தொடர்கள்
சோகம்
சென்னையில் பறவை காய்ச்சல்- மாலா ஸ்ரீ

20260106175710900.jpeg

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா, கோட்டயம் மாவட்டத்தின் பல்வேறு பண்பாடுகளில் வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடைகள் போன்றவை கடந்த மாதம் திடீரென அதிகளவில் செத்து விழுந்தன. இறந்த பறவைகளின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து, புனேவில் உள்ள கால்நடை மருத்துவ ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் ஆய்வு முடிவில், ‘திடீரென இறந்த பறவைகளுக்கு எச்1என்1 (H1N1) எனும் வைர தொற்று காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக கேரள கால்நடை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள நாடுகாணி, தாளூர், சேரம்பாடி சோலாடி, நம்பியார்குன்னு, பாட்டவயல் உள்பட பல்வேறு சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் தமிழக-கேரள மாநில கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் கோழிகள், கோழி தீவனங்கள், கோழி சார்ந்த பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் தமிழக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏவியன் புளூ' எனும் பறவை காய்ச்சல், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று. இத்தொற்று பாதித்த பறவைகளின் எச்சம், உமிழ்நீர் மூலம் மற்ற பறவை, விலங்கினங்களுக்குப் பரவுகிறது. கோழி, பால் பண்ணைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு, பறவை மற்றும் விலங்குகள் மூலம் காய்ச்சல் பரவுகிறது. இந்த பறவை காய்ச்சல் மனிதர்களை தாக்கினால், அவர்களுக்கு கடும் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். சில நேரம் மனிதர்களின் மூளையையும் தாக்கும். நன்றாக வேகவைக்கப்பட்ட கோழி இறைச்சி, முட்டைகளை உண்பதாலோ அல்லது பதப்படுத்தப்பட்ட பாலை குடிப்பதாலோ பறவை காய்ச்சல் வராது என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மாத இறுதியில் பெரும்பாலான காகங்களின் அசாதாரண உயிரிழப்புகளுக்கு, தற்போது H5N1 நோய்க்கிருமிகளுடன் கூடிய பறவை காய்ச்சல்தான் காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. சென்னை நகரில் இறந்த காகங்களின் மாதிரிகளை தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் விலங்கு நோய் நுண்ணறிவுப் பிரிவினர் சேகரித்து, அவற்றை மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள தேசிய உயர்பாதிப்பு விலங்கு நோய் நிறுவன ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ஆய்வக பரிசோதனை முடிவில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காகங்களின் இறப்புகளுக்கு, விலங்குகளுக்கு இடையே வேகமாகப் பரவும் தன்மை கொண்ட மிக அபாயகர நோய்க்கிருமியான H5N1 வைரஸ் வகைதான் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை அமைச்சகம், ‘H5N1 பரவல் உறுதி’ குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கை, தொடர் கண்காணிப்பு, முழுமையான கிருமி நீக்கம் ஆகியவற்றை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதவிர, பறவைகள் இறந்ததாகப் பதிவான அனைத்து பகுதிகளிலும் நகராட்சி மற்றும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் முழுமையான துப்புரவு மற்றும் கிருமிநாசினி பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அந்தந்த பகுதிகளில் அசாதாரணமான பறவைகளின் இறப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாக பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும். பண்ணை மற்றும் வீடுகளில் கோழிகள் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். வனம் மற்றும் வனவிலங்கு துறைகளும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, காட்டு பறவைகளின் இறப்பு குறித்து தீவிர கண்காணிப்பு, பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நாம் கேட்டதற்கு, இறந்த பறவைகளுடன் வெறும் கைகளால் தொடர்பு கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவற்றை கையாளும் பணியாளர்கள் கட்டாயம் கையுறைகள் அணிந்து, பின்னர் 2 கைகளையும் சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். கால்நடை மருத்துவ ஊழியர்கள், சம்பவ இடத்திலேயே இறந்துபோன பறவைகளைப் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. அதற்கு பதிலாக, இறந்த பறவைகளின் சடலங்களை, நிர்ணயிக்கப்பட்ட பிராந்திய நோய் கண்டறியும் ஆய்வகங்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்று தமிழக கால்நடை துறை மருத்துவ குழுவினர் அறிவுறுத்துகின்றனர்.

சர்வதேச அளவில் கடந்த 2003 முதல் 2024ம் ஆண்டு வரை, சுமார் 250க்கும் மேற்பட்ட மனிதர்களிடம் H5N1 வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் இதுவரை மனிதர்களுக்கு H5N1 வைரஸ் தொற்று ஏற்பட்டதாக தெரியவில்லை. எனினும், நாம் அனைவரும் இறைச்சி உணவுகளை சாப்பிடுவதில் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை மிக முக்கியம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.