கடந்த வாரம் 24 ஆம் தேதி குருவாயூர் கோயிலில், மூன்று சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது... இந்தத் திருமணம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது ஏசியா நெட் நியூஸ் டிவி மூலமாக.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போத்தனுர் என்ற ஊரில் 25 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 18 ஆம் தேதி 1995 ஆம் ஆண்டு பிரேம்குமார் - ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது. இது ஒரு அபூர்வ அதிசிய நிகழ்வாக அன்று அனைத்து செய்தித் தாள்களிலும் பிரசுரமாக... ஏசியா நெட் டிவியில் ஒரு சிறப்பு செய்தியாகவும் ஒளிபரப்பப்பட்டது.

ஐந்து குழந்தைகளில் நான்கு பெண்கள், ஒரு ஆண்.. இந்த ஐவரும் பிறந்தது உத்திரம் நட்சத்திர தினத்தன்று என்பதால் தங்களின் குழந்தைகளுக்கு நட்சத்திரத்தின் பெயரான உத்ரா என்று துவங்கும் பெயர்களையே இவர்கள் சூட்டினார்கள்... அந்த அதிசிய குழந்தைகளின் பெயர்கள் உத்ரா, உத்ரஜா, உத்தரா, உத்தமா என்றும் ஒரே மகனுக்கு உத்தரஜன் என்று பெயர் வைத்தனர்.

இவர்களின் தந்தை பிரேம்குமார் ஒரு சிறிய பலசரக்கு கடை வைத்து நடத்தி வந்தார்... அதில் வந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த சற்று தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது... அதையும் மீறி குழந்தைகளை பராமரித்து படிக்க வைத்துள்ளார்... ஒரு விஷயம்... ஐந்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி கலரில் உடை எடுப்பது தான் பெரிய சிக்கலாக இருந்ததாம்.

அரசு பள்ளியில் ஒரே வகுப்பில் ஒரே பெஞ்சில் அமர்ந்து ஐவரும் படித்துள்ளனர்..
இந்தக் குழந்தைகளை மீடியா முதல் அனைவரும் “பஞ்சரத்தினங்கள்” என்று தான் அழைத்து வந்திருக்கின்றனர்.
குழந்தைகள் பத்து வயதை எட்டியபோது, ஒரு பேரிடி இந்த அழகான குடும்பத்தை தாக்கியது... குடுமபத்தலைவர் பிரேம்குமார், குடும்ப பாரத்தை தாங்க முடியாமல் கடனில் சிக்கி... தற்கொலை செய்து கொள்கிறார்...
கணவர் இறந்து, ஐந்து குழந்தைகளுடன் நொறுங்கிப் போய் என்ன செய்வது என்று இல்லத்தலைவி தவித்த போது... செய்தியை அறிந்த அன்றைய முதல்வர் உம்மண்சாண்டி, கூட்டுறவு வங்கியில் அந்த பெண்மணிக்கு வேலை கொடுத்து உதவினார்... அந்த வருமானத்திலேயே தனது ஐந்து குழந்தைகளையும் படிக்கவைத்து, குடும்பத்தை முன்னேற்றினார் ரமாதேவி என்ற அந்தத் தாய்.

ஒரு பக்கம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை அவர் குறையில்லாமல் கவனிக்க... மற்றொரு சோகம் அவரை தாக்கியது.... ரமாதேவிக்கு இதய நோய் ஏற்பட்டு, உயிருக்கு போராடி... பின் அறுவை சிகிச்சை மூலம் பேஸ் மேக்கர் பொருத்தி குணமடைந்தார்...
குழந்தைகள் உத்ராஜாவும், உத்தமாவும் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்களாக பணிபுரிகிறார்கள்... உத்தரா ஒரு ஃபேஷன் டிசைனராகிவிட்டார்.. உத்ரா ஒரு ஜௌர்னலிஸ்ட்.. சகோதரன் உத்தரஜன் பிபிஏ முடித்து விட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல இருக்கிறார்.
ரமாதேவி தன் அருமை நான்கு மகள்களுக்கும் ஒரே நாளில் திருமணம் செய்ய திட்டமிட்டு, ஏப்ரல் மாதத்திலேயே அந்த திருமணம் நடக்க இருந்ததாம். ஆனால் கொரோனா தொற்று காரணத்தால் திருமணம் தள்ளிச் சென்றது...

பிறகு, அக்டோபர் 24 ஆம் தேதி குருவாயூர் கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதிலும் சிக்கல் உத்ராஜாவிற்கு நிச்சியம் செய்த மாப்பிள்ளை ஆகாஷ் குவைத்தில் இருந்து வர முடியாததால் அவரின் திருமணம் மாத்திரம் தள்ளி போய்விட்டது.
இருப்பினும் தாய் ரமாதேவி மகன் உத்தரஜன் இணைந்து மூன்று சகோதரிகளுக்கும் ஆடம்பரமாக திருமணம் நடத்தி முடித்தார்கள்... இந்த அபூர்வ சகோதரிகளின் திருமணத்தை உலகமே இப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது...

நாம் விகடகவிக்காக ரமாதேவியை தொடர்பு கொண்டு பேசினோம்... “நான் இப்பொழுது பேங்கில் வேலையில் இருக்கிறேன், மாலை கூப்பிடுங்கள்” என்று கூறினார்... நாமும் மாலை அவரை தொடர்பு கொண்டோம்... ஒரு பெரிய குடும்பப் பணியை முடித்த சந்தோஷத்தில் பேசினார்...

“ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்று எடுத்து வளர்ப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை... அதிலும் அவர்கள் சிறு வயதில் இருக்கும் போதே என் கணவர் இறந்து விட்டார்... என்ன செய்வது என்று தெரியவில்லை... உடைந்து போய்விட்டேன்... ஏஷியா நெட் டிவி நியூஸ் தான் உதவியது... அன்று இருந்த முதல்வர் உம்மண்சாண்டி, என் வீட்டின் பக்கமே உள்ள கேரள வங்கியில் எனக்கு வேலை கொடுத்தார்... அதனால் என் குடும்பத்தை என் சம்பளத்தில் உயர்த்த முடிந்தது... அரசு ஒரு வீட்டையும் கொடுத்து உதவியது. இதற்கு முக்கியக் காரணம் மீடியா தான். தவிர, என் மகன் உத்தரஜன், அப்பா ஸ்தானத்தில் இந்த மூன்று திருமணங்களையும் நடத்தி வைத்தான் என்பது பெருமையான விஷயம். நான் எப்பொழுதும் குருவாயூர் அப்பனிடம் பிராத்தனை செய்வேன், என் குழந்தைகளுக்கு நல்ல வரன் கிடைத்தால் திருமணம் உன் சன்னிதானத்தில்தான் நடத்துவேன் என்று அப்படியே நடந்தது...”

உத்ராவுக்கு ஆய்யுரை சேர்ந்த அஜித் குமார் மாப்பிளை ஓமெனில் ஹோட்டல் மேனேஜர் வேலை.
கொச்சி அமிர்த மருத்துவ கல்லுரி அனஸ்தேடிக் டெக்னீஷியனாக பணிபுரியும் உத்ரஜாவுக்கு, பத்தனம் திட்டாவை சேர்ந்த அனஸ்தேடிக் டெக்னீஷியன் ஆகாஷ் மாப்பிளையாக நிச்சியக்கப்பட்டுள்ளார். அவர் தான் குவைத்தில் இருந்து வரமுடியாததால், பின்னர் திருமணம் நடக்கும்.
ஆன்லைன் ஜெர்னலிஸ்ட்டாக பணிபுரியும் உத்தராவுக்கு கோழிக்கோட்டை சேர்ந்த ஜெர்னலிஸ்ட் மகேஷ் மாப்பிளை...
திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனஸ்தேடிக் டெக்னீஷியனாக பணிபுரியும் உத்தமாவுக்கு, மஸ்கட்டில் அக்கௌன்டன்ட்டாக ப் பணிபுரியும் வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்த வினித் மாப்பிள்ளை என்று பெருமிதத்துடன் சொன்னார் ரமாதேவி..
மகன் உத்தரஜனின் திருமணம் எப்பொழுது என்று கேட்க... “அவனுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. அவன் வேலைக்கு வெளிநாட்டிற்கு செல்ல இருக்கிறான்... மகள்கள் திருமணம் முடித்து சென்று விட்டார்கள்... மகனும் வெளிநாட்டிற்கு சென்று விட்டால், நான் இனி தனியாகத்தான் இருக்கவேண்டும்” என்பதில் ரமாதேவிக்கு சற்று வருத்தம் தான் என்பது அவரது குரலிலேயே தெரிந்தது.

“நான் பிபிஏ முடித்து, தற்போது வெளிநாட்டிற்கு செல்ல இருக்கிறேன். எங்க அம்மா கிரேட். அவர்கள் தனி ஆளாக நின்று எங்களை படிக்கச் வைத்து, ஒரு சிறந்த மக்களாக மாற்றியது... அவரை தெய்வமாக வணங்குகிறேன்.. என் சகோதரிகளுக்கு கிடைத்த மாப்பிள்ளைகளும் சூப்பர்” என்கிறார் நான்கு சகோதரிகளின் ஒரே சகோதரரான உத்தராஜன்..
ஏஷியா நெட் நியூஸ் ரீஜினல் எடிட்டர் அஜய் கோஷ் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்...

“இந்த பஞ்சரத்தினங்களுடன் பயணம் செய்த எங்கள் நியூஸ் குழுமம், ஒரு குடும்ப வரலாற்றை இந்த உலகுக்கு வழங்கி வருகிறது. இந்த அபூர்வ குழந்தைகளின் பிறப்பில் இருந்து திருமணம் வரை ஏஷியாநெட் நியூஸ் பயணமும் அதி அற்புதமானது... 1995 ஆம் வருடம் நவம்பர் 18 ஆம் நாள் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளது என்ற செய்தி டெய்லி பேப்பரில் வந்தவுடன், எங்க டீம் அதை கவர் செய்தோம்... அது ஒரு பெரிய நியூஸ் ஆக.. வலம் வந்தது... ‘கண்ணாடி’ என்ற ஒரு நிகழச்சியில் அதனை கவர் செய்து கொண்டிருந்தோம். அதற்குப் பிறகும் இந்த குடும்பத்தின் ஸ்டோரி அழகாக தொடர்ந்தது... 96 ஆம் வருடம் இந்தக் குழந்தைகளின் முதல் பிறந்த நாளையும் நாங்கள் கவர் செய்தோம். அது ஒரு பெரிய ஹிட்... ஒரு வருடத்தில் மறந்து போன நேயர்களுக்கு, மீண்டும் அந்த குடும்பத்தை எங்க “கண்ணாடி” பிரதிபலித்தது... இந்த குழந்தைகள் ஐந்து பேரும் முதலில் பள்ளிக்கூடத்திற்கு சென்றதையும் படம்பிடித்து காட்டினோம்.. அவர்களின் வளர்ச்சியை இந்த உலகம் ஆச்சரியமாக பார்த்தது.
2005 ஆம் ஆண்டு ஒரு பேரிடி இந்தக் குடும்பத்தை திருப்பி போட்டது.. பஞ்சரத்தினங்களின் தந்தை பிரேம் குமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு, எங்க டீம் அந்த சோகத்தில் கலந்து கொண்டு, உலகுக்கும், அரசுக்கும் அந்த குடும்பத்தின் சோகத்தையும் எடுத்துக் கூறினோம்... அந்த சோக நிகழ்வை கவர் செய்த எங்கள் அனைவரின் கண்களும் குளமாகின.
எங்களின் ‘கண்ணாடியால்’ அன்றைய முதல்வர் உம்மண்சாண்டி, ஐந்து குழந்தைகளுடன் தவித்த ரமாதேவிக்கு கேரளா கூட்டுறவு வங்கியில் வேலை தந்து உதவினார். மேலும், அரசு அவர்களுக்கு ஒரு அழகிய வீட்டையும் கொடுத்து உதவியது... அந்த குடும்பம் எழுந்து நின்றதை அழகாக ஏஷியா நெட் கண்ணாடி பிரதிபலித்தது..... 2012ம் ஆண்டு பஞ்சரத்தினங்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஒன்றாக எழுதினார்கள்... அந்த தேர்வையும் அவர்களின் வெற்றி பூரிப்பையும் கூட நம் டிவி உலகுக்கு எடுத்துக்காட்டியது...

2016 ஆம் ஆண்டு, முதன் முதலாக ஐந்து குழந்தைகளும் தங்களின் ஓட்டு உரிமையை அன்று நடந்த தேர்தலில் பதிவு செய்ததை, ஏஷியா நெட் நியூஸ் கவர் செய்து ஒளிபரப்ப... ஓட்டு உரிமையை இந்த இளம் பஞ்சரத்தினங்கள் நிலைநாட்டியதை கன்னத்தில் கைவைத்து அனைவரும் அந்த செய்தியை பார்த்து பூரித்துப் போயினர்.
இவர்களின் ஒவ்வொரு நிகழ்விலும், அழையா கட்டாய விருந்தினர்களாக சென்று விடுவது எங்களின் வழக்கம். காரணம் இந்த குடும்பத்துடன் ஒன்றினைந்து நடந்து சென்றது ஏஷியா நெட் என்று சொன்னால் மிகையாகாது...! அடுத்து இவர்களின் திருமண காரியங்களை கேள்விப்பட்டு, நாங்கள் ரெடியாக இருந்தோம் ஏப்ரல் மாதத்தை நோக்கி... கொரோனா தொற்றால் தள்ளிப் போன இவர்களின் திருமணம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி என்றவுடன், எங்க டீம் குருவாயூர் கோயிலில் அதிகாலையே ஆஜர்!... முழு திருமணத்தையும் கவர் செய்து... அவர்களை வாழ்த்தி விட்டு... ‘உங்கள் வாழ்க்கை பயணத்தில் ஏஷியா நெட்டின் பயணம் தவறாமல் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை... நிச்சயிக்கப்பட்ட உத்ரஜா மற்றும் மகன் உத்தரஜனின் திருமண வைபவத்திற்கும் காட்டாயம் எங்க டீம் இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை’ என்று சொல்லி வந்தோம்” எனக் கூறும் அஜய்... ‘இந்த குடும்ப ஸ்டோரி பயணத்தை தொடர்ந்து கவர் செய்ததில், நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.. அதே சமயம், பஞ்சரத்தினங்களில் ஒரு ரத்தினம் உத்தரா ஒரு ஜெர்னலிஸ்ட், அவரின் கணவர் மகேஷும் ஒரு ஜெர்னலிஸ்ட் என்னும் போது எங்களுக்கு அபரிவிதமான பெருமை...’என்றும் சொல்லி முடித்தார்.
இவர்களின் வீட்டின் பெயரும் பஞ்சரத்தினம். அம்மாவின் பெயரும் ரமா பஞ்சரத்தினம்.... இறைவன் அருளாலே இந்த பஞ்சரத்தினங்களின் வாழ்க்கை குத்துவிளக்காக ஜொலிக்கிறது... விகடகவி சார்பில் வாழ்த்து கூறி விடை பெற்றோம்.


Leave a comment
Upload