தொடர்கள்
நேயம்
கிராம மாணவிக்கு உதவிய ஐஏஎஸ் அதிகாரி... - யாழினி சரவணன்

20201028071423775.jpg

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே ராயபாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (54) விவசாயி. இவரது மகள் கோபிகா (17). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வில் கோபிகா பங்கேற்கவிருந்தார். (தற்போது அந்த மருத்துவ கலந்தாய்வு ‘நிவர்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.)

கலந்தாய்வுக்கு செல்வதற்காக தனது பள்ளிச் சான்றிதழ்களை கடந்த வாரம் கோபிகா சரி பார்த்தார். அப்போது பிறப்பிட சான்றிதழில் தனது பெயரில் எழுத்துப் பிழை இருந்ததை கண்டு அதிர்ச்சியானார். பின்னர், எழுத்துப் பிழை அகற்றி புதிய சான்று கேட்டு கோபிகா விண்ணப்பித்தார். எனினும், ‘அந்த சான்று கிடைக்க 15 நாட்களுக்கு மேலாகுமே… தனது மருத்துவர் கனவு வீணாகி விடுமோ?’ என கோபிகா கவலையில் முழ்கியிருந்திருக்கிறார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் அவரது பள்ளித் தோழியின் தந்தை, கல்விக்காக உதவிசெய்யும் மனமுள்ள ஐஏஎஸ் அதிகாரி த.உதயசந்திரனின் இ-மெயில் முகவரியை கோபிகாவிடம் கொடுத்து, அவரிடம் உதவி கேட்கும்படி வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து தனது அவலநிலையை குறிப்பிட்டு, உதயசந்திரனுக்கு தகவல் அனுப்பினார் கோபிகா.

கோபிகா அனுப்பிய தகவலை பார்த்ததும், உடனடியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனை தொடர்பு கொண்டார் உதயசந்திரன். அவரிடம் ‘கோபிகாவுக்கு ஒரே நாளில் பெயர் திருத்தங்களுடன் பிறப்பிட சான்று வழங்கி, அவர் மருத்துவ கல்வி கலந்தாய்வில் பங்கேற்க உதவ வேண்டும்’ என உதயசந்திரன் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின்படி, கோபிகாவை வரவழைத்து, சில மணி நேரத்திலேயே பெயர் பிழை திருத்தங்களுடன் புதிய பிறப்பிட சான்றிதழை வழங்கியது மாவட்ட நிர்வாகம்.

இதற்காக வருவாய் வட்டாட்சியர் பரிமளம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, அவசரகால பிரிவில் பணிபுரியும் கோகிலவாணி ஆகிய மூவரும் மதிய உணவை மறந்து, கோபிகாவுக்கு சான்றிதழ் விரைவில் கிடைக்க உதவி புரிந்துள்ளனர். கோபிகாவின் சான்றிதழ் குறித்து உதயசந்திரனும் அவ்வப்போது கேட்டறிந்து ஃபாலோ-அப் செய்துள்ளார்.

இதில் சிறப்பு என்னவென்றால், ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் அல்ல. தற்போது அவர் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளரோ, வருவாய் துறை செயலாளரோ கூட இல்லை. மாறாக, கடந்த 2007-ம் ஆண்டில் ஓராண்டு மட்டுமே உதயசந்திரன் ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி உள்ளார்.

எனினும், அந்த ஓராண்டு காலத்தில், தமிழகத்திலேயே அதிக பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கியதில் உதயசந்திரன் சாதனை படைத்திருக்கிறார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் கல்விக் கடனுதவி என்றாலே, அப்பகுதி மக்களின் மனதில் ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன்தான் நிலைத்து நிற்கிறார்.

தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறையின் உதவி ஆணையராக உதயசந்திரன் பொறுப்பில் இருந்து, கீழடி அகழாய்வு உள்பட பல்வேறு முக்கிய தளங்களில் அவர் முத்திரை பதித்து வருகிறார். எனினும், கல்வி உதவி கேட்டு வருபவர்களுக்கு இப்போதும் உதயசந்திரன் சத்தமின்றி தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

தனது தந்தையார் மறைந்து நான்கைந்து நாட்களே ஆன நிலையிலும், அந்த சோகத்தில் ஆழ்ந்து விடாமல், ஏழை மாணவி கோபிகாவுக்கு பிறப்பிட சான்று தக்க சமயத்தில் கிடைக்க, மனிதாபிமான ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் உதவியது நம் தமிழகத்திற்கு கிடைத்த வரம்! அவ்வளவு ஏன்?! அது நம் தவப்பயன் என்றே குறிப்பிடலாம். ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனின் மனிதநேயத்தை மனதார பாராட்டி வாழ்த்துவோம்.