இரண்டாவது முறையாக முட்டையிட கரை திரும்பிய கடல் ஆமை

செயற்கைக்கோள் குறியீடு (satellite tag) பொருத்தப்பட்ட எட்டு ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளில் ஒன்று, இந்த பருவத்தில் இரண்டாவது முறையாக முட்டையிட, ஸ்ரீனிவாசபுரம் பகுதியில் உள்ள அடையாறு முகத்துவாரத்திற்க்கு வந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த ஆமை, முதல் கட்டமாக பெசன்ட் நகரில் முட்டையிட்டதாகவும், இரண்டாவது கூடு இடம் முதல் கூடு இருந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் அமைந்திருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். இது ஆலிவ் ரிட்லி ஆமைகளில் காணப்படும் ‘இட நம்பிக்கை’ (site fidelity) என்ற இயல்பை உறுதிப்படுத்துவதாக அவர்கள் விளக்கினார்.
மாநில வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ கூறுகையில், இந்திய வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் (WII) மற்றும் வன விலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடந்த மாதம் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக எட்டு கடல் ஆமைகளுக்கு செயற்கைக்கோள் குறியீடுகளைப் பொருத்தி, அவற்றின் நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
“கடந்த வாரம், குறியீடு பொருத்தப்பட்ட ஆமைகளில் ஒன்று ஸ்ரீனிவாசபுரம் பக்கத்தில் உள்ள அடையாறு முகத்துவாரத்தை அணுகியது. அதன் நகர்வு தரவுகள் மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில், அந்த ஆமை இரண்டாவது முறையாக முட்டையிட கரைக்கு வந்தது என்பதை குழு உறுதி செய்தது,” என்றார்.
முட்டையிடும் நடத்தை குறித்து விளக்கமளித்த அவர், கடலில் இணை சேர்க்கைக்கு பிறகு பெண் ஆமைகள் கரைக்கு வந்து பொதுவாக ஒரு பருவத்தில் இரண்டு முறை முட்டையிடுவதாக கூறினார். அரிதான சந்தர்ப்பங்களில், மூன்று அல்லது நான்கு முறைகளிலும் முட்டையிடும் நிகழ்வுகள் இருக்கலாம் என்றும், ஆனால் அவை மிகக் குறைவாகவே நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்கள் கடல் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தை (ஸ்டூடன்ட்ஸ் சீ டர்டில் கன்சர்வேஷன் நெட்வொர்க்) சேர்ந்த தன்னார்வலர் ஷ்ரவன் கிருஷ்ணன், இனப்பெருக்க காலத்தில் பெண் ஆமைகள் பல ஆண்களுடன் இணை சேர்க்கை மேற்கொள்ளும் என கூறினார். “அவை விந்தணுக்களை சேமித்து வைத்து, வெவ்வேறு முட்டை தொகுதிகளை இடும், இரண்டு, மூன்று அல்லது நான்கு முறை கூட முட்டையிட முடியும்,” என்றார்.

வனவிலங்கு அதிகாரிகள், பெசன்ட் நகரில் உள்ள முதல் கூட்டிலிருந்து 135 முட்டைகளையும், அடையாறு முகத்துவாரத்திற்கு அருகே உள்ள இரண்டாவது கூட்டிலிருந்து 137 முட்டைகளையும் பாதுகாப்பாக சேகரித்ததாக தெரிவித்தனர்.
இந்த ஜனவரியில் முட்டையிடும் செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை கடற்கரையோரம் 63 கூடுகள் பதிவாகியுள்ளன; கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13 கூடுகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் 227 கூடுகள் கண்டறியப் பட்டதாகவும், அது 2021 க்குப் பிறகு அந்த மாதத்தில் பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும் என்றும் தெரிவித்தனர்.

இந்த பருவத்தின் முதல் கட்ட குட்டி ஆமைகள் பிப்ரவரி நடுப்பகுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

Leave a comment
Upload