தொடர்கள்
கவர் ஸ்டோரி
பறவை மனிதர் விகடன் எம்.டி- வேங்கடகிருஷ்ணன் படங்கள்:பொன்ஸீ

20260106202223188.jpeg

படங்கள்:பொன்ஸீ

20260106202250685.jpeg

.பொங்கல் திருவிழா வருவதற்கு ஒரு மாதம் முன்பே எம்டியின் உத்தரவின் பேரில் பொங்கல் வாழ்த்து ரெடி செய்யப்படும்.

புகைப்படக் கலைஞர் பொன்ஸீயை வரவழைத்து பறவைகளுடன் அவர் இருப்பது போன்று படம் மற்றும் சில பறவைகளை படம் எடுக்கச் சொல்லுவார்.

அவற்றை அவருடைய உதவியாளர் ஜே வி நாதனுக்கு அனுப்புவார்.

நாதன் அதை விகடன் தலைமை ஓவியர் பாண்டியனிடம் கொடுத்து பொங்கல் வாழ்த்து டிசைன் செய்ய ஏற்பாடு செய்வார்.

அவர் கொடுக்கும் மாதிரிகளில் ஒன்றை எம்டி தேர்வு செய்வார்.

அதை அச்சிட்டு அவருடைய அயல்நாட்டு நண்பர்கள் சுமார் 100 பேர் மற்றும் இந்தியாவில் உள்ள 200 பேருக்கு இந்தியன் பொங்கல் வாழ்த்தை அவர் ஜே வி நாதனுக்கு அனுப்பும் இமெயிலில் உள்ள விலாச பட்டியலின்படி டெஸ்பேட்ச் செய்யச் சொல்வார்.

ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் நிகழ்வு இது...

எம் டி தனது பறவை பண்ணையில் உள்ள பறவைகளின் இருப்பு, இறப்பு. புதுக் குஞ்சுகள் குறித்து மாத மாதம் அனுப்ப வேண்டிய ஸ்டாக் அறிக்கை மற்றும் வனத்துறை கடிதத் தொடர்புகள்.

பறவை ஒன்று இறந்து போனால் அதை அரசு மருத்துவர் மூலம் போஸ்ட்மார்ட்டம் செய்து அந்த அறிக்கையை வனத்துறைக்கு அளிப்பது தொடர்பான கோப்புகள் என அனைத்தையும் பக்காவாக மெயின்டைன் செய்து வந்தார்..

ஜெமினி பறவை பண்ணை என்ற தன் படப்பை பண்ணையில் சுமார் 800 அரிய வகை பறவைகளை வளர்ப்பதில் அவர் காட்டிய ஆர்வம் அலாதியானது.

வாரத்திற்கு இரண்டு தினங்கள் விடியற்காலை 5 மணிக்கு பறவைப் பண்ணைக்குப் போகத் தவற மாட்டார்.

எஸ் பாலசுப்பிரமணியன் என்ற எம் டி யின் பெயரை சுருக்கி "பாலு பாலு" என்று அவர் பறவை பண்ணையில் நுழைந்ததுமே குரல் கொடுக்கும் கிரேட்டர் சல்ஃபர் பறவை இந்தப் பண்ணையின் அபூர்வ அட்ராக்சன்!

கிரீன்வின் மக்காவ், ஸ்கார்லெட் மக்காவ், ஃபார்ம் காக்கட்டு என்று அபூர்வமான பறவைகள் இங்கு ஏராளமாக இருந்தன. இந்தியன் திரைப்படத்தில் மணிஷா கொய்ராலா உடன் காட்சி தரும் பறவைகள் இந்த பண்ணையில் இருந்து வழங்கப்பட்டவை வெண்ணிற மயில்கள், வெள்ளை நிற காக்கைகள், ஈமு கோழிகள் கூட இந்தப் பண்ணையில் காணப்படும்.

"உலகின் சிறந்த "ஏவி கல்ச்சுரஸ்ட்"களில் ஒருவர் என்றும் ஆசியாவிலேயே சிறந்த 'ஜெனிடிக் இன்ஜினியர்' என்று உலகத்தின் சிறந்த பத்திரிகைகள் இவரை பாராட்டி வந்தன. பறவைகளைக் குஞ்சு பொரிக்க வைப்பதில் ஆசியாவிலேயே இவரை 'நம்பர் ஒன்' என்றும் பாராட்டினார்கள்.

தன் பண்ணையில் உள்ள பறவைகள், மயில்களை வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு இலவசமாக வழங்குவார் இது அடிக்கடி நடக்கிற நிகழ்வு.

ஒரு சமயம்,அலுவலக ஸ்டாஃப் மற்றும் அவர்கள் குடும்பத்தார் அனைவரையும் தினம் 10 பேர் என்ற கணக்கில் தன் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து பறவை பண்ணைக்கு வரவழைத்து சுற்றி காட்டியது தொடர்ந்து பல நாட்கள் நடந்தது.

வந்தவர்கள் அனைவருக்கும் இட்லி, வடை, பொங்கல், பூரி என்று சிற்றுண்டி வழங்கப்படும் அவர்களோடு அமர்ந்து ரசித்து எம் டி யும் சாப்பிடுவார்.

பேட்டரி மின்சாரத்தில் இயங்கும் வீல் சேரில் அமர்ந்து கூண்டுகளை ஒட்டிய சிமெண்ட் பாதையில் நகர்ந்து எல்லா பறவைகளையும் அவரே சுற்றி காட்டுவார்.

தினம் வரும் 10 பேருக்கு பறவைகள் குறித்த விவரங்களை சலிப்பே இல்லாமல் விஸ்தாரமாகச் சொல்லுவார்.

ஜெமினி பறவை பண்ணைக்கு வரும் விசிட்டர்கள் எம் டி பறவைகளுடன் அன்போடு பேசுவதையும் அவை அவருக்கு முத்தம் கொடுப்பதையும் பார்த்து வியப்பில் அதிசயத்துப் போவார்கள்!

பண்ணைக்குள் எம்டி நுழைந்ததுமே நிலை கொள்ளாமல் இங்கும் அங்கும் கூண்டுக்குள் அவரை பார்க்க அலையும் பறவைகள் பார்வையாளர்களை அசத்தும்...

ஒரு பறவை எம் டி பறவை பண்ணைக்குள் நுழைந்ததுமே "பாலு பாலு"என்ற குரல் கொடுத்துக் கொண்டே இருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்தும்!

மூக்கு நீளமாக வளைந்து காணப்படும் 'ஹார்ன்பில்' என்ற பறவை மரக்கிளையில் தாவித்தாவி அமரும் அழகே அழகுதான்.

வேர்க்கடலையை தூக்கிப் போட்டால் ஒருமுறை கூட தவறாமல் தன் அலகால் அது கேட்ச் பிடித்து விடும்!

ஒரு மழை நாளில் அந்தப் பறவை, பண்ணைக்கு வெளியே பறந்து போய் ஏதோ காரணத்தால் இறந்து விட்டது.அதை தான் சரியாக கவனிக்காததால் தான் இறந்துவிட்டது என்று வேதனையோடு தனக்கு தண்டனை கொடுத்துக் கொள்ளும் விதமாக ஒரு நாள் முழு பட்டினியாக ஒரு சொட்டு தண்ணீரை கூட அருந்தாமல் இருந்தார்!

எம் டி க்கு அதன் மீது உள்ள பிரியத்தால் அதை பாடம் செய்து பறவை பண்ணையில் ஞாபகார்த்தமாக வைத்து விட்டார்.

பண்ணைக்குள் பறவைகளின் சிகிச்சைக்காக ஒரு மருந்து பார்மசியே வைத்திருந்தார்.

பறவைகள் வளர்க்கும் பலர் ஃபோனிலும் ஈமெயிலிலும் தங்கள் பறவைகளின் உடல் நலமின்மை குறித்து எம்டியிடம் தெரிவித்து ஆலோசனை பெறுவார்கள்.

முன்பின் தெரியாதவராயினும் தயங்காமல் சிகிச்சைக்கான ஆலோசனையையும் அதற்கான மருந்துகளை பற்றியும் கேட்பவர்களுக்கு உற்சாகத்துடன் சொல்லுவார் அவர்.

அவர் ஆசையோடு வளர்த்த கிளி இறந்த அன்று எதுவும் பேசாமல் தனது மேஜை மேல் தலை கவிழ்ந்து படுத்து அழுதபடியே இருந்தார்.

மதன் வந்திருக்கிறார் என்று அவருக்கு தகவல் சொன்னபோது நிமிர்ந்து பார்த்து அவரது அழுகை இன்னும் தீவிரமானது.

மிக மிக மென்மையான இதயம் கொண்டவர் எங்கள் எம்டி, எனக்கு முதல் முதலாக கார் பரிசளித்து அதை சஸ்பென்ஸ் ஆக என்னிடம் தந்து என்னுடைய மகிழ்ச்சியை தன்னுடையதாக்கி அழகு பார்த்தவர் எங்கள் எம் டி.

எனக்குத் தெரிந்து 'பறவை மனிதர்'என்று ஒருவரை சொல்லலாம் என்றால் நிச்சயமாக என்றுமே அது எங்கள் எம்டி தான்!!

-ஆசிரியர் மதன்

நன்றி:

ஜே.வி.நாதன் (சேவற்கொடியோன் புத்தக ஆசிரியர்)

20260106202321164.jpeg