
ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூல் வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.
துக்கங்கள், கஷ்டங்கள், வியாதிகள் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத விஷயங்கள். இவைகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக ஒருவருக்கு ஒரு நோய் வருகிறது என்றால் தாது வித்யாசத்தால் வந்தது என்பார் ஆயுர்வேத மருத்துவர், இங்கிலிஷ் மருத்துவர் வேறு ஒரு காரணம் சொல்வார், மற்றொருவர் சைக்காலஜி காரணம் என்பார், மற்றொருவர் மந்திர சாஸ்திர காரணத்தினால் என்பார், மேலும் ஒருவர் தெய்வ கோளாறினால் என்பார், ஜோசியர் கிரக மாற்றத்தினால் என்பார். ஒரு வியாதிக்கு எப்படி பலர் பல காரணங்கள் சொல்கின்றனரோ அதுபோல் தான் நமக்கு ஏற்படும் சுக துக்கங்களுக்கும் பல காரணம் உண்டு.
ஒரே விஷயத்துக்கு எப்படி பல காரணங்கள் இருக்கும் என்று எண்ணத் தோன்றலாம். இப்படி பல காரணங்களை கேட்டு நாம் குழம்பிப் போகலாம். இருந்தாலும் தர்ம சாஸ்திரம் அறிந்தவர்கள், வேறு ஒரு விளக்கத்தை கொடுப்பார்கள். நமது பூர்வ புண்ணிய பாவ கர்மபலன்களின் படி தான் இவைகள் நடக்கின்றன என்று. ஆம். கர்மா தான் மூல காரணம். மற்ற அனைத்தும் துணைக் காரணங்களே.
ஜோசியர் சொல்படி கிரக மாற்றத்திற்கு ப்ரீத்தி செய்வதா, மாந்த்ரீகர் சொல்படி குலதெய்வ கோயிலுக்கு செல்வதா, சாந்தி பரிகாரம் செய்வதா இல்லை எந்த வைத்தியம் செய்வது என்று நாம் அணைத்து வியாதிக்கும், துக்கங்களுக்கும், தீர்வு காண அலைவோம். ஆனால் இவைகள் அனைத்துக்கும் காரணம் நமது கர்ம பலனே.
அனைத்தும் நடப்பது கர்ம பலனே என்றால் நாம் இந்த பரிகாரங்களை, பிரார்த்தனைகள் செய்வது வீணா என்று எண்ண வேண்டிய அவசியமில்லை. நமது கர்மவினை தீரும் போது தான் பிரச்சனைகள் தீரும் என்று இருந்து விட வேண்டிய அவசியமுமில்லை. இது போன்று இருக்கும் பல காரணங்களில் எது முக்கியமாக சிறந்த காரணம் என்று எண்ணினால் அது கர்மா தான்.
மழையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். மழை ஒன்று தான். ஆனால் அதன் மூலம் எப்படி நமக்கு பல விளைவுகள் உண்டாகின்றன. மழை பெய்யும் இடம் ஈரமாகிறது. ஈசல்கள் உண்டாகின்றன. சில புது செடிகள், புல் முளைக்கின்றன. தவளைகள் உண்டாகின்றன. ஆறுகள் ஓடுகின்றது. சில வயல்களில் பயிர்கள் அழுகி நாசமாகின்றது. சிலருக்கு சந்தோஷம், சிலருக்கு துக்கம். ஒரே மழைக்கு இத்தனை அடையாளங்கள். அதே போல் தான் பிரச்சனைகளுக்கு மாற்றங்களும், மாந்த்ரீக பரிகாரங்களும். அனைத்துக்கும் அடிப்படை என்னவோ நமது கர்மாவே.
இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் அனைத்து சுகங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம், நாம் ஏற்கனவே இந்த ஜென்மத்திலோ அல்லது போன ஜென்மத்திலோ செய்த நல்லது கெட்டது தான். சில சமயம் நமது சொந்த பாப புண்ணிய கணக்கோடு வேறு சிலரின் பாப புண்ணிய கணக்கும் சேருவதுண்டு. ஒரு விளைவு இருந்தால் அதற்கு ஒரு காரணம் இருந்தே தீரவேண்டும் என்பது விதி.
சயன்ஸ் சொல்வது போல், இந்த உலகம் முழுவதும் காரணம் - விளைவு [cause - effect], செயல் - பிரதி செயல் [Action - Reaction] என்ற நியதியில் தான் இயங்குகிறது. பௌதீக சாஸ்திரமும் அதைத்தான் சொல்கிறது. ஒரு குழந்தைக்கு நோய் வந்தால், அதற்கு அவர்களின் பெற்றோரின் பாப பலன் என்பார்கள். அந்த குழந்தைக்காக அவர்கள் வேதனைப்படுவதும், அவர்களுக்கு கைங்கர்யம் செய்வதனால், அதன் உண்மை நிலை புரியும். இன்னும் சொல்லப் போனால், நமக்கு ஒரு கெடுதல் நடந்தால் அது நமது எதிரியின், நமது சத்ருவின், வேண்டாதவர்கள் புண்ணிய பலனாக கூட இருக்கலாம்.
இந்த உலகின் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்தி தான். அந்த ஈசுவரனுடைய சித்தத்தின் படி தான் அனைத்தும் நடக்கின்றது. இந்த உலகில் நடக்கும் எதற்கும் தொடர்பில்லாமல் இல்லை. எல்லாம் ஒரு காரணத்திற்க்காக தான் நடக்கிறது. நமது கர்மா தான் நமது சுக துக்கங்களை முடிவு செய்கிறது. இதை சார்ந்தே கிரக மற்றம், தெய்வ குற்றம், ஆரோக்கிய குறைவு நடக்கின்றன. ஜாதக ரீதியில், வைதீக ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக்கொள்ளலாம். நமது கர்மா தீருகிறபோது அதற்கான பலன் தரும். பகவான் மேல் பாரத்தை போட்டு நம் வாழ்க்கையை நடத்துவதே நமது கடமை.அதுவே பெரிய பரிகாரம்.
முக்கியமாக பூர்வ புண்ணிய பாவ கர்மா வினைகள் எப்படி போனாலும் நமது பாரத்தை மேலும் பல பாவங்கள் செய்து ஏற்றாமல் இருப்பதே நமது தலையாய கடமை. பழைய பாவத்திற்கு பரிகாரம் தேடுவதை விட புதிய சுமை சேராமல் பார்த்துக்கொள்வது தான் நல்லது. அதற்கு ஈஸ்வரனை துணை கொள்வது மட்டுமே முக்கியம். பூர்வ கர்மத்தால் இப்போது நமக்கு ஏற்படும் துக்கத்துக்கும், ஈஸ்வர த்யானம் மட்டுமே பரிகாரம். துக்கம் தருவதற்கு இன்னொரு வஸ்து இந்த உலகில் இல்லை என்ற அத்வைத சித்தாந்தத்தை சிந்திப்பதே சிறந்தது. அதில் மட்டும் தான் சுகமும் இல்லை, துக்கமும் இல்லை. இரண்டுக்கும் ஆதாரமான சத்தியம் மட்டுமே பிரகாசமாக இருக்கும்.
ஓவியம்: TSN

Leave a comment
Upload