தொடர்கள்
Daily Articles
ராக தேவதைகள்... - 11 - மாயவரத்தான் சந்திரசேகரன்

மாண்டு

20201001211801965.jpeg

லாவண்யா

‘ஆயிரம் கண் போதாது.. வண்ணக்கிளியே’ பாட்டை கேட்டாலே சட்டென எழுந்து ஆடலாமா என்று தோன்றும். அந்த அளவிற்கு அழகானதொரு கம்போஸிஷன். சொல்லப்போனால் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி நாதஸ்வரத்தில் வாசித்தபின் தான் அந்த ட்யூனின் மகிமை பலருக்கு புரிந்தது. பின்னணியில் மதுரை எம்.பி.என். சேதுராமனும், பொன்னுசாமியும் அமர்க்களப்படுத்தியிருப்பார்கள். இப்படம் 1968-ல் வந்தது என்றால், 1960-ம் வருடம் வெளிவந்த ‘பாவை விளக்கு’ படத்தில்தான் இப்பாடல் முதன் முதலில் இடம் பெற்றது. அதற்கும் சிவாஜிதான் வாயசைத்திருப்பார். பாடியிருப்பது சிதம்பரம் ஜெயராமன். அது ஒரு அலாதியான குரல் மட்டுமல்ல.. அதை ரசிக்கவும் ஒரு மனம் வேண்டும். அவருக்குப்பின் அந்த கம்பீரம் வரவேயில்லை. மாண்டு ராகம் என்றாலே அதற்கு ‘முத்திரை பாடல்’ என்று இதைச் சொல்லலாம். ‘பாவை விளக்கு, தில்லானா..’ இரண்டுக்குமே இசை கே.வி. மகாதேவன். தமிழ் சினிமாவில் இன்று வரை வேறு யாருக்குமே சாஸ்த்ரிய சங்கீத அறிவு அந்த அளவுக்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை!

20201001212107600.jpeg

சிதம்பரம் ஜெயராமன்​​​​​​

இந்த ராகம் கர்நாடக சங்கீதம் மேடையில் பாப்புலர் என்றாலும், பெரும்பாலும் இதை மெயினாக எடுத்து ராகம் பாடி கீர்த்தனை பாடுவது என்பது அபூர்வம். துக்கடா உருப்படிகளுக்கு தான் இதை பயன்படுத்துவது வழக்கம். மாண்டு இந்துஸ்தானியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ராகம். 20-ம் நூற்றாண்டுக்குப் பிறகே நம்மூருக்கு வந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. கச்சேரி மேடைகளில் மிக அதிகமாக பாடப்பட்டது என்றால் ‘வானத்தின் மீது மயிலாட கண்டேன்’ என்ற வடலூர் வள்ளலாரின் நெஞ்சை தொடும் பாடல். ‘ஜானகி மனோகரம்’ என்ற மைசூர் வாசுதேவாச்சாரின் கீர்த்தனை, பாபநாசம் சிவனின் ‘ராமனை பஜித்தல்’ போன்றவையும் அவ்வப்போது பாடப்படுபவை. மும்மூர்த்திகள் உள்பட சங்கீத மேதைகள் யாரும் இதில் அதிகம் கீர்த்தனைகள் அமைக்கவில்லை!

20201001211853791.jpeg

எம்.எஸ். சுப்புலட்சுமி

சினிமாவைப் பொறுத்தவரை, மாண்டுக்கு தனி மவுசே உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காசி அல்வா ரகம் என்றால் அது மிகை இல்லை. சினிமாவில் வரும்போது ஓரிரு அந்நிய ஸ்வரங்கள் கலந்தே வரும். அப்படி வருவதை மிஸ்ரமாண்டு என்பார்கள்! ரொம்ப பழமையான மாண்டு என்று ஆராய்ந்தால், 80 வருடங்களுக்கு முன்பு வந்த ‘சேவா சதனம்’ படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘இந்த உடலை ஏன் எடுத்தேன் நான்’ என்ற பாபநாசம் சிவனின் உருக்கமான பாடல்! அதுவே அவரது முதல் சினிமா பிரேவேசம் கூட. இளம் வயதிலேயே அவரது குரலில் ஒரு தெய்வீகத் தன்மை இருப்பதை அவரது ஆரம்ப கால பாடல்களிலேயே உணரலாம். வேத பண்டிதர்களே வியக்கும் அளவிற்கு அவரது சமஸ்கிருத உச்சரிப்பு இருக்கும். அதற்காக அவரது கணவர் சதாசிவம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதெல்லாம் பெரிய கதை..

2020100121191501.jpeg

டி.கே. பட்டம்மாள்

நமது இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று நள்ளிரவில் அகில இந்திய ரேடியோவில் ஒலித்த முதல் குரல் டி.கே. பட்டம்மாளுடையது. ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’! அந்த உணர்ச்சிமிகு பாரதியின் பாடல் மாண்டு ராகத்தில் அமைந்தது என்பது தனிச் சிறப்பு. ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரின் ‘நாம் இருவர்’ படத்தில் இடம் பெற்ற இதற்குப் பொருத்தமான ராகத்தை தேர்ந்தெடுத்த ஆர். சுதர்சனத்தின் இசை ஞானம் வியக்க வைக்கிறது. ‘சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே, இதை தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே..’ என்று டி.கே.பி. மேல் ஸ்தாயிக்குப் போய் அசாத்தியமாக உலுக்குவார். அற்புதமான இடம்! தனது கடைசி மூச்சு வரை இந்தப் பாடலை எத்தனையோ மேடைகளில் பாடி இருக்கிறார் அந்த சங்கீத மேதை. பாட்டியின் ‘டிரேட் மார்க்’ பாடலை நித்யஸ்ரீ மகாதேவனும் விடாமல் பாடுகிறார். அடுத்த தலைமுறையான நித்யஸ்ரீயின் சகோதரி காயத்ரியின் மகள் லாவண்யாவும் ‘ஆடுவோமே’வை சபாக்களில் தொடர்கிறார். ஆக 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மாண்டு பட்டம்மாள் குடும்பத்தின் சொத்தாகிவிட்டது!

மரகதமணி

‘மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே... கண்ணே’ - என்று டி.எம்.எஸ். ஆனந்தமாய் இழுப்பாரே... நினைவிருக்கிறதா? அவரும் பானுமதியும் பாடும் ‘அம்பிகாபதி’யின் அம்சமான டூயட் இதே ராகம்! கடைசி சரணத்தில் ராகம் புன்னாகவராளிக்கு மாறி ‘இனி நானும் வேறில்லை’ என்று இரு குரல்களும் இழைவதெல்லாம் ஜி. ராமநாதன் போன்ற ஜீனியஸ்களால் மட்டுமே நினைத்துப் பார்க்க முடிகிற கற்பனை. அந்த காலத்தில் இந்தப் பாடலுக்காகவே படத்தை திரும்ப திரும்ப பார்த்தவர்கள் உண்டாம்!

20201001211950906.jpeg

பாலமுரளி கிருஷ்ணா

எத்தனை முறை பார்த்தாலும் ரோஜா அழகு தான். எத்தனை முறை கேட்டாலும் ‘ஒரு நாள் போதுமா’வும் சுகம் தானே. அதுவும் பாலமுரளி கிருஷ்ணா பாடுகிறபோது மாண்டு மயிலை கற்பகாம்பாள் போல ஜொலிப்பாள். எடுத்த எடுப்பிலேயே அந்த ராகத்தை அவர் ஜோராக ஆலாபனை செய்யும் விதமே பிரமாதமாக இருக்கும். அந்த கெத்தை படத்தில் பாலைய்யா அருமையாக காட்டியிருப்பார். ‘ஒரு நாதமா.. சங்கீதமா..’ போன்று பல அற்புத இடங்கள் பாட்டு முழுவதுமே! இந்தப் பாட்டில் பல்லவி மட்டுமே மாண்டுவிலும், அப்புறம் வரும் சரணங்கள் வெவ்வேறு ராகங்களில் ராகமாலிகையாக வருவதும் கே.வி. மகாதேவன் என்ற திரையுலக இசை மேதையின் அபார கற்பனை.

‘எங்க வீட்டு பிள்ளை’யில் டி.எம்.எஸ். பாடும் ‘குமரி பெண்ணின் உள்ளத்திலே’, சுசீலாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இரண்டுமே அந்த காலத்தில் எல்லோரது மனதையும் கொள்ளை கொண்ட மாண்டு ராகப் பாடல்கள். இரண்டு பாடல்களுக்குமே இசை எம்.எஸ்.வி. ராமூர்த்தி ஜோடி. ‘குமரி பெண்’ணில் காதல் ரசத்தை காட்டிவிட்டு ‘நெஞ்சம் மறப்பதில்லை’யில் சோகத்தை பிழிந்திருப்பார்கள். இதில் வரும் பின்னணி இசையே நமக்கு இனம்புரியாத வேதனையை ஏற்படுத்தும்!

எஸ்.பி.பி

அடுத்து ‘அழகன்’ படத்தில் இடம்பெறும் ‘ஜாதி மல்லி பூச்சரமே. சங்கத் தமிழ் பாச்சரமே’ மற்றொரு ரம்மியமான பாடல்! எஸ்.பி.பி.க்கு இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் பாடல் என்றால், கேட்கவா வேண்டும்? ஜமாய்த்திருப்பார். இப்படத்தின் இசையமைப்பாளர் மரகதமணி நல்ல மெலடிகள் பலவற்றை தந்தவர். தெலுங்கிலிருந்து அவ்வப்போது தமிழுக்கு வந்து விட்டு போய்விடும் வித்தியாச கலைஞர். ட்யூனில் சற்று தெலுங்கு வாடை அடித்தாலும் காதில் சுலபமாக உட்காரும் அவரது பாடல்கள்.

20201001213303852.jpeg

நித்யஸ்ரீ மகாதேவன்

ஏ.ஆர். ரஹ்மான் ஒரு மாண்டு ப்ரியர் என்பது சிலருக்கே தெரிந்த சுவாரஸ்யம். அவரே பேட்டிகளில் ஜாலியாக கூறியிருக்கிறார். இந்தி, தமிழ் இரண்டிலுமே அவ்வப்போது இந்த ராகத்தை பயன்படுத்தியுள்ளார். அண்மையில் பாடகி சுதா ரகுநாதன் பல இந்திய பிரபலங்களை ஆன்லைன் மூலம் செய்த நேர்காணலில் ரஹ்மானையும் சந்தித்தார். அப்போது “மாண்டு எனக்குப் பெரிய மயக்கம். அது போல எதுவும் இல்லை..” என்றார் சிரித்தவாறே இசைப்புயல். இந்த ராகத்தில் அவர் இசையமைத்த இரண்டு கனவுப் பாடல்களை அடுத்த வாரம் பார்க்கலாம்!

- இசை பெருகும்