தொடர்கள்
ஆன்மீகம்
நலம் தரும் நவகிரக நாயகர்கள்..!! - 11 - ஆரூர் சுந்தரசேகர்.

புதன் ஸ்தலம் - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில்

The heroes of the nine planets that bring good luck..11

பிரசித்தி பெற்ற செவ்வாய் (அங்காரகன்) ஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றி இதற்கு முன் உள்ள பதிவில் பார்த்தோம். நவகிரக ஸ்தலங்களில் நான்காவது ஸ்தலமாக விளங்குவது தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் புதனுக்கு உரிய ஸ்தலமாகவும், 'ஆதி சிதம்பரம்' என்றும் போற்றப்படுகிறது. சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடனம் ஆடுவதற்கு முன்பாக, இந்த தலத்தில் சிவபெருமான் தனது ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்தியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இங்குச் சிவபெருமான் சுவேதாரண்யேஸ்வரர் ஆகவும், பார்வதி பிரம்ம வித்யாம்பிகையாகவும் அருள்பாலிக்கின்றனர். நவக்கிரகங்களில் புத்திசாலித்தனம், கல்வி, பேச்சுத்திறன் மற்றும் வியாபாரத்திற்கு அதிபதியான புதன் பகவானுக்குரிய இங்குத் தனிச் சந்நிதி உள்ளது. இவருக்கு மதிமகன் (சந்திரனின் மகன்), சிந்தைகூரியன் (அறிவாளி), கணக்கன், தாரை புத்திரன், அருணன், சாமன், தூதுவன், வித்தயாகரகன் போன்ற பல வேறு பெயர்கள் உண்டு. விஷ்ணுவின் அம்சமாகவும், கல்வியை அருள்பவராகவும் இவர் போற்றப்படுகிறார். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்குள்ள ருத்ரபாதம் மிகவும் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது.

The heroes of the nine planets that bring good luck..11


பாடல் பெற்ற சிவதலங்களில் இது 11வது தேவாரத்தலமாகும். அம்மனின் 51 சக்திப் பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும்.
சோழ மன்னர்களான ஆதித்திய சோழன் மற்றும் ராஜராஜ சோழன் ஆகியோரால் கட்டப்பட்ட இக்கோயிலில், பல்லவர் காலத்தின் தொடக்கமும், விஜயநகர அரசர்களின் காலத்து விரிவாக்கங்களும் காணப்படுகின்றன. இந்த கோயிலைச் சுற்றி நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு காலகட்டங்களில் இக்கோயிலைப் புனரமைத்து, சீர் செய்த மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்தல புராணம்:
காவிரி வடகரையில் அமைந்துள்ள திருவெண்காடு
(சுவேதாரண்யம்) என்ற பெயர் வரக் காரணம், இத்தலம் ஒரு காலத்தில் வெண்மையான காடாக (வெள்ளெருக்கு, வெள்ளை வடவால விருட்சங்கள் நிறைந்த வெண்காடு) இருந்ததே ஆகும். வடமொழியில் 'சுவேதம்' என்றால் வெள்ளை, 'ஆரண்யம்' என்றால் காடு, எனவே இறைவனும் சுவேதாரண்யேஸ்வரர் (வெண்காட்டு நாதர்) என அழைக்கப்படுகிறார். இந்த இடத்தில் தான் சிவபெருமான் அகோரமூர்த்தியாகத் தோன்றி, மருத்துவாசுரனை வதம் செய்தார். சிவ பெருமான் அசுரனை ஒரு மரத்தின் அடியில் வதம் செய்ததாகவும், அந்த இடத்திலேயே திருவெண்காடு ஸ்தலம் அமைக்கப்பட்டுள்ளது. திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு. மேலும் அகோரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும் இடமாகவும் இது விளங்குகிறது.

The heroes of the nine planets that bring good luck..11

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில், புதன் பகவான் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து அருள் பெற்றதால், கல்வி, ஞானம், பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம் மற்றும் மொழிகளில் சிறந்த ஞானத்தைப் பெற்றார். இத்தலம் நவகிரகங்களில் புதனுக்கு உரியச் சிறப்புத் தலமாக (புதன் ஸ்தலம்) திகழ்கிறது. தேவேந்திரன் தன் வெள்ளை யானையுடன் வந்து, அகோரமூர்த்தியின் அருள் பெற்று, அசுரனால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்றான் எனப் புராணங்கள் கூறுகின்றன.
அப்பர், சுந்தரர், சம்பந்தர் மாணிக்கவாசகர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்,பிரம்மன், இந்திரன், வெள்ளையானை, சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர், நாரதர், வியாக்ரபாதர், கிருஷ்ண த்வைபாயனர் முதலியோர் இத்தல சிவனை வழிபட்டுள்ளனர்.

ஸ்தல அமைப்பு:

The heroes of the nine planets that bring good luck..11

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில், இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள்நுழைந்ததும் இடது புறம் முக்குளத்துள் ஒன்றான அக்கினி தீர்த்தமும் மற்றும் கரையில் விநாயகர், மெய்கண்டார் சந்நிதிகளும் உள்ளன. பிராகாரத்தில் அடுத்த திருக்குளமாக சூரியதீர்த்த கரையில் சூரிய தீர்த்தலிங்க சந்நிதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை அடுத்து பிரம்ம வித்யாம்பிகை அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. அம்பாள் கோயில் மண்டபத்தின் இடது புறம் புதனுக்குத் தனி கோயிலாக அமைந்துள்ளது.
அம்பாள் சந்நிதிக்கு எதிரில் சந்திர தீர்த்த திருக்குளம் அமைந்துள்ளது. இத்தலம் புதனுக்குரிய தலமாதலின் புதனை வலம் வந்து வழிபட்ட பின்னரே இங்குத் தரிசனம் பூர்த்தியாகும். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வ மரம் உள்ளது. இதன் அருகில் பிரமபீடமும் உள்ளது. இங்கு வழிபட்ட பிரம்மனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள். அம்பாள் சந்நிதிக்குள்ளே வலது புறத்தில் பள்ளியறை, உள்பிரகாரத்தில் பிள்ளை இடுக்கி அம்பாள் சந்நிதியும், சுக்கிரவார அம்மன் சந்நிதியும் உள்ளன. சந்திரதீர்த்தத்தின் கரையில் வட வால (வட ஆல) மரமுள்ளது. இது மிகப்பெரிய மரமாகத் தழைத்து விளங்குகின்றது. மரத்தினடியில் விநாயகரும், அவருக்கெதிரில் ருத்ரபாதம் என்னும் பெயரில் இருதிருவடிகள் செதுக்கப்பட்டும் உள்ளன. இங்குச் சந்திரன் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வெளிப் பிரகாரம் முடித்து,பின் த்வஜஸ்தம்பத்தை வணங்கி உட்சென்றால் வலது பக்கத்தில் உற்சவ மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் முகப்பின் மேலே வண்ணச் சுதையில் திருக்கல்யாணக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தின் தென் பகுதியில் பெரியவாரணப் பிள்ளையாருக்கும், சோமாஸ்கந்தருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. அதனை அடுத்து,அறுபத்துமூவர், பத்திரகாளி, வீரபத்திரர், இடும்பன், சுகாசனமூர்த்தி, நாகலிங்கம், விநாயகர், நால்வர், விஸ்வேஸ்வரர் முதலிய திருமேனிகள் ஒரு மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
கஜலட்சுமி தரிசனைத்தையடுத்த ஏழு அடி உயரமுள்ள
அகோரமூர்த்தி நின்ற மேனியராய், சூலத்தை இருகைகளிலும் சாய்த்துப்பிடித்து, எண்கரங்களுடையவராய்ச் சற்றுத் தலைசாய்த்து, முன்பின்னாகத் திருவடிகளை வைத்து அகோரராக - அற்புதமூர்த்தியாகக் காட்சி தருகின்றார்.

The heroes of the nine planets that bring good luck..11

இதன்பக்கத்தில் உற்சவர் சிலையும் உள்ளார். இங்குள்ள நடராஜ சபை தில்லையைப் போலவே செப்பறையில் அமைந்துள்ளது. உள்ளே உள்ள ஸ்படிகலிங்கத்திற்கு நாள்தோறும் பூஜை நடைபெறுகிறது. மற்றும் சிதம்பர ரகசியமும் உள்ளது. பைரவரை யடுத்து, காசி துண்டீர விநாயகர், அஷ்டபுஜதுர்க்கைச் சந்நிதிகளும் உள்ளன. இங்குத் துர்க்கை மேற்கு நோக்கியிருப்பது இங்கு விசேஷமானது. பொதுவாகச் சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் சதுர வடிவில், அவரவர் திசையை நோக்கிய வண்ணம் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இந்த கோயிலில் நவக்கிரகங்கள் சதுர வடிவில் அமைந்திராமல், 'ட' என்ற தமிழ் எழுத்து வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

The heroes of the nine planets that bring good luck..11


மூலவர் சந்நிதியில், சிவபெருமான் சுவேதாரண்யேஸ்வரர் (வெள்ளை ஈஸ்வரர்) என்ற பெயரில் மகாலிங்க மூர்த்தமாக எழுந்தருளி உள்ளார்.
ஸ்தல தீர்த்தம் : சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்னி
ஸ்தல விருட்சம் : ஆல், கொன்றை, வில்வம்

ஸ்தல பெருமை:
இத்தலத்தில் மூன்று மூர்த்திகள், மூன்று சக்தி, மூன்று தீர்த்தம், மூன்று தலவிருட்சம் இருப்பது தனிச்சிறப்பு.
இத்தலத்தில் மூன்று மூர்த்திகள் (திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), மூன்று சக்தி (பிரம்ம வித்யாம்பிகை, காளி, துர்கை), மூன்று தீர்த்தங்கள் (அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்கள்), மூன்று தலவிருட்சங்கள் (வடவால், வில்வம், கொன்றை) உள்ளன.
ஆதி சிதம்பரம்: சிவபெருமான் முதன்முதலில் தாண்டவம் ஆடிய இடம் என்பதால் இது 'ஆதி சிதம்பரம்' என்று அழைக்கப்படுகிறது.

The heroes of the nine planets that bring good luck..11

ருத்ர பாதம்: காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல, இங்கு வடவால் விருட்சத்தின் கீழ் 'ருத்ர பாதம்' உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அகோரமூர்த்தி: சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவமான அகோரமூர்த்தி மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகக் இங்குக் கருதப்படுகிறார்.
பிள்ளையிடுக்கி அம்மன்: திருஞானசம்பந்தர் திருவெண்காட்டுக்கு வந்தபோது, அந்த ஊரே சிவலோகமாகத் தெரிந்ததால், மண்ணில் கால் வைக்க அஞ்சி, அம்பிகையை அழைத்தார். உடனே பெரியநாயகி அம்மன், சம்பந்தரைத் தன் இடுப்பில் சுமந்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றார், இதனால் அவர் பிள்ளையிடுக்கி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.

The heroes of the nine planets that bring good luck..11


இத்தலம் காசிக்கு இணையான அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

திருவிழாக்கள்:
சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை 12 மாதங்களிலும் திருவிழா கொண்டாடும் சிறப்புடைய திருத்தலம்.
சித்திரை மாதம்:- திருவோண நட்சத்திரத்தில் நடராஜர் அபிஷேகம்.
வைகாசி மாதம்:- அமாவாசையில் சிவப்பிரியர் மணிகர்ணிகையில் தீர்த்தமாடுதல், வெள்ளை யானைக்குச் சாப விமோசனம்.
ஆனி மாதம்:- உத்திர நட்சத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம்.
ஆடி மாதம்:- பட்டினத்தார் சிவ தீட்சை பெறத் திருவெண்காட்டிற்கு வருதல். சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் மணிகர்ணிகையில் தீர்த்தம் கொடுத்தல். சிவபூஜை செய்வித்தல், இரவு ரிஷப வாகனராய்க் காட்சி தருதல், அம்பாளுக்கு ஆடிப்பூரம் பத்து நாள் விழா. ஆடி அமாவாசைக்குச் சங்கமத்திற்குச் சுவாமி எழுந்தருளல்.
ஆவணி மாதம்:- வளர்பிறை சதுர்த்தசியில் நடராசருக்கு அபிஷேகம். கோகுலாஷ்டமி பெருமாள் சேவை. விநாயகர் சதுர்த்தி. ஆவணி மூலம் அன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.
புரட்டாசி மாதம்:- வளர்பிறைச் சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேகம். நிறைபணி. தேவேந்திரப் பூசை. நவராத்திரி விழா. விஜயதசமியன்று சுவாமி மணிகர்ணிகை தீர்த்தக் கரையில் அம்பு போடல். அம்பாளுக்கு லட்சார்ச்சனை முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.
ஐப்பசி மாதம்:- அசுவினி நட்சத்திரத்தில் அன்னாபிஷேகம். வளர்பிறை பிரதமை தொடங்கி கந்தசஷ்டி விழா முதலியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கார்த்திகை மாதம்:- ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் ஸ்ரீஅகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், பூசையும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறன்று மகாருத்ராபிஷேகமும், விபூதி அலங்காரமும் நடைபெறும். சோமவாரம் (திங்கள்கிழமை) தோறும் சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். பரணி, கார்த்திகை தீப விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதம்:- தனுர்மாத பூஜை, சதயத்தன்று மாணிக்க வாசகர் விழா, டோலோற்சவம் திருவாதிரையில் ஸ்ரீநடராஜர் தரிசனம் நடைபெறும்.
தை மாதம்:-சங்கராந்தி, மறுநாள் அம்பாள் கனுகுளிக்க மணிகர்ணிகைக்குப் போதல், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டைச் செல்லுதல். ஐயனாருக்குப் பத்து நாட்கள் விழா, பிடாரிக்குப் பத்து நாட்கள் விழா.
மாசியில் பிரம்மோத்ஸவம் 11 நாட்கள்(இந்திர விழா)
பங்குனி மாதம்:- அகோரமூர்த்திக்கு "லட்சார்ச்சனை"

The heroes of the nine planets that bring good luck..11

பிரார்த்தனை:
இங்குக் கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்குத் தனிக் கோயில் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, உடலில் நரம்பு சம்பந்தமான நோய்கள், திருமண தோஷம்,
புத்திர பாக்கியம் இல்லாமை போன்ற குறைபாடுகளுக்குப் புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்குப் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும்
திறந்திருக்கும். சிறப்பு நாட்களில் இந்த நேரம் மாறுபடலாம்.

எப்படிச் செல்வது:
திருவெண்காடு சீர்காழியிலிருந்து 14 கி.மீ தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 26 கி.மீ தூரத்திலும் உள்ளது. கும்பகோணம், சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். மயிலாடுதுறையிலிருந்து மங்கை மடம் செல்லும் நகரப் பேருந்து திருவெண்காடு வழியாகச் செல்கிறது. சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் நகரப் பேருந்து திருவெண்காடு வழியாகச் செல்கிறது.

புதன் தோஷங்கள் நீங்கி, நல்ல வாழ்க்கை அமைய
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம்..!!