தமிழ் வானில் மின்னும் இலக்கியங்களாம் தாரகை பலவற்றுள், தனித்து ஒளிர்விடும் விண்மீன் நாலடியார். திருக்குறள் ஒத்த அமைப்பும், உள்ளடக்கமும் கொண்ட மகத்தான நீதி நூல் இது. சங்க காலத்தைத் தொடர்ந்த சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களில் பதினெண்கீழ்க்கணக்கு வரிசையில் முதல் இலக்கியம். ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்னும் பழமொழி நாலடியாரின் பெருமையைக் கூறுகிறது.
நான்காம் ஆண்டில் விகடகவி வெற்றி நடை போடுகையில் நாலடியாரை நினைவு கூர்வது சாலப் பொருத்தம்.
‘வேளாண் வேதம்’ என்றும், ‘நாலடி நானூறு’ என்றும் அடை மொழி இட்டு வழங்கப்படும் இந்நூல் கி.பி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சமண முனிவர்களால் இயற்றப்பட்டு, பதுமனாரால் தொகுக்கப்பட்டது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பால்கள், நாற்பது அதிகாரங்கள், நானூறு பாடல்கள் என்று சிறப்பான உள்ளடக்கம் கொண்டது. அறத்துப்பாலில் 13 அதிகாரங்களும், பொருட்பாலில் 26 அதிகாரங்களும், காமத்துப்பாலில் ஒரு அதிகாரமும் என பகுத்து வைத்துள்ளனர்.
“வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று”
என்ற கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நாலடியார் தொடங்குகிறது.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு நிலை பொருட்களைப் பாடும் நூல் சிறப்பான உவமைகளும், கருத்துச் செறிவும் கொண்ட வெண்பா மாலையாய் தமிழன்னையின் தாள்களில் வீற்றிருக்கிறது. சொற்சிறப்பும், பொருட்சிறப்பும் நாலடியாரின் அணிகளாக அமைத்துள்ளன. ‘கல்வி கரையில! கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல” என்ற வரிகளில் நமக்கு கல்வியின் சிறப்பை பள்ளி நாட்களில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட வரிகள்.
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்
இது குறள் போல தோன்றினாலும் குறள் அல்ல, நாலடியாரின் வெண்பாவின் இறுதி வரிகள். இது போல பல மேற்கோள்கள், சொல்லிலும், பொருளிலும் திருக்குறளை ஓத்திருந்து இனிமை தருகின்றன.
நானூறு பாடல்களில் நான்கு பாடல்களை மட்டும் இங்கு சொல்ல விழைந்தேன்.
இருகரம் நீட்டி அழைக்கும் மழலை என ‘என்னை எடுத்துக் கொள், என்னை எடுத்துக் கொள்’ என்று ஒவ்வொரு பாடலும் என்னை அழைத்தன நானூறு முத்துக்களில் நான்கு முத்துக்கள் உங்கள் கவனத்துக்கு எடுத்து வந்தேன்.
நம் நட்பு வட்டத்தில் சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் நமக்கென பல நன்மைகள் செய்திருப்பார். நம் துன்ப வேளைகளில் நமக்குத் துணையாக இருப்பார்கள். ஆனால் சில நேரங்களில் நமக்குத் தொல்லையும் தருவார்கள். அவர்களது சொல்லும், செயலும் நமக்கு எரிச்சலை மூட்டும். ஆயினும் அவர்களை விட்டு நாம் விலகி விடக்கூடாது... என்று சொல்கிறது நாலடியார்.
‘பொன்னுடன் நல்ல வீட்டையும் சுட்டொழிக்கும் நெருப்பை அதன் பயன் கருதி ஒவ்வொரு நாளும் வீட்டில் அதனை உண்டாகிப் போற்றி வருகிறோம். அதுபோல, இடையிடையே துன்பங்களைச் செய்தாலும் கைவிட முடியாத நண்பர்களைப் பொன்போல் நினைத்து இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்னும் பொருளில் வரும்
இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
நாலடியார் -225
நாம் பார்க்கும் போது அழகாக சிரிக்கிறது கள்ளி மலர். அவற்றைப் பார்க்கும் போதே...
அள்ளிக்கொள்வது போலச் சிறிய அரும்புகளை உடையவையானாலும், அவை சூடிக்கொள்வதற்கு ஏற்ற மலர்கள் அல்லாமையால், யாரும் கள்ளிச் செடியின் மீது கை நீட்டமாட்டார்கள். அதுபோல, மிகப்பெரும் செல்வம் உடையவரானாலும் அவர் செல்வம் யாருக்கும் பயன்படாமையால், தகுதியற்ற மக்ககளிடம் அறிவுடையோர் விரும்பிச் சேரமாட்டார்கள்.
இந்த உவமையுடன் வரும் அழகிய பாடல், நாம் அனைவரும் அறிந்த பாடல்.
அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.
நாலடியார்-262
‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்னும் பழமொழியும் “நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு” என்னும் குறளடியும் தகுதியானவர்க்கு தரும் கொடையைப் பற்றி கூறுகின்றன. இவ்வாறு தகுதி கொண்டவருக்கு வழங்கப்படும் ஈகையைப் பற்றிய செய்தி மூவுலகும் சென்று அடையும் என்கிறது நாலடியார். அதற்கு உவமை கூறுகையில்
கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்.
நாலடியார் – 100
விரிவாக சொல்வதானால், “குறுங்கோலால் அடித்து ஒலிக்கப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! ஆனால் தகுதியுடையவர்க்குக் கொடுத்தார் என்னும் புகழ்ச் சொல்லை, ஒன்றன் மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களில் உள்ளாரும் கேட்பர்”
என்ன ஒரு அழகிய உவமை!
வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் பாடல் ஒன்று உள்ளது.
‘நின்றன நின்றன நில்லா’என உணர்ந்து,
ஒன்றின ஒன்றின வல்லே, செயின், செய்க-
சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்து, உடன்
வந்தது வந்தது, கூற்று!
நாலடியார் : 4
அழகிய ஓசைநயம் மிக்க இப்பாடல் என் கண்முன் விரிந்தது. அதன் பொருளும் கருத்தைக் கவர்ந்தது...
“நம் வாழ் நாட்கள் செல்கின்றன.. செல்கின்றன...
எமன் சினந்து விரைந்து வருகிறான்...!
நிலையானவை என நாம் நினைக்கும்
செல்வங்களோ நிலைபெறாமல் செல்லும்...
இதை உணர்ந்து அறச் செயல்களை விரைந்துச் செய்வீராக”
திருக்குறளுக்கு அடுத்து அறநெறிகளை உரத்துக் கூறும் நீதி நூல் நாலடியார். ஆங்கிலத்தில் ஜி.யு .போப் அவர்களால் இது மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதே இதன் புகழுக்குச் சான்று.
நல்ல தமிழ் இலக்கியங்களை தம் வாசகர்களுக்கு விகடகவி வழங்கி இலக்கிய விருந்து படைத்துள்ளது. இனி தொடரும் பயணத்திலும் அத்தகைய இலக்கிய விருந்து காத்திருக்கிறது.
உங்கள் ஆதரவை எதிர் நோக்குகிறோம்....
Leave a comment
Upload