
குமரி பள்ளி மாணவி கண்டுபிடிப்பு
தமிழ்நாட்டில் சமீபகாலமாக தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், அவை இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை கடிப்பதற்கு துரத்துவதுமாக மக்களிடையே பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
சாலையில் அச்சமின்றி மக்கள் நடக்க முடியாத சூழல் நிலவுகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, தெருநாய்க்கடிக்கு ஆளாகிறவர்களின் கடந்தாண்டு மட்டுமே ஆயிரக்கணக்கானோர் நாய்க்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தாக்குதலுக்கு பள்ளி செல்லும் குழந்தைகளும் முதியோரும் பெருமளவில் இலக்காகி வருகின்றனர்.
தெருநாய் தொல்லை தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள் மிக முக்கியமானவை. குறிப்பாக, ‘தெருநாய் கடித்து உயிரிழப்போ அல்லது காயம் ஏற்பட்டாலோ, சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
தெருநாய்க்கடியில் இருந்து தப்பிக்க கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஏ.என்.ரஷ்னி, இந்திய அரசின் அறிவியல் மற்றம் தொழில்நுட்ப துறையின் ‘இன்ஸ்பயர் அவார்டு’ திட்டத்தின்கீழ் புதிய கருவியைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘இன்ஸ்பயர் அவார்டு’க்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே, எதிர்காலத்தில் மாணவர்களை அறிவியல் துறையில் ஒரு தொழில்முறை வாழ்க்கையை தொடர ஊக்குவிக்கும் ஒரு முன்னெடுப்பாகும். இதில் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு சிறந்த யோசனைக்கும் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை, சம்பந்தப்பட்ட மாணவரின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.
தனது ‘சென்சார் வாட்ச்’ கண்டுபிடிப்பு குறித்து குமரி பள்ளி மாணவி ஏ.என்.ரஷ்னி கூறுகையில், ‘‘இப்போது தெருநாய்க்கடி என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 2024-ம் ஆண்டில் 4.8 லட்சம் தெருநாய் தாக்குதல் நடந்துள்ளதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் அல்ல… பசி அல்லது பயணம் காரணமாக மனிதர்களை நாய்கள் தாக்குகின்றன. பதிலுக்கு, நாம் கற்களை எறிந்தோ அல்லது நாயை அடித்து விரட்ட முயற்சிக்கிறோம். தெருநாய்களுக்கு தீங்கு விளைவிக்காமல், அவற்றின் கடியிலிருந்து நம்மை பாதுகாக்க என்ன செய்யலாம் என்ற கேள்விக்கான பதில்தான் இந்த ‘சென்சார் வாட்ச்’ கண்டுபிடிப்பு கருவி.
ஒரு தெருநாய் நம்மை கடிக்க முற்பட்டால், அதனிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள, அதை பயமுறுத்துவதே போதுமானது. அனைத்து நாய்களும் ஒலிகளுக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை. இதனால் அவற்றை பட்டாசு போன்ற அதிக ஒலிச்சத்தம் பயமுறுத்துகின்றன என்பதே இதற்கு காரணம்.
நாய் பயந்து ஓடுமளவுக்கு அதிக சத்தத்தை உருவாக்கக்கூடிய சென்சார் கருவி இருந்தால், அது நம்மை தெருநாய்க்கடி மற்றும் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் என்ற நோக்கில்தான், இந்த சென்சார் வாட்ச் கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடிகாரம் போலிருக்கும் சென்சார் கருவியில் டயலின் பக்கத்தில் ஒரு சிறிய பஸ்ஸர் உள்ளது. இது, ஒரு கனமான ஒலியை உருவாக்கும். பஸ்ஸருடன் கைக்கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சென்சார் வாட்ச்சை கையில் அணிந்து தெருவில் நடந்து செல்லும்போது, நம்மை தெருநாய் கடிக்கவோ, தாக்கவோ முற்பட்டால், இந்த சிறிய பஸ்ஸர் பொத்தானை அழுத்தினால் கருவி செயல்பட்டு அதிக ஒலி எழுப்பும்.
இதனால் ஏற்படும் கடின ஒலியைக் கேட்டு, நம்மை கடிப்பதை விட்டுவிட்டு தெருநாய் தெறித்து ஓடிவிடும். இதைத் தங்களின் தயாரிப்புகளில் ஒரு அம்சமாக கைக்கடிகார உற்பத்தியாளர்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், நாய் தாக்குதலைக் கண்டறிந்து தானாகவே பஸ்ஸரை இயக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இக்கருவியை மேம்படுத்தினால், பஸ்ஸரை அழுத்தத் தெரியாத சிறுகுழந்தைகளும் பாதுகாக்கப்படுவர்.
எதிர்பாராத தெருநாய்களின் திடீர் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இக்கருவி உதவும் என்று குமரி பள்ளி மாணவி ஏ.என்.ரஷ்னி நம்பிக்கை தெரிவித்தனர். -

Leave a comment
Upload