் போக்கும் ஒரு காரணம்: -ஆர்.கே. ராகவன்.

முன்னாள் ஐ.ஜி. யும் சிபிஐ இயக்குநருமான ஆர்.கே. ராகவன் ஆக்டோபர் 26 ம் தேதி தனது சுயசரிதையான ‘A Road Well Travelled’ (சிறப்பான பயணம்) என்ற புத்தகத்தில், சென்னை - ஸ்ரீபெரும்புதூரில் 1991, மே 21 அன்று நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியும் மேலும் சிலரும் படுகொலை செய்யப்பட்டது குறித்து பல தகவல்களை வழங்கி உள்ளார்.

அதில், விசேஷ பாதுகாப்பு படை (SPG), நாட்டின் பிரதமருக்கும், முன்னாள் பிரதமர்களுக்கும், பாதுகாப்பு வழங்கப்படுவதற்கான முறையை மாற்றியமைத்ததாக வி.பி. சிங் பற்றியும் குறிப்பட்டுள்ளார். அவர்தான் ‘முன்னாள் பிரதமர்களுக்கு இன்னாள் பிரதமர்களுக்கான அதே விதமான பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது’ என்று முதலில் அறிவித்தார். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு வி.பி. சிங்கின் இந்த முடிவும் ஒரு காரணம் என்று சுட்டிக் காட்டிய ராகவன், அந்த விசேஷ படையின் பாதுகாப்பு இருந்திருந்தால், நிச்சயமாக அந்தச் சம்பவத்தை தடுத்திருக்கலாம், ராஜீவ் பிழைத்திருப்பார் என்றும் ஆணித்தரமாக கூறுகிறார்.

அப்போது தமிழக காவல்துறையின் ஐ.ஜி-யாக செயல்பட்ட ராகவனின் மேற்பார்வையில், ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருந்தாலும் யாரும் எதிர்பார்க்காத வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது. தனது கடமையிலிருந்து தவறிய காவல்துறை ஒரு பக்கம் இருந்தாலும், வி.பி. சிங்கின் அந்த பாதுகாப்பு முடிவும், கொலை சம்பவத்தில் நேரடி பங்களிப்பு இல்லையென்றாலும் விடுதலைப் புலிகளுக்கு முழு சுதந்திரமும், ஆதரவும் அளித்த தமிழக திராவிட கட்சிகளின் அன்றைய போக்கும் ஒரு காரணம் என்றே ராகவன் பதிவு செய்திருக்கிறார். மேலும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி, பொது மக்களிடம் நெருங்கிப் பழகி வந்த ராஜீவ் காந்தியின் மனப்போக்கும் மற்றொரு காரணம் என்று ராகவன் தெரிவிக்கிறார்.

2020930171634239.jpeg

‘இந்த காரணங்களினால், மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த இளம் தலைவரை நாடு இழந்தது’ என்று ராகவன் தனது வேதனையை பதிவு செய்கிறார்.

விடுதலைப் புலிகளின் முட்டாள்தனமான, மனிதாபிமானமற்ற செயல் அனைவராலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ராகவன் கூறுகிறார். ‘சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஒரு கூட்டம், இந்த வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளது’ என்று தெரிவிக்கும் ராகவன், ‘வருங்கால சந்ததியினர், புலிகளையும் அவர்களின் அனுதாபிகளையும் நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள்’ என்றும் தன் கருத்தினை பதிவு செய்கிறார்.

“1985-87 ல் நான் தமிழ்நாட்டில், மத்திய அரசின் ஐ.பி-யில் பணியாற்றிய பொழுது, பல இலங்கைக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்க நேர்ந்தது – அமிர்தலிங்கம், சந்திரஹாசன், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பாலசிங்கம், பிரபாகரன் போன்றவர்கள் அவர்கள்.

இவர்களில் பாலசிங்கம் நன்கு படித்தவர். பிரச்சனைகளை நன்கு ஆராய்வார்.

பிரபாகரனுக்கு தெரிந்த மொழி, வன்முறை தான் என்றுதெரிய வந்தது. தான் திட்டமிடும் கொலைச் சம்பவங்களை புகைப்படங்கள் மூலமாக காண பிரபாகரன் எப்போதுமே விரும்பியிருக்கிறார். அப்படிதான் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்கு, ஹரிபாபு எனும் புகைப்படக் கலைஞர் அவரது ஆட்களின் திட்டத்தின்படி அனுப்பப்பட்டார். தற்செயலாக அந்த காமிராவை (இறந்த ஹரிபாபுவின் உடலின் மீது கிடந்தது) அதன் முக்கியத்துவம் தெரியாமலேயே அப்புறப்படுத்தியது அந்த ஏரியா போலீஸ். பிறகு அந்த போலீஸ் நிலையத்திற்கு சென்று அதனை வழக்குப் பொருட்களில் ஒன்றென நான் ஒப்படைத்தேன். அந்த காமிரா மூலம்தான் விடுதலைப் புலிகளின் சதி திட்டம் அம்பலமானது. இந்த எனது செயலை வர்மா கமிஷன் மற்றும் உச்ச நீதி மன்றமும் வெகுவாகப் பாராட்டினர்.” எனக் கூறுகிறார் ராகவன் தம் புத்தகத்தில்! (தனது புத்தகத்தில் வெளியான சில ஸ்ரீபெரும்புதூர் படுகொலை சம்பவப் படங்களை கொடுத்து உதவிய எம். ஏ. பார்த்தசாரதி, ஆர். ரங்கராஜ். மற்றும் விகடன் குழுமத்திற்கும் ஆர். கே. ராகவன் தனது நன்றியினை பதிவு செய்துள்ளார்).