தொடர்கள்
பொது
கூண்டுக்குள் உலகம்-தில்லைக்கரசிசம்பத்

20260107085313975.jpeg

இன்று உலகின் அதிகார மையத்தில் மனிதன் நிற்கிறான்.

ஆனால் இந்த அதிகாரம் இயற்கை கொடுத்ததா? இல்லை.

அது பறவைகள், மிருகங்கள், காடுகள் இயற்கை என மனிதன் அனைத்தையும் அவனாக எடுத்து கொண்டதால் வந்தது.

விலங்குகளை காட்டுக்குள் ஒதுக்கி, பறவைகளை கைக்கு அடக்கமாக மாற்றி வானில் பறக்கவிட்டோ, கூண்டுக்குள் அடைத்து வைத்தோ “ ஆஹா ! எவ்வளவு அழகு பாருங்கள் “ என்கிறான்.

மனிதன் இவ்வுலகில் தோன்றுவதற்கு முன் இருந்த பறவைகள் நிச்சயமாக இவ்வுலகில் அழகின் அடையாளம் அல்ல.

10 அடி உயரம், பறக்காத போதும் வேகமான ஓட்டம். கூரிய மூக்கு, இரும்பு நகம் என அக்கால பறவைகள், எதிரில் பார்க்கும் உயிரினங்களை குத்திக்g கிழித்து தின்று கொண்டிருந்தன.

6 கோடி வருடங்களுக்கு முன் உலகத்தையே கோலோச்சிய பயங்கர பறவை(Terror Birds), பிரமாண்ட கழுகுகள்(Giant Eagles), பெரிய ஆந்தைகள் (Massive Owls) எனஇவை எல்லாம் ஒரு வகையில் வானத்தில் இருந்து ஆட்சி செலுத்தி வாழ்ந்தன.

கோடி வருடங்களுக்கு முன்பு வரை இவ்வுலகில் வாழ வேண்டும் என்றால் அதிக உடல் வலிமை இருந்தால் போதும், அதிக அதிகாரம் கிடைக்கும்.

பரிணாம வளர்ச்சி என்பது ஒரு கொடூர சர்வாதிகாரியின் ஆட்சி போன்றது. பாவம், பரிதாபம், இரக்கம், சம உரிமை எல்லாம் கிடையாது.

பெரியது,மெதுவானது என்றால் அழியும்.

பயமில்லாதது என்றால் வேட்டையாடப்படும்.

சூழ்நிலைக்கேற்ப மாறாதது என்றால் வரலாற்றிலிருந்தே நீக்கப்படும்.

மனித இனம் தோன்ற ஆரம்பித்த பின் பறவைகள் இதை அனுபவித்தன.

மனிதன் எப்படி உலகை கைப்பற்றினான்?

அவனுக்கென்ன குத்தி கிழிக்க இரும்பு நகம் இருந்ததா?, கூர்மையான நீண்ட பல் இருந்ததா?

சிறுத்தை போல வேகமாக ஓடுவானா?

பறவையை போல் நினைத்த கணத்தில் வானில் எழும்பி பறப்பானா?

இல்லை நீரில் மூச்சடக்கி வாழ்வானா?

எதுவும் கிடையாது.

ஆனால் தந்திரமான மூளை உடையவன் என்ற காரணத்தால் அவனை விட பலம் பொருந்திய மற்ற உயிரினங்களை, அவன் குரங்கிலிருந்து மனிதனாக மாற துவங்கியதிலிருந்தே போராடி வெற்றி கொள்ள ஆரம்பித்தான்.

மனிதன் தனியாக இருந்தால் தான் பலவீனமானவன்.

ஆனால் குழுவாக மாறி, ஒரு தேர்ந்த அமைப்பாக செயல்பட தொடங்கியதால், உயிர் வாழும் விதிகளையே மாற்றினான்.

மூளை பலம், உடல் பலத்தை பின் தள்ளியது.

மனிதன் வந்த பிறகு, பறவைகளுக்கு இரண்டே வாய்ப்புகள்.

மனிதர்களை எதிர்ப்பது, அல்லது தங்களை மாற்றிக்கொண்டு மறைவாக, இல்லையென்றால் மனிதனை அண்டி வாழ்வது.

முன்னது இந்த பூமியிலிருந்தே அழிக்கப்பட, பின்னது மயில், குயில், கிளி, கோழி, கருடன் என மனிதன் கொஞ்சுவதற்கும் ,கூண்டில் அடைப்படுவதற்கும் , வானில் தென்பட்டால் மனிதன் கன்னத்தில் போட்டுக்கொள்வதற்குமாக மாறின. அதிகாரத்தை விட்டுக்கொடுத்த பின் தான் இவைகள் உயிர் பிழைக்க முடிந்தன.

இன்று நாம் பார்க்கும் “சாதுவான” பறவைகள் காகம், புறா, குருவி உண்மையில் யார்?

அதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யாதவர்கள்.

மனிதனின் சாம்ராஜ்ஜியத்தில் வாழ கற்றவர்கள்.

உயிர் பிழைக்கும் வித்தையை கற்றுக்கொண்டவர்கள்.

மனிதன் தோன்றுவதற்கு முன் இயற்கை, பாதி அபூர்வ மிருக பறவை இனங்களை அழித்தது எனில், மனிதன் வந்த பின் அவன் பங்குக்கு அவனுக்கு பொருந்தாதவர்களை நீக்கினான்.

20260107063823265.jpeg

மனிதனை வேட்டையாடிய பறவைகள், அவனால் அழிக்கப்பட்டன. அவனுக்கு பயன்படும் உயிரினங்கள் மட்டும் உயிர் பிழைத்தன.

ஒத்து வராததை காட்டுக்குள் விரட்டி கோடு போட்டு "வராதே!" என தடை செய்தான்.

இப்போது, இடம் பத்தவில்லை என போட்ட கோட்டை அடிக்கடி அழித்து விலங்கினங்களையும், பறவையினங்களையும் சிறிய வட்டத்துக்குள் சுருக்கி தனது அதிகாரத்தை பெருக்கிக்கொண்டிருக்கிறான் மனிதன்.

மெக்சிகோவில் எரிக்கல் விழுந்து டைனோசரை அழித்தது.

மிகப்பெரிய பறவையினங்கள், பாலூட்டிகளின் பெருக்கத்தில் அழிந்தன.

கடைசியில் வந்த மனிதன் “நான் மட்டுமே இவ்வுலகில் வாழ தகுதியானவன்” என தன் சாம்ராஜ்ஜியத்தை பூமியில் நிலைநாட்டிக்கொண்டிருக்கிறான்.

மனிதன்தான் இறுதிவரை ஆள்வானா?

டைனோசருக்கு விழுந்த எரிகல் எப்போது வேண்டுமானாலும் திரும்ப விழலாம்.

இல்லை, காலநிலை மாற்றம் உலகின் பெரும்பான்மை மனிதர்களை அழிக்கலாம்.

ஒருநாள், மனிதன் இன்னொரு Terror Bird ஆகலாம்.

அது வரையில் மனிதர்கள் கூண்டுக்குள் அடைப்பட்ட கிளிகளை மைனாக்களை “ கண்ணே! மணியே! “ என்று கொஞ்சிக்கொள்ளட்டும்.

இயற்கை யாரையும் ஆள அனுமதிப்பதில்லை, தழுவ மட்டுமே அனுமதிக்கிறது.

தன்னை சிறை வைத்திருக்கும் இயற்கை எனும் பெரிய கூண்டு எப்போதுவேண்டுமானாலும் இறுக்கி நெரித்து அவனை அழிக்கலாம் என்பதை மனிதன் மறந்துவிட்டான்.

இயற்கையின் நீதியில் எஞ்சியிருப்பது அதிகாரங்கள் அல்ல,

அந்தந்தக்காலத்திற்குத் தகுதியான உயிரினங்கள் மட்டுமே!

அதில் மனிதனும் விதிவிலக்கல்ல.

இன்று மகுடம் சூட்டிய மனிதன் ஒருநாள் ஒட்டுமொத்தமாக மண்ணுக்குள் புதையும்போது, அவன் சிறைவைத்த கிளிகள் வானில் சுதந்திரமாகப் பாடி பறந்துக்கொண்டிருக்கும்.

2026010706370653.jpeg