“நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை..” - இதுதான் இந்த வாரம் மக்கள் பேட்டி..
ச. ஸ்ருதி சஞ்சிதா, கல்லூரி மாணவி, வண்டலூர்.
நான் பள்ளியில் 12ஆவது படிக்கும் போது இயற்பியல் செய்முறை வகுப்புல நாங்கள் 5 மாணவிகள் ஒரு குழுவாக ஓம்ஸ் விதியை நிரூபிக்கும் விதமாக சர்க்யூட் அமைக்கும் பரிசோதனையில் ஈடுப்பட்டிருக்கும்போது, ஒரு மாணவி (தீபா ) தவறாக வயர்களை கனெக்ஷன் கொடுக்க, எல்லாம் பணால் ஆனது. எங்களைத் தொடர்ந்து இன்னும் 3 குழுக்கள் பரிசோதனை செய்வதற்கு காத்திருந்த நிலையில் உபகரணங்களை வீணாக்கியதால் கோபாவேசத்துடன் கையை ஓங்கிக் கொண்டே தீபாவை நெருங்கிய ஆசிரியையை கண்டு அனைவரும் பயத்தில் உறைந்து நிற்க... நான் சடாரென்று சுதாரித்து கொண்டு, “மிஸ்..! தீபா தவறு செய்யவில்லை. ஆஷா தான் கனெக்ஷன் கொடுத்தாள்..” என மாற்றிச் சொன்னவுடன்... சிறிது குழப்பமாகி, பின் ஆஷாவை நோக்கி இனி இப்படி செய்யாதே என்று சிறிதளவு திட்டிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார்.
ஆஷா இயற்பியல் ஆசிரியையிடம் ட்யூஷன் படித்து கொண்டிருந்தாள். அதனால் அவளை அடிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நான் செய்த ஐடியா பலித்தது. நான் மட்டும் பேசாமல் இருந்திருந்தால், தீபாவை அடித்து நொறுக்குவது மட்டுமில்லாமல்... எங்களுக்கும் (ஆஷாவை தவிர) செமயாக விழுந்திருக்கும். எங்க நாலு பேருக்கு நல்லதுன்னா ஆஷாவை மாட்டி விட்டது தவறில்லைனு அவளையும் சமாதானம் செய்து விட்டோம்.
ரா.வீரய்யன், நாகை.
இதோ இப்ப தமிழ்நாட்டுல நிவர் புயல் வந்துட்டுப் போச்சு.. கிராமபுறங்கள்ல என்ன செஞ்சாங்க..? எல்லா மரத்தோட கிளைகளையும் அடியோட வெட்டி கெடாசுனாங்க.. என்னடாது மரத்தை வெட்டுறது தப்பாச்சேனு நினைக்க வேண்டாம்...
அதுக்கு பேரு காவத்து செய்தல். அதாவது கிளை கழித்தல். மரத்தில் அதிகம் கிளைகள் இருந்தால், மரம் சாஞ்சிரும். மரங்களை காவந்து பண்றதோட மட்டுமில்லாம... மரம் வேரோடு சாஞ்சா மனித உயிர்கள், வீடு, வாகனம்னு சேதம் ஆகிடும்னு முன்னேற்ப்பாடா இதை விவசாயிகள் செய்றாங்க. நாலு பேருக்கு நல்லதுன்னா... மரத்தை வெட்டுறதும் தப்பில்லனு நம்மூர் விவசாயிகள் செயல்ல காமிச்சுட்டாங்களே..!
ந.தேவதாஸ், தஞ்சை.
பையன் தண்ணி, தம்முனு, கெட்டுபோறான்னு குறைபட்டா,
பெற்றோர்கள் உடனே பையனுக்கு கல்யாணம் பண்ணனும்றானுங்க...
ஒருத்தன் வீணா போறதெல்லாம் கல்யாணத்துக்கு தகுதியா வச்சுருக்காங்க... அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சினு இவன் குடும்பத்துல நாலு பேரு நல்லா இருக்க... ஒரு பொண்ணோட வாழ்க்கைய பலி கொடுக்குறாங்க.. தப்பு தானே..?
உஷா கணேஷ், தாம்பரம்.
ஏங்க!! இந்த நியாயத்தை நீங்களே கேளுங்க..!
ஒரு வருஷம் save Chennaiன்னு போட்டா பரவாயில்லை... வருஷா வருஷம் save Chennai என்று போடச் சொன்னா எப்படினு மத்த ஊர்ல இருக்கிறவங்க மனசாட்சி இல்லாம கேக்குறாங்க.. சென்னை நல்லா இருந்தா தானே தமிழ்நாட்டுக்கும் நல்லது. ஒரு சென்னை நல்லா இருக்க மத்த 4 ஊருக்காரங்க வேண்டுனா என்ன குறைஞ்சு போகபோது சொல்லுங்க..??! நீங்க என்ன கேட்டீங்க..? 4 பேருக்கு நல்லதுன்னா!!!? மாத்தி சொல்லிட்டேனோ!!? பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்க...!
ஜெ.முருகானந்தம், ஆதம்பாக்கம்.
தண்ணி திறந்துவிட்டாலும் தப்பு... திறந்து விடலானாலும் தப்பு...
இதை யாராவது செய்யலனாலும் இயற்கை தானாகவே அதை செய்து விடும்..
நீரின் வழித்தடங்கள் அனைத்திலும் வழிமறித்து, வானளாவிய கட்டிடங்களை கட்டி, இன்று நீர் அதன் வழியை தேடி செல்கிறது வெள்ளமாய்...
பேராசை புடிச்ச நாலு பேரு நல்லா இருக்க... நாப்பது லட்சம் பேரு அவஸ்தை படுறான்..
வி.கோவிந்தன், படப்பை.
அந்த நாயகன் பட வசனமே காலகேயர் பாஷை மாதிரி புரியாத வசனம்.. எந்த நாலு பேரு எது தப்புனு தெரியாதப்ப எப்படிம்மா வந்து பதில் சொல்றது? இத நம்பி நீயும் சின்சியரா கேள்வி கேக்குறியே..!
சா.செல்வம், கேளம்பாக்கம்.
இப்ப பாத்தீங்கன்னா “நிவர்”ன்னு ஒரு புயல் வந்துருக்கு. உண்மைய சொன்னா புயலை பாத்தெல்லாம் எங்களுக்கு பயம் கிடையாது. ஆனா இந்த 4 சேனல்காரன் நல்லா வாழனும்ங்குறத்துக்காக, மொத்த மக்களையும் ப்ரேக்கிங் நியூஸ்னு நொடிக்கொரு தடவை போட்டு சாவடிக்கிறானுங்களே... அவனுங்கள என்ன செய்றது?
க. விவேக், மதுரை.
பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களில் நாட்டிலேயே உத்தர பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பூலான் தேவி இந்த மேல்சாதி டாக்கூர்களின் ஆதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் சின்னமாக மாறிவிட்டார்..
நாலு பொண்ணுங்களுக்கு நல்லதுனா மோசமான மனிதர்களை சுட்டுக் கொன்றது தப்பே இல்லனு பூலான் தேவி நிரூபிச்ச சம்பவம் தான் ஞாபகம் வருது. நாயகன் படத்தின் இந்த வசனமும் இதே போன்ற சம்பவத்தை வைத்து தான் எழுதப்பட்டிருக்கும்.
ம. அருள்நிதி, காஞ்சிபுரம்.
வியாழக்கிழமை காலை நியூஸ்ல நிவர் புயல் தீவிரமாக மாறியதுனு சொல்றான்.. ஏண்டா புயல் கடந்து 6 மணி நேரம் ஆச்சு, இவன் எந்த புயலை சொல்றான் பார்த்தா “பொண்ணு கட்டின யோகம் அவன் லட்சாதிபதி ஆயிட்டான்”னு கோடீஸ்வரனை பாத்து சொல்ற மாதிரி “மிக தீவிர” புயல் “தீவிர”மாக மாறியதை தான் இப்படி சொல்றானுங்களாம். அதுல பெருங்கொடுமையா நடு ரோட்டுல 2 பேரிகார்ட் விழுந்து கிடக்குதுனு அத காமிச்சு, மைக்கோட டிவிக்காரன் நின்னு லைவ் போடுறான்.. நிவர் புயல் எங்களை செஞ்சுதோ இல்லையோ.. இந்த மீடியாக்காரனுங்க நிவர் புயலை வச்சு நல்லா செய்றானுங்க..
சி.ஷண்முகம், சென்னை.
நிவர் புயல் பாதிப்பால் சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே ரெயில்வே தண்டவாளம் கீழே இறங்கியதுன்னு நியூஸ்ல சொல்றான்..
அடேய் மனசாட்சி தொட்டு சொல்லு.. அது “நிவர்”ல இறங்கலடா... காண்ட்ராக்ட் காரன் செய்த “தவற்”ல இறங்கிடுச்சு.. மொத்தத்துல
4 உயர்அதிகாரிகளின் வண்டவாளத்தால 40 ரயில்கள் ஓட வேண்டிய தண்டவாளம் இறங்கிப் போயிடுச்சு.
ரவிக்குமார், ஓய்வு பெற்ற காவலர், வியாசர்பாடி.
ஒரு முறை பிக்பாக்கெட்க்காரனை பிடித்த போது, அவன் அம்மாவுக்கு மருந்து வாங்க இவ்வாறு செய்த முதன்முறை திருட்டு என தெரிய வந்தது. பர்ஸை பறிக்கொடுத்தவரிடமே இதை சொல்லி அவனுக்கு ஒரு வேலை தர சொன்னேன். இன்று அவன் திருந்தி நல்ல நிலைமையில் இருக்கிறான் என்பதில் எனக்கு பெருமை. என் சர்வீஸில் இது போன்ற கேஸ்கள் மாட்டினால், கண்டிப்பாக தண்டனை தருவதை விட... அவர்களை எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்பதை தான் யோசிப்பேன்.. நாலு பேருக்கு நல்லது என்றால் அவங்களை மன்னிப்பது தப்பில்ல என்பது என் பாலிசி.
செல்வராணி, பள்ளி ஆசிரியை, செங்கல்பட்டு.
“எனது சகோதரி ஏழ்மை நிலையில் இருந்தபோது, அவரது மகளின் உயர்கல்விக்காக வங்கியில் கணவருக்கு தெரியாமல் ₹2 லட்சம் எல்ஐசி பாலிசியை பிணையாக வைத்து கையெழுத்திட்டேன்.
பின் தங்கை மகள் படிப்பை முடித்து வசதியான இடத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் நன்றி கெட்டத்தனமாக அவர்கள் கடன் கட்டாததால் பிணையாளரான என்னை கடன் கட்டச் சொல்லி வங்கி வற்புறுத்தியது.
இதனால் எங்கள் குடும்பத்தில் விரிசல் வந்து எனது கணவர் என்னிடம் பேசாதிருந்தார். ஒரு நாள் சாலை விபத்தில் சிக்கிய என் தங்கையையும் அவள் மகளையும் யாரோ ஒருவரைப் போல் நானே காப்பாற்றினேன். இது தெரிந்ததும் அவர்கள் தானாக வந்து வங்கிக் கடனை அடைத்து, என் பாலிசியை மீட்டுக் கொடுத்தனர்! நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல என்பதற்கேற்ப என் தங்கை குடும்பம் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு காரணமே அன்று என் கணவருக்கு தெரியாமல் பாலிசியை அடமானம் வைத்தது தான். தற்போது கணவருடன் சமரசமாக உள்ளேன்.
Leave a comment
Upload