
கலைகளில் மகோன்னத கலையாக வளர்ச்சியடைந்திருக்கிற திரைப்படமும், இலக்கியமும் பற்றி பார்த்தோம். கலைப்படைப்புகளின் தாக்கம் நம்மை எதை நோக்கி நகர்த்துகின்றன என்பதை அறிவதற்கு ஏதுவாக, கொஞ்சம் ஜென் மனநிலை குறித்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
பிரபஞ்சம் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹீலீயம் போன்ற அணுக்களால் நிறைந்திருக்கிறது. நமக்குள்ளும் அதே மூலக்கூறுகள் தான் ஆதாரமாக இருக்கின்றன. அப்படிப் பார்க்கையில் நாம் இந்த பிரபஞ்சத்தின் அம்சம் என்பது தெரிய வருகிறது. அப்படியென்றால் பிரபஞ்சத்தில் இருக்கிற உயிருள்ளவை, உயிரில்லாதவை எல்லாவற்றின் மூலாதார அம்சமே நமக்குள்ளும் இருக்கிறது. அவற்றினுள் இருக்கிற மிகச் சிறிய சக்தி துகள்கள் தொடர்ந்து ஒருவித தாளலயத்தோடு இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. பிரபஞ்சத்தின் அம்சமாக நாமும் இருக்கையில் பிரபஞ்சத்தில் உள்ள எதன் மீது வெறுப்பு கொள்வது? அப்படி வெறுப்பு கொள்கிறபோது, அது நாம் நம் மீதே வெறுப்பு கொள்வதாகாதா? இந்த உண்மையை உணருகிற மனதில் எப்படி வெறுப்பு துளிர்க்கும்? மற்றவர்களையும் நாமாகவே பார்க்க ஆரம்பித்த பிறகு நமக்குள் உள்ள பேதங்கள் அத்தனையும் உதிர்ந்து விடுகின்றன அல்லவா? அங்கே மன்னித்தல் இயல்பாகி விடுகிறது. நாம் என்ன தவறு செய்தாலும் நாம் நம்மை மன்னிக்க தயாராக இருக்கிறோம் தானே. அதனால், அந்த சூட்சுமம் வசப்பட்டதும் நாம் எல்லோரையும் மன்னித்து விடுகிற மனநிலைக்கு நகர்ந்து விடுகிறோம். அப்படியொரு மனநிலைக்கு நாம் நகரும்போது, மனது பேரன்பும், பெருங்கருணையுமாக நிரம்பித் ததும்ப ஆரம்பித்து விடுகிறது.
சமீபத்தில் எழுதி முடித்திருக்கும் நாவல் ‘ஓர் இரவில்’ ஒளிப்பதிவாளர் செழியன் தன்னுடைய இயக்கத்தில் உருவாக்க கேட்டுக்கொண்டதிற்கிணங்க எழுதியது. அவருக்கு தயாரிப்பாளர் தோதாக இன்னும் அமையவில்லை. விரைவில் இந்த நாவல் திரைப்படமாகவிருக்கிறது. அதில் இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக வருபவை. நாற்சக்கர ஓலா வாகனம் ஓட்டுகிற நாயகன், அந்த இரவில் ஒரு பெண்ணிற்கு உதவுகிறான். அவன் ஒரு ஜென் மனிதன். அந்த இரவில் நடக்கும் சம்பவங்களில் அவளுக்குள் ஒளிந்திருக்கும் ஜென்மனநிலை அவன் மூலமாக அவள் உணர்கிறாள். இது தான் திரைக்கதையாக எழுதி பிற்பாடு நாவலாக்கப்பட்டிருக்கிற ஓர் இரவில் கதையின் அடிநாதம். இதில் வரும் நாயகன் நடைமுறையில் எப்படி தன்னுடைய ஜென்மனநிலையை வெளிப்படுத்துகிறான் என்பது காட்சி மொழி வழியாக இதில் உணர்த்தப்பட்டிருக்கிறது.
ஜென் மனநிலை வாய்த்ததும், இந்தச் சமூகம் ஆதியிலிருந்து சொல்லி வைத்திருக்கிற ஒவ்வாத கற்பிதங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக வெளியேற ஆரம்பித்து விடுகின்றன. மனது குற்றவுணர்வற்ற, ஏக்கங்கம் அற்ற நிறமற்ற நதியின் மனநிலை நோக்கி நகர ஆரம்பித்து விடுகிறது. மனது நிகழ் கணங்களுக்குள் முழுமையாக பயணிக்கத் துவங்கி விடுகிறது.
நிதானம் பரிபூரணம் அடைந்து விடுகிறது. நினைத்ததெல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது. கம்பி மேல் அலுங்காமல் நடக்க முடிகிறது. சத்தமெழுப்பாமல் கதவை தாழிட முடிகிறது. எத்தனை இரைச்சலிலும் அமைதியாக செயலாற்ற முடிகிறது. எத்தனை வேகத்தில் தட்டச்சு செய்தாலும் ஒரு பிழை கூட விடாமல் தட்டச்சு செய்ய முடிகிறது. கோபமே வராமல், கோபப்படுத்த நினைப்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது. சாசுவத மகிழ்விற்குள் மனது முங்கு நீச்சலடிக்க துவங்குகிறது.
லூசி என்றொரு ஆங்கிலப் படம். அதில் ஸ்கார்லெட் ஜோகென்ஸன் தான் நாயகி. மனிதர்கள் அதிகமான ஐ.க்யூ உள்ளவர்களே மூளையின் பத்து சதவீதம் தான் அதிகபட்சம் பயன்படுத்துகிறார்கள் என்பதே அறிவியல் உண்மை. அப்படியிருக்கையில் ஒரு பரிசோதனை முயற்சியாக மூளையின் செயல்பாட்டை தூண்டி விடுகிறவொரு ரசாயனப்பொருளை கண்டுபிடிக்கிறார்கள். அதை கொஞ்சம்கொஞ்சமாக நாயகி உடம்பில் செலுத்த, அவள் மூளையின் செயல்பாடு படிப்படியாக அதிகரிக்க துவங்குகிறது. அவள் நிதானத்திற்கு வருகிறாள். விழிப்புணர்வின் அடர்வு நோக்கி நகரத் துவங்குகிறாள். 360 டிகிரியில் நடந்த, நடக்கிற, நடக்கப்போகிற அத்தனையையும் அனுமானிக்கிறாள். அளவிடமுடியாத அபாரமான ஆற்றலுக்குரியவளாகிறாள்.
அப்படியாக ஒரு கட்டத்தில் ஜென் மனநிலக்கு நகர்ந்து விடுகிறாள். நூறு சதவீத பயன்பாட்டை அவளின் மூளை எட்டியபோது அவள் உருவமற்றவளாக, பிரபஞ்ச சக்தியாக மாறி விடுகிறாள். எங்கே இருக்கிறாய்? என்று அந்த விஞ்ஞானி கேட்கையில், ‘ஐ’ம் எவ்ரிவேர்’ என்கிறாள். அவள் அன்பின் அம்சமாக முழுமையாக உளமாறி விடுகிறாள். அவள் பிரபஞ்சத்தின் அம்சமாகி விடுகிறாள்.
அந்த நிலையில் அவள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் பரிபூரண நிதானத்தோடு எதிர்கொள்ளக் கூடியவளாக மாறி விடுகிறாள். காலம் கடந்த காலத்திற்குள் அவளின் மனமற்ற மனது பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. எக்காலத்தைப் பற்றியும் துல்லியமாக அறியக்கூடிய வல்லமை கொண்டவளாக ஆகி விடுகிறாள். அத்தனையையும் அவள் உள்ளுணர்வு வழியாக அறிந்து கொள்கிறாள். தி.ஜாவின் அம்மணி கதாபாத்திரம் போல, எல்லோரையும், எல்லாவற்றையும் நேசிக்கிறவளாகி விடுகிறாள். பிரபஞ்ச காதலின் அம்சமாகி விடுகிறாள்.
பிரபஞ்ச காதல் என்பது பரவச பிரளயத்தோடு ஒப்புநோக்கத் தக்கது. ஒரு பொருளை அதிர வைத்து அதன் அலைவரிசையை அதிகரித்துக்கொண்டே வருகிறபோது, அது அந்த கம்பியின் அலைவரிசையோடு ஒரு கட்டத்தில் ஒன்றிணைகிறது. அங்கே ரெசனென்ஸ் என்கிற கூடுகையில் பரவச பிரளயம் நிகழ்கிறது.
அப்போது வெளிப்படும் சக்தியானது, அந்த இரண்டு பொருள்களின் சக்தியோடான கூட்டுத்தொகையாக இருப்பதில்லை. அதைப்போல கோடி மடங்கு அதிகமான சக்தியாக அது வெளிப்படுகிறது. அப்போது விருப்புவெறுப்பு கடந்த மைய நிலைக்கு நிகழ் மனம் நகர ஆரம்பித்து விடுகிறது.
அப்படிப்பட்ட ஜென்மனநிலை கொண்ட மனது தான் காதலை காவியக் காதலாக, பிரபஞ்ச காதலாக உருமாற்றுகிறது. இதயத்தை எதிர்பார்ப்பற்றதாக ஆக்குகிறது. உள்ளது உள்ளபடி அப்படி அப்படியே அங்கீகரிக்க ஆரம்பிக்கிறது. அதனதன் பின்புலத்தை துல்லியமாக புரிந்து கொள்கிறது. தன்னைப்போல பிறரையும் பாவிக்க தெரிந்து விட்டபடியால், புரிதலின் உச்சம் தொட்டு விடுகிறது. தனக்குத் தருகிற மதிப்பு, மரியாதையை பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை உயிர்களுக்கும், உயிரற்றவற்றிற்கும் எந்தவித பேதங்களுமின்றி தருகிறது. அங்கே நிர்பந்தங்கள் அவசியமற்றதாகி விடுகின்றன.
காதலும் ஒரு வகையில் ஜென் மனநிலை தான். அது எப்போதும் நிகழ்காலத்தில் மட்டுமே பயணிக்கிறது. ‘நோஒன் கேன் ஜம்ப் டுவைஸ் இன்டூ எ ஸேம் ரிவர்.’ ‘யாருமே குதித்த அதே நதிக்குள் மறுபடி குதிக்க முடியாது. நதியானது நகர்ந்து கொண்டேயிருக்கிறது. மாறிக்கொண்டேயிருக்கிறது. அப்படியாக பயணிக்கிற காதலும் அதைப்போலவே, நிகழ்காலத்தை தொடர்ந்து தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது.
ஈ.பி.ஆர் பாரடக்ஸ் இதற்கு ஒரு உதாரணம். ஐன்ஸ்டீன், பொட்லோஸ்கி, ரோசன் ஆகிய மூன்று அறிவியலாளர்களால் கண்டடையப்பட்ட சித்தாந்தம் இது. செறிவூட்டப்பட்ட இரண்டு சக்தித் (போட்டான்) துகள்களில் ஒன்றை உலகின் வடதுருவம் நோக்கியும், மற்றொன்றை தென்துருவம் நோக்கியும் கொண்டு செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இயல்பாகவே ஒன்று இடப்பக்கம் சுற்றுகிறதென்றால், அடுத்தது வலப்பக்கம் தான் சுற்றும்.
இப்போது இரண்டும் வெகுதூரத்தில் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருந்தாலும், அவற்றுள் உள்ள அந்த துகளை பரிசோதிக்கிறபோது அதில் என்ன குணாம்சம் இருக்கிறதோ, அதே குணாம்சம் அதேநொடியில் எதிர்திசையில் சென்று கொண்டிருக்கிற பிணைப்புவயப்பட்ட அந்த துகளிலும் ஆச்சர்யகரமாக ஒரே மாதிரி இருக்கிறது. ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் பயணித்தால் மட்டுமே அந்த குணாம்சத்தை, அங்கும் கடத்தப்படக்கூடிய சாத்தியம் உண்டு என்பதே பொதுஅறிவியலின் நியதி. இருந்தாலும், குவாண்டம் மெக்கானிக்ஸ் அறிவியல் மிகச்சிறிய அளவிலான துணை அணுத்துகளுக்கான புதிய அறிவியலின் அசாத்தியமான நிரூபணமாக இருக்கிறது.
இந்த அதிசயம் தான் பிரபஞ்ச காதல்.. இந்த பேரன்பின் அதிசயம் தான் ஆன்மீகம். இந்த ஆச்சர்யம் தான் ஜென்மனநிலை. அது தான் லிவ் இன் தி மொமென்ட். அது தான் மகிழ்வின் உச்சநிலை.
இந்த இடத்தில் குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றிய ஆதாரவிதிகளை கவனித்து விடலாம். பொது அறிவியல் பெரிய அளவிலான துகள்களை ஆராய்ந்து நிரூபிக்க உதவுகிறது. அதே சமயம் மிகமிகச் சிறிய துகள்களை ஆராய்ந்து நிரூபிக்க குவாண்டம் மெக்கானிக்ஸ் சித்தாந்தம் தான் கைகொடுக்கிறது. அப்படியாக உருவாக்கப்பட்டு வரும் குவாண்ட்டம் சூப்பர் கம்ப்யூட்டர் பணி நிறைவடைகிறபோது அதன் மகத்துவம் ஏ.ஐ டெக்னாலஜியை போல கோடி மடங்கு அதிகம் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
குவாண்டம் அறிவியலானது நுண்ணிய சக்தி துகள்கள் நேர்கோட்டிலும் பயணிக்கும். அலைவடிவிலும் பயணிக்கும். ஒரே நேரத்தில் துகள்களாகவும், அலைகளாகவும் இருக்கும். ஒரே நேரத்தில் இங்கும் இருக்கும். அங்கும் இருக்கும். இந்த கட்டுரையை புரிந்து கொள்கிற அளவில், இப்போதைக்கு இந்தளவிற்கான புரிதல் போதுமானது.

Leave a comment
Upload