தொடர்கள்
அனுபவம்
இலட்சிய இந்து ஓட்டல்-இந்துமதி கணேஷ்

இலட்சிய இந்து ஓட்டல்

ஆசிரியர் : விபூதிபூஷண் பந்தோபாத்யாய

தமிழாக்கம் : த. நா. சேனாதிபதி

வங்காள எழுத்தாளரான விபூதி பூஷணை நான் வாசித்தது இல்லை, அவரின் பதேர் பாஞ்சாலி சத்யாஜித்ரேவால் படமாக்க பட்ட போது அதை பற்றி கேள்விப்பட்டிருந்த போதும் அதை வாசிக்க வாய்க்கவில்லை. என்னுடைய பிறந்த நாளுக்காக தோழி இந்த புத்தகத்தை அனுப்பி இருந்தார்கள். ஓரிரு பக்கங்கள் புரட்டிய பிறகு எழுந்த ஆர்வத்தில் உடனே படிக்கத் தொடங்கினேன், தொய்வில்லாத சுவாரஸ்யமான எழுத்து நடை. வங்காள மக்களை பற்றி அதிகம் அறிந்தவளில்லை என்பதால் எனக்கு இந்த புதினம் புது திறப்பாக தான் இருந்தது. சூர்யவம்சம் போல ஒரு கதை தான், வங்காள வெர்சன் என்று வைத்துக் கொள்ளலாம்.

கதை ஹஜாரி என்ற நாற்பதுகளில் உள்ள நடுவயது மனிதரை சுற்றி சுழல்கிறது. ஹஜாரி அற்புதமான சமையல்காரன், அவன் கைகளில் செய்யும் மாய வித்தையால் பலர் அவனை தேடி அவன் வேலை செய்யும் ஹோட்டலுக்கு வருகிறார்கள். பேச்சூ சக்கிரவர்த்தியின் ஹோட்டலில் அவன் பரிசாரகனாக வேலை செய்கிறான், அங்கேயே மேல் வேலை செய்யும் பத்மா என்கிற பெண்ணின் அதிகாரம் தான் அங்கே கொடி கட்டி பறக்கிறது. சமையலுக்கு தேவையான பொருட்களில் கமிஷன் அடிப்பது, விலை குறைந்த மீனை வாங்கி வருவது, ஹஜாரிக்கு போதிய சாப்பாட்டை வைக்காமல் அனைத்தையும் தன் வீட்டிற்கு எடுத்து போவது என்று எல்லா விதத்திலும் தில்லு முல்லு செய்கிறாள். ஹஜாரியை சதா நிந்தித்து அதிகாரம் செய்து கொண்டே இருக்கிறாள். ஹஜாரி தன்னுடைய ஓய்வு நேரங்களில் சூர்ணி நதிக்கரையில் அமர்ந்து தான் ஒரு ஹோட்டல் ஆரம்பித்தால் எப்படி இருக்கும், அதில் தான் என்னவெல்லாம் மாற்றங்கள் செய்து மக்களை திருப்தி படுத்தலாம் என்று கற்பனையில் ஆழ்ந்து விடுவான்.

பேச்சூ சக்கிரவர்த்தி அவனுக்கு சரியான சம்பளம் கூட தருவதில்லை, ஆனாலும் தன் மனைவி குழந்தைகளுக்காக ஹஜாரி அங்கேயே ஏழு வருடங்கள் வேலை செய்கிறான். ஒரு நாள் ஹஜாரி இல்லாத போது ஹோட்டலில் சாமான்கள் திருட்டு போகிறது அப்போது அவனை ஒரு வாரம் ஜெயிலில் வைக்கிறார்கள். பிறகு அவன் அப்பாவி என்று தெரிந்து அவனை விடுக்கிறார்கள் ஆனால் அவனது வேலை பறிபோய் விடுகிறது. அவனுக்கு தெரிந்த யாதவ குல பெண்ணான குஸுமா ஹஜாரி மேல் மிகுந்த அன்பாக இருக்கிறாள், அவன் தனியாக ஹோட்டல் வைக்க தான் அவனுக்கு பணம் தருவதாக சொல்கிறாள். கூடவே மகள் டேம்பியின் பணக்கார தோழியான அதஸியும் உதவவே ஹஜாரி நம்பிக்கையுடன் தன் இலட்சிய இந்து ஹோட்டலை தொடங்குகிறான். எதிர்பார்த்ததை விட ஹோட்டல்

மிக பெரிய வெற்றி அடைகிறது.

20260105203028145.jpg

இந்த கதையில் எனக்கு பிடித்த விஷயமும் சலிப்படைய வைத்த விஷயமும் ஒன்றே என்று சொல்லலாம், அது தான் ஹஜாரியின் பொறுமை. தன்னை குறை கூறி வெறுத்த பத்மாவும் பேச்சூ சக்கிரவர்த்தியும் மீண்டும் அவனை வேலைக்கு அழைக்கும் போது மனமிளகி வேலையில் சேர்ந்து விடுகிறான், அப்போது நமக்கு இவன் எங்கே ஹோட்டலை ஆரம்பிக்க போகிறான் என்று சலிப்பு வருகிறது. ஹஜாரி மிக நல்ல நிலைக்கு வந்த பிறகும் பேச்சூ சக்கிரவர்த்தியிடம் அவன் பணிவாகவே இருப்பது ஒருபுறம் நன்றாக இருந்த போதும் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்க முடியுமா என்றே யோசிக்கத் தோன்றுகிறது.

கையில் கால் காசு பார்த்த உடன் மனிதர்களின் மனம் மாறி விடுவது இயல்பு அல்லவா. ஹஜாரியின் மேல் அன்பு செலுத்தும் குஸுமா, அதஸி போன்றோரால் தான் அவன் முன்னுக்கு வருகிறான். அந்த நன்றியை அவன் மறக்கவும் இல்லை, அதே சமயம் நாற்பதுகளில் இருக்கும் போதே வயதான பாட்டன் போல பேசுவது சற்றே அதிகப்படியாக தான் தோன்றியது, அது ஒருவேளை வங்காளிகள் பழக்கமா என்று தெரியவில்லை.

நரேன்- டேம்பி ஜோடியின் லேசான வெட்கத்துடனான ஈர்ப்பு அழகு. ஹஜாரியின் மனைவி மிக பட்டிக்காடான தனது கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்த பிறகு தண்ணீர் எடுக்க குடத்துடன் எங்கும் போக வேண்டாம், எந்த நேரத்திற்கும் வேண்டிய உணவை சாப்பிடலாம், வீட்டிலேயே குளித்துக் கொள்ளலாம் என்பதெல்லாம் அவளுக்கு மிக பெரிய ஆடம்பரமாக தெரிகிறது. அவள் கூட்ஸ் வண்டியையும், மோட்டார் வாகனங்களையும், டாக்கி என்று அழைக்கப்படும் சினிமாக்களையும் அதிசயித்து பார்ப்பது அழகான கவிதை போல எழுதப்பட்டிருக்கிறது. கதை முடிந்த பிறகு வங்காளிகளின் பிரபல இனிப்பான சந்தேஷை வாங்கி ருசி பார்க்கும் ஆவல் வந்து விட்டது.... சுவையான நாவல், நிறைவான வாசிப்பு அனுபவம். எந்த சிக்கலும் இல்லாத தெளிவான மொழிபெயர்ப்பு.

வெளியீடு : நேஷனல் புக் ட்ரஸ்ட்

பக்கங்கள் : 275

இந்துமதி கணேஷ்