மாலிக் கஃபூர்..
முபாரக் கில்ஜி...
குஸ்ரூகான்..

அந்தப்புரத்து ஆண்கள்!
“எனக்கு எல்லாம் தெரியும். நான் வைத்ததுதான் சட்டம். நான் நினைப்பது நடந்தாக வேண்டும்!’ என்கிற மமதையோடு அமைந்த அலாவுதீன் கில்ஜியின் சர்வாதிகாரத்துக்கும் முடிவு வந்து சேர்ந்தது. போகப்போக, அலியாக வந்து சேர்ந்து சேனாதிபதியாக உயர்ந்த மாலிக் கஃபூர் நினைத்ததுதான் அரண்மனையில் நடந்தது. அவன் வைத்ததுதான் சட்டம் என்றானது. ஒரேடியாக மாலிக் கபூரின் கைப்பாவையானார் அலாவுதீன்!
வஞ்சகத்தையும், தேவையில்லாத கொலைவெறியையும் முக்கிய ஆயுதங்களாகப் பயன்படுத்திய அலாவுதீனின் கடைசிக் காலம் பரிதாபமானது...
திடீரென்று சுல்தானை வியாதிகள் பீடித்தன. நீர் சேர்ந்து அவர் கை கால்கள் வீங்கின. ரத்தக் கொதிப்பும் சேர்ந்து கொள்ள, படுக்கையில் வீழ்ந்தார் அலாவுதீன். மாலிக் கஃபூர், ஜாலி கஃபூர் ஆனான். “உங்களைக் கொல்ல மகாராணியும் தங்கள் மகன்களும் சதித்திட்டம் தீட்டுகிறார்கள் மன்னா!” என்று வஞ்சகமாக வேந்தனின் காதில் கிசுகிசுத்தான் அவன். நோயின் வேதனையில் ஏற்கெனவே மனநிலை பாதிக்கப்பட்டு எரிச்சலில் இருந்த சுல்தான், சேனாதிபதி சொன்னதைக் கேட்டுத் தன் குடும்பத்தையே சிறையில் தள்ளுவதற்கான ஆணையில் கையொப்பம் இட்டார்.
இதற்குள் சுல்தான் ஆட்சியை எதிர்த்து குஜராத்திலும், ராஜஸ்தானிலும், மகாராஷ்டிரத்திலும் போராட்டங்கள் வெடித்தன. அங்கேயெல்லாம் இருத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லிப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. ஜாபர்கான் போன்ற விசுவாசமான வீரத் தளபதிகள் இல்லாததும் ஒரு காரணம்! இந்தத் தோல்வி செய்திகள் படுக்கையில் வலியோடு புரண்டுகொண்டிருந்த அலாவுதீன் கில்ஜியின் காதுகளில் விழ, துவண்டுபோய் அழுதார் அலாவுதீன்.
ஒருநாள் இரவு படுக்கையில் அரற்றிக் கொண்டிருந்த அலாவுதீன் அருகே மருந்துக் குப்பியுடன் போய் நின்றான் மாலிக் கஃபூர். “ஒரு மருந்தும் தேவையில்லை” என்று புரண்டு படுக்கப் பார்த்தார். அந்த சுல்தானைப் பலவந்தமாகத் திருப்பி, அவர் வாயில் மருந்துக் குப்பியில் இருந்த கொடிய விஷத்தை ஊற்றிக் காரியத்தை முடித்தான் அந்த நயவஞ்சக சேனாதிபதி.
இருபது ஆண்டு காலம் இந்தியாவையே நடுங்க வைத்துக் கொண்டிருந்த சுல்தான், இந்த வகையில் ஒரு அலியின் கையால் கொடூரமாக உயிரிழந்தது - ஜனவரி 2, கி.பி. 1316-ல்.
“அலாவுதீனை அரவணைத்து அன்புடன் வளர்த்த மாமன் ஜலாலுதீன் கில்ஜியை நன்றியில்லாமல் கொலை செய்த பாவத்துக்கு அல்லாஹ் அளித்த தண்டனைதான் இது…” என்று வரலாற்றுப் பேராசிரியர்கள் அலாவுதீனின் பரிதாப மரணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
அலாவுதீன் கில்ஜி இறந்த இரண்டாவது நாள் சபையைக் கூட்டிய மாலிக் கஃபூர், சுல்தான் எழுதியதாகக் கூறப்பட்ட உயிலைப் படித்தான். பொய்யான ஒரு உயில்! அதன்படி, ‘மறைந்த சுல்தானின் மூத்த மகன்கள் சதித்திட்டங்கள் தீட்டியதால் அவர்களுக்கு அரியணையில் எந்த உரிமையும் இல்லை’ என்றும், ‘கடைசி மகன் உமர்கான் கில்ஜிதான் அலாவுதீன் வாரிசு’ என்றும் அறிவித்த மாலிக் கஃபூர், ஏழு வயது நிரம்பாத உமர்கானை, திகைத்துப் போன சபையினர் முன்னிலையில் சிம்மாசனத்தில் அமர்த்தினான். “இளவரசருக்கு என்னைக் காப்பாளராக நியமித்திருக்கிறார் அலாவுதீன்” என்றும் கூடவே அறிவித்துக் கொண்டான்.
அரசுக் கட்டில் ஒரு அறியாச் சிறுவனின் தொட்டிலானது. ஆட்டம் போட ஆரம்பித்தான் அலி. முதல் வேலையாக, சிறையில் தள்ளப்பட்ட அலாவுதீனின் பிள்ளைகளான கிஸிர்கான், ஷாதிகான் இருவருடைய பார்வையையும் பறிக்கச் சொல்லி ஆணையிட்டான். “தர்பூசணிப் பழத்தின் விதைகளைக் கத்தியால் சுழித்துச் சுரண்டி எடுப்பதைப்போல, சிறையில் பரிதாபமாக இரு இளவரசர்களின் கண்களும் அகற்றப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பட்டத்துக்கு வந்த பாலகனின் தாயை (அலாவுதீனின் மூன்றாவது மனைவி) தேவையில்லாமல் ஒரு ‘பந்தா’வுக்காக மணந்துகொண்டு, தன் கொடூரச் செயலைக் கொண்டாடினான் மாலிக் கஃபூர் (மாலிக் கஃபூர் ஒரு அலி என்பதை மறக்க வேண்டாம்). மிச்சமிருந்தது முபாரக் என்னும் ஒரு இளவரசர். அவர், அலாவுதீனின் இரண்டாம் மனைவியின் மகன். அந்த இளவரசர், மாலிக் கஃபூரின் நினைவுக்கு வர... அரண்மனையில் ஓர் அறைக்குள் காவலில் வைக்கப்பட்டிருந்த முபாரக் தலையைச் சீவச்சொல்லி ஆணை பிறந்தது. சில வீரர்கள், முபாரக் தங்கியிருந்த அறையை நோக்கிக் கிளம்பிச் சென்றார்கள்.
எப்படியோ இந்த விஷயம் முபாரக் காதுக்குப் போய்விட, அந்த ஆபத்தான தருணத்திலும் அந்த இளவரசரின் மூளை வேலை செய்தது! தான் அணிந்து கொண்டிருந்த நெக்லஸைக் கழற்றி, அதில் இருந்த முத்துக்களையும் வைரங்களையும் பிய்த்து எடுத்து, கதவுக்கு வெளியே கொலைகாரர்கள் காலடியோசை கேட்ட மாத்திரத்தில் உருட்டித் தள்ளினார் இளவரசர் முபாரக்!
உருண்டு வந்து பரவிய வைரங்களுக்காக, வராண்டாவில் வெட்டுக் குத்து ஏற்படும் அளவுக்கு அடியாட்களுக்குள் அடிதடி நிகழ ஆரம்பித்தது. அந்தச் சமயம் பார்த்து அங்கு வந்து சேர்ந்த ஒரு மெய்க்காவலன், “நன்றி மறந்து, மன்னரின் மகனைக் கொல்ல வெட்கமில்லையா உங்களுக்கு? மாலிக் கஃபூர் ஒரு துரோகி. அந்த ஈனப்பிறவிக்கு அல்லவா நாம் தண்டனை தரவேண்டும்?” என்று எடுத்துச் சொல்ல... இளவரசனைக் கொல்ல வந்த வீரர்கள் மனம் மாறினார்கள். வந்த வழியே உருவிய வாட்களுடன் திரும்பினார்கள் - இம்முறை மாலிக் கஃபூரின் படுக்கையறையை நோக்கி. கூடவே, அங்கு மாலிக் கஃபூருக்கு நெருக்கமான சில அந்தப்புர அலிகளையும் அழைத்துச் சென்றார்கள். அலிகள் அணிந்திருந்த வளையோசை கேட்ட மாலிக் கஃபூர் கதவைத் திறக்க... உள்ளே பாய்ந்த வீரர்கள், திடுக்கிட்டு, ஓடித் தப்பிக்கப் பார்த்த கஃபூரைக் கண்டந்துண்டமாக வெட்டித் தள்ளினார்கள். அலாவுதீன் இறந்து சரியாக 35-வது நாளில்!
“மேன்மை தங்கிய இளவரசர் அவர்களே...” என்ற குரல் கேட்டுத் திரும்பிய முபாரக், மாலை மரியாதைகளோடு மந்திரிப் பிரதானிகள் தன் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து நின்றதைப் பார்த்ததும், “மாலிக் கஃபூர் எங்கே?” என்று நடுங்கியவாறு கேட்டார். “அந்த ஆஸ்தான துரோகியைப் பரலோகம் அனுப்பியாகி விட்டது!” என்று பதில் வந்தது.
மகிழ்ச்சியில் துள்ளிய முபாரக் தர்பாருக்கு வந்து, சிம்மாசனத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உமர் கில்ஜியைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்துவிட்டு, “தம்பியே ஆளட்டும்... நான் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு எதற்கு அரியணை?” என்றார். அந்த வார்த்தை இரண்டு மாதங்கள்தான் நீடித்தது. “நாட்டைப் பல பிரச்னைகள் சூழ்ந்திருக்கும் இச்சமயத்தில் நான் மன்னனாக அமர்ந்தால்தான் மக்களுக்குச் சற்றேனும் பயமாக இருக்கும்!” என்று அறிவிப்பு செய்துவிட்டு, சிறுவனைக் கீழே இறக்கி, மகுடத்தைத் தன் தலையில் கட்டிக் கொண்டார் முபாரக் கில்ஜி.
மூன்று மாதங்கள் மட்டுமே ‘ஆட்சி’ செய்த குழந்தை உமர் கில்ஜியைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று, இரு கண்களிலும் பழுக்கக் காய்ச்சின இரும்பைப் பதித்துக் கொடுமை புரிந்தார்கள் முபாரக்கின் அடியாட்கள்.
ஆகஸ்டு 1316-ல் பட்டத்துக்கு வந்த சுல்தான் முபாரக் கில்ஜியை அரசர் என்பதைவிட, “அரியணைக்கு வந்து சேர்ந்த ஒரு அவமானச் சின்னம்” என்று அழைக்கலாம்! எடுத்த எடுப்பில், சிறையில் இருந்த 17,000 கைதிகளுக்கு ஒட்டுமொத்தமாக விடுதலை தந்து, தான் பட்டத்துக்கு வந்ததைக் கொண்டாடினார் சுல்தான் முபாரக்.
விடுதலையானவர்களில் பாதிக்குமேல் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள்! பிறகு, ராணுவ வீரர்கள் எல்லோருக்கும் ஆறு மாத போனஸ் அளிக்கச் சொல்லி சுல்தானிடமிருந்து அறிவிப்பு வந்தது. அதோடு அந்தப்புரம் சென்று அமர்ந்தவர்தான். அடியோடு நாட்டை மறந்து போனார் இந்த அரசர்! “சுல்தானின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் குடிப்பது, சல்லாபிப்பது தவிர, வேறு எதுவும் அவர் செய்ததாகத் தெரியவில்லை” என்று முபாரக் கில்ஜியின் ஆட்சியை விமரிசிக்கிறார் வரலாற்று ஆசிரியர் ஜியாவுதீன் பரானி.
இந்நேரத்தில்தான் அந்தப்புரத்தில் ஒரு அலங்கோலம் நிகழ்ந்தது. காமக்களியாட்டம் என்பது பெண்களோடுதான் என்ற நேர்வழியை மறந்தார் சுல்தான். தனக்குச் சேவகம் புரிய குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மல்லிக் குஸ்ரூ என்னும் இந்து இளைஞனிடம் காதல் வயப்பட்டார் முபாரக் கில்ஜி!
“அந்தப்புரம் என்பது இந்த இரு ஆண்களுக்கு மட்டும் என்ற நிலைமை தலையிலடித்து கொள்ளும் வகையில் தலைகீழாக மாறியது. மல்லிக் குஸ்ரூவின் புதிய சேவகத்தில் புல்லரித்துப் போன முபாரக், அவனைத் தன் பிரதம மந்திரியாக ஆக்கிக்கொண்டார்! மற்ற பிரபுக்களும் பிரதானிகளும் முகம் சுளித்ததைக் கண்டு, “என் சொந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம். குஸ்ரூ ஒரு இந்து என்பதால் தானே உங்களுக்கு வயிற்றெரிச்சல்?” என்று சொன்ன சுல்தான், தன் நண்பனை அழைத்துக்கொண்டு வந்து, அங்கேயே குஸ்ரூவை மதம் மாறச் சொல்லி ஆணையிட்டார். உடனே தன் பெயரை குஸ்ரூகான் என மாற்றிக்கொண்டதாக அறிவித்தான் மல்லிக் குஸ்ரூ! இப்படித் தங்கள் தகாத நட்புக்காக இருவருமே தங்கள் உன்னதமான மதங்களைக் கொச்சைப்படுத்தினார்கள்.
பொறுத்துப் பார்த்த மந்திரிகள், “சுல்தான்! குஜராத் ராஜ்யத்தில் தங்களை எதிர்த்துக் கிளர்ச்சி பெரிதாக வெடித்துக்கொண்டிருக்கிறது... அதையும் சற்றுக் கவனித்தால் நல்லது” என்று எடுத்துச் சொன்னார்கள். அய்ன்-உல்-மூல்க் என்ற திறமைவாய்ந்த தளபதியின் தலைமையில் முபாரக் கில்ஜி அனுப்பிய படை குஜராத்தை மீட்டு கொண்டு வந்தது. பிறகு கோதாவரியை சார்ந்த தேவகிரியை ஆண்ட மன்னர் ஹரபாலதேவர் புரட்சிக்கொடி தூக்க, முபாரக் நேரடியாக ஒரு பெரும் படையோடு கிளம்பினார். டெல்லி சுல்தானின் பெரும் படையை தேவகிரி மன்னரால் சமாளிக்க முடியவில்லை. அவரைச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தார்கள். அங்கேயே எல்லோர் முன்னிலையிலும் ஹரபாலதேவரின் தோல் முழுமையாக உரிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது. பிறகு அவர் தலையை வெட்டி எடுத்து கோட்டை முகப்பில் ஈட்டியில் பொருத்தி வைத்தார்கள் முபாரக்கின் வீரர்கள்.
இதற்குள் தெலுங்கானாவுக்குப் படையுடன் சென்ற குஸ்ரூகான் வெற்றி பெற்றுத் திரும்ப, சுல்தான் முபாரக் கில்ஜிக்குத் தலைகால் புரியவில்லை. டெல்லிக்குத் திரும்பியவுடன் நண்பன் குஸ்ரூகானை ஆரத் தழுவிக்கொண்டார் சுல்தான். ஏற்கெனவே சீரழிந்துவிட்டிருந்த டெல்லியின் மகோன்னதமான அரண்மனை படுகேவலமாகப் போனது.
மதிப்புக்குரிய பிரபுக்கள், அறிஞர்கள் யாரும் அரண்மனை பக்கம் தலைகாட்டுவதைத் தவிர்த்தார்கள். வந்துபோனவர்கள், விரசமாகப் பாடும் இசைக் கலைஞர்களும் விபரீதமான காம விளையாட்டுகளில் தேர்ந்த விபசாரிகளும்தான்!
திறமை மிகுந்த சுல்தான்கள் வாழ்ந்த மாளிகை, ஒரு கீழ்த்தரமான கேளிக்கைக் கூடமாக மாறியது கண்டு பிரபுக்களும் மதகுருமார்களும் குமுறினர்.
முபாரக் கில்ஜிக்குச் சிறுவயதில் ஆசிரியராக இருந்த காஜி ஜியாவுதீன் என்னும் பேரறிஞர் எப்படியோ தடைகளைச் சமாளித்துச் சுல்தானைச் சந்தித்து அறிவுரை கூற ஆரம்பித்தார். பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த குஸ்ரூகான், அழகிய மங்கை போல உடை அணிந்துகொண்டு உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு ஒய்யாரமாக உள்ளே நுழைய... அந்தக் கணமே முபாரக் கில்ஜியின் அறிவு அடியோடு மழுங்கியது. ஆசிரியர் வெளியேற்றப்பட்டார். வெளியே தோட்டத்தில் அந்த நல்ல மனம் கொண்ட அறிஞரை இழுத்துச் சென்று குஸ்ரூகானின் ஆட்கள் குத்திச் சாய்த்தனர். ‘ஐயோ!’ என்று அந்த ஆசிரியர் வெளிப்படுத்திய அலறல், அந்தப்புரத்தில் இருந்த முபாரக் காதில் விழுந்தது. “என்ன சத்தம் அது?” என்று எழுந்தார் முபாரக் கில்ஜி....
வெளியே நிகழும் கொலையை நேரில் பார்த்தால் தன் சுயரூபம் வெளிப்பட்டுவிடும் என்று புரிந்துகொண்ட குஸ்ரூகான், ‘இனியும் சுல்தானை விட்டு வைக்கக்கூடாது. நான் நாடாள வேண்டிய தருணம் வந்துவிட்டது’ என்று முடிவுகட்டி, முபாரக் கில்ஜியை ஓடிச்சென்று மடக்கினான். முதன்முறையாக மன்னருக்கு ‘நண்பன்’ மீது சந்தேகம் வந்து விட்டது. குஸ்ரூகானை அகற்றிவிட்டு வெளியேறப் பார்த்த சுல்தானின் முடியைப் பிடித்துக் கீழே தள்ளினான் - இதுவரை நெருங்கிய நண்பனாக நடித்துவந்த அந்த நயவஞ்சக நரி. கண்களில் திகைப்போடு சுல்தான் எக்குதப்பாகக் கதவுக்கு அருகில் கோணல் மாணலாக விழ, குஸ்ரூகான் கொடுத்த குரலில் அவனுக்கு விசுவாசமான காவலாளிகள் உள்ளே புகுந்தனர்....
சுல்தானை அவர்கள் அமுக்கிப் பிடித்துக் கொள்ள, வாளை எடுத்து ஒரே வீச்சில் தன்னைச் சீராட்டிய எஜமானனின் தலையைத் துண்டாக்கினான் அந்தத் துரோகி. இந்தக் கொலை நிகழ்ந்தது மார்ச் - 24, கி.பி.1321-ல்.
துண்டாக்கப்பட்ட சுல்தானின் தலையை அரண்மனை முற்றத்தில் தூக்கியெறிந்த குஸ்ரூகான், உடனே வீரர்களுடன் சிறைச்சாலைக்குச் சென்றான். அங்கே சிறையில் எலும்புக்கூடாக முடங்கிக் கிடந்த மற்ற இளவரசர்களை (சில மாதங்களே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சிறுவன் உமர் கில்ஜி உட்பட) வெட்டிக் கொன்றார்கள்.
பிறகு அந்த வெறிபிடித்த கும்பல் அந்தபுரத்துக்குள் நுழைந்தது. அலாவுதீன் கில்ஜி மற்றும் முபாரக் கில்ஜியின் குடும்பப் பெண்களை மானபங்கப்படுத்தி ஆட்டம் போட்டது.
மறுநாள் காலை, அடுத்த சுல்தானாகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு அரியணையில் அமர்ந்தார் குஸ்ரூகான். வாழ்ந்த விதத்தால் இந்து மதத்தைக் கேவலப்படுத்திய இந்தத் திடீர் மன்னன், தான் மாறிய மதத்தையும் கேவலப்படுத்தினான். இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை நாசப்படுத்தினான். டெல்லிவாழ் மக்கள் இந்தக் கேடுகெட்ட ஆட்சியைப் பார்த்துத் திகைத்துப் போனார்கள்.
பொறுக்க முடியாத பிரபுக்கள், டெல்லி ஆட்சியின்கீழ் இருந்த லாகூரை நிர்வகித்து வந்த கியாஸுதீன் துக்ளக் என்னும் திறமை வாய்ந்த பிரபுவுக்குத் தகவல் சொல்லி அனுப்பினார்கள். திகைத்துப்போன கியாஸுதீன் உடனடியாக ஒரு படை திரட்டிக்கொண்டு டெல்லிக்கு விரைந்தார்....
டெல்லி கோட்டைக்கு வெளியே நடந்த சுருக்கமான யுத்தத்தில் குஸ்ரூகானின் படை சிதறி ஓடியது. தோற்றுவிட்டோம் என்று புரிந்தவுடன் ஒட்டம் பிடித்த குஸ்ரூகான், ஒளிந்துகொள்ள தேர்ந்தெடுத்த இடம் டெல்லிக்கு வெளியே உள்ள இடுகாட்டில், ஒரு கல்லறைக்கு அடியில்! கியாஸுதீன் துக்ளக்கின் திறமையான படை வீரர்கள், குஸ்ரூகானைத் தோண்டித் துருவிப் பிடித்து வந்தார்கள். கோட்டைக்கு வெளியே நாற்சந்தி கூடும் இடத்தில் குஸ்ரூகானின் உடல் - தலைவேறு, கைவேறு, கால் வேறாகப் பிய்த்து எடுக்கப்பட்டது.
இப்படியாக, தனிப்பட்ட ஒருவரின் கீழ்த்தரமான ‘நட்பு’, கொலைவெறியில் கொண்டுவிட்டு கில்ஜி வம்சத்துக்கே முடிவு கட்டியது.
மந்திரிப் பிரதானிகளும் மக்களும் விரும்பிக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மகுடம் கட்டிக்கொள்ள இசைந்தார் கியாஸுதீன் துக்ளக்.
இவர்தான் சரித்திரப் பிரசித்தி பெற்ற, பிரச்னைக்குரிய முகமது பின் துக்ளக்கின் தந்தை!

Leave a comment
Upload