தொடர்கள்
கதை
அறமே தெய்வம்... - பா.அய்யாசாமி

20201028071252287.jpg

"தம்பீ,

இது மாசி மாதம் இல்லையா?!

நம்ம ஊரில் உள்ள அம்மன் ஆலயத்தில் விசேஷம் ஏழு நாட்கள் நடக்கும்.

மூன்றாம் நாள் திருவிழா வழக்கமாக நம்ம தெரு, நம்ம சாதிசனத்தோட முறை மண்டகப்படி.

அன்றைய தினம் ஆலய, ஆராதணை அபிஷேக செலவுகள், அன்னதானம் என அனைத்தும் நம்ம சாதியாட்கள்தான் செய்வோம். உங்க தாத்தா காலத்திலே இருந்து இது தொடர்ந்து நடக்கிறது. உங்க அப்பா இருக்கும் போதும் அதை விடாமல் செய்து வந்தார். நாங்கள் அவரை கேட்கவே மாட்டோம், உரிமையாக பெயரைப் போட்டு பத்திரிக்கை எல்லாம் அடித்து விடுவோம்.

கடந்த வருடம் அவர் தவறிப்போனதால் உங்களால் கோயிலுக்கு வர முடியாத சூழ்நிலை, அந்த நிலையிலும் முறையை விடாமல் தொகையை மட்டும் கொடுத்து விழா சிறக்க ஒத்துழைப்பை அளித்தீர்கள்.

அதே போல், இந்த வருடம் நீங்கள் வந்து விழாவில் கலந்துக் கொண்டு ஜாம் ஜாமென்று நடத்தி நம்ம சாதியினரின் முன்னே நிற்க வேண்டும் " என சென்னையில் படித்து ஒரு நல்ல வேலையில் இருக்கும் சுப்பையாவின் மகன் விஜயிடம் ஆலயப் பத்திரிக்கையை கொடுத்தபடி கூறிக்கொண்டு இருந்தனர் விழாக் குழுவினர்.

தொகை எவ்வளவு என்று கேட்ட விஜயிடம்...ரூபாய் பத்தாயிரம் ஆகும் என்றனர்.

“அப்படியா..? பார்க்கலாம். போய் வாருங்கள்” என அனுப்பி வைத்தான் விஜய்.

“என்னங்க இது? தகவல் சொன்னதும் தாத்தா, அப்பாவெல்லாம் தொகையை உடனே கொடுத்திடுவாங்க... இதெல்லாம் ஒரு காசா இவனுக்கு? மனசு இல்லையே, தாத்தா, அப்பா மாதிரி” என்றவர்கள்... இவர்களை நம்பி நாம பத்திரிக்கைகளில் அவர்கள் பெயரை எல்லாம் போட்டு அடித்துவிட்டோம், இவன் என்னவென்றால் பார்க்கலாம் என்கிறான், முன்னேமே கலந்து பேசி இருக்கலாமோ? என விழாக் குழுவினர் புலம்பியபடி பேசியது விஜய் காதிலும் விழாமல் இல்லை.

“என்ன விஜய்? அவர்கள் சொல்வதுபோல அன்றைய தினம் நமது சாதி முறை மண்டகப்படிதான், அதற்கான தொகையை தாத்தா இருக்கும் போது ஆயிரம் ரூபாய் வருடா வருடம் கொடுப்பார், உன் அப்பா இரண்டாயிரம் என தொடங்கி விடாமல் கொடுத்து வந்திருக்கிறார், நீயும் அதன்படியே கொடுத்திடு. இதெல்லாம் அறப்பணிடா, சாமி காரியம் நிறுத்தக்கூடாது, அம்பாள் கோபித்துக் கொள்வாள்” என்று அம்மா சொல்லவும்...

“எதும்மா அறப்பணி?

எந்தச் செயலாக இருந்தாலும், முதலிலே செய்வதற்கான விருப்பம் நமக்கு இருக்க வேண்டும்.

வழக்கமாக செய்கிறோம் என நினைத்து தப்பான, நாம விரும்பாத ஒன்றை ஏன் செய்யணும்? பிறகு அங்கே இயல்பான செயல் எப்படி நிகழும்?

நன்கொடை கொடுக்க நமக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ, வற்புறுத்தியோ அல்லது புகழுக்காக நிதி வழங்குவதுதான் தற்போது அதிகம் நடைமுறையாக உள்ளது.

மேலும் இதெல்லாம் பக்தியே இல்லைம்மா, சாதி வெறி.

தன்னோட பலத்தையும், பொருளாதார சக்தியையும் யாருக்கோ காட்டுவதற்காக ஆலயத்தில் ஆடம்பரமாக செலவு செய்வார்கள் இவர்கள்.

இதைப் பார்த்து மற்றவர்கள் கடனை வாங்கி, அவனவன் சாதியின் மானத்தை காப்பாற்ற முயல்வான். இதற்கு துணை போக நானும் பணம் தரனுமா?

செட்டியார் முறை, நாடார் முறை, முதலியார் முறை, அய்யர் முறை என நாட்களைப் பிரித்து அந்த நாட்களை அவர்களுக்கு ஒதுக்கி, வணங்குகிற கடவுளையும் மக்களிடமிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு விழா எடுப்பார்களாம், அதற்கு நாம நன்கொடை கொடுக்கனுமா? முடியாது.

அன்பு மிகுதியால் விரும்பிச் செய்வதும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத செயல்களே அருள் தருவதாகவும், தொடர்ந்து அதை செய்யத் தூண்டுவதாகவும் இருக்கும். அதுவே அறமாகும்.

விருப்பம் இல்லாமல் கடமைக்குச் செய்வது, புகழுக்காக ஒரு செயலைச் செய்வது, தற்பெருமைக்காக செய்வது எல்லாம் அறம் ஆகாது.

இது போன்ற விழாவிற்கெல்லாம் தாத்தா, அப்பா வேண்டுமானால் நிதிகளை கொடுத்திருக்கலாம், என்னால் கொடுத்திட முடியாது” என்றான் விஜய் அம்மாவிடம் தீர்க்கமாக!

‘இவன் நாளைய உலகின் சாதியற்ற மனிதன்!’ என உணந்த அவன் அம்மாள் உண்மையில் பூரித்தாள்.