தொடர்கள்
பொது
இலக்கிய வானில் பறவைகள் - மரியா சிவானந்தம்

20260105153209252.jpg

காலை நேரத் தென்றலில் மிதந்து வரும் பறவைகளின் இசையில் மயங்காத உள்ளம் இருக்க முடியாது .

மாலை நேரத்தில் கூடடைய குழுவாக விரையும் புள்ளினக் கூட்டத்தின் அழகினைப் பருகாத கண்கள் இருக்க முடியாது.

விண்ணோக்கிச் சிறகசைத்து வலம் வரும் பறவையினம் இம்மண்ணின் வரம்.

பறவைகள் சிறப்பிதழில் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறும் பறவைகள் பற்றி ஓர் அலசல் இதோ ....

திருக்குறளில் காக்கை, மயில், ஆந்தை , கொக்கு மற்றும் அன்னப்பறவை பற்றிய குறிப்புகள் உள்ளன.

“காக்கை கரவா கரைந்துண்ணும்” (குறள் 527)

“பீலி பெய் சாகாடும் அச்சிறும் (குறள் 475)

“கொக்கொக்க கூம்பும் பருவத்து” (குறள் 490)

“பகல்வெல்லும் கூகையை காக்கை இகல்வெல்லும்” (குறள் 481)

“அனிச்சமும் அன்னத்தின் தூவியும்” (குறள் 1120)

திருக்குறளைப் போலவே பிற நீதிநூல்களிலும் பறவைகள் சிறகடிக்கின்றன.

நாலடியாரில் வரும் இப்பாடல் நாமனைவரும் பள்ளி காலத்தில் மனனம் செய்த பாடல் .

கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.- (நாலடியார் :135)

என்னும் பாடல் கல்வியின் சிறப்பைக் கூறுகிறது.

நீரும், பாலும் கலந்த கலவையில் அன்னப்பறவை நீரை தவிர்த்து பாலை மட்டும் அருந்துவதைப் போல கற்றறிந்தவர் தாம் கற்கும் நூல்களில் நன்மையானவை மட்டும் எடுத்துக் கொள்வார்கள் என்று உவமையாக கூறுகிறது.

சிறுபஞ்சமூலம், தூக்கணாங்குருவி கட்டும் கூட்டின் நுண்ணிய வேலைப்பாட்டைப் புகழ்ந்து பேசுகிறது.

வான் குரீஇக் கூடு, அரக்கு, வால் உலண்டு, நூல் புழுக்கோல்,
தேன் புரிந்தது, யார்க்கும் செயல் ஆகா; - தாம் புரீஇ,
வல்லவர் வாய்ப்பன என்னார்; ஓரோ ஒருவர்க்கு
ஒல்காது, ஓரொன்று படும்....(சிறுபஞ்சமூலம் -25)

"தூக்கணாங்குருவியால் கட்டப்பட்ட கூடும்
பெரிய எறும்புகளால் செய்யபட்ட அரக்கும்
உலண்டு எனும் புழுவால் நூற்கப்பட்ட நூலும்
கோற்புழுவால் செய்யப்பட்ட கோற்கூடும்
தேனீக்களால் உருவாக்கப்பட்ட தேன்பொதியும்
எவராலும் செய்ய முடியாதவை..
ஏனெனில் , எல்லாம் கற்றறிந்தவர் என சொல்பவரும் எல்லாவற்றையும் செய்து விட முடியாது ' என்பது இப்பாடலின் பொருள்

உலகநாதரின் உலகநீதியோ

மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே-(உலகநீதி 2)

என்று மயிலேறும் முருகனை வாழ்த்துகிறது.

ஒளவையின் நல்வழி ஒளவால் பற்றி சொல்கிறது

மரம் பழத்தால் ஒளவாலை வாவென்று கூவி

இரைந்தழைப்பார் யாவரும் அங்கில்லை (நல்வழி 29)

என்பது அப்பாடல்

இலக்கியங்களில் காதல் வளர்க்க உறுதுணையாவது தூது..

பறவைகளில் புறா, மயில், அன்னம், குயில், ஆகியவை காதலுக்கு மட்டுமன்றி கடவுளுக்கும் தூதாக இருந்தனவாம் .

வெள்ளை வாரணரின் காக்கை விடு தூது, சொக்கநாத புலவரின் அழகர் கிள்ளை விடு தூது , முத்துவேலு கவிராயரின் திருத்தணிகை மயில் விடு தூது, கந்தசாமி முதலியாரின் திருப்பேரூர் கிள்ளை விடு தூது என்ற நூல்களில் பறவைகள் தூதர்களாக அனுப்பப்பட்டதைக் காண்கிறோம்.

பள்ளிக்காலத்தில் நாம் பயின்ற மற்றும் ஒரு புகழ் பெற்ற பாடல்

"நாராய் , நாராய் செங்கால் நாராய்

பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய் " என்று நாரையைத் மனைவிக்கு தூதனுப்பி தன் நிலையை அறிவித்த சத்திமுத்தப் புலவரின் பாடல் நாம் அறிவோம்.

ஆண்டாளின் திருப்பாவையும் பறவைகள் பற்றி பாடுகிறது

“கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!’

"ஆனைச் சாத்தான் " என்னும் பறவை பேச்சாற்றல் கொண்டது என்று குறிப்பிடுகிறார் ஆண்டாள்.

திவ்யபிரபந்தத்தில் மயில் உள்ளிட்ட பறவைகள் பற்றிய எடுத்துக்காட்டுகள் உள்ளன

"நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர்" என்று மயில் நிறத்தைக் கொண்ட திருமாலைப் புகழ்கிறார் பெரியாழ்வார் .

புறநாநூறு , குறுந்தொகை மற்றும் நற்றிணை போன்ற சங்க இலக்கியங்களில் பறவைகள் பற்றிய குறிப்புகள் ஏராளம்

போர்க்களப் பறவைகளாக பருந்து, ஆந்தை, வறண்ட நிலத்தில் வாழும் பனம்பழ நாரை, தினைப்புனத்தில் பயிர்களைக் கொய்ய வரும் குருவிகள் போன்ற தகவல்கள் இந்நூல்களில் உலா வருகின்றன.

பூநாரை, செம்போத்து, வெண்போத்து போன்ற பறவைகளை பற்றிய விவரங்களும் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

பழங்காலத்தில் இருந்த பல பறவைகள் இன்று நம் மண்ணில் இல்லை. மாறிவரும் பருவநிலை, பூமி வெப்பமயமாதல், மின்காந்த அதிர்வலைகள் என்று பலவித காரணங்களால் சின்னஞ்சிறு பறவை இனம் நம் கண் முன் அழிவதைக் காண்கிறோம் .

அந்த சிற்றுயிர்களும் வாழும் வண்ணம் இப்பூமியைப் பாதுகாப்போம். இல்லையேல் இனி வரும் சந்ததி பறவைகளை இணையத்திலும், இலக்கியத்திலும் மட்டுமே காண முடியும்.