
“வேண்டாம் அரசியல் ரஜினி திடீர் முடிவு” என்று இரண்டு வாரங்களுக்கு முன்பே விகடகவியில் நாம் எழுதியதை, இந்த வாரம் ரஜினிகாந்த் உறுதிப் படுத்தி விட்டார்.
அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “என் அறிக்கை போல் ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதுபற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து விட்டு எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு நான் தெரிவிப்பேன்” என்று ரஜினிகாந்த் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
சரி சமூக வலைத்தளங்களில் உலாவரும் அந்த அறிக்கை அல்லது அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்று சற்று பார்ப்போம்.

ரஜினியே வெளியிட்டது போல் ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வெளிவந்தது. வழக்கப்படி ‘என்னை வாழவைத்த தெய்வங்களான என் ரசிகர்களும் மக்களும் தான் எனக்கு கடவுள்’ என்று தொடங்கும் அந்த அறிக்கை... “ஜூலை மாதம் சுற்றுப்பயணம், அக்டோபர் இரண்டாம் தேதி மதுரையில் மிகப் பெரிய மாநாட்டில் கட்சிப் பெயரையும் கட்சிக் கொடியையும் அறிவிக்க இருந்தேன்.

இந்த கொரோனா பிரச்சனையில் பல மாதங்களாக யாரையும் சந்திக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த், சிங்கப்பூரில் அவருக்கு தரப்பட்ட சிகிச்சை, அமெரிக்காவில் நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை... என்பது பற்றி எல்லாம் குறிப்பிட்டு, அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தனது மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி ‘என் உடல் நலத்தில் அக்கறை உள்ள ரசிகர்கள் மக்கள் என்னை என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்கிறேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு... வாழ்க தமிழ் மக்கள்... வாழ்க தமிழ்நாடு.... ஜெய்ஹிந்த்...’ என்று அந்த அறிக்கை முடிகிறது.

‘இந்த அறிக்கை என்னுடையது அல்ல... ஆனால் அந்த மருத்துவத் தகவல்கள் மாத்திரம் உண்மையானது’ என்று ரஜினிகாந்த் ஒப்புக்கொள்கிறார். மருத்துவத் தகவல்கள் அனைத்துமே ரஜினியின் நெருக்கமான வட்டாரத்துக்கு கூட ரஜினி சொல்லியிருந்தால் தான் தெரிந்திருக்கும். அப்படி என்றால் அந்த மருத்துவத் தகவல்களை வெளியிட்டது யார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழத்தான் செய்கிறது.
இது பற்றிய உணமைச் செய்தி அறிய தீவிரமாக விசாரித்தோம். அதில் வெளி வந்த சில தகவல்கள்:
இந்த அறிக்கை முதலில் ரஜினியின் ஒப்புதலுடன் தான் தயாரிக்கப்பட்டது. அதை தனது சில முக்கிய நண்பர்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் மூலம் அவர் அனுப்பியிருந்தார். அதை அந்த நண்பர்கள் சிலர் தமது மற்ற நண்பர்களுக்கு அனுப்பி விட... அதுவே வலைதளங்களிலும் வலம் வரத் துவங்கிவிட்டது. அதே சமயம், அவருக்கு நெருக்கமான வட்டாரம் ‘ரஜினியின் ஒப்புதலுடன் தான் இந்த அறிக்கை லீக் செய்யப்பட்டிருக்கிறது... இப்படி ஒரு வெள்ளோட்டம் விட்டு, என்ன ரியாக்ஷன் என்று பார்ப்போம் என்று ரஜினியே முடிவு செய்துதான், இந்த அறிக்கையை அனுப்பி இருக்கிறார்’ என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்று சொல்வது கூட இன்று பரபரப்பு செய்தியாகத்தான் இருக்கிறது. அதுதான் ரஜினி!

இப்போதைக்கு ரஜினி தனக்கு தனிக்கட்சி இல்லை என்ற முடிவு உண்மைதான். ஆனால், இந்த முறை தனது ரசிகர்களுக்கு ‘மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டார். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகத்தான் அவர் குரல் இருக்கும்’ என்றும் ரஜினியின் நெருங்கிய வட்டாரம் சொல்கிறது.
சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரஜினியுடன் ஒரு மணி நேரம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். எனவே அவர் வாய்ஸ் இந்த முறை, பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் என யூகிக்கிறது ரஜினியின் நெருங்கிய வட்டாரம்..

எது எப்படியோ ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என தனக்கான அமைச்சர் கனவுகளுடன் நம்பிக்கையோடு திரிந்த பலர், இப்போது விரக்தியாகி விட்டார்கள். இன்னும் சிலர் ‘அவர் முற்றுப்புள்ளி எல்லாம் வைக்கவில்லை, கமா தான் போட்டு இருக்கிறார்’ என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
திமுகவை பொருத்தவரை அது ‘அப்பாடா’ என்று நிம்மதியாக இருக்கிறது!

Leave a comment
Upload