காவிரி மைந்தன்
காதல் படிக்கட்டுகள்..
பார்வைக்கும் இதயத்திற்கும் இடையே இருக்கும் பள்ளம் – பயங்கரமானது!
காதல் சிறகுகளால் மட்டுமே இந்தப் பிரதேசத்தைக் கவலையின்றி கடக்க முடியும்!
ஏதோ ஒரு உள்ளுணர்வு என்றா காதலைச் சொல்லிவிட முடியும்?
பருவத்தின் பாஷை என்று பதப்படுத்தலாமா?
அனைத்து மொழிகளையும் வென்றுநிற்கும் இந்த உலகப் பொதுமொழிக்கு மனித உயிர்கள் என்றும் அடிமைதான்!
நெஞ்சத்தில் கவிதை ஊற்றெடுக்க வைக்கும் இந்த கற்பனைப் பிரவாகம் காதலுக்கு மட்டுமே கை வந்த கலை!
நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் நெருக்கம் ஏற்படுத்தும் காதல் – மறக்க முடியாதவொன்றாய் மாறிப்போவதில் வியப்பொன்றுமில்லை!
இளமையின் அழகெல்லாம் கண்களைக் கவரமட்டுமா? கருத்தினைக் கவரவும்தான்!
பார்வையில் துவங்கிடும் இந்தப் பரிமாற்றம் பரீட்சையமாகி, பழக்கமாகி பிரிக்க முடியாத, பிரிய விரும்பாத ஒரு நிலையை அடைந்துவிடுகிறதே!
அன்பில் வரையப்படும் ஆனந்தமடலுக்கு பார்வை என்பது லாவக சுகமல்லவா?
நினைப்பதற்கும் நினைத்தவுடன் இனிப்பதற்கும் – மனித வாழ்வில் கிடைத்திருப்பது காதல் மட்டும்தானே?
ஆசைகளின் ஆர்ப்பரிப்பில் அங்குமிங்கும் அலைபாயும் மனம் காதலின் வாசலை நாடுகின்ற நாட்டம்!
நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் காதல் சங்கமத்தில் என்றும் நடக்கும் வெள்ளோட்டம்!
தன்வசம் தானிழந்து தவிக்கின்ற தவிப்பல்லவா? காதல் பெண்மைக்கும் ஆண்மைக்கும் தனியாத நெருப்பல்லவா?
நேற்றுவரை தோற்றுப்போனவர்கள் ஏராளம் என்பதால் காதல் இன்று கெளரவிக்கப்படுவதில்லையா?
தோற்றுப்போனவர்கள் காதலர்கள் மட்டும்தான் – காதல் அல்ல! ஏன்? அவர்களின் காதல்கூட வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது!
ஜீவன்கள் எழுதத்துடிக்கும்; இதயவாசல் திறந்துகிடக்கும்!
நிமிடங்கள்கூட வலிக்கும்; நெஞ்சங்கள் காணத்தவிக்கும்!
இருமனஅசைவுகள் நடக்கும்; திருமண ஆசையைக் கொடுக்கும்!
பிரிவுகள் வந்து விலக்கும்; இருப்பினும் காதலே ஜெயிக்கும்!
பூரணச் சந்திரனுக்கு புன்னகையொன்று இருப்பதாகக் கண்டுபிடித்த காதல் மனம்!
பிரிவில்வாடும்போது அந்த வெண்ணிலா என்னைப்போல் தனிமையில் காய்கிறதே என்று வர்ணிக்கத் தோன்றும்!
காதலிக்கப்படாத, காதல்வசப்படாத எந்த உள்ளமும் இந்த உலகில் இருப்பதாய் கணக்கில் வைக்கப்படவில்லை!
காத்திருப்பது என்பது காதலில் சுகம்தரும்!
காதல் என்பது வாழ்விலோர் வசந்தம்!
கண்ணிலே தொடங்குவதாலோ என்னவோ..
கண்ணீரும் இதற்குக் கைகுலுக்கிச் சேரும்!
நெஞ்சத்திலே உள்ள இந்த நினைவுச் சுமைகள்
சுகங்களாகவே பெரும்பாலும் கருதப்படுகிறது!
பூமிப்பந்தின் பூகோள ரேகைகள் இருக்கும்வரைக்கும்
காதல் பேசப்படும்! எழுதப்படும்!
கனவுகளாக.. கவிதைகளாக.. கண்ணீராக..
ஜீவிதமாக.. சரித்திரமாக.. சாதனையாக..
Leave a comment
Upload